Sunday 25 July 2021

முதுமுனைவர் இளங்குமரனார் - மறைவு

 



தொன்மண்ணாம் தென்மண்ணில்
தோன்றிய தமிழ்க்கடல்.
காவிரிக் கரையில்
வேர்விட்ட மூதாலம்.
பொருளும் சொல்லும்
மழையெனப் பொழிந்த
பெருந்தமிழ் மரபின்
வழிவந்த அடர்மேகம்.
தேவநேயம் தொகுத்தளித்த
தென்மொழியின் பொதியில்மலை.
செந்தமிழர் இறுமாப்பு.

உமை இழந்து வாடுவதும்
ஒரு நோன்பே.
அருந்தமிழின் வேர்பிடித்து
பெருவழியில் நடந்திடவே
உம் நினைவே உரமாகும்.
உம் எழுத்தே தடமாகும்.
நோன்பேற்று வினை முடிப்போம்.

உளைவின்றி உறங்குவீரே
தமிழ்மடியில்.

Wednesday 21 July 2021

ஔவையாரும் ஆடிமாதமும் S1E1

 


. ====================
. ஆடிமாதமும் ஔவையும்
. ====================

அதியனோடும், நாஞ்சில் பொருநனோடும் பேரன்பு கொண்டு வாழ்ந்த, இலக்கியத்திலும் அரசியலிலும் தவிர்க்க இயலாத, அழகுமிகு பாடினி, ஆன்ற இசையரசி, ஆளுமைகொண்ட பெரும் புலவர் ஔவை குறித்தும்; தமிழுலகில் தவிர்க்க இயலாத அவரது பாடல்கள் குறித்ததுமான வலையொலித்தொடர்.

கேளுங்கள். கேட்டுவிட்டுக் கருத்திடுங்கள். தொடர்ந்து வலையொலியைக் கேட்க YouTube ல் "நாஞ்சில் குறுந்திரை" எனும் வலையொளிப் பக்கத்தில் Subscribe செய்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.

=====================
என்றென்றும் அன்புடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
21-07-2021
=====================

Tuesday 6 July 2021

பெற்றவளுக்குப் பிறந்தநாள் 2021


 
நள்ளிரவு வானத்தில்
சிந்திக்கிடக்கிற
விண்மீன்களில் ஒன்றல்ல
நீ
நாளும் 
தேய்ந்து வளரும்
வெள்ளி நிலா.
 
நாட்காட்டியில் வழமையாய்க்
கிழித்தெறியும்
நாட்களில் ஒன்றல்ல
இந்நாள்.
உன்னைப் பெற்றோர்
உள்ளம் மகிழ்ந்த
பொன்னாள்.

எங்களைத் தவிர
எல்லாமும் மறந்த
உன் வாழ்க்கைதன்னில்
எண்ணத்திலேனும் வைத்திருந்தாயா?
நீ
பிறந்ததும் ஒரு பெருநாளென்று.
 
ஈகம் செய்வதற்கே 
இப்பிறப்பென்று
தேதியும் கிழமையும்
தேவைப்படாமல்
வாழ்ந்திருந்த உனக்கு
வயதே மறந்திருக்கும்!

அன்றெல்லாம்;

நீ
உறங்கிய பகல் பொழுது
ஒன்றுகூட நினைவில்லை.
எமக்கென
உறங்காத இரவுகள்
ஓராயிரம் நினைவிலுண்டு.

நீ
உண்டு மகிழ்ந்த நொடி
ஒன்றுகூட நினைவில்லை.
எமக்கு
ஊட்டிச் சிரித்த நாழிகைள்
ஒரு நூறாயிரம் உணர்விலுண்டு.

உனக்கு
கடுத்தமுகம் உண்டென்று
அடுத்தவர் சொல்லிக்கூட
அறிந்ததில்லை.

அன்று,
நாங்கள் அறியாதிருந்த
உன்
பிறந்தநாளைப் போல.

மரங்கள் வாழ்த்துமென
மழை காத்திருப்பதில்லை.

ஆனாலும்,
காற்றடிக்கும் போதெல்லாம்
கையசைத்து இலையுதிர்த்து
மலர் சொரிந்து வாழ்த்திடுமே
அதுபோல எம்மனமும்
வாழ்த்திடுமே உனை

வாழி! வாழி! என.

