Tuesday 29 August 2017

ஆனைக்கா- பாடல் விளக்கம்.


ஆனைக்கா பேரறிவின் சின்னம். தொடர்ச்சி.

                 காவிரி பொன்படுநெடுவரையில் (குடகு) தொடங்கி கானலம் பெருந்துறையை (புகார்) அடைந்து கடல் தழுவுகிறது. தன் முழுப்பயணத்தில் மாயனூரிலிருந்து அகன்றக் காவிரியாய் விரிகிறது. கல்லணையின் கீழே ஒரு பரந்துவிரிந்த மருதநிலப்பரப்பை வளமாக்கி உலகில் செழிப்புற்ற இடங்களில் ஒன்றாய் மாற்றுகிறது. மாயனூர் தொடங்கிக் கல்லணை வரை காவிரி இந்த மண்ணை ஆரத்தழுவிச் செல்வதைக் காணலாம்.
       இன்றைய முக்கொம்பில் பிரியும் காவிரியும் கொள்ளிடமும் பெருவெள்ளச் சமநிலைக்கான ஏற்பாடுகளே. இந்தச் சமநிலையைக் கண்காணிக்கும் இடமாக ஆனைக்கா தேர்வுசெய்யப் பட்டிருக்கலாம். முக்கொம்பிலிருந்து கல்லணை ஏறத்தாழ 24 கி.மீ (நேர் அளவு) ல் இருக்கிறது. ஆனைக்கா இந்த இரண்டிற்கும் நடுவில், அதாவது 12 கி.மீ (நேர் அளவு)ல் அமைந்திருக்கிறது. மேலும் காவிரியாற்றின் நடுப்பகுதியிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதி வரை ஏறத்தாழ 3.5 கி.மீ (நேர் அளவு) இருக்கிறது. ஆனைக்கா கோயில் இந்த இரண்டுக்கும் நடுவில் ஏறத்தாழ் 1.65 கி.மீ (நேர் அளவு) ல் இருக்கிறது. நீர்மட்டக் கணக்கீட்டிற்கு ஆனைக்கா கோயில் மிகச் சரியான இடமாகத் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் என்பது மன்னன் வாழும் அரசு செய்யும் இடம். அதற்கு ஏராளமானச் சான்றுகள் நாடெங்கும் உள்ளன. ஆனைக்கா கோயிலிலும் இருக்கிறது. பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் குறத்தி மண்டபம் எனப்படும் 'குறை தீர்த்த மண்டபம்' உள்ளது. வசந்த மண்டபம் என்றும் சொல்வர். அரசர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்தே மக்களது குறைகளைக் கேட்டறிவார்களாம்.
         சிராப்பள்ளி மலைக்கோட்டையிலும் தர்பார் மண்டபம் உள்ளது. "குறை தீர்த்த மண்டபம்" குறத்தி மண்டபமானதும், தர்பார் மண்டபமானதும் காலத்தின் கோலம்.
     மன்னன் இருந்த இடத்தில் காவிரியாற்றின் நீர்மட்டத்தை அன்றாடம் கவனித்துத் தெரியப்படுத்தி அதற்கேற்றவாறு கொள்ளிடத்தில் நீர்பிரிக்க ஆனைக்காவில் கட்டப்பட்டநீர் கண்காணிப்பு அமைப்பே இந்தக் கோயில். பெருவெள்ளம் மற்றும் போர்க்காலங்களில் ஊர் மக்கள் அனைவரும் தங்கிக் கொள்ள கோயிலுக்குள் எல்லா வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. நெற்குதிர், குடிநீர்க் கிணறுகள், குளிப்பதற்கான குளங்கள், விறகுக்கான மரங்கள், தென்னை மரங்கள் என்று எல்லாமும் இருந்தன. அதற்குச் சான்றாய் இன்றும் இருக்கிறது தோப்புக்காரத் தெரு.

      உள்ளத்தில் கேள்விகளோடு நீங்கள் படிப்பது புரிகிறது.

  கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மற்றும் அதற்கு முன்பு இருந்த தேல்ஸ் ஆகிய கிரேக்க அறிஞர்கள் நீரியல் சுழற்சி பற்றிய தெளிவற்ற சிந்தனைப் போக்கைக் கொண்டிருந்தனர்.


