Saturday 22 May 2021

மழைப் பாடல்


 

திருச்சிராப்பள்ளியிலிருந்து தோழர் ராவெ தமிழ் இனியன் 20-05-2021 அன்று கைப்பேசியில் விளித்தார். சிறிது நேரம் நலம் உசாவியபின்,

"தோழர் மழை குறித்து பள்ளிகளில் சிறுவர் பாடும்படியான பாடல் ஒன்று எழுதுகிறீர்களா?" என்றார்.

"முயற்சிக்கிறேன்" என்றேன்.

"தோழர் கொஞ்சம் எளிய நடையில், சொற்களில் இருக்கட்டும்" என்றார்.

"புரிகிறது தோழர்" என்றேன்....

பாடல் எழுதி அவருக்கு அனுப்பினேன். அவருக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிகும் என எண்ணுகிறேன். 

கண்டிப்பாக பாடல் குறித்தான கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

==========================================

 

மழைப் பாட்டு

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

 

ஒழுகிசை அகவலோசையுடைய நிலைமண்டில ஆசிரியப்பா

 

மழையே மழையே வாவா வா

மண்ணுங் குளிர்ந்திட வாவா வா

அமிழ்தம் நீதான் உலகுக் கென்றே

ஐயன் வள்ளுவர் சொன்னா ரே

அவரது வழியில் நாளும் நின்றே

அழைத்தோ மிங்கே வாமழை யே.

 

நெல்லும் கரும்பும் தெங்கும் பனையும்

எள்ளும் பருப்பும் கம்பும் தினையும்

உண்ணும் அனைத்தும் உன்னால் விளையும்

தண்ணீ ராலே தாகமுந் தணியும்

உணவையுஞ் செய்தாய் உணவென வானாய்

உலகஞ் செழிக்க வாமழை யே.

 

எங்களு ழவரு மேர்பிடித் தங்கே

மண்ணை யுழுது பயிரை வளர்த்து

கண்ணுங் கருத்தாய்க் காவலுஞ் செய்து

உண்ணும் யாவையு முலகம் பெறவே

விண்ணிலே செல்லும் மேகமு டைத்து

மண்ணில் பெய்வாய் மாமழை யே. 

 

உந்தன் நீர்த்துளி உடலில் பட்டால்

புல்லுங் கைகளை நீட்டிக் களிக்கும்

பூக்களுந் தலையை ஆட்டிச் சிரிக்கும்

புள்ளின மாயிரம் பாடல் இசைக்கும்

நாங்களும் நன்றா யாடிக் களிக்க

நல்லோர் சொல்போல் வாமழை யே   

 

-------------

காணொளி இங்கே   https://youtu.be/7i5JtcloLaoSunday 16 May 2021

அப்பாவின் தோழன் - மறைவு 14-05-2021


 அந்தச் செழிப்பான ஊரிலே நிறைய ஆசிரியர்கள் உண்டு, பெரிய மனிதர்கள் உண்டு, நிலக்கிழார்கள் உண்டு, இசைக்கலைஞர்கள் உண்டு, மருத்துவர்கள் உண்டு... இப்படிப் பலர் உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊர்க்காரர்கள் எல்லோரும் அறிந்திருப்பதோ, தேடிக்கொண்டிருப்பதோ இல்லை.

ஆனால், தமிழ்நாட்டின் தென்கோடியில் தாடகை மலை அடிவாரத்தில் இருக்கும் அந்தத் தாழக்குடி எனும் ஊரில், எல்லோராலும் தேடப்படுகிற, எல்லோரும் அறிந்திருந்த, எல்லோரையும் அறிந்து வைத்திருந்த மனிதர் உண்டென்றால் அது Post தங்கம், Post தங்கண்ணன் என அழைக்கப்படும் நடுத்தெரு திரு. நீலகண்டன் அவர்களே.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் சிற்றூர்களுக்கும் தாழக்குடிக்குமான ஒரே அஞ்சல் நிலையத்தின் அஞ்சல்காரர் அவர். நாள் தோறும் காலை ஏழு மணி தொடக்கம் நடந்து நடந்தே (மிதி வண்டி கிடையாது) இந்த மூன்று கி.மீ பரப்பளவை அலசுகிறவர். வெயில் காலத்திலும் அதே நடைவண்டிதான்.