Saturday 3 July 2021

வலியைத் துரத்திக்கொண்டு... 1


அது 1988ஆம் ஆண்டின் நடுப்பகுதி. பேருந்தில் பெங்களூருக்கு வந்துகொண்டிருக்கிறேன். இரவு பயணம். நல்ல உறக்கம். ஏதோ ஓர் உணர்வில் கண்விழிக்கிறேன். வலது கால் தொடைப்பகுதி வலித்தது. கடுமையாக இல்லை. ஆனால் உறக்கம் கலைந்து போனது. வண்டி கிருட்டினகிரியைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல வலி அதிகரித்தது. எதுவும் செய்ய இயலாது அமர்ந்திருந்தேன். ஓசூர் வருவதற்குச் சில கி.மீ க்கு முன்னே காலைத் தேநீருக்காக வண்டியை நிறுத்தினார்கள். வேகவேகமாக இறங்கினேன். கடையில் தேநீர் ஒன்றை வாங்கி அருந்தியபடி கால்களை மெல்ல உதறினேன். வலி குறைவது தெரிந்தது. அங்குமிங்கும் நடந்தேன். வலி இல்லாமல் போயிருந்தது. மனதில் மகிழ்ச்சி. ஊருக்குப் போய்விட்டேன்.
 
அப்பொழுது இந்திய விண்வெளிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியிலிருந்தேன். இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாக நாற்காலியில் அமர்ந்திருந்த போது  அதே வலியை உணர்ந்தேன். உடனே எழுந்து அறைக்குள் மெல்ல நடந்தேன். சரியாகிப் போனது.

அடுத்தச் சில மாதங்களுக்குள் நான்கைந்து முறை இது நடந்தது. அலுவலகத்தின் உள்ளே இருக்கும் மருத்துவரை சந்தித்தேன். "ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை" என்று சொல்லிவிட்டு இரண்டு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

மறுபடியும் ஊருக்குப் போகவேண்டிய நிலை வந்தது. இந்தமுறை பேருந்தில் முன்பதிவு செய்த இருக்கை இருந்தும் பெரும்பாலும் நின்றுகொண்டே பயணம் செய்தேன். திரையரங்கங்களிலும் வாயிலின் அருகில் நின்றுகொண்டே படம் பார்த்திருக்கிறேன்.

எனக்கு வந்த வலியில் நான் கண்டடைந்த வியப்பு, நின்றுகொண்டே இருந்தால் கால் வலிப்பதேயில்லை. எத்தனை மணி நேரமானாலும் நின்றுகொண்டிருக்க இயலும். என்ன, பேருந்து நடத்துநர்களிடமும், திரையரங்கப் பணியாளர்களிடமும் விளக்கம் சொல்லி மாளவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஊருக்கு வந்துவிட்டேன். அங்கும் இந்த வலிக்கான மருத்துவம் பார்க்கவேண்டி வந்தது. நாகர்கோயிலில் ஒரு சிறப்பு மருத்துவரை (எலும்பு) பாருங்கள் என்று பொதுமருத்துவர் ஒருவர் சொல்ல, போனேன். Xray எடுத்தார்கள். அந்தக் கருப்புவெள்ளைப் படத்தை மாட்டிவைத்துக்கொண்டு "உங்களுக்கு L4 க்கும் L5 க்கும் நடுவில் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார் அந்தச் சிறப்பு மருத்துவர். மூன்று நாட்களுக்கு மருந்து தருகிறேன் என்று எழுதிக்கொடுத்தார்.

மூன்று நாள்களில் எனக்கு வலி எதுவும் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. மருந்து தீர்ந்த பிறகு அந்த மருத்துவரை பார்க்கப் போகவும் இல்லை. ஆனால், சீக்கிரமே திருச்சிக்குப் போகவேண்டிய நாள் வந்தபோது கால் வலியும் கூடவே வந்துவிட்டது. திரும்பி வந்தவுடன் முதல் வேலையாக அந்த மருத்துவரிடம் சென்றேன்.