‘கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பின் அது மலைகளில் இருந்து ஆறாக வெளிப்படுகிறது’. என்கிறார் தேல்ஸ்.

 ‘குளிர்ச்சியான காலநிலைகளில் காற்று உறைந்து மழையாகப் பெய்கிறது’. என்கிறார் அரிஸ்டாட்டில்.
     
     ஆனால் தமிழ்நாட்டில் அந்தக் காலகட்டத்திற்கு முன்பே நீரியல் பற்றிய வளமான அறிவு எல்லோரிடமும் இருந்தது. 

“வான்முகந்த நீர் மழை பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.”   -(பட்டினப்பாலை, 126-131.)

என்று மழைப் பொழிவும்,

வருவிசைப் புனலைக் கற்சிறை போல :- (தொல்காப்பியம்-பொருள்-65)

  என்று நீரைக் கல்லால் அணைகட்டித் தடுப்பதும் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன.
 

      இத்தனைப் பேரறிவு நிறைந்த நிலத்தில் ஆனைக்கா போன்றதொரு நீர்க் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது இயல்பே. இங்கே அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு மட்டும் அது வந்து சேரவில்லையோ என்ற எண்ணந்தான் என்னை ஒரு பாடல் எழுதத் தூண்டியது.



அள்ளக் குறையா ஆனைக்காச் சிவனைச்
சொல்லக் குறையாச் சோணாட் டோம்பலைச்
செல்வங் குறையாச் செய்திட்டக் கோயிலில்
வல்லம் போல்வளைந்து காண்.
 
பாடல் விளக்கம்
 
அள்ளக் குறையா ஆனைக்காச் சிவனை:-
           அள்ள அள்ளக் குறையாத பெருநீர் பெருக்கி ஓடியவள் காவிரி. அவள் தான் இங்கே சிவம். மண்ணோடும் மக்களோடும் இரண்டறக் கலந்தவள். தன் பெருங்கை விரித்துக் கரை தொட்டு நடப்பாள். மருதநிலம் செழிக்கச் செய்வாள், புனலாடும் மாந்தர் ஆடை அவிழ்த்துக் களிநடம் புரிவாள். அவள்தான்  இங்கே எல்லாமுமாக  இருக்கிறாள். அவளை இழந்து இந்தமண் அடையப்போவது எதுவுமில்லை. அவளே சிவம். 
 
 
அப்படியொரு ஆற்றின் பயன்பாட்டைப், பாதுகாப்பை உறுதிசெய்யத்தான் இந்தக்கோயில். இந்த அறிவும் எம் மக்களின் மரபறிவே.
 

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே:- (புறநானூறு-18)
 
 
      உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள். உடல் இருக்க உணவே காரணம். உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது. ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் என்கிறது இந்தப் புறப்பாட்டு. நீரும் நிலமும் இன்றியமையாதது என்ற அறிவின் வெளிப்பாடு இது.
 
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண்பறம்பு நாடே:- (புறநானூறு-118)

      கூரிய வேலையும் திரண்டதோளையும் உடைய பாரியின் பறம்பு மலையில் உள்ள எட்டாம் நாள் பிறையை ஒத்த வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய சிறுகுளம் பாதுகாப்பார் இல்லாமையால் பாழ்படுகிறதே’ என்று பாரியின் மறைவுக்குப் பின் கபிலர் துயரத்தோடு பாடுகிறார். பாரியின் மறைவைவிட சிறு குளத்தின் அழிவு அறிஞர்களால் கூர்ந்து நோகப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை நீர்மேலாண்மை குறித்த ஒரு பேரறிவின் பார்வையாகவே நான் காண்கிறேன். காவிரிதான் ஆனைக்கா சிவன் என்று நான் பொருள்கோடக் காரணம் எம் முன்னோர் அறிவே. இங்கு அவளே சிவன்.
 
