Monday 26 February 2018

இறையே...



எங்கே இருக்கிறாய்

இலைகள் பரப்பும் நிழலின் விரிப்பிலா

எரிமலை விசிறிய சாம்பல் மேட்டிலா

பூக்களின் மேல்கண்ட பனிநீர்த் துளியிலா

பூமியை உட்கொண்ட சுனாமி அலையிலா

கோயில் உண்டியல் தங்கக் காசிலா

கோரப் பசியின் நாக்கு நுனியிலா

இரவு விடுதிகளின் இருட்டு மறைவிலா

முதியோர் இல்ல மூலைக் காற்றிலா

அண்டை மனிதர் அன்பின் இருப்பிலா

தொண்டை கிழிக்கும் துப்பாக்கி முனையிலா

பூக்கள் சிதறும் மகரந்தத் துளியிலா

புன்னகை மறந்த பிஞ்சுகள் விழியிலா

எங்கே இருக்கிறாய் இறையே

நீ எங்கே இருக்கிறாய்.




Sunday 25 February 2018

தொலைவில் இருந்து பேசுகிறேன்...

பொருளாதாரத்தின் துரத்தலில்
வெகுதூரம் போய் விட்ட உறவுகள்.
மனதுக்குள் மங்கலாய் நிழலாடும்
அவர்களின் முகங்கள்.
முகமறியாத புதிய தலைமுறை.
மகிழ்ச்சியைக்கூடத் தொலைபேசிகள்
பரிமாறி விடுகின்றன.
ஆனால் சோகம்...
சொல்லியழச் சொந்தங்கள் அருகிலின்றி
சாய்ந்து கொள்ளத் தோள்களின்றி
கண்ணீரே கண்களுக்குத் துணையாக
உதடுகள் திறக்காமல்
ஓலமிட்டு அழுகிற
உறவுகளின் சோகத்தை
எப்படிச் சொல்வதென்று அறியாமல்
புலம்பிக் கொண்டிருக்கின்றன
எங்கெங்கோ தொலைபேசிகள் .

சிராப்பள்ளி மாதேவன்
25 | 02 | 2018

மெத்து - சொல்ல மறந்த கதை.

பெண்களின் மாதவிடாய் குறித்து திடீரென நாடே பேச ஆரம்பித்திருக்கிறது. எங்கும் அது குறித்த உண்மைகளின் தேடல்களும், மாதவிடாய்க் காலத்தில் நலம் பேணுவதற்கான வழிமுறைகள் பற்றிய விளக்கச் செய்திகளுமாய் "பேட் மேன்" (Pad Man) திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிற அதிர்வலைகள் சிறிதல்ல.

எளிய மக்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் "மெத்து"1 (Sanitary Pad) உற்பத்தி செய்யும்  கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் தன் வாழ்க்கையைச் சொல்லும் விதமாய் எடுக்கப்பட்டிருக்கிறது படம்.

படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக #PadManChallenge என்ற அறைகூவல் சமூக வலைத்தளங்களெங்கும் துளிர்விட்டது. இந்த அறைகூவல் மும்பையின் திரைத்துறைக் கலைஞர்களால் முதலில் பரப்பப்பட்ட போது, பொதுமக்கள்  மெத்து ஏந்தியத் தற்படங்களை வெளியிட்டு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தூண்டியது.

இதேவேளை இது படத்தை விளம்பரம் செய்யும் ஒரு உத்தி என்ற எதிர்க்குரலையும், பெண்ணியவாதிகளின் ஆதரவையும் ஒருங்கே பெற்றது.

ஆனால் மெத்து க்கள் பயன்பாட்டுக்கு வந்த காலம் முதலே அதுகுறித்த ஏராளமான உண்மைகள் மஞ்சு கவிழ்ந்த மலை போல மங்கலாகவே தெரிகிறது. இதைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும், அதில் கலந்திருக்கின்ற மருந்துப் பொருட்கள் குறித்துமான பல உண்மைகள் இன்னும் வெளிவர வேண்டியிருக்கிறது. இதோ மெத்துக்களைப் பற்றிய சில உண்மைகள் .
Source: usseek.com
ஏற்கனவே சிறுநீரக மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு  இடையே, பெண்களின் மாதவிடாய் நலம்பேணுதல் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டேயிருக்கிறது. அதில் மேலதிக மகப்பேறு மருத்துவர்கள் மெத்து பயன்படுத்தச் சொல்கிறார்கள். ஆனால் மெத்து பயன்படுத்துவதற்கு சிறுநீரக மருத்துவர்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். மெத்துகள் செயற்கையாகத் தயாரிக்கப்படுவதும் அதன் பக்க விளைவுகளுமே இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் காரணம்.
            
