Tuesday 31 August 2021
பெருந்தமிழர் வ.உ.சி 150
Sunday 29 August 2021
ஔவையாரும் ஆடிமாதமும்
Tuesday 24 August 2021
அழாததேனோ?
அம்மா அப்பா ஆடு இலையென
அத்தனையும் சொன்னபோது;
மொழியின்றிப் பிறந்த நான்
இறந்து போயிருந்தேன்.
ஓடி ஒளிந்து விளையாடும்
ஒரு காலம் வந்தபோது;
கையூன்றித் தவழ்ந்து
மண்தின்று மகிழ்ந்திருந்த நான்
மரித்துப் போயிருந்தேன்.
இணையென்று வாழ்வில்
துணையொன்று சேர்ந்தபோது;
யார் எனக்குத் துணையாவார்
என்றலைந்தப்
பாழ்மனதுக்காரன் நான்
உள்ளுக்குள் செத்திருந்தேன்.
முதுமையில் கஞ்சியுண்ட
முகவாய் துடைத்தபோது;
முயங்கியே பெற்றகாமம்
முத்தியென நினைத்த
மூடன் நான்
மறுபடியும் மரணித்தேன்.
முற்றிய உடலைவிட்டு
சட்டெனப் பறக்கும் போது;
வெடித்து அழுது
வீழ்ந்து புரளும் கூட்டம்,
அத்தனை முறை செத்தபோது
அழாததேனோ?
Friday 13 August 2021
திரு பெ.ஆறுமுகம் பிள்ளை மறைவு
Tuesday 10 August 2021
முப்பந்தல் ஔவையார் கோயில் - ஆடிச் செவ்வாய்
ஆடித்திங்கள் இறுதிச் செவ்வாய்
இதுவரை ஔவையின் ஈரிய நெஞ்சம்
மறவாத தாழைவாழ் மாந்தர் இளமை
சிதையா தெடுத்த சிறுவய தவ்வையின்
சீருறு தோற்றம் சிறப்பு
(வெண்பா)
10-08-2021
Sunday 8 August 2021
அப்பா சாப்பிடவில்லை!
"மற்றதெல்லாம் எடுக்காட்டாலும் ஆடி அம்மாசி எடுக்கணும் மக்கா" ஊரிலிருந்து கைப்பேசியில் ஒலித்தது அம்மாவின் குரல்.
இதோ காக்கைக்குச் சோறு வைக்க இரண்டாவது மாடியிலிருந்து மொட்டை மாடிக்குப் போயிருக்கிறாள் துணைவி. என் முன்னே விளம்பப்பட்டுக் கிடக்கிற இலையில், ஊரில் செய்வதுபோல் இல்லை என்றாலும் கூட்டவியல், தடியங்காய் கிச்சடி, நெல்லிக்காய் விடிவெளம்(?), பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படம், பருப்புப் பாயசம் எல்லாம் இருந்தன. அருகில் ஒரு செம்பு நீர்.
"நாலஞ்சு காக்கா வந்துச்சு" என்றபடியே கீழிறங்கி வந்தவள்
"நீங்க சாப்பிடுங்க" என்றாள்.
"கொத்திருச்சா?"
"ஆமா... ஆனா வந்ததுல ஒரு காக்கா மட்டும் எடுக்கல்ல"
"அதுதான் எங்க அப்பா காக்கா" என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்.
