Monday, 28 August 2023

ஓண நன்னாள் 2023

 


இன்றும் கூட, பண்டு ஆய்நாட்டுப் பகுதிகளாயிருந்த குமரி மற்றும் பொதியில் மலையைச் சுற்றிய பகுதிகளில் ஓணம் நினைவு கொள்ளப்படுகிறது. புனைவுகளும், கதைகளும் தின்று தீர்த்த தமிழ் மரபுகள் இன்னும் எத்தனையோ ? ஆனாலும், அதன் எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
அரசர்கள் மக்களுக்காகவும், மக்கள் அரசனுக்கு உறுதுணையாகவும் போற்றியும் வாழ்ந்த பெருமரபின் காட்சிகள், புனைவுகளுக்கு நடுவிலும் காணக் கிடைக்கின்றன.
அப்படிச் சிறந்திருந்த ஆய் நாட்டின் அரசன் அண்டிரனே "மாவேள் " ஆக இருத்தல் கூடும். தமிழ் வள்ளல்களில் பெருங்கொடை வள்ளல் இவனே. இவனைத் தேடும் நாளே "ஓணநாளாக” இருக்கலாம்.
அவனோடு இருந்த புலவர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் குறித்து பல பாடல்களை இயற்றியிருக்கிறார்.
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
ஈகை அரிய இழை அணி மகளிரொடு 5
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே' (புறம் 127)
'கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே' (புறம் : 128)
'வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் 5
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே' (புறம் : 129)
'விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின்' (புறம் : 130)
'மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடின கொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?' (புறம் : 131)
'நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல 5
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்.
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.' (புறம் : 132)
'மாரி அன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே!' (புறம் 133)
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.' (புறம் : 134)
'மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! '(புறம் 135)
முடமோசியாரின் பாடல்கள் போல காலங்கடந்தும் அவனது செய்கைகளை கேரள மக்கள் போற்றிப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலும். கேரளத்தில் காணக்கிடைக்கும் ஓணக்காட்சிகள் அதை நினைவு படுத்துகின்றன.
தமிழ் மரபுப்படி மூன்றாம் பிறை தொட்டு பன்னிரண்டு நாட்கள் நோன்பிருந்து கொண்டாடப்படும் நன்னாள் இது. கதைகளும், கற்பனைகளும் இதில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கின்றன. ஆனாலும் ஆய்நாட்டு மக்கள் அவனை மறக்கவில்லை.
"கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்”
(மதுரைக்காஞ்சி: 590-591)
“சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப” (மதுரைக்காஞ்சி 596-598)
இவ்விரண்டு வரிகளும் பாண்டியநாட்டில் ஆவணி மாத ஓணம் கொண்டாடப்பட்டதைக் குறிக்கின்றன.
ஓண நாளில், உயர்ந்த சுவர்கள் போன்ற தடுப்புகளின் மேல் நின்று மக்கள் கண்டுகளிக்க, கீழே யானைகளை ஓடவிட்டு போர் விளையாட்டு நடைபெற்றதும் குறிக்கப்பெறுகிறது. தைப்பொங்கலின் போது நடைபெறும் ஏறு தழுவுதலையும், மஞ்சு விரட்டையும் இதனோடு ஒப்பிட; இரண்டு நிகழ்வுகளுக்குமான பொதுத்தன்மை பிடிபடுகிறது.
இந்த மதுரைக்காஞ்சியின் வரிகள் இன்றைய கேரளத்தின் வழி பாண்டியரது ஓணக்காட்சிகளை மீட்டுத் தருகிறதோ?
ஓணம் என்ற சொல்லுக்கு சொற்பிறப்பியல் பேரகரமுதலி,
ஓண் 1ōṇ, பெ. (n.) உயர்வு, மேன்மை, பெருமை; elegance, excellence.
ஓணம் 2 ōṇam, பெ. (n.) முக்கோல் (திருவோணம்); (திவா.);;ம. ஓணம்.
[உல் → ஒல் → ஓ = நீளுதல், நீண்டுயர்தல். ஓ → ஓண் → ஓணம் = நீண்டுயர்ந்த கொடிபோன்ற விண்மீன் கூட்டம்.]
ஓணம் 3 ōṇam, பெ. (n.) நீராட்டு விழா; bathing festival in a river.
[ஓணம் = நீரோடை, நீராடல். இது ஒளம் - ஓலி என வடபுல மொழிகளில் திரிந்தது.]
ஓணன் ōṇaṉ, பெ. (n.) வாணன், வாணனின் படைத் தலைவன் (அபி.சிந்.);; commander of {} prince. [ஓ = உயர்வு, மேன்மை, பெருமை. ஓ → ஓண் → ஓணன்.]
ஓணப்பிரான் ōṇappirāṉ, பெ. (n.) திருமால்; visnu, 22nd {} being sacred to Him.
"ஓணப்பிரானு மொளிர்மாமல ருத்தமனும்" (தேவா.643,10);.
[ஓணம் + பிரான்.] என்றெல்லாம் பொருள் தருகிறது.
பழமையின் சிறப்புகளை மறவாது நாளை 929-05-20230 "மாவேலி நாடுகாணும் நாள்" கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஓண நல்வாழ்த்து.
"உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!"