இதற்கெல்லாம் மெத்துகளின் தயாரிப்புமுறையும் அதில் பயன்படுத்தப் படும் வேதிப்பொருட்களுமே காரணம் என்கிறார் ஒரு தாய்சேய் மற்றும் சிறுநீரக மருத்துவர். நீங்கள் அதிகமாக விளம்பரங்களில் பார்க்கும் மெத்துகள் பெரும்பாலானவைகளில் டையாக்சின் (Dioxin) என்ற மிகப்பெரும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வேதிப்பொருள் முகாமையாகக் கலக்கப்படுகிறது என்கிறார். அதனால் டையாக்சின் இல்லாத மெத்துகளைப் பயன்படுத்துவதையே அவர் எல்லாப் பெண்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறார்.
          
மேலும் தொடர்கையில், அண்மையில் நடத்தப்பெற்ற ஆய்வுகளின் படி உலகில் அதிகக் கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தாக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறார். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டப் பெண்களில் 23 விழுக்காடு இது.
            
கருப்பைவாய்ப் புற்றுநோய்க்குக் காரணமான பிறப்புறுப்புத் தொற்று நோய்களுக்கும் (HPV infections)  சரியாகப் பேணப்படாத மாதவிடாய்க் கால நலத்திற்குமான தொடர்பை நிறைய ஆய்வுகள் இறுதிசெய்கின்றன.  வேறு சில ஆய்வுகளோ புகழ்பெற்றவையாக நாம் கருதும் நிறுவனங்களின் மெத்துகளில் இருக்கும் வேதிப்பொருட்கள், நீண்டநாள் பயன்படுத்தப் படும் போது புற்றுநோயை வரவழைக்கும்  என்று உறுதி செய்கின்றன.
              
ஆண்களுக்கான மெத்துகள் இருக்கின்றன என்பது அதிகம் அறியப்படாத செய்தியாக இருக்கக் கூடும். "சிலரால் சிறுநீரை அடக்கிக் கொண்டு சிறிது நேரம் கூட இருக்கமுடியாது. இந்த மருத்துவக் குறைபாட்டிற்கான முகாமையான தீர்வே ஆண்களுக்கான மெத்து" என்கிறார் ஒரு மருத்துவப் பத்திரிகையின் எழுத்தாளர்.
Source: global.rakuten.com  
 
பொதுவாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் நரம்புக் கோளாறு, பிறவிக்கோளாறு, வாதம், திசு தடித்தல், வயதாவதால் இயல்பாக நடைபெறும் உடல் தளர்ச்சி போன்ற ஏதாவது ஒன்றினால் சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்படலாம்.
          
ஆண்களில் இளைஞர்களைவிட வயதானவர்களுக்கே இது அதிகம் நிகழும் எனினும் சிறுநீரடங்காமை எந்த வயதிலும் நிகழ்ந்துவிடக்கூடும். 2000 ம் ஆண்டுத் தரவுகளின் படி அறுபது வயதைக் கடந்த ஆண்களில் 16 விழுக்காடு ஏறத்தாழ 6 இலக்கம் பேர் சிறுநீரடங்காமையால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். வயது ஏற ஏற இந்த விழுக்காட்டளவு இன்னும் அதிகரிக்கும் என்கிறார். அதனால் இதைத் தடுப்பதற்கான எளிதான வழியாக அவர்கள் மெத்துகளையே தேர்ந்தெடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.
         
மாதவிடாய் மற்றும் சிறுநீரடங்காமை தவிர்த்து வேறு சில வேளைகளிலும் மெத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண் பெண் பிறப்புறுப்பில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது, காயம் முழுவதும் ஆறும் வரையிலான காலத்தில் மெத்துகள் பயன்படுத்தப் படுகின்றன என்கிறார்.
       