"நல்லகண்ணு பாட்டாவுக்குத் தெவம் முட்டிட்டுக் கெடக்காம். போய்ப் பாத்துட்டு வரியா" - என்ற தாத்தாவின் கட்டளைக்கு செவிசாய்த்து (எட்டு ஒன்பது வயசுல என்ன செவி சாய்க்கிறது. கேட்டுத்தான் ஆகணும்) பாட்டா இருந்த முடுக்குக்குப் போனேன். கூரை வேய்ந்த வீடு. பெரியவர்கள் என்றால் குனிந்துதான் செல்ல வேண்டும். வீடென்றால், தனியான அறைகள் எதுவும் கிடையாது. அகன்ற இடத்தில் ஒரு மூலையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு தடுப்பிருக்கும். அது அடுக்களை. மற்றபடி இருக்க உண்ண கிடக்க என எல்லாவற்றிற்கும் மீதி இருக்கும் இடந்தான்
அந்த இரண்டடித் திண்டில் ஒரு சிம்மினி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மெல்லிய வெளிச்சம். "வாப்போ" என்றழைத்த நாகம்மக்கா தம்ளர் ஒன்றிலிருந்த பாலைக் கலக்கி சின்னக் கரண்டியில் எடுத்து,
"இத பாட்டாக்கு வாயில ஊத்துப்போ" என்றாள்.
முழுவதும் உள்ளே இறங்கிவிட்டது. அறியாத வயதில்,
"இன்னும் கொஞ்சம் குடுக்கட்டா" என்றேன்.
மறுபடியும் கலக்கினாள். அப்பொழுதுதான் பாலில் கரும் பழுப்பு வண்ணத்தில் கிடந்த அந்த "உருண்டை"யைப் பார்த்தேன். என்னவென்று தெரியவில்லை.
"யக்கா பால்ல என்னமோ கெடக்கு"
"அது பாட்டாக்கு ரெம்ப புடிச்சது. நாந்தான் போட்டு வச்சுருக்கேன். வேற ஒண்ணும் இல்லப்போ"
இரண்டாவது கரண்டியையும் ஊற்றினேன்.
"இந்தப் பேரன் கையிலாவது அத்தானுக்கச் சீவன் அடங்குதான்னு பாப்போம்"
யாரோ ஒரு பாட்டியின் குரல் கேட்டது. வெளியே வந்து திண்ணையில் அமர்ந்துகொண்டேன்.
அதைத் திண்ணை என்று சொல்ல முடியாது. கோழி அடைக்க மண் சுற்று கட்டி பழைய பனங்கைகளைப் போட்டு, வேப்பிலையும் செம்மண் சாந்தும் மெழுகிய கோழிக்கூடு. திண்ணை போல பயன்படும். கருக்கலில் கூடடைந்துவிட்ட கோழிகளின் சூட்டை என் அடிவயிற்றில் உணர்ந்தேன். மனதுக்குள்; முந்திரிக்கொத்து, சிறுபயறு உருண்டை, சடங்கு வீட்டு மாவுருண்டை இதெல்லாம் விட்டுட்டு இந்தப் பாட்டாவுக்கு அந்தச் சின்ன உருண்டை ஏன் பிடிச்சிருக்கு? அது என்ன? என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. விடை தெரியவில்லை.
பத்து ஆண்டுகள் கழித்து,
"தன்னிழல் தன்னடி ஆவதுண்டு - சுடர்
தானுந் தலைமேல் தெரிவதுண்டு"
என்ற கவிமணியின் பாடலைக் குறித்து தாத்தாவோடு பேசிக்கொண்டிருந்த போது,
"நல்லக்கண்ணு பாட்டா நட்சத்திரம் பாத்தே மணி சொல்லிருவாரு. தெரியுமா?" என்றார் தாத்தா.
"பகல்ல எப்படிச் சொல்வாரு?"
"ராத்திரி அளவுக்கு இல்லாட்டாலும் நெருக்கி சொல்லிருவாரு. காமணிக்கூர் முன்ன பின்ன இருக்கும். ராத்திரின்னா ஒறக்கத்துல எழுப்பி கேட்டா கூட மேல பாத்துற்று டக்குன்னு சொல்வாரு. அவ்வளவு தீர்க்கம் தெரியுமா?"
