Monday, 27 December 2021

நெல்லையாரின் சறுக்கல்


 


ஐயமில்லை அது சறுக்கல்தான்.

 ஆனால், ஓர் அரசியல்வாதியின் சாதாரண நடவடிக்கை இது. இன்று நேற்றல்ல. இந்தச் சறுக்கல்களெல்லாம் அவரது வழமையே.

இதற்காக நண்பர்கள் சிலர் வருத்தத்தோடு பதிவுகள் இட்டிருக்கிறார்கள்.

 பெரிதாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. இதற்கு முன்பும் அவர் ஒன்றும் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுத்தவர் இல்லை. அவர் சார்ந்த காங்கிரசு இயக்கமும், பெருந்தமிழர் வ.உ.சியையே புறந்தள்ளிவைத்த இயக்கம்தான்.

 ஏற்கனவே, வ.உ.சி. 150 விழாவில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளுக்காக "வயதில் இளையவரானாலும் முதல்வர் சுடாலினின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் என்று நக்கீரன் இதழுக்குப் பேட்டியளித்தவர் நெல்லையார். இப்பொழுது நா தழுதழுக்கக் கூப்பிய கரங்களோடு நேராகச் சொல்கிறார் அவ்வளவுதான். அவரைப் பொறுத்தவரை இது அதனுடைய நீட்சியே.

மேடையில் இருந்தவர்களும் ஒரே நிலைப்பாட்டில் எப்பொழுதுமே இருந்தவர்களும் அல்ல என்பதையும் மறந்துவிடாதீர்கள். அது அரசியல் மேடை. கண்ணன் ஒரு தமிழர். அதுவே தமிழர் சிலரது வருத்தமான பதிவிற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆனால், முகநூலில் ஏராளமான பதிவுகள். தமிழே சென்று தலைவணங்கியதுபோல் காட்டப்படுகிறது. (வேண்டுமென்றே செய்யப்படுகிறதா தெரியவில்லை?)

 நல்ல பேச்சாளர். அரசியல்வாதி. தேர்ந்த அரசியல்வாதியா தெரியவில்லை. அவர் அழுது பேசிவிட்டதால் தமிழுக்கு இழப்பொன்றும் இல்லை.

பதிவுகளில் ஏராளமானோர் “தமிழர்” “தமிழறிஞர்” தரம் தாழ்ந்தார். “மானம் கெட்டு வாழ்வது ஒரு வாழ்வா?” “வ.உ.சி க்கு வறுமை வரவில்லையா?” “பாரதி வறுமையை எதிர்கொள்ளவில்லையா?” “எல்லோராலும் கவரிமானாக வாழ முடியாது” எனப் பலவாறாகப் பதிவிட்டிருந்தார்கள். இதில் எத்தனை பேர் தமிழர்கள் என்று தெரியவில்லை? பதிவிட்ட தமிழர்களுக்காக மட்டும் சில…

வ.உ.சி யோடு கண்ணனைச் சேர்க்காதீர்கள். வ.உ.சி. போராளி. தமிழர்கள் கைவிட்ட போராளி.

பாரதியோடு பாதி சேர்க்கலாம். வறுமையை எதிர்கொள்ளத் துணிவிருந்த பாரதி, போராட்டத்தை, விடுதலையைக் குறித்து எழுதுவதைக் கைவிடுவதாக ஆங்கில அரசுக்கு எழுதிக் கொடுத்துவிட்டுத் தான் கடையத்தில் வாழ்ந்தார்.

இவரை அப்படியெல்லாம் ஒப்பிடவேண்டியதில்லை.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நான் சொல்ல நினைத்தது வேறு
-------------------------

 பொருள் வசதி இருப்பதால் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்காமல் ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்துவிட்டு, பிள்ளைகளுக்குத் தமிழை மறக்கடிக்கச் செய்துவிட்டு புள்ளிமானாகக் கூட வாழாமல், மூப்பால் அவதியுறும், நோய்களால் துன்புறும், வறுமையில் உழலும் தமிழறிஞர்கள் மட்டும் “கவரிமானாக” இருக்கவேண்டுமென்று எண்ணுகிறோமே இது எந்த வகை அறம்?