சாதி, மதம் கடந்து எல்லோரையும் (குடும்ப உறுப்பினர் உட்பட) அறிந்து வைத்து அதை எப்போதும் நினைவிலும் வைத்திருந்த மனிதர்.

நான் பார்க்க ஐம்பது ஆண்டுகளாக, ஓரே உடல் வாக்கு. ஒல்லியான உருவம். வெற்றிலைச் சிவப்பேறிய வாய். இறுதிக் காலம் வரை நடக்க இயன்ற இயல்பூக்கம். ஊரிலிருந்து செல்லும்போது "நல்லா இருக்கியாப்போ" என்று வினவும் அன்பு. பொதுவுடைமை சித்தாந்தத்தின் மீதான தளராத பிடிப்பு. தம்பிக்கு வந்த கடிதத்தைக் கூட அண்ணனிடம் கொடுக்கக் காட்டிய தயக்கம். இப்படி நிறைய.

குறிப்பாக என் தந்தையாரின் அணுக்க நண்பர். அப்பாவுக்கு; இறுதிக் காலத்தில் நடை தளர்ந்து, தெரு முனையில் இருக்கும் சேகரின் தையல் கடை வரை செல்வதே பெரும்பாடாக இருந்தது. ஆனாலும் நாள்தோறும் மாலை நேரம் யாருடனாவது சென்று விடுவார். அங்கே தங்கண்ணனும் வருவார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலான கதைகளை இருவரும் பேசிக்கொள்வார்கள் போலும்.

ஒரு தேயிலையை வாங்கி இருவரும் கூடவே சேகரும் பகிர்ந்து கொள்வார்கள். ஒரு தேயிலை பத்து ருபாய் விற்கும் காலத்தில், 10/- ரூபாய்க்கு மூன்று பேர் குடிக்கும் அளவுக்குத் தேயிலை கொடுத்த தாழக்குடி "குரு டீஸ்டாலுக்கு" நன்றி. இதனால் ஒன்றும் வயிறு நிறையப்போவதில்லை. ஆனால், முகம் பார்த்த பருவத்திலிருந்து ஏற்பட்ட தோழமை சுமக்கும் அவர்கள் இருவருக்கும் மனம் நிறைந்திருக்கும் என நம்புகிறேன்.. 

பேசி முடித்துவிட்டு அப்பாவை வீடுவரைக்கும் கைப்பிடித்து அழைத்து வருவார் தங்கண்ணன். 80 வயதுக்கு மேலான இரண்டு முதிய;  கைகோர்த்து நடக்கிற நண்பர்களை,  அது வரையில் நான் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அதை நேரில் பார்ப்பது வியப்பான பேறு.

கீழே விழுந்து காலில் அடிபட்டுக் கட்டிலில் முடங்கிய அப்பாவின் கடைசி நாள்களிலும் தங்கண்ணன் வந்து பார்த்துச் சென்றார். அப்பாவின் மறைவிற்குப் பிறகுதான் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் காலாவதியாகின.

அப்பாவின் மறைவிற்குப் பின் நான்கைந்து முறைதான் நான் ஊருக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னைப் பார்க்கிற பொழுது "கொஞ்சம் நில்லுப்போ" என்பார். தடிமனான கண்ணாடியின் ஊடாக என்னைப் பார்ப்பார். பின் எதுவும் சொல்லாமல் நடந்து சென்றுவிடுவார். அந்த மௌனமான நிமிடங்களில் அவர்களது எண்பத்தைந்து ஆண்டுகள் தோழமையின் அருமையை நான் உணர்ந்திருக்கிறேன்.

இதோ 14-05-2021 அன்று தங்கண்ணனை காலம் தன்னுள் சேர்த்துக் கொண்டது.