இந்தியாவைவிட மேலைநாட்டு ஆண்கள் மெத்துக்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். மெத்துப் பயன்பாட்டின் மீதான  தேவை கருதிய அவர்களின் பார்வையே இதற்குக் காரணம்.
        
இவற்றையெல்லாம் பேசுகிறபோது "மெத்து அணியும் பண்பாடு" என்பது குறித்து நாம் கருத்துப் பரிமாற்றம் செய்யவேண்டியிருக்கிறது என்கிறார் ஒரு
இலாப நோக்கமற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர். நாம் உண்ண, பேச, சாலைகளில் வண்டி ஓட்ட சில பண்பாடுகளைப் பின் பற்றுகிறோம். அது போல மெத்து அணியும் பண்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்கிறார் அவர்.
Source: lfs-es.info

இன்னும் ஏராளமான ஆண்கள் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வழக்கமாக மெத்து பயன்படுத்தும் பெண்களும் கூட  இந்த பண்பாடு பற்றிய விழிப்புணர்வு பெறவேண்டியது அவசியம். இதற்கு ஐந்து அடிப்படையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
          
முதலாவதாக ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை புது மெத்தொன்றை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவேளை அதிகமான குருதி வெளியேறினால் நான்கு மணி நேரத்திற்கு ஒன்றை மற்றிக்கொள்ள வேண்டும்.
            
இரண்டாவது புது மெத்து மாற்றும் முன் வெளியேறிய குருதி முழுவதையும் துடைத்து விட்டு உடலை நன்றாகத் தூய்மை செய்து ,  குருதி நாற்றத்திலிருந்து விடுபடுங்கள்.
             
இந்த நேரங்களில் பிறப்புறுப்பைத் தூய்மை செய்ய சவக்காரம்((soap) பயன்படுத்தாதீர்கள், அது உங்கள் காரகாடித் தன்மை சமநிலை அளவை (PH level) மாற்றக்கூடும்.

பிறகு பழையதை அப்புறப்படுத்துங்கள். பயன்படுத்திய மெத்து முடை நாற்றத்தையும் நோய் பரப்பலையும் ஏற்படுத்தும். கவனமாக, முறையாக அப்புறப்படுத்துங்கள்.
         
ஒவ்வொரு முறையும் (களையும் போதும், அணியும் போதும்) கைகளைத் தூய்மை செய்து கொள்ளுங்கள். என்று பெண்களுக்குச் சொல்கிறார்.
         
மேலும்,  நீண்டநேரம் ஒரே மெத்துவை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் அரிப்பு மற்றும் தடிப்பு போன்றவைக்கு ஆளாகிறார்கள் என்கிறார். அதனால் சரியான கால இடைவெளியில் மெத்துவை மாற்றிவிட வேண்டும்.
       
வெளியேறும் குருதி ஒரு மாசுபட்டக் கலவையாக இருப்பதால் நனைந்து ஊறிய மெத்துவை தொடர்ந்து அணிந்துகொண்டிருப்பது நலக்கேடானதும் அரிப்பு, தோல்நோய்கள், பிறப்புறுப்புத் தொற்றுகள், சிறுநீர்க் குழாய்களில் தொற்று போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்.


ஆண்களுக்காகச் செய்யப்பட்டவையே
                
பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் தொடக்ககால மெத்துகள் ஆண்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை என்பது வியப்பே. போரில் காயமடைந்த வீரனின் குருதிவெளியேற்றத்தைத் தடுக்க Ben Franklin என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வழியே துணி மெத்து. பின்னாளில் செவிலியர்கள் தங்கள் மாதவிடாய்க் குருதி வெளியேற்றத்தை பிடித்துக்கொள்ள மரக்கூழ் பட்டைகளினாலான, செலவு குறைந்த, தூக்கியெறியக் கூடிய மெத்து ஒன்றைச் செய்து கொண்டார்கள். இதுவே பின்னர் மெத்து வணிகத்தின் தொடக்கமானது.