ஓண நாள் வாழ்த்து!Friday, 25 August 2023

தோட்டியின் மகன் ஒரு பார்வை

 


இந்த முறை ஊருக்குச் செல்கையில் ஏதேனும் கதை படிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தகழியின் 'தோட்டியின் மகன்' முத்துநாகுவின் 'சுழுந்தீ' இரண்டில் எதை எடுத்துச் செல்வது என்ற சிந்தனை வந்தது. கதை படிப்பது குறைந்து வெகு நாள்களாயிற்று. அதன் பொருட்டு நூலின் அளவு முகாமையானது. இருக்கும் குறைந்த நேரத்தில் தகழியே வசப்படுவார் என்பதால் அவர் தேர்வானார். நூலின் அளவும் பயணக் காலமும் சுழுந்தீயை அடுத்த பயணத்திற்காகத் தள்ளிவைத்தன. மட்டுமின்றி சுழுந்தீயின் சொல்லாடல்கள், களம், மாந்தர்கள் குறித்தான எனது தேடல்கள் முடிந்தபாடில்லை. 'நாஞ்சிநாட்டுக்காரனுக்கு'க் கதை படிப்பதில் உள்ள சிக்கல் இது.

சென்னைப் புத்தகக் காட்சியில் 2018 ல் வாங்கிய 'தோட்டியின் மகனை' ஐந்து வருடங்களுக்குப் பின் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் வாசிக்கிறேன். மலையாளத்தில் எழுதப்பெற்ற இந்தப் புதினம் சுந்தரராமசாமியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

Thursday, 20 July 2023

மனச்சான்று மரித்துக்கிடக்கும் மணிப்பூர்

 
எல்லா மொழிகளிலும் கேட்கிறது

பெண்ணின் அலறல்.

 

எல்லா நிலங்களிலும் சிந்துகிறது

அவள் குருதி.

 

எல்லா தெய்வங்களும்

காட்சிமறைத்தன,

அவள் கண் இருண்டபோது.

 

எல்லா மதங்களும்

கட்டுண்டு கிடக்கின்றன,

பிடுங்கி எறியப்பட்ட

அவள் மயிர்ச் சுருளில்.

 

எல்லா சாதிகளும்

ஒளிந்துகொண்டன,

வீசி எறியப்பட்ட

அவள் ஆடைகளுக்குள்.

 

மனிதம் மறைந்துகொண்டது

உடல் கிழித்தவன்

விரல் நகக்கண்ணில்.

 

மனச்சான்று மரித்துக்கிடக்கிறது

வாக்குச் சாவடிகளின்

வாயில்களில்.

 

இடுகாடும் சுடுகாடும்

எல்லைகளாக இருப்பதா

நாடு?

 

வெட்கம்.

Monday, 17 July 2023

பாரதிராசா பிறந்தநாள் 2023

 

 

தமிழ்த் திரைமொழியை
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.

பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.

கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலை
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.

கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.

முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.

ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில் அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.

வண்ணக் கனவாய்
வளையவந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.

அத்தனையும் பெற்றவன் நீ.

நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்து
தட்டி எழுப்பியவன் நீ.

இன்று காணும்
திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.

மண்ணின் மணம் கமழ
வாழி நீ!

Tuesday, 11 July 2023

அருகே கடவுள்


ஒற்றைக் கொட்டொன்று

ஓசையெழுப்பும்

நட்ட நடு இரவில்,


வெட்ட வெளியில்

வரம்பின்றி

விரிந்துகிடக்கும் மையிருளில்,


சுடலைமாடன் காடேக

மார்பில் அணைத்தத்

தீப்பந்த வெளிச்சத்தில்


மாடனின் கச்சையை

இறுக்கிப் பிடித்து

“சொள்ளமாடா மழ எப்பவரும்?”

என்று கேட்ட

வேலப்பண்ணனின்

மனதுக்கும் மாடனுக்கும்

மயிரிழை தூரந்தான்.


===========================

'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

11-07-2023

===========================