அன்றைக்கே ஏன் வரவில்லை என்று கடிந்துகொண்டார். வேறு சில மருந்துகளை எழுதிக்(?) கொடுத்தார். "நான்கு நாட்கள் சாப்பிடுங்கள். அதன் பிறகு ஒரு xray எடுத்துப் பார்க்கலாம்" என்றார்.

ஐந்தாவது நாள் புது xray எனக்கு வேட்டு வைத்தது. "உங்கள் L4 L5 க்கு நடுவே ஓர் ஊசி போடவேண்டும்" என்றார் மருத்துவர். 1990 ல் 200/- ருபாய் விலை கொண்ட ஊசி, கொழுகொழுவென்று பழுப்பு வண்ணத்திலிருந்த மருந்து (Gel) முதுகெலும்பின் இணைப்புகளுக்கு இடையே மெல்ல செலுத்தப்பட்டது. வளையும் தன்மைகொண்ட ஊசி உள்ளே நெருடிச் செல்லும் போது ஏற்பட்ட வலி கொடிது. "போதும் விட்ருங்கப்பா" என்று தோன்றும். மருந்து ஏற்றியவுடன்; சுடச்சுட அல்ட்ரா சவுண்டு ஒத்தடம் கொடுப்பார்கள். கூடவே வோவிரான் (Voveran SR) மாத்திரையும்.

வலி வரும் போதெல்லாம் மாத்திரை எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். நான்கு ஊசிகளுக்குப் பிறகு அந்த மருத்துவரை தவிர்த்தேன். ஆனால், வோவிரான் (Voveran SR) எனும் வேதாளம் முதுகில் ஏறிக்கொண்டது. பயணங்களின் போது வலி வரும் முன்பாகவே அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கி இருந்தேன். Preventive Medication. (நாங்களும் படிச்சவுக தானே).

வேலைக்காகச் சென்னையில் மனைவியுடன் குடியேறினேன்.  கூடவே வோவிரான் வேதாளமும். நண்பர் ஒருவரின் துணைவியார், மருந்தாளுநர் (Pharmacist); "அண்ணா இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள். வேண்டாம். உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்றார். வேலையும் நாற்காலியில் அமர்ந்து செய்யும் வேலையல்ல. தொழிற்பேட்டைகளில் அலைவதுதான் வேலை. நடந்து திரிவதுதான் அதிகம். வலி மெல்ல மெல்ல மறந்து போனது. மாத்திரை எடுப்பதும் நின்றுபோனது. வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டு நிம்மதியானேன்.

இரண்டாண்டுகளில் மறுபடியும் நாகர்கோயில் வாசம். மகேந்திரகிரியில் வேலை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வலது கை மரத்துப் போனது போலத் தோன்றியது. சிறிது நேரத்தில், முழங்கையில் தொடங்கித் தோள்பட்டைக்கு மேலேறியது கடுமையான வலி. கையை உதறினேன், சுழற்றினேன். வலி நின்றபாடில்லை. மலைக்கு மேலே நின்றுகொண்டு; பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. சில மணி நேரத்தில் தானாகவே வலி நின்று போனது.
 
ஒரு நாள் இருசக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஆக்சிலேட்டரை முடுக்க முடியாமல் கை மரத்துப் போனது. வண்டி கட்டுப்பாட்டில் இருக்காது என்று அஞ்சி நிறுத்திவிட்டேன். சில நிமிடங்களில் முழங்கை வலிக்கத் தொடங்கியது. ஆரல்வாய்மொழியில் ஒரு மருந்துக்கடையில் சென்று "Voveran SR 50 ரெண்டு குடுங்க" என்று கேட்டு வாங்கினேன். மறுபடியும் வேதாளம் முதுகில் ஏறிக்கொண்டது. காயத்திருமேனி எண்ணெய், முக்கூட்டுத் தைலம், மாத்திரை என நாட்கள் நகர்ந்தன.
 
அப்பாவின் கடைசித் தம்பி ஊடுகதிர் படம் (Radiographer) எடுப்பவர். அவரிடம் சென்று ஆலோசனை கேட்டு, அன்று நாகர் கோயிலில் சிறந்த எலும்பு மருத்துவர் என அறியப்பட்ட ஒருவரிடம் சென்றேன். வழக்கம் போல் பரிசோதனைகள்.மருந்துகள்.
 
