Wednesday, 27 March 2019

முன்திரை | மாற்றம் | நாஞ்சில் குறுந்திரை | Logo | Change | Naanjil Kurunthirai

இன்று 27 - 03 - 2019 முதல் நாஞ்சில் குறுந்திரை எனும் யூடியூப் ஒளித்திரையின் முன் திரை புதியதாய் மாற்றம் பெறுகிறது. இணைப்பு கீழே இருக்கிறது.

நன்றி

https://youtu.be/I0QwaVazOug


https://youtu.be/tGKZoFCR_3M

Thursday, 21 March 2019

இன்று உலக கவிதை நாளாம்...


யாரும் தீண்டாத பூவொன்று தேடினேன்
காற்று சிரித்தது.
என்றும் அழியாத பொருளொன்று தேடினேன்
நெருப்பு சிரித்தது.
யாரும் காணாத நிறமொன்று தேடினேன்
வெளிச்சம் சிரித்தது.
ஊரே இல்லாத காடொன்று தேடினேன்
பறவைகள் சிரித்தன.
போரே நடக்காத இடமொன்று தேடினேன்
நிலம் சிரித்தது.
யாருக்கும் அடங்கா மனிதனைத் தேடினேன்
மரணம் சிரித்தது.
எதற்கும் அழாத கண்களைத் தேடினேன்
இதயம் சிரித்தது.
யாரும் சொல்லாத சொல்லொன்று தேடினேன்
மொழிகள் சிரித்தன.
யாரும் எழுதாப் பாடல் எழுதிட
எனக்குள் நாளும் தவம்.

சிராப்பள்ளி ப.மாதேவன்
21-03-2019

Wednesday, 20 March 2019

மக்கள்..... ஆட்சி

நெஞ்சாங்குலையின் நரம்புகள் மீது
பின்னிப் படர்ந்து கிடக்கின்றன
மதங்களின் நச்சுக் கொடிகள்.

ஈரக்குலையின் இண்டு இடுக்குகளெங்கும்
கொதிக்கக் கொதிக்கப்
பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது
சாதியக் குருதி.

நுரையீரல்களின் காற்றறைகள்
எங்கும்
கெட்டுப்போன பணத்தின்
வீச்சம்.

வாயின் ஓட்டை
நிறைந்து ஒழுகும்
வஞ்சம் நிறைந்த
வண்ண வண்ணப்
பொய்கள்.

கால்கள் இரண்டிலும்
கொள்கை அறுத்து
உப்பைத் தடவி
உணக்கிய தோலில்
செய்த செருப்புகள்.


மரங்களற்ற ஆறுவழிச்சாலைகளில்
மணலற்றுப் போன ஆற்றுவெளிகளில்
நீரின்றி மாய்ந்த குளத்தங்கரைகளில்
நெல்லற்றுப் போன களத்துமேடுகளில்
என
எல்லா இடங்களிலும்
வல்லடியாய் நடந்து போகின்றன,
தேர்தல் நேரத்து
ஆலிப்பொம்மைகள்.

சிராப்பள்ளி ப.மாதேவன்,
20-03-2019
 

Tuesday, 19 March 2019

மௌனம்

ஒரு நொடி ஒளிர்ந்து மறைந்த
அந்த
மின்னலின் வெளிச்சத்தில்
கண்ணில் படுகிறது,
மனதுக்குள் கிடக்கும்
மௌனக் குவளை.

அது
சொற்களால் நிரம்பிக்கிடக்கிறது;
ஒரு பெருவெடிப்பின்
வருகைக்காய்.

மின்னல் வீசியெறிந்த
மன்னிப்பின் மலர்கள் பட்டு
உடைந்த குவளையிலிருந்து
ஒழுகுகின்றன சொற்கள்,
வேறு வேறு கோடுகளில்.

 மௌனம் நடந்துசென்ற
தடம் அறிய
சொற்களுக்குத் தெரிவதில்லை.

ஆனாலும்,
எல்லா மௌனங்களின்
உள்ளேயும்
சொற்களே காத்துக்கிடக்கின்றன.

Monday, 11 March 2019

காதல் கண்ணி | நாடகம் | தாழக்குடி

“காதல் கண்ணி” நாடகத்தில் ஒரு காட்சி. ஊரம்மன் கோயிலில் வைத்து நடைபெறும் தோழி ஒருத்தியின் உரையாடல்.
திருவானைக்கா முத்துகுமாரசாமி மற்றும் அவரது மகள் செல்வி ஜனனி அகியோரின் குரல்களில்.