 சொல்லக் குறையாச் சோணாட் டோம்பலைச்
 
       சோழநாட்டின் விருந்தோம்பல் உலகம் அறிந்ததே. சோழநாடு சோறுடைத்து. எல்லா நாளும் வருபவர்களுக்கெல்லாம் அள்ளிவழங்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமான பகுதி இந்தப் புனல்நாடு.
 
அறம் நிலைஇய, அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,
யாறு போலப் பரந்து ஒழுகி, 
ஏறு பொரச் சேறு ஆகி,
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல,
வேறு பட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டு ;- (பட்டினப்பாலை)
 
        அறம் நிலைபெற்ற, பெரிய சமையல் அறைகளில் ஆக்கிய கொழுமையான கஞ்சி, ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடி, அங்கு காளைகள் போரிடுவதால் சேறு ஆகிற்று. தேர் ஓடிக் கிளப்பிய தூசியில் விளையாடிய ஆண் யானையைப் போன்று, ஓவியம் வரையப்பட்ட அரண்மனையில் தூசிப் படிந்தது. ஆறு போல் கஞ்சி ஓட வேண்டுமானால் எவ்வளவு சோறு ஆக்கப் பட்டிருக்கவேண்டும். ஓடியதும் கொழுங்கஞ்சியாம். கஞ்சியை அறியாத "குக்கர்" தலைமுறை கொழுங்கஞ்சியை எப்படிப் புரிந்து கொள்ளும் என்று தெரியவில்லை. உலகியலில், சிறப்புடையவையெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போதோ உணரப்படும் போதோ அந்தச் சிறப்பின் அளவில் குறைந்தே தோற்றமளிக்கத் தொடங்கும். ஆனால் பட்டினப்பாலையின் பெருவியப்பை நான் இன்றளவும் சோணாட்டில் கண்டும், உணர்ந்தும், பருகியுமிருக்கிறேன் .மணலை அள்ளி, நீரைத் தடுத்து என்னென்னவோ செய்து அவளைப் பாழ் படுத்திய பின்னும், குடிநீரைத் தந்து உயிர் காக்கிறாள். கொழுங்கஞ்சி ஆறாக ஓட, ஆறாக ஓடும் காவிரியே காரணம். இங்கு  அவளே சிவன். 
 
செல்வங் குறையாச் செய்திட்டக் கோயிலில்
 
        ஆனைக்கா அழகும் அறிவும் இணைந்து நிற்கும் பெருங்கோயில். இத்தனை வேலைப்பாடுகள் நிறைந்தக் கோயிலைக் கட்ட பேரறிவு வேண்டும். வள்ளுவப் பேராசான் சொன்னச் செவிச்செல்வம் பெற்ற எத்தனையோ தச்சர்கள் இங்கே பணிசெய்திருப்பார்கள். அவர்களுக்கு உதவியவர்கள், கல் சுமந்தவர்கள், மண்வெட்டியவர்கள் என்று எத்தனையோ மனிதர்களின் பேருழைப்பு இந்தக் கற்றளியெங்கும் நிறைந்து நிற்கிறது. முன்பே குறிப்பிட்டது போல ஒரு சரியான நீர் கண்காணிப்பு மற்றும் கணக்கீடு நிலையமாக எழுப்புவதற்கு எவ்வளவு அறிவுச்செல்வம் எவ்வளவு பொருட்செல்வம் தேவைப்பட்டிருக்கும்.
 
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப  நாட்டிவ் வைந்து :- (குறள்)
 
       இந்தக் குறளின் நோக்கில் சிறந்த நாடாக சோணாடு விளங்கியதால் இத்தனைப் பெரிய அறிவுக்கோயில் இங்கே எழுந்திருக்கிறது. இத்தனையும் கொடுத்தவள் காவிரி. இங்கு அவளே சிவன்.
 