இந்தியாவில் தேர்தல் தொடங்கிய நாளிலிருந்து அவர் உள் முகவராக இல்லாத தேர்தல்களே இல்லை. தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஊர்களில் அவர் நடந்து போகாத தெருக்களே இல்லை. அவரை அறிந்திராத மனிதர்களே இல்லை.

யார் மகன் எந்த ஊரில் வேலை செய்கிறான். எந்தப் பெண்ணை எந்த ஊரில் மணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களது தற்போதைய நிலை, நிகழ்வுகள் என, எல்லோரையும்; எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்த மனிதன் யாரும் அறியாத காலப் பெருவெள்ளத்தில் கலந்து போனான்.

இனி அப்படி ஒரு மனிதனை அந்த மண் சந்திக்கப் போவதேயில்லை என்பது மட்டும் நெஞ்சில் அறையும் உண்மை.

 Friday 14 May 2021

ஏழு கடல் தாண்டி..

நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் மெல்லிய பசி இருக்கிறது. கைகளில் கூரிய கற்களும், கம்புகளும் இருக்கின்றன. எங்கள் கண்கள் இரையைத் தேடுகின்றன. தொலைவில் ஓசை. காதுகளைத் தீட்டிக்கொண்டோம். அது நெருங்குகிறது. முன்பே சுவைத்தது தான். இப்பொழுது முன்பாக வந்து கொண்டிருக்கிறது. எல்லோருடைய கைகளும் கற்களையும் கொம்புகளையும் உறுதியாக பற்றிக் கொள்கின்றன. ஒரே அடியில் சாய்த்துவிட வேண்டும். விட்டுவிட்டால் வேகமாக ஓடிவிடும். எங்களால் அப்படி ஓட இயலாது. ஓசை மிக அருகில் நெருங்கிவிட்டது. சட்டென்று ஒரே நேரத்தில் அனைவரும் தாக்க அது ஓலத்துடன் சாய்ந்தது.

தற்கு நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை. அதற்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெயர் என்று எதுவும் கிடையாது. உடலின் வேறுபாடுகள் அறிவோம். உண்போம், புணர்வோம், உறங்குவோம் அவ்வளவுதான்.

தோ என் அருகில் இருக்கிறானே இவன் ஒருமுறை உண்ணும்போது என்னைக் கடுமையாகத் தாக்கி விட்டான். என் காலின் இரண்டு விரல்களைக் கடித்துத் துப்பிவிட்டான். அதோடு அது முடிந்துபோனது. அதே கூட்டத்தில் தான் இருவரும் இருக்கிறோம். இப்பொழுது சேர்ந்தே உண்ணுகிறோம். இன்னொருமுறை வேறு யாராவது ஒருவர் இன்னொருவரைக் கொன்று சாய்த்துவிடலாம். கூட்டம் அப்படியேதான் இருக்கும். மேலும் கீழும் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். சேர்ந்தே வாழுகிறோம். பிறக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றவள் மட்டுமே உண்டு. அதுவும் ஒரு காலம் வரைதான். பெற்றவளைத் தாக்கிய பிள்ளை உண்டு. பிள்ளையின் கைகளை முறித்த பெற்றவள் உண்டு. இங்கே வாழ்தல் என்பது இரைதேடலும் இணைசேர்தலும் மட்டுமே.

கீழே வீழ்ந்து கிடக்கும் அதன் உடலை ஆளாளுக்குப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். குருதியின் சூடு இன்னும் அடங்கவில்லை. நான் கூரான கல்லை எடுத்து தோலையும் தசையையும் தனித்தனியாகக் கிழிக்கிறேன். சரியாக வரவில்லை. அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். எழுந்து ஒரு கல்லால் இன்னொரு கல்லைத் தாக்கி கிழிப்பதற்கு வாக்காக ஒரு கல் துண்டை உருவாக்குகிறேன். இந்த முறை எளிதாகத் தோலும் தசையும் பிரிந்தன. என் கைகளிலிருக்கும் துண்டின் குருதி அவள் தொடையில் வழியும் அளவுக்கு அருகில் வந்துவிட்டாள். ஒரு துண்டைப் பிய்த்து வாயில் இட்டுக்கொண்டாள்.