இந்த முறை வலது மார்பெலும்பு உள்நோக்கி சிறிது முளை போன்று வளர்ந்திருப்பதாய் (Extra Growth) அந்தக் கறுப்பு வெள்ளைப் படம் சொல்லிவிட்டது. அது தான் குருதிக் குழாய்களை அழுத்துகிறது. அதனால் மரத்துப் போகவும் வலிக்கவும் செய்கிறது. (எனக்கு வலது கையில் ஓர் இரத்த அழுத்தமும், இடது கையில் வேறொரு இரத்த அழுத்தமும் இருந்தது இன்னும் சிறப்பு). அது இன்னும் வளர வளர...
 
"தம்பி இந்தச் சிக்கலுக்குத் தீர்வு அறுவைச் சிகிச்சைதான். முதுகுப் பக்கம் இருந்து, வளர்ந்திருக்கும் இந்தக் குருத்தை தேய்த்து (Grinding) எடுக்க வேண்டும். Open Heart Surgery போல இது முதுகுப் பக்கமிருந்து செய்யப்படுவது. வீட்டில் கலந்து பேசிவிட்டு வாருங்கள்" என்றார் மருத்துவர்.
 
அடிப்படையில் நான் இயந்திரவியல் படித்தவன். கணிதமும் இயற்பியலும் மிகவும் பிடித்தவை. அதனால், அவருடைய விளக்கம் எனக்கு அழகாகப் புரிந்தது. அந்தக் குருத்தை சுரண்டி எடுக்க வேண்டியதன் அவசியமும் நன்றாக விளங்கியது. (இப்படி வெளக்கமா சொன்னா படித்தவர்களாக நம்பி இருக்கிறவர்களை எளிதாக வழிக்குக் கொண்டுவந்துவிட முடியும்.) ஆனாலும், முதுகை... பிளந்து.. தேய்த்து... அச்சம் வந்துவிட்டது.
 
எல்லா அறிக்கைகளையும் எடுத்துக்கொண்டு என் பள்ளித் தோழனான, அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் போனேன். "நாங்க படிச்சிருக்கிறது அறுவைச் சிகிச்சை முறை. இதில் நோய்களுக்கான தீர்வு எல்லாமே அதன் அடிப்படையிலேயே இருக்கும். அவர் சொன்னது சரிதான். ஆனால் எதற்கும் அண்ணனைப் பாரேன்" என்றார்.
 
அண்ணனிடம் போனேன். அவர் நோயறி நிபுணர் (MD). எல்லாம் கேட்டார். அவருக்கு வியப்பானது என் இரண்டு கைகளுக்குமான இரத்த அழுத்த வேறுபாடு. ஆறு நாட்கள் தொடர்ந்து வரச் சொல்லி பரிசோதனை செய்தார்.
 
"உனக்கு இருக்கும் பிரச்சனைக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வென்றாலும், அந்த அறுவை முறையின் வெற்றி விகிதம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. அதுவல்லாமல் வேறு மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்த கூடும். கை கால் இயக்கம் நின்று போகலாம். பேச்சில் சிக்கல்கள் வரலாம். இன்னும்..."
 
எனக்கு உள்ளுக்குள் அச்சத்தால் வேர்க்கத் தொடங்கியிருந்தது.
 
"இப்ப வலிக்கு என்ன பண்ற."
 
"எப்பவாது மாத்திரை போட்டுக்கிறேன். காயத்திருமேனி மாதிரி எண்ணெய் தேச்சுக்கிறேன்"
 
"அப்படியே கொண்டு போயிரு. ரெம்ப வலி தாங்க முடியலன்னா பார்ப்போம்.ஆனா, பிரசர் தான்.. சந்தேகமா இருக்கு. ஒரு மாசம் கழிச்சு வா. பாக்கலாம்"
 
சரி என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன். வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அறுவைச் சிகிச்சை என்பது கூடாது. என்ற முடிவோடு வீட்டுக்கு வந்தேன்.
 
பத்து நாட்கள் கழிந்திருக்கும், எங்களது மளிகைக் கடையில் அமர்ந்திருந்தேன். கல்லாவில் சட்டை அணியாமல் தோளிலிருந்து கை முழுவதும் தேய்த்து விடப்பட்ட எண்ணெய்.
 