உடல்சார் பக்கவிளைவுகள்:
  • இந்த மெத்துக்களில் பஞ்சுக்கு மாற்றாக மரநார்க்கூழ் (Cellulose Gel)பயன்படுத்தப் படுகிறது. இது ஏராளமான தொற்றுக்களை ஏற்படுத்தும். இந்தக் கூழ் கருப்பை வாய்ப்புற்று நோய்க்குக் காரணமான ஒன்றோ?  என்ற எண்ணம் மருத்துவத் துறைக்கு இருக்கிறது.
  • மூன்று மணி நேரத்திற்கு மேல் மெத்து அணிந்துகொண்டிருக்கும் பெண்களில் சிலருக்கு பிறப்புறுப்பில் சிறு கட்டிகளும் அதனால் உறுத்தல் மற்றும் எரிச்சலும் ஏற்படலாம். இதுவெ தொற்றுகளுக்கு வழிவகை செய்யும்.
  • உறிபஞ்சுகள் (Tampon) எனப்படும் இன்னொரு வகை மெத்துகள் டையாக்சின் மற்றும் ரேயான்(rayon ) ஆகிய பெண்களுக்கு ஆபத்தான பொருட்களால் ஆனவை. பார்ப்பதற்குத் தூய்மையாகவும் பளிச்செனவும்  இருக்க உறிபஞ்சுகள் மேற்கண்ட வேதிபொருட்களால் வெளுக்கப்படுகின்றன.(Bleach). இந்த வேதிப்பொருட்கள் நோயெதிர்ப்பு ஆற்றலைக் குறைப்பதுடன், மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்துகின்றன.


அப்புறப் படுத்துதல்:
  •  இந்த மெத்துகளும், உறிபஞ்சுகளும் மற்றும் குழந்தைகளுக்கன மலவுறிஞ்சிகளும் வெளியே வீசப்படும் போது சூழலுக்கு மிக ஆபத்தானவையே. ஆனலும் இவற்றின் மறுசுழற்ச்சி ஓரளவுக்கு சூழலுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
  • குழந்தைகளுக்கன மலவுறிஞ்சிகள் மண்ணில் மக்கிப்போவதற்கு குறைந்தது 500 ஆண்டுகளாகும். மேலும் வடிகட்டப்படாத சாக்கடை நீருடன் சேரும் போது நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும்.
  • ஒரு குழந்தைக்குச் சராசரியாக 6000 மலவுறிஞ்சிகள் பயன்படுத்தித் தூகியெறியப்படுகிறது. அமெரிக்கா, கனடா பெண்கள் ஆண்டொன்றுக்கு 10 இலட்சத்து 30 ஆயிரம் டன், பயன்படுத்திய இதுபோன்ற பொருட்களைத் தூக்கியெறிகிறார்கள். 50 விழுக்காடு மருத்துவமனைத் தங்கு நோயாளிகள் நீரடங்காமைக்காக மெத்துகளைப் பயன்படுத்தித் தூக்கியெறிகிறார்கள்.


சிறந்த மெத்து:
  • பின்புற ஒழுக்கு ஏற்படாத அளவுக்கு நீளமாக இருக்கவேண்டும்.
  • உடம்போடு ஒத்திசையும் (Elastic Gathering) வகையில் தயாரிக்கப் பட்டால் பக்க ஒழுக்கும், உடல் அசைவினால் ஏற்படும் ஒழுக்கும் தவிர்க்கப்படும்.
  • உறிஞ்சும் பாலிமர் (Super absorbent polymer (SAP)) கொண்டு தயாரிக்கப்பட்டால் 850மி.லி. குருதி வெளியேற்றத்தை சேகரித்துவிடமுடியும்.
  • டையாக்சின் இல்லாமல் தயாரிக்கப்பட வேண்டும்.
  • தோல் நோய் உருவாக்கும் எந்த வேதிப் பொருட்களும் பயன்படுத்தப்படக் கூடாது .
  • நீரடங்காமைக் குறையுள்ளவர்களும் பயன்படுத்தத் தக்கதாய் இருத்தல் வேண்டும்.

இது ஒரு வலைப்பதிவக ஆங்கில இடுகையின் தமிழாக்கமே. பதிவிட்டவரின் அனுமதியோடு இது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மூலப்பதிவைப் படிக்க கீழே இணைப்பைச் சொடுக்கவும்.


மூலப்பதிவு - ஆங்கிலம். www.santhoshmathevan.com




சிராப்பள்ளி மாதேவன்,
சென்னை, 25 பிப்ரவரி 2018