பார்ப்பதற்கு என்னை விடச் மிகச் சிறியவள். முகத்தில் இளமை. பசியாறிக் கிளம்பிய போது நான் உடைத்த கல்லின் மற்றொரு துண்டை கையில் எடுத்துக் கொண்டாள். இன்னொன்று என்னிடமே இருக்கிறது. கூட்டமாக நடந்துகொண்டிருக்கிறோம். அவள் என் முன்னால் சென்றுகொண்டிருக்கிறாள். பறவைகளெல்லாம் மரங்களை நோக்கி வரத் தொடங்கியிருந்தன, நடந்து  கொண்டிருந்தோம்.

ட சடவெனப் பேரோசை. கூட்டமாகச் சில கொம்புகள் தெரிந்தன. என்ன ஏது என்று பார்ப்பதற்குள் என் நெஞ்சில் கடுமையான ஒரு தாக்குதல். மண்ணில் சாய்கிறேன். குருதியின் சூடு வயிற்றில் வழிவதை உணர்கிறேன். கண்கள் மங்குகின்றன.

வள் திரும்பிப் பார்க்கிறாள். கண்கள் விரிய என்னை நோக்கி வருகிறாள். என் கண்களின் அருகில் அவள் கண்களைப் பார்க்கிறேன். யாருடைய கண்களையும் இவ்வளவு அருகில் பார்த்ததில்லை. இது போல யார் யாருக்கோ நடந்திருக்கிறது. இத்தனை அருகில் யாரும் சென்று கண்களைப் பார்த்ததில்லை. நானும் கூட. எங்கள் உயிர் காக்க ஓடுவதும் மறைவதுமே நடக்கும்.

ன் நெஞ்சைத் தொட்டுப் பார்க்கிறாள். காற்றுக்கும் எனக்குமான தொடர்பு மெல்ல அறுபடுவதை உணர்கிறேன். அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவளோ தன் கையிலிருந்த கல் துண்டை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். மெல்ல எழுந்து நடந்தாள். நின்று திரும்பி என்னைப் பார்த்தாள். கூட்டம் முன்னால் சென்றுகொண்டிருக்கிறது.அவளும் நடக்கத் தொடங்கினாள்.

வளைக் கூப்பிட வேண்டும்போல் தோன்றியது. ஆனால் அவளுக்குப் பெயர் இல்லை. ஆற்றல் முழுவதையும் சேர்த்துக் கையிலிருந்த கல்லை அவள் மீது எறிந்தேன். திரும்பிப் பார்த்தாள். குனிந்து கல்லை எடுத்துக்கொண்டாள். நான் இறுதியாய்ப் பார்த்தது அந்தக் கண்களைத்தான். நான் மறக்காமல் காத்து வைத்தது அந்தக் கண்களில் தெரிந்த ஒளியைத் தான்.

ன்னால், அவள் யாரென்று உங்களுக்குச் சொல்ல முடியாது. அவளாலும் நான் யாரென்று உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆம் எங்களுக்குப் பெயர் இல்லை.

லட்சக்கணக்கான ஆண்டுகள் ஓடிவிட்டன. உங்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது. அதில் உங்களுக்கென்று ஒரு பெயரும் இருக்கிறது. இங்கு எல்லாமே மாறியிருக்கிறது. அவள் கண்களில் நான் இறுதியாய்க் கண்ட ஒளியைத் தவிர.

தற்கு நீங்கள் அன்பு என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். அந்த ஒளி மங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது இருக்கும் வரைதான் மாந்த இனம் வாழும். அதன் பிறகு இங்கு வாழ்வதற்கான காரணங்கள் ஏதுமில்லை.

னென்றால் நீங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டீர்கள்.