"என்ன கை வலியா? எண்ணெ போட்டுருக்கீங்க" என்ற படி ஒருவர் வந்தார். தெரிந்தவர்தான். அரளைக் கல் வண்டியில் வேலை. கற்களை ஏற்றி இறக்குவதுதான் பணி.
 
"ஆமா. விடவே மாட்டெங்குது. ஆப்பரேசன் பண்ணணும்னு சொன்னாங்க. வேண்டாம்ன்னு எண்ணெய் போட்டுட்டு இருக்கேன்"
 
"எந்த டாக்டரு?"
 
பெயர் சொன்னேன். மெல்லச் சிரித்தார். நாளைக்கு நாகர்கோயில்ல இருக்க ஓர் ஆசான் கிட்ட போலாமா?
 
"ஆசான் கிட்டயா? கைய வளைச்சு எடுத்து எதுவும் செய்துட்டாருன்னா?"
 
"போய்ப் பாத்துட்டு அப்புறம் சிகில்ச எடுக்கணுமா வேண்டாமாண்ணு முடிவெடுங்க"
 
"ம்.. சரி" என அரை மனதோடு சொல்லிவைத்தேன்.
 
மறுநாள் காலை "சில்வெஸ்டர் ஆசானின்" வைத்தியசாலையில், கையில் X rayக்கள், அறிக்கைகள் என வைத்துக் கொண்டு உள்ளே வளர்ந்திருக்கும் எலும்புக் குருத்தை இவர் என்ன செய்வார், அதை அரித்துக் குணமாக்குகிற மருந்து எதுவும் இருக்குமோ? என்ற அறிவார்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தேன்.
 
என்னை அழைத்தார். கையில் இருந்த அறிக்கைகளைக் கொடுத்தேன். "அதையெல்லாம் நீங்க வச்சுக்கோங்க. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க என்றார். இதுவரை இந்தப் பதிவில் நீங்கள் படித்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னேன்.
 
"உள்ளாடை தவிர அனைத்தையும் கழட்டிவிட்டு அந்த மணையில் உட்காருங்கள்" என்றார்.
 
பின்புறமாக வந்து கழுத்தில், தாடையை ஒட்டி இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மெல்ல என்னைத் தூக்கினார். சில நொடிகள் தான்.
 
"உங்களுக்கு ஏதாவது விபத்தில் அடிபட்டிருக்கிறதா?"
 
 "இல்லை ஐயா"
 
"மாடு ஏதாவது முட்டியிருக்கிறதா?"
 
"இல்லை ஐயா"
 
"சரி... சிறு வயதிலிருந்து நீங்கள் என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுவீர்கள். சொல்லுங்கள்"
 
கபடி, கொக்கோ, பூப்பந்து எனச் சொல்லிக்கொண்டே வந்தேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. உயரந்தாண்டுதல் (High Jump)) என்றேன்.
 
"எந்த வயதில்? எவ்வளவு உயரம் தாண்டுவீர்கள்?"
 
"பத்தாவது படிக்கும்போது. பதினாறு வயது. மாவட்ட அளவில் இடம் பிடிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன் ஐயா. நாலரை அடி"
 
"என்ன மெத்தேட்"
 
"சிசர் கட்" ஐயா.
 
"எந்த ஊருன்னு சொன்னீங்க?"
 
"தாழக்குடி"
 
"சாடி இறங்கும் இடத்தில் மண்ணு தானே கிடக்கும்?"
 
"ஆமா. ஆத்து மண்"
 
எழுந்து என் அருகே வந்து பாதத்திலிருந்து இடுப்புவரை சில இடங்களில் தொட்டு அழுத்திப் பார்த்தார். ஓர் எண்ணெயைக் கையில் ஊற்றி தோளிலிருந்து கீழ் நோக்கி தேய்த்தார்.
 
"நான் தரும் எண்ணெயை இப்படி நாள்தோறும் தேய்க்க வேண்டும். தலையிலும், கையிலும் நன்றாகத் தேய்த்துவிட்டுக் குறைந்தது அரை மணி நேரம் இளவெயிலில் நிற்க வேண்டும். நடந்து சென்று ஓடும் நீரிலோ குளத்திலோ நன்றாக முங்கிக் குளிக்க வேண்டும்."
 
