Thursday 16 May 2019

அழியா விதி


பூக்களைப் புதைத்துவிட்டால்
விதைகள் கிடைக்காதென்ற
எண்ணத்தை,
ஒருநாள் மாற்றியெழுதும் காலம்.
விடுதலையின் தாகம்
விரவிக்கிடக்கிறது காற்றில்,
மகரந்தமென.
அது,
சிம்புள் பறவையொன்று அருந்தும்
மழைத்துளியில் சேர்ந்திருக்கலாம்.
தென்கடல் சுறவொன்றின்
மூச்சிலிருந்து முகிழ்ந்து வரலாம்.
நாளை...
அரும்புகள் கூட
ஆழிவேலாகலாம்.
மிச்சமிருக்கும் காலமெல்லாம்
அச்சப்படவேண்டுமென்பது உமக்கு
அழியா விதி.


Monday 13 May 2019

அகவை


என் கவிதையின் சொற்கள்
பாலைவனங்களின் மணல்வெளியில்
கொட்டிக்கிடக்கின்றன.
நடந்து போனவர்களின் எலும்புகள்,
பறந்து சென்ற பறவைகளின் தூவல்கள்,
தண்ணீரின்றி இறந்துபோன ஒட்டகத் திமில்,
கண்ணீர் பட்டு வெடிப்பேற்ற பாறை,
தொலைந்துபோன ஒலி,
சட்டென விழிக்கிறேன் கனவு கலைந்து.
முன்பெல்லாம்
நான் நடக்க விண்மீன்கள் பின்னால் வரும்.
கொக்குகள் கையில் பூ வரைந்து செல்லும்.
ஆகாயத்தாமரைகள் அடக்கிக் கட்டிய
தெப்பம் நாவாயாகும்.
தோளில் தூக்கிய சப்பரத்தில் சாமிகள் வாழும்.
நான் சொன்னபடி கேட்டது உலகம்.
எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு
கண்ணாடி பார்க்கிறேன்.
வெள்ளை விழுந்த தலையைக் கண்டு
விலகிச் சென்றன கொக்குகள்.
உள்ளம் வளர்ந்ததாலே
தள்ளிப் போயின விண்மீன்கள்.
உலகம் சொல்லும் படி
ஒவ்வொரு நாளும்.Friday 10 May 2019

தோப்பில் முகமது மீரான் மறைவு

எமது மரங்களில் கூடுகட்டி
இருந்த பறைவை
வானவெளியில் பறந்து சென்றது.
துறைமுகத்தருகே கூனன் தோப்பில்
குனிந்து தேடுகிறேன்
நீ நடந்த தடயங்களை.
இனி
நீயின்றிக் கிடக்கப்போகிறது
உனது சாய்வு நாற்காலி
நினைவுகளைச் சுமந்தபடி.
உன்னைத் தேடி ஓயாது கரைதொடும்
அலைகள்.
Thursday 9 May 2019

இன்றைய குப்பைகள் நேற்றைய பொக்கிசங்கள்


ஒரு வாழ்க்கை முழுவதையும் சிந்தித்தால் ஏராளமான வேடிக்கைகள் காணக் கிடைக்கின்றன. குடிசைகள் அடுக்ககங்களாவதும், கோபுரங்கள் வசூல் வேட்டைக்கான இடமாவதும், தவிர்க்க முடியாத நிகழ்வுகள் போலே நடத்திக் காட்டப்படுகின்றன. இன்றைய காலத்தில் குப்பை என ஒதுக்கப்படும் நெகிழிகள் ஒரு தலைமுறையினரின் இளவயது பொக்கிசங்களாக இருந்ததை இந்த தலைமுறை அறியுமா?அது எழுபதுகளின் பிற்பகுதி. வழக்கமாக ஊர்ப்பக்கங்களில் ஆறு குளங்களுக்குக் குளிக்கச் செல்லும் ஆண்களும் பெண்களும் துணிகளைத் தோளில் இட்டுச் செல்வார்கள். துவைத்து முடித்து குளித்துத் திரும்புகையில் மீண்டும்  தோளில் இட்டுக்கொண்டே நடப்பார்கள். அப்பொழுது ஒரு சலவைத்தூள் நிறுவனம் ஒரு கிலோ தூளுடன் பச்சைநிற நெகிழி வாளி ஒன்றைக் கொடுத்தது. அதை வாங்கியிருந்த சில வீட்டுப் பெண்கள் அந்த வாளி நிறையத் துணிகளை எடுத்துக் கொண்டு செல்கையில் தெருவிலும் ஆற்றங்கரையிலும் வாளியைத் தொட்டுப்பார்த்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அது போல எங்கள் வீட்டிலும் ஒன்று இருந்தது. அதனுள் லிட்டர் அளவுக்குறிகள் இருக்கும். ஒரு ஏழாம் வகுப்பு மாணவனுக்குப் பெருமை கொள்ள அது ஒன்றே போதுமானதாக இருந்தது. அதைப்பெரிய கணித, அறிவியல் நுணுக்கமாக எண்ணியிருந்தேன். பிற்காலத்தில், உழக்கு நாழி, மரக்கால்கள் போன்றவற்றை அறிந்துகொண்ட போது எனக்குள்ளே சிரித்திருக்கிறேன்.