 இதோ சனவரி 6ல் சென்னையில் புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. போய்ப் பாருங்கள். நாம் முழுமையாக அறிந்திராத தமிழறிஞர்களின் பெரு நூல்களையெல்லாம் அச்சிட்டு வைத்துக்கொண்டு, வாங்குவோர் வரவுக்காகக் காத்திருக்கும் ‘தமிழ்மண்’ போன்ற பதிப்பகங்களை.

தொண்ணூற்றொன்பது விழுக்காடு தமிழர்கள் வெறுமனே அவற்றைக் கடந்து செல்கிறோம். உள்ளே நுழையும் அந்த ஒரு விழுக்காடு தமிழர்களில் பாதிப்பேரிடம், உள்ளத்தில் ஆசையிருக்கும் அளவிற்குப் பையில் பணமிருக்காது.

   சாகித்திய அக்காடெமி போன்ற பெரிய பதிப்பகங்களில் பத்து ஆண்டுகளாக விற்காமல் அட்டை கிழிந்து, பாதி விலைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் போன்றோரின் நூல்கள் இந்த ஆண்டிலாவது விற்றுவிடுமா தெரியவில்லை.

   சாத்தூர் சேகரனார் போன்ற பெரிதாக அறியப்படாத ஆய்வாளர்களின் நூல்களைக் காண்பதே அரிது. இதற்கு முன்னால் அவை பெரிதாக விற்பனையாகவில்லை என்பதே காரணம்.

   ஒரு கடையில் தமிழறிஞர் க.ப. அறவாணன் அவர்களின் நூற்களுடன் அவரது துணைவியார் காத்துக்கிடப்பார். வருத்தத்தோடு சொல்கிறேன்,  கடந்து செல்லும் கூட்டத்தின் பெரும்பகுதி அதை ஒரு கடை என்று எண்ணியிருக்குமா? என்பதே ஐயந்தான். (சராசரியாகப் பத்து இலட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வந்து போகிறார்கள் என்பதையும் மறந்துவிடவேண்டாம்)

   பொன்னியின் செல்வனை வாங்குவது மிக எளிது. பாவாணரின் நூல்களைப் பார்க்கவே நாம் அலையவேண்டியிருக்கும்.

  வேங்கடசாமி நாட்டார், க.அப்பாத்துரையார், சண்முகம், மயிலை சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்க நாயகர், எல்.டி.சாமிக்கண்ணு, தமிழவேள், அரசஞ் சண்முகனார், சி.வை.தாமோதரனார், சோமசுதர பாரதியார், கே.என்.சிவராசன் (பட்டியல் நீளும்..) இவர்களுடைய நூற்கள் உங்கள் பார்வையில் உடனே பட்டுவிட்டால் நீங்கள் பேறு பெற்றவர்களே. அவை மலைச் சுனையினும் காண்பதற்கு அரிதாம்.

தொ.பரமசிவன், அ.கா.பெருமாள் போன்றோரின் நூல்கள் கொஞ்சமாகவும், ம.இராசேந்திரன், ரா.பூங்குன்றன், போன்றவர்களின் நூல்கள் ஒன்றிரண்டும் விற்றுக்கொண்டிருக்கின்றன.

கடந்த புத்தகக் காட்சி (2021) ல் ஒரு நாவலாசிரியரோடு ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவரது நூலை வாங்கிக் கொண்டார்கள். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஊடே “பொருநராற்றுப்படை” என்ற இலக்கியம், பத்துப்பாட்டில் இருப்பதே அறிந்ததில்லை, அதன் பெயரே தெரியாது என்றார். உண்மையை மறைக்காமல் பேசிய அவரது பண்பு மதிக்கத் தக்கதென்றாலும், எனக்குப் பகீரென்றது.