Tuesday 4 May 2021

ஒரு மனித வாழ்நாளின் பெரும் தொண்டுக்கு புகழ்வணக்கம்

 


மறை மலையம் பாவேந்தம்தேவ நேயம்
மாநூலாம் அப்பாத் துரையம், நாட்டார்
நாமுவே பெருநூல்கள், சாமி சிதம்பரனார்,
மாமன்னர் கதை யுரைத்த மாணிக்கனார்,
பாத்தமிழின் பெருமை சொன்ன வாரணனார்,
மூத்தோர் இவர்போலே பலருமிங்கே
யாத்தளித்த நூல்க ளெல்லாம்
சேர்த்தளித்த நின் உழைப்பை
வானுள்ள நாளெல்லாம் மறவாதே
மாமன்னர் தமிழ் வளர்த்த நாடிதுவே.
                    (ஆசிரியப்பா) 


ஐயா கோ.இளவழகனார் அவர்கள், தமிழ்மண் பதிப்பகம் வாயிலாக வெளியிட்ட முக்கியமான நூல்களின் பட்டியல். 
 
1. பாவேந்தர் பாரதிதாசன் – 167 நூல்கள்
2. கா. அப்பாத்துரையார் – 98 நூல்கள்
3. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 80 நூல்கள்
4. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 76 நூல்கள்
5. ந.சி.க. நூல் திரட்டு – 65 நூல்கள்
6. திரு.வி.க. தமிழ்க்கொடை – 54 நூல்கள்
7. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் – 53 நூல்கள்
8. மறைமலை அடிகள் – 52 நூல்கள்
9. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 37 நூல்கள்
10. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 39 நூல்கள்
11. மாணிக்க விழுமியங்கள் – 34 நூல்கள்
12. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் – 32 நூல்கள்
13. ஔவை துரைசாமி உரைவேந்தர் தமிழ்த்தொகை – 32 நூல்கள்
14. புலவர் குழந்தை படைப்புகள் – 28 நூல்கள்
15. சங்க இலக்கியக் களஞ்சியம் – 22 நூல்கள்
16. கவியரசர் முடியரசன் படைப்புகள் – 22 நூல்கள்
17. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை – 21 நூல்கள்
18. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 20 நூல்கள்
19. தொல்காப்பிய உரைத்தொகை – 19
20. பதினெண் கீழ்க்கணக்கு – 18 நூல்கள்
21. தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) – 18 நூல்கள்
22. இராகவன் நூற்களஞ்சியம் – 16 நூல்கள்
23. சதாசிவப் பண்டாரத்தார் – 16 நூல்கள்
24. தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 நூல்கள்
25. செவ்விலக்கிய கருவூலங்கள் -15 நூல்கள்
26. தேவநேயப் பாவாணர் – 13 நூல்கள்
27. தமிழக வரலாற்று வரிசை – 12 நூல்கள்
28. நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 10 நூல்கள்
29. செம்மொழிச் செம்மல்கள் – 10 நூல்கள்
30. பி. இராமநாதன் – 10 நூல்கள்
31. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – 10 நூல்கள்
32. கருணாமிர்த சாகரம் -7 நூல்கள்
33. ஐம்பெருங் காப்பியங்கள் – 5 நூல்கள்
34. முதுமொழிக் களஞ்சியம் – 5 நூல்கள்
35. சுப்புரெட்டியார் – 3 நூல்கள்
36. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி – 3 நூல்கள்
37. உவமைவழி அறநெறி விளக்கம் – 3 நூல்கள்
38. யாழ்ப்பாண அகராதி -2 நூல்கள்
39. ந.சி. கந்தையா அகராதிகள் – 2 நூல்கள்
40. நீதி நூல்கள் – 2 நூல்கள்
41. குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) – 1 நூல்
மொத்த பக்கங்கள் – 2 இலட்சத்துக்கு மேல்
மொத்த நூல்கள் – 1,165
==============================
இதில் குறிப்பிடப்படாத நூல்களும் ஏராளம் இருக்கின்றன
====================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
04-05-2021
====================