இடம்:-  ஊர் அம்மன் கோயில்.
கதைமாந்தர்கள் :-  பொக்கையன் பாட்டா மற்றும் கயலின் தோழி.

https://youtu.be/gjTupA7AmL4Friday, 8 March 2019

மகளிர் நாள் 2019

மகளிர் நாள் சிறப்புறட்டும். “காதல் கண்ணி” யில், ஊரம்மன் கோயிலில் வைத்து நடைபெறும் தோழி ஒருத்தியின் உரையாடல்; கதை மாந்தர்களுடன்.
===============================================

பெண்ணென்றால் தரையதிர
பேய்போல நடப்பாளோ?  எனும்
குரல்கேட்டுத் திரும்பியவள்
செருமிப் பின் பேசலுற்றாள்

முறத்தால் புலிதுரத்தும்
முதுமையை வீரமென்றீர்,
அதியனின் அவைநிறைத்த
ஔவையை அம்மையென்றீர்,
காய்வுற்று நகர்எரித்த
கண்ணகி தெய்வமென்றீர்,
கொற்றம் கூடிக்கண்ட
குந்தவை நாச்சியென்றீர்,
எம்மண்ணில் நடக்கும்
என்னையேன் பேயென்றுரைத்தீர்?
கண்கள் சிவப்பேறக்
கத்தி நின்றாள்.

மெல்லடி வைத்து நடந்தால்
சொல்லடி வாராதன்றோ
புட்டமுது நிறைந்த வாயால்
பொக்கையன் நகைத்துரைத்தான்.

முற்றாப் பிறப்பே
மூத்தோரே கேள்மின், நீவிர்
களிறு எறிந்திடல்
காளையின் கடனென
பாடிய பொன்முடியார்
பாட்டெடுத்துக் கல்வியில்
சேர்த்து வைத்திருந்தால்,
செருமுகம் நோக்கிச்
செல்கவென்று உரைத்த
மாசாத்தியார் மனத்துணிவு
வாத்தியார் சொல்லித்தர
வகைசெய்து வைத்திருந்தால்,
தன்னைத் தழலாக்கி
தாய்மண் மீட்டெடுத்த
குயிலியின் வீரமதைக்
குழந்தைகட்குச் சொல்லிநின்றால்,
அயலார் கைக்கிடந்த
அருமை நாடதனை
முன்னின்று போர்நடத்தி
முற்றாக வென்றெடுத்த
வேலுநாச்சி வீரவாளை
விளையாடக் கொடுத்திருந்தால்,

அட ஒரு நிமிடம் நில்லம்மா;
என்னம்மா அடுக்குகிறாய்
எதிர்க்கேள்வி கேட்கின்றாய்
சொல்லம்மா
கொடுத்திருந்தால் என்ன செவ்வீர்?

கேடுசூழ் நாடிதனை
ஊடாடி சீர்செய்வோம்.
கேளாச்செவி அனைத்தும்
கேட்கும்வரை குரல்கொடுப்போம்.
பாழாகும் சமுதாயம்
பார்த்து விழிமூடோம்.

பொறு தாயே சிறுபெண்ணே
திருத்த முடியாது.
ஐந்தில் வளையாததை
ஐம்பதில் வளைப்பாயோ?

விதைபிளந்து எழுந்துவர
விதியற்றுப் போனாலும்
கொம்பொடித்து நட்டுவைத்தால்
குருத்துவிடும் முருங்கை போல
வேண்டியதைச் செய்துநின்றால்
மீண்டெழுமே எம்மினந்தான்.
பூங்கதலிப் பழம்போட்டு
புட்டமுது பிசைந்துண்பீர்
வெம்போக்குப் பாட்டாவே
வெறும்வாயில் மெல்லாதீர்
விக்கிச் சோராதீர்.
என்றவளோ நடைகடந்தாள்.

"காதல் கண்ணி" யிலிருந்து.....
சிராப்பள்ளி ப.மாதேவன்,
08/03/2019

Tuesday, 5 March 2019

ஓடுமீன்

முதலைகளின் பல்லிடுக்குகளில்
சேகரித்த
சதைத் துணுக்குகள் கோர்த்து
தூண்டில் வீசிக் காத்திருக்கின்றன
விலாங்கு மீன்கள்.

அந்தப்
புலவு நாற்றம்
புழுதியோடு சேர்ந்து
கனவு கலைத்த மண்ணில்,
உறுமீன் மட்டுமின்றி
ஓடுமீன் அனைத்திற்கும்
காத்திருக்கின்றன கொக்குகள்.

தப்பித்தவறி
நீர்வரும் காவிரி
ஓடும் மண்ணில்,
எப்போதோ
பட்டென்று வாழ்வைச் சாய்த்துவிட்ட
கசாபுயல் கடந்த மண்ணில்,

தப்பாமல் தவறாமல்
எப்போதும் வருகிறது
தேர்தல்.

கடலலையும் மீன்களென
தற்சார்போடு இருங்கள்.
காவிரி நீர் வந்து
கல்லணை தழுவும்.

தூண்டிலைக் கவ்வாதிருங்கள்.
கண்டிப்பாய் துளிர்த்தெழும்
கசாபுயல் சாய்த்த மரம்.