Saturday, 15 March 2025

சந்தித்'தேன்'...




முதலாம் நரசிம்மவர்மன் “சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை மீண்டும் மீண்டும் போரில் முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்று ஓடச் செய்தவன். புலிகேசி புறமுதுகிட்டு ஓடிய பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்” என்று கூரம் செப்பேடு இயம்புகிறது.
இதில் காணப்படும் மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே, தற்காலக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் என்ற ஊரில் கிபி 640 இல் நடைபெற்றது. இப்போர் சாளுக்கியர்களுக்கு எதிராக பல்லவர்களுக்கான முதல் வெற்றி கிடைத்த போராகும். மேலும் இரண்டாம் புலிகேசியிடம் பெற்ற நான்கு தோல்விகளுக்குப் பின் பல்லவர்களின் முதலாவது வெற்றியுமாகும். இப்போரில் இரண்டாம் புலிகேசி தோல்வி அடைந்து, பின் வாங்கித் திரும்பினான்.

Tuesday, 11 March 2025

இளையராசா பல்லியப் பெருமழை


இசைச்சிறகு அசைத்தசைத்து
இமயச்சிமை கடந்த
இசைச் செருக்கால்,

அன்னக்கிளி தொடங்கி
ஐரோப்பிய இசைமன்றம் வரை,
நுழையும் இடங்களில் எல்லாம்
விதிகளை மாற்றுகிறாய்.

அந்தப்
பல்லியப் பெருமழை நடுவே
உன் குரலில்
மெல்லென நுழைந்த
“இதயம் போகுதே”
எமைச் சில்லிடச் செய்துவிட,

அல்லவை ஒதுக்கி உனை
அள்ளி முகர்ந்திட்டோம்.

நீ,
எம் மண்ணின் குழந்தை!
எம் மக்களின் இறுமாப்பு!

ஆண்டவன் முன்னே
நெடுஞ்சாண் கிடக்கை
இசைகேட்டு மகிழ்ந்தவர் முன்
கூப்பித் தொழுதகை.

கண்களில் தெரிந்தன
கனிவும் நன்றியும்.
முகத்தில் தெரிந்தது;
எங்கள்
மொத்தப் பெருமிதம்.

வாழி நீ! வாழி! வாழி!! 



Sunday, 9 March 2025

முல்லைக்குத் தேர்கொடுத்து…

 


பல நூறு செடிகொடிகள் இருக்க பாரி ஏன் முல்லைக்குத் தேர் கொடுத்தான்?

மரஞ் செடி கொடிகள் தாமாக வளரும். வெயிலின் போக்கில் தலை உயர்த்தும் மரங்கள். கதிரவனுக்கு முகம் காட்டி வளைந்து நெளிந்து வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள் பல்லாயிரம். தலை உயர உயர தண்டு பருத்து வலு சேர்க்கும் செடிகள்.

கொடி என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய பயிரி ஆகும். பொதுவாகப் பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இக்கொடிகள் வளரும். பெரும்பாலன பற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். கொடிகள், முறுக்கும் தண்டு, வான்வழி வேர்கள் அல்லது ஒட்டும் வட்டுகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொண்டு ஏறுகின்றன இப்படி இறுக்கும் பயிரிகளுக்கு அவை சுற்றிச் செல்லக்கூடிய குறுகிய கொம்புகள் கொண்ட உறுதியான ஆதரவு தேவை. சில கொடிகள், ஒட்டிக்கொள்ள சிறிய வான்வழி வேர்களைப் பயன்படுத்துகின்றன, எனவே அவற்றுக்கு அதிக உதவி தேவையில்லை. பிசின் வட்டுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் கொடி வகைகளும் உண்டு.

Monday, 27 January 2025

அவன் நடக்கிறான்...



அவன் நடக்கிறான்,

வேகமாக நடக்கிறான்
இன்னும்
செப்பனிடப்படாத பாதையில்.
காலரவம் கேட்டு
குற்றுச் செடிகளின் உள்ளேயிருந்து
பதறி ஓடுகின்றன
பச்சோந்திகள்.
கைவீச்சின் அதிர்வில்
கழன்று விழுகின்றன
சில
தோல் பாவைகளின் முகமூடிகள்.
அடிக்கும் காற்றில்
அவன் முகமூடியும் கழன்றுவிழும்
என்று அச்சுறுத்துகிறது ஒரு குரல்.
போகட்டும்...
நடப்பதற்குச் சொந்தமாகப்
பாதையேனும் எங்களுக்கு மிச்சமிருக்கும்.
உங்களுக்கு?
பதிலுரைக்கின்றன பல குரல்கள்.
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்.
காலம் காத்து நிற்கிறது.

Friday, 3 January 2025

திருவிழா

 


குழந்தைகள்
திருவிழாக்களில்
தொலைந்து போவார்கள்.
நானோ ,
எங்கெங்கோ தொலைந்து போய்,
ஒவ்வொரு முறையும்
இந்தத் திருவிழாவில்தான்
மீட்கப்படுகிறேன்.