"ஆமா தாத்தா... அவரு சாகக் கெடக்கச்சுல பால்ல ஒரு உருண்டையப் போட்டு கலக்கி கொடுத்தாங்களே அது என்னது?" (எத்தனை ஆண்டு கால விடையறியா கேள்வி.. கேட்டுவிட்டேன்)
நல்லகண்ணு பாட்டா பட்டாளத்தில் இருந்ததும், போர்க் காலங்களில், காயம் பட்ட போது அபின் கொடுத்துப் பழக்கப் படுத்தியதும், அபின் அரசால் தடை செய்யப்பட்ட பிறகும் கூட பாட்டா போன்றவர்களுக்கு "பெர்மிட்" கொடுத்து அதை அரசே வழங்கியதும் அறிந்தேன். பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று வாங்கி வர வேண்டுமாம். இறப்பின் இறுதி மணித்துளி வரை பாட்டாவோடு "உருண்டையும்" இருந்திருக்கிறது. அதனால்தான் அவரது இறுதி மணித்துளிகளில் நாகம்மக்கா 'உருண்டை'யை பாலில் கரைத்துக் கொடுத்திருக்கிறார். (திருவாசகமெல்லாம் பாடவில்லை)
என் நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் தாத்தா மீன், இறைச்சி, முட்டை என்று எதையும் சாப்பிடுவதில்லை. ஆனால் அப்பா அதற்கு நேர் எதிர். மீன் இல்லாத நாட்கள் அவருக்குப் பெருங்கட்டம். அப்பா மட்டுமில்லை எங்களூரில் நூற்றில் தொண்ணூறு பேருக்கு மீன் இல்லை என்றால் சோறே இறங்காது.
தீவாளி, கொடை, பொங்கி பொரிப்பு என ஆண்டில் சில நாட்களில் மட்டுமே ஆட்டிறைச்சி வீட்டிற்கு வரும். தாமரை இலையில் சுற்றப்பட்டு வரும் அந்தப் பச்சை இறைச்சியின் மணம் இன்னும் நினைவில் இருக்கிறது. அதை எடை போடுவதில்லை. "பங்கு"தான். ஓர் ஆட்டை பல பங்குகளாகப் பிரிப்பார்கள். "கொடை, தீவாளி எல்லாம் முடிஞ்சு எச்சி எலைல கெடக்குற மிச்ச மீதிய பாத்தா அந்த ஆட்டுக்கே அதுக்க எலும்ப அடையாளம் தெரியாது. அப்படி கடிச்சு இழுத்திருப்பாங்க."
"எல்லா பங்குலயும் முள்ள வீதிச்சு போடுடே. ஒரே பங்குல முள்ளு போயிரப்போகுது". ஆட்டின் எலும்பைக் கூட முள் என்றே சொல்லும் அளவுக்கு மீன் சாப்பிடும் பழக்கமுடையவர்கள் எம் மக்கள்.
பொரித்தச் சாளை மீனை முள்ளெடுக்காமல் சாப்பிடுவது அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். நமக்கெல்லாம் தெறச்சி துண்டம், வேளாங்கட்டி, நெத்திலி இதுதான் லாயக்கு. மத்ததுல முள்ளு குத்திருமோன்னு பயம். அண்ணமாரெல்லாம் கொமைப்பாங்க. நான் மாறல்ல. இன்னைக்கு வரைக்கும் அப்படித்தான்.
"என்ன்ன்னனனங்க... சிரிச்சுகிட்டே இருந்தா எப்படி. சாப்பிடுங்க"
"ம்... சாப்பிடுறேன். அடுத்த தடவ சாளமீன் கறி வச்சுப் பாரு அந்தக் காக்கா சாப்பிடும்."
"என்னது அம்மாசிக்கு மீன் கறியா?"
"சாப்பிடுதான்னு வச்சு பாப்போம். கொத்திருச்சுன்னா நான் சொன்னது சரிதானே?"
"என்னத்தையோ படிச்சுட்டு என்னென்னவோ சொல்றீங்க. ம்.."