 அவர் சாகித்திய அக்காடெமி விருதுபெற்றவர். விருதுபெற்ற அவரது புதினம் “மன்னராட்சி தொடங்கி மக்களாட்சியின் நீட்சியினை” பொருளடக்கமாகக் கொண்டது. அப்படியான கதையை எழுதியவர்; மன்னன் ஒருவனுடன் தங்கி நேரடியாகக் கண்டு ஒரு படைப்பாளி இயற்றிய நூலொன்றை, அதிலும் தமிழிலக்கியத்தின் முகாமையான பத்துப் பாட்டின் நூலொன்றின் பெயரைக் கூட அறியாதிருந்தது வியப்பையும் வருத்தத்ததையும் ஒருசேரத் தோற்றுவித்தது. ஆனால், புதினத்தின் விற்பனை நன்றாக நடந்தது.

கருத்தில், ஆய்வில், எழுத்தில், சிந்தனையில் சறுக்கிய தமிழறிஞர்களைத் தள்ளி வைத்துவிடலாம். வாழ்வில் சறுக்கி விழுபவரை?

பேசும் முன் சற்று சிந்திப்போம்.

தமிழறிஞர்களை அடையாளம் காண்போம். அறிவோம். வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நூல்களை வாங்குவோம். படிப்போம். குழந்தைகளுக்குக் கற்றுத்தருவோம். மேலும் எழுதுமளவுக்கு அறிஞர்களை ஊக்குவிப்போம். 

(இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு பதிவிட்டவர்களின் மனநிலையை, இனத்தின் மீதான காதலை மதிக்கிறேன். அவர்களுக்கானதல்ல இந்தப் பதிவு)

அதைவிடுத்து,

தேடித்தேடி வாங்கிய பளிங்குக்கல்லும், கிரானைட் கற்களும் பதிக்கப்பட்ட வீட்டில் இருந்துகொண்டு மலைகளும் இயற்கை வளங்களும் அழிக்கப்படுவது குறித்துப் பேசுவதுபோல, மொழி அழிவது குறித்தும் தமிழறிஞர்கள் தடுமாறுவது குறித்தும் பேசுவதென்பது வீணே.

“லைக்” வாங்குகிற, காழ்ப்புடன் அயலார் விரும்புகிற ஒரு முகநூல் பதிவாக வேண்டுமானால் அது இருக்கலாம். அதனால் தமிழுக்கு ஒன்றும் நேர்ந்துவிடப் போவதில்லை என்பதை மறவாதிரு என்னருமைத் தமிழினமே.

Saturday, 11 December 2021

பாரதி பிறந்தநாள் 2021


 

அன்னைத் தமிழ் இட்டசோறு 

     அருந்தியதால் சிலவுரைத் தாய்

முன்னை நினைப் பெடுக்க 
   
     முரண்பலவும் பேசிநின் றாய்
 
தன்னை மறந்து சிலவேளை
 
      தமிழரையும் மறந்துநின் றாய்
 
உன்னைக் கவி என்றோம்
 
     கொடைமடங் கொண்ட தனால்!

=======================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
11-12-2021
=======================

Tuesday, 23 November 2021

அள்ளிக் கொடுத்த வள்ளுவர்


 

  =======================

 அள்ளிக் கொடுத்த வள்ளுவர்
 பாடல் பிறந்த கதை
=======================

ஒரு நாள் திருச்சிராப்பள்ளியிலிருந்து தோழர் தமிழ் இனியன் கைப்பேசியில் விளித்தார். சிறிது நேரம் நலம் உசாவியபின்,

"தோழர் மழை குறித்து பள்ளிகளில் சிறுவர் பாடும்படியான பாடல் ஒன்று எழுதுகிறீர்களா?" என்றார்.

"முயற்சிக்கிறேன்" என்றேன்.

"தோழர் கொஞ்சம் எளிய நடையில், எளிய சொற்களில் இருக்கட்டும்" என்றார்.

