Wednesday 28 August 2019

முன்னுரை...


காவிரிக்கரையில்
கண்சிமிட்டிச் சிரிக்கும் பருத்தி.
நீலமலையில்
சரிந்து மூடிய மண்.
தென்புலத்தில்
உருகும் வன் பனிமலைகள்.
அமேசானில்
வான் தழுவும் தீயின் நாக்கு.
இயற்கை எழுதும்
இறுதிக் கடிதங்களின்
முன்னுரைகள்.


Wednesday 21 August 2019

சங்க காலக் குழம்பைச் செய்து உண்ண வேண்டுமா?

ஓவியம் : மறைமலை வேலனார்

 
சுருள்கோடு அடிவாரம். பெருமழை ஓய்ந்து, தூவானம் அடித்துக் கொண்டிருந்த  ஒரு மாலை நேரம். ஓலைக்குடையைப் பிடித்தபடி செல்லியம்மை நடக்கிறாள். மழைவெள்ளம் சேர்ந்து செந்நிறத்தில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது கோட்டாறு. ஆடுகள் குளிரெடுக்க கொன்றைமர மூடுகளில் அசையாமல் நின்றுகொண்டிருக்கின்றன.  செல்லமாக வளர்ந்த பெரிய வீட்டுப் பெண் காதலித்தவனை மணந்துகொண்டு வாழ்ந்து வருவதைப் பார்க்கும் ஆவலில் செம்மண் வழுக்கிவிடாமல் கவனமாக நடக்கிறாள்.

Sunday 18 August 2019

ஆவணி



 
அடர் மழை பெய்து வெறிக்கும் நேரத்தில் பளிச்சென, சிறு துளியொன்றை கண்ணாடித் துண்டுபோல் சொட்டி நிற்கும் மாவிலை போல இன்னும் நெஞ்சில் அந்த நினைவுகள் சொட்டிக்கொண்டே இருக்கின்றன. இன்று 18-8--2019 ஞாயிற்றுக்கிழமை. ஆவணி முதல் நாளும் கூட.

ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை புலரும் முன்னே பாட்டி, அம்மா எல்லோரும் எழுந்துவிடுவார்கள். நான்கு மணிக்கு முன்னே புத்தனாற்றில் குளித்து பித்தளைக் குடத்தில் நீர் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டு, நல்ல துணிகளை உடுத்துக்கொண்டு பொங்கல் வைப்பதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  

தைப்பொங்கலுக்கும் இந்த ஆவணிப் பொங்கலுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு.  "தைப்பொங்கல் விடுகதுக்கு நேரம் பாக்காண்டாம் மக்கா, விடிஞ்சதுல இருந்து சாய்ங்காலம் வரைக்கும் எப்பண்ணாலும் விடலாம். ஆனா, ஆவணி ஞாறாச்ச பொங்கல்விடுகதுன்னா சூரியன் தலைகாட்டச்சில பால்பொங்கி கொலவ விட்டு எறக்கிவச்சிருக்கணும். அதுக்குப் பொறவு விடப்பிடாது" என்று பாட்டி நூறு முறையாவது சொல்லக் கேட்டிருக்கிறேன். வழக்கமாக காலை உணவுகூட பச்சரிசி அடை, அல்லது பச்சரிசி தோசையாக இருக்கும்.

எதற்காக இந்த ஆவணிப் பொங்கல் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. ஆண்டுத் தொடக்கமாக இருக்குமோ?

Wednesday 14 August 2019

நா.முத்துக்குமார் 2019


முதல்நாள் மூன்றாம்பிறை
மறுநாளே அமாவாசை
காற்றில் கரைந்த நிலா.


Tuesday 13 August 2019

நஞ்சுக் கொண்டல்


தீச்சுடரில் உளிகொண்டு
சிலைசெய்தேன் காணீரோ என்ற
வாயில் வடைசுடுவோர்
திருமொழி கேட்டு,
கண்டேன்! கண்டேன்!! எனத்
தண்டமிடுவோர் தானே
கொண்டலில் நஞ்சேற்றும்
கொடுமை செய்வார்.
நன்னிலத்தில் நஞ்சுநிறை
கொண்டல் பெய்ய
நாளையொரு பாலைபோல
பாழாகும் பொன்னாடே!



Monday 12 August 2019

உயிர்ப்பறவை


படியிறங்கி தெருவடைந்து
பக்கத்து மனிதரைப் போய்
மெய்தீண்டிப் பேசாமல்
விடியும் வேளைவரும்
ஓர்நாள் முன்னே,
கடுகிச் செல்லவேண்டும் என்
உடம்பிருக்கும் உயிர்ப்பறவை.

உணவெல்லாம் நஞ்சாகி
குணம்கெட்டு கூறிழந்து
கொடுநோய் பிடிகொண்டு
படுக்கையில் மலங்கழிக்கும்
பாழான ஓர்நாள் முன்னே,
பாடிப் பறந்திடவேண்டும் என்னுடலைக்
கூடியிருக்கும் உயிர்ச்சிட்டு.

மகன் உழைப்பின் செல்வங்கள்
மருத்துவத்தில் செலவழியும்
ஓர்நாள் முன்னே, என்
ஊன்சுமக்கும் உயிர்ப்பறவை
வானேகிப் போதல்வேண்டும்.