சன்னலோரம் அமர்ந்திருந்த ஒரு காகம் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்தது. "நல்லகண்ணு பாட்டா எங்க?" என்று கேட்டேன். எதுவும் சொல்லாமல் சிறகடித்துப் பறந்து சென்றது.
நீங்கள் யாரேனும் காக்கை சிரித்துப் பார்த்திருக்கிறீர்களா?
Saturday 7 August 2021
நான் பேராசைக்காரன்
சின்னக் கணக்கு ஒன்று போட்டுப் பார்ப்போமா ஒருவேளை உங்களில் ஏராளமானோர் வியந்து போகலாம்.
உங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நாற்பது வயதிருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அம்மா, அப்பா இருவரும் உங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். இது போன்றே உங்கள் அப்பாவுக்கு இருவர். அம்மாவுக்கு இருவர். இப்படிப் பார்த்தால் கடந்த 120 ஆண்டுகளில், அதாவது நான்கு தலைமுறையில் வாழ்ந்தவர்கள் 30 பேர். இதில் இன்று, அம்மா, அப்பா, தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக வைத்துக் கொண்டால்; இறந்து போன நேரடிச் சொந்தங்கள் 24 பேர். பத்துத் தலைமுறை, 300 ஆண்டுகள் எனக் கொண்டால் இறந்து போன நேரடிச் சொந்தங்கள் 2040 பேர். இருபது தலைமுறைக்கு 600 ஆண்டுகள் என்றால் 20,97,144 (இருபது இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நூற்று நாற்பத்திநான்கு) பேர்.
அப்படியே பெரியகோயில் கட்டப்பட்ட காலத்திலிருந்து பார்த்தோமானால் ஏறத்தாழ 214,74,83,640 (இருநூற்றுப்பதிநான்கு கோடியே எழுபத்து நான்கு இலட்சத்து எண்பத்துமூவாயிரத்து அறுநூற்று நாற்பது) பேர் உங்களது நேரடிச் சொந்தமானவர்கள் வாழ்ந்து முடித்து மறைந்து போயிருக்கிறார்கள்.
என்ன தலை சுற்றுகிறதா? உங்களுக்கு மட்டுமே இஃது என்றால் உங்கள் மகனுக்கு / மகளுக்கு, உங்கள் கணவனோ / மனைவியோ அவர்களின் தலைமுறை எண்ணிக்கையையும் சேர்த்தால்… அப்பப்பா.. ஏறத்தாழ 400 கோடிக்கும் மேலான சொந்தங்கள். அதில் பாதிப்பேர் பெண்கள். எத்தனை கதைகள். எவ்வளவு மகிழ்ச்சி. எவ்வளவு கண்ணீர். எவ்வளவு நல்ல கூறுகள். அனைத்தையும், காலங்கள் தாண்டி உங்களுக்குக் கடத்தி இருக்கிறார்கள். அவை உங்களின் பெருஞ்சொத்து.
அதில் முகாமையானது தமிழ். ஏறத்தாழ 3.5 x e100 நேரடியான உங்கள் உறவுகள் பேசிப் பழகி, செழித்த மொழி. மேலே இருக்கும் 3.5 x e100 ல் உங்கள் மூத்த பாட்டனுக்குக் குழந்தை பிறந்து “அம்மா” என்று அழைத்தபோது, குமரியிலிருந்து சிந்துவரை வேறு எந்த மொழியும் பிறந்திருக்கவில்லை. அத்தனை சிறப்புடையது உங்கள் தலைமுறை வழக்கு. இதுபோலவே அவருக்கும், இவருக்கும், எனக்கும். இப்படி, கோடானுகோடி உங்கள் தாய் தந்தை வழி நேரடிச் சொந்தங்கள் கையளித்த தமிழை உங்கள் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள். இந்தக் காலகட்டத்தில் இதை என்னுடைய பேராசையாகவே பார்க்கிறேன். ஒருவேளை உங்களுக்கும் கூட…