"புரிகிறது தோழர்" என்றேன்....

புரிகிறது என்று சொல்லிவிட்டேனே தவிர எப்படித் தொடங்குவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.

மழை என்றதும் வள்ளுவரின் நினைப்பு வந்தது. வான்சிறப்பு அதிகாரத்தின் பத்துக் குறள்களையும் விலக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் கூட அவர் மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கும் உவமை "மழை"யே. அவருக்கு மழைமேல் அத்தனை ஈர்ப்பு போலும். எனவே, திருக்குறளின் “வான் சிறப்பு” அதிகாரத்திலிருந்தே பாடலை எழுதிவிடுவது என்று முடிவெடுத்தேன். திருவள்ளுவரின் துணையோடு சிறுபிள்ளைகள் பாடும் பாடலை, இப்படித்தான் தொடுத்தேன்.
===================

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. ( குறள்:11 )

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது. உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும். அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும்.

அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம் "(மணி. 28: 116). அவிழ்து -
அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர்.

நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர்.

இந்தக் குறளே பாடலின் எடுப்பாய் அமைந்தது.

===================
மழையே மழையே வாவா வா
மண்ணுங் குளிர்ந்திட வாவா வா
அமிழ்தம் நீதான் உலகுக் கென்றே
ஐயன் வள்ளுவர் சொன்னா ரே
அவரது வழியில் நாளும் நின்றே
அழைத்தோ மிங்கே வாமழை யே.
===================

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (குறள்:12)

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே.

இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது.

இந்தக் குறளே முதல் தொடுப்பாய் அமைந்தது

=====================
நெல்லும் கரும்பும் தெங்கும் பனையும்
எள்ளும் பருப்பும் கம்பும் தினையும்
உண்ணும் அனைத்தும் உன்னால் விளையும்
தண்ணீ ராலே தாகமுந் தணியும்
உணவையுஞ் செய்தாய் உணவென வானாய்
உலகஞ் செழிக்க வாமழை யே.
=====================

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (குறள்:14)

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.
சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு.

இந்தக் குறளே இரண்டாவது தொடுப்பாய் அமைந்தது.

=====================
எங்களு ழவரு மேர்பிடித் தங்கே
மண்ணை யுழுது பயிரை வளர்த்து
கண்ணுங் கருத்தாய்க் காவலுஞ் செய்து
உண்ணும் யாவையு முலகம் பெறவே
விண்ணிலே செல்லும் மேகமு டைத்து
மண்ணில் பெய்வாய் மாமழை யே.
=====================

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. (குறள்:16)

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: விசும்பின் துளிவீழின் அல்லால் - வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும்.
'மற்று' விளைவு குறித்த பின்மைப் பொருளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும் பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது.

குழந்தைகள் பாடியாடும் பாடலுக்கு இந்தக் குறளே முடிப்பாய் அமைந்தது.

=======================
உந்தன் நீர்த்துளி உடலில் பட்டால்
புல்லுங் கைகளை நீட்டிக் களிக்கும்
பூக்களுந் தலையை ஆட்டிச் சிரிக்கும்
புள்ளின மாயிரம் பாடல் இசைக்கும்
நாங்களும் நன்றா யாடிக் களிக்க
நல்லோர் சொல்போல் வாமழை யே
=======================

பாடலை யூடியூப்பில் பார்க்க/கேட்க இணைப்பைச் சொடுக்கவும்.


====================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
23-11-2021
====================

Monday, 11 October 2021

உலக பெண்குழந்தைகள் நாள் 2021

 


பெண்ணைப் பெற்று

வளர்த்திராத தந்தையாய்,

என் மனதுக்குள்

பாதிச் சொற்கள்

பயனின்றியே கிடக்கின்றன.

 

அன்பின் அரைப்பகுதியை

அறியாமலேயே முடிகின்றன

என் கவிதைகள்.