"நீந்திக் குளிக்கலாமா ஐயா?"
 
"தாராளமாக"
 
மனதுக்குள் ஒரு நம்பிக்கை கீற்றுத் தென்பட்டது. சட்டை, வேட்டியை அணிந்துகொண்டேன். அவரது இருக்கை அருகே சென்றேன். மருந்துக் குப்பி இருந்த கையை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு,
 
"இந்தாங்க. இந்த மருந்தை நம்புங்க. ஆண்டவனை நம்புங்க. சரியாகிவிடும்"
 
வாங்கிக் கொண்டேன்.
 
"ஐயா ஒரு சின்னச் சந்தேகம். எனக்கு இரண்டு கையிலும் வேறு வேறு இரத்த அழுத்தம் இருக்கிறது என்று சொல்கிறார் டாக்டர். அது சரியாகுமா?
 
பக்கத்திலிருந்த குப்பிகளிலிருந்து சில பொடிகளைக் கலந்து தாளில் மடித்து "இந்தாங்க. மூன்று நாளைக்கு இதை இரவு சாப்பிடுங்கள். நாலாம் நாள் அதே மருத்துவரிடம் சென்று இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யுங்கள்"
 
நான்காம் நாள் அழுத்த வேறுபாடு இரத்தத்தில் இல்லை. எண்ணெய் தேய்த்துக் குளித்ததில் வலி குறைந்தது உணர்ந்தேன். பத்து நாட்களில் எண்ணெய் தீர்ந்து போனது. ஆசானிடம் சென்றேன். இன்னொரு குப்பி கொடுத்தார். வாங்கிக் கொண்டு,
 
"ஐயா.. என் பிரச்சனைதான் என்ன?"
 
"ஒண்ணுமில்லை. வர்மப் புள்ளிகளில் அடிபட்டால் காலம் கழிந்து கூட இது போன்ற பிரச்சனைகள் வரலாம். உங்களது உள்ளங்காலில் அது போன்ற ஓர் அடி பட்டிருக்கிறது. ஆத்துமணனில் கிடக்கும் கறுத்த உருண்டையான கற்கள் மீது நீங்கள் உயரத்திலிருந்து குதித்திருக்கிறீர்கள். உருண்டையான பொருட்கள் வர்மத்தில் படும்போது தாக்கம் அதிகமாக இருக்கும். அதுதான்."
 
"ஐயா... அந்த எலும்பு குருத்து..."
 
"அப்படியெல்லாம் வளர்ந்திருந்தால் நீங்கள் இப்படி நடந்துவந்து என்னிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டீர்கள். இப்ப வேணுணா Xray எடுத்து அவங்ககிட்ட காட்டுங்க. எதுவும் இல்லைன்னு சொல்லிருவாங்க"
 
"அப்ப மொத Xray ல பாத்தது ஐயா"
 
"அதான் வலி சரியாக ஆரம்பிச்சிருச்சில்ல. அப்புறம் எதுக்குப் பழைய நெனப்பு. இன்னொன்னு சொல்லவா? இந்தக் குப்பியோட உங்களுக்கு எண்ணெய் தேவைப்படாது. எந்தக் காலத்திலேயும் இதே பிரச்சனைக்காக எங்கிட்ட வரவும் மாட்டீங்க. போதுமா"
 
நான் இதுவரை அனுபவித்த வலி நினைவுக்கு வர, கையெடுத்து வணங்கினேன். மிக்க நன்றி வருகிறேன் ஐயா.
 
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆயிற்று. இன்று வரை அந்த வலிக்காக அவரைச் சென்று பார்த்ததில்லை. மருந்தும் எடுத்ததில்லை.
 
அந்த மருத்துவர் முகவரி:

 முகவரி:-  
சில்வெஸ்டர் ஆசான் வைத்தியசாலை,
47-A, இராமன்புதூர், நாகர்கோயில் – 629002.
    கைப்பேசி: +91 4652 224769 , +91 94433 29180

இதைவிட, என்னை அழைத்துச் சென்றவருக்கு ஓர் அனுபவம் இருக்கிறது. இன்னொரு வாய்ப்பில் அதை எழுதுகிறேன்.