Wednesday 8 May 2019

படிமங்கள்


கடிதங்கள் காலம் சுமப்பவை.
பிறந்த கதை வளர்ந்த கதை பேசும்,
அனுப்புகை முகவரியில்
ஆயிரம் கதைகளுண்டு.
புலம்பெயர்ந்து சுற்றம் கண்டு
நலம் பயந்த கதைகள் சொல்லும்
பெறுகை முகவரியும்
பேசிடுமே நூறு கதை.
அன்பில் குழைந்ததால் அழகான எழுத்துகள்.
கண்ணீர் வீழ்ந்து கரைந்த ஓரெழுத்து,
மைதீர்ந்து போனதால் மங்கலான கையெழுத்து,
பசைக்குப் பதிலாகப் பாசம் தடவிய காகிதம்,
விரல்களின்றிக் கொஞ்சும் அம்மா,
வியர்வை படாது எதிரில் அப்பா,
தெருவில் நடந்த திருமணம்,
கோயில் கிடா, கொடைவிழா
மறைந்து போன மனிதரின் கதைகள்...
கடிதங்கள்,
சட்டென மறைந்திடும் தொடுதிரையல்ல.
அவை, காலம் சுமப்பவை.எண்ணமழை


குமரியின் அலைச் சுருளில்
தஞ்சையின் வயல் வெளியில்
மலராடும் மலைமுகட்டில்
மாமதுரை வீதிகளில்
பொன்னியின் கரைமருங்கில்
புகைவீசும் அருவிதன்னில்
சென்னையின் பரபரப்பில்
சிந்திட அணியமாகி
வந்தது அடர்மேகம்.
குடைபிடிப்போர் விரித்துக்கொள்ள
விரும்பாதோர் வீடடங்க
வேண்டிநிற்போர் அகமகிழ
தேசமெங்கும் தூறல்விழ - தமிழ்த்
தேசியத்தின் எண்ணமழை
வாசிகொண்டு பெய்யுதம்மா.
மெல்ல விழும் துளியில் - இந்த
மேதினி செழிக்குமம்மா.


Tuesday 7 May 2019

போர்க்களம்


நெஞ்சுக்குள் போர்ப்பறை;

வாள்முனையில்

இதழ்விரிக்கும் செங்காந்தள்.

உயிர்க் கொலைக்கானவை அல்ல,

உயிர் வாழ்தலுக்கானவை

எங்கள் போர்க்களங்கள்.


Friday 3 May 2019

போராட்டம்


எலியின் மூச்சு
எறும்புக்குப் பெருங்காற்று.
புலியின் உறுமல்
யானைக்குப் பேரோசை.
போராட்டங்கள்
புயலைப் போன்றவை.

தொடங்கிய புள்ளியைச்
சுட்டுவது கடினம்.
தொடரும் புள்ளியைக்
கட்டுவது கடினம்.
இன்றிங்கே, நாளை அங்கே,
மற்றை நாள் எங்கே?

சூழ்நிலை அழுத்தத்தால்
சூல் கொள்ளும்;
போராட்டங்கள்
புயலைப் போன்றவை.
மரிப்பதும் இல்லை
பிறப்பதும் இல்லை.
மாறா விதியிது.