Saturday, 11 September 2021

பாரதி 2021

 


. ===========
. பாரதி
. ===========

கள்ளிப்பழம் உன்கவிதை யாவர்க்கும்
உள்ளித்தின்ன பெருஞ்சுவை நாவிலோர்
முள்ளுந் தைக்கலாம் ஆதலின்
உள்ளம் நள்ளுமே உன்னை.

========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
11-09-2021
========================

Monday, 6 September 2021

வ.உ.சி பாடற்றிரட்டு விளக்கம் 1

 

செழுமையான இலக்கணத்தோடு இயற்றப்பெற்ற வெண்பாக்களும், ஆசிரியப்பாக்களும், கட்டளைக் கலித்துறைகளும் கொண்ட நூல் பெரியவர் வ.உ.சிதம்பரனார் எழுதிய “பாடற்றிரட்டு”. அது குறித்து பெரியவர் வாய்மொழியாகவே பார்ப்போம்.

 எனது தனிப்பாடல்களில் முந்நூற்றைம்பது வெண்பாக்களும், ஒருதாலாட்டும், மூன்று விருத்தங்களும், பதினைந்து கட்டளைக் கலித்துறைகளும், நானூற்று நாற்பத்துமூன்று வரிகள்கொண்ட பதினொரு நிலமண்டல ஆசிரியப்பாக்களும் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. யான் இராஜநிந்தனைக் குற்றத்திற்காகச் சிறைக்கு அனுப்பப் பட்டதற்குமுன் யான் பாடிய பாக்களில் தொண்ணூற்றேழு இதன் முதற் பாகமாகவும் யான் சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாக்களில் இருநூற்றெண்பத்துநான்கு இதன் இரண்டாம் பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லாதாரும் எனது பாக்களின் பொருள்களை இனிது உணருமாறு எனது பாக்களில் ஆங்காங்குக் காணப்படுகிற அரும்பதங்களுக்கு உரைகள் எழுதி இதன் முடிவில் சேர்த்துள்ளேன்.

Sunday, 5 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 7

 

எத்தனை எழுதினாலும் என்நெஞ் சாறாதே
அத்தனேயெம் ஐயனே அரும்பேர் வித்தனே
பித்தனாய்ச் சொத்தினை விட்டனை எனவிருந்தேன்
அத்தனை ஆசையெம் விடுதலை மேலென
கத்தனும் உமக்கு கற்செக் கீந்ததில்
மொத்தமும் உணர்ந்தேன் நெஞ்செலாம் பலப்பல
குத்துவாள் கொண்ட பொத்தலாய் உடைந்தேன்
பத்தாயத்தடி சிதறும் பண்டமாய்ச் சிதறினேன்
மெத்தைமேல் நடந்தவன் சித்தனாய் ஆயினை
முத்தங்கி யணிந்தவன் முள்ளுடை உடுத்தனை
மைத்துனன் அலைந்ததும் மனையாள் நலிந்ததும்
தைத்ததெம் நெஞ்சை தம்மெழுத்தா லறிகையில்
நைத்ததெலாம் காலத்தின் நலமென்ற  தெய்வே
கைத்துதித் தேத்துவம் காலமெல் லாமுமையே

 

பெருந்தமிழர் வ.உ.சி. 150 - 6

 

உனைநினை யாநாளும் பாழெனவு ணர்ந்தொன்
றிணைவாரே நற்றமிழர்; அந்நாளில் சேனைத்
துணையாகும் நின்பரந்த  நற்பெரு  வாழ்வின்
இணையற்ற ஈகந்தொ டர்ந்து.


பெருந்தமிழர் வ.உ.சி 150 - 5

 


தோன்றிற் புகழொடு தோன்றுவ தெங்கனம்?

சாற்றிற் சிதம்பர னார்வர லாறறிய;

வள்ளுவ னார்நெறி நின்று சிறப்புடனே

வாழ்ந்திட உள்ளுவமே நாம்.