 
வல்லம் போல்வளைந்து காண்
 
    இத்தனைச் சிறப்புமிக்க கோயிலில் எப்படிக் காவிரிக்கு வணக்கம் சொல்வது. கருவறைச் சுவற்றில் ஓட்டைகள் இடப்பட்டிருக்கின்றன. எத்தனைப் பெரிய காவிரி எனினும் அளவறிந்து பயன்படுத்தவேண்டும். இல்லையெனின் அது கேட்டை வரவழைக்கும். அதன் குறியீடகவே சுவற்றில் துளைகள் இடப்பட்டிருக்கின்றன. 
       இயற்கையோடு வாழ்ந்து வாழ்வியலின் உச்சம் தொட்டப் பேரறிவின் நீட்சியே ஆனைக்கா கோயில். எம் முன்னோர் நிறைவாகச் செய்தக் கோயிலில் உள்ள நிறைவுடன் வணங்குதலே நம் முன்னோருக்கும் காவிரிக்கும் நாம் செய்யும் மரியாதை. வாழை மரம் வளர்ந்து குலை தள்ளும் போது ஒரு மனிதன் தலை தாழ்த்திக் கை கூப்புவது போலிருக்கும். குலையின் கீழே பூ கூப்பிய கை போன்ற தோற்றம் தரும். அப்படி வணங்கும் ஒருவரை தள்ளி நின்று பார்த்தீர்களானால் குலைதள்ளிய வாழை போலிருக்கும். குலைதள்ளிய வாழை மனநிறைவின் குறியீடு. வல்லம் என்றால் வாழை.முன்னோர் அறிவை உணருங்கள். வாழை போல்  மனநிறைவோடு காவிரியை கைகூப்பி வணங்குங்கள். இங்கு அவளே சிவன்.

        காவிரியைக் காப்போம். தமிழர்தம் பேரறிவைத் தெரிந்து கொள்வோம். புரிந்து பயன்படுத்துவோம். அல்லன களைவோம். இந்தப் பேரறிவு முழுமையும் தமிழில் விளைந்ததே என்பதை அறிவோம். தமிழைப் போற்றி வணங்குவோம். அதுவே எல்லாமும் என்று தெளிவோம்.


ஆனைக்கா பேரறிவின் சின்னம்.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
                
 
 

Sunday 27 August 2017

ஆனைக்கா




       


     ஓராண்டுக்கு முன்பு நண்பரோடு திருவானைக்கா கோயிலுக்குச் சென்றிருந்தேன். நண்பர் வீடும் அருகிலேயே இருக்கிறது. கோயிலில் நுழைந்து கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே செல்லும்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். பெரும்பாலும் கோயில்கள் உள்ளே செல்லச்செல்ல மேடாகவோ அல்லது வெளியிலிருந்து கருவறை வரை சமதளமாகவோ
அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் திருவானைக்கா வெளியிலிருந்து உள்ளே செல்லச்செல்லத் தாழ்வாகிச் செல்கிறது. கருவறை முற்றும் தாழ்ந்தநிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது.



கோயில் கற்றளி மிகச்சிறந்த உயர்கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய
கணிணி வழி வடிவகணிதத்திலும் எளிதாக வரைந்துவிட முடியாத வளைவுகள் கல்லிலே
செதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த முப்பரிமாண வளைகோடுகளின் ஒழுங்கமைதி என்னைப்
பெருவியப்பில் ஆழ்த்தியது. எத்தனைத் திறமையான தச்சர்கள், அவர்களை ஒழுங்குபடுத்தி
தன் மனதில் உருவகப்படுத்தியிருந்த கற்றளியைக் கண்முன்னே நிறுத்திய பெருந்தச்சன்,
இந்தப் பணியை முன்னெடுத்த மன்னன், மன்னனுக்கு தம் விளைச்சலின் பங்கைத் தவறாது
வழங்கிய மக்கள், மக்களுக்கு விளைச்சலை வரையாது கொடுத்தக் காவிரி அத்தனையும்
அந்தச் சிற்பங்களின் ஒழுங்கில் பெருங்கோயில் அழகில் என் கண்முன்னே வந்தன. காவிரி
என்னும் இந்தப் பேராறுதான் இத்தனைக்கும் மூலம். காவிரி இல்லையென்றால் இப்படி வேலைகளே இங்கு நடக்காமல் போயிருக்கலாம்.



உயிர்வாழ்தலின் முக்கியமான நீரைப் பெருங்கொடையாய்க் கொடுத்தக் காவிரியைப்
என்றென்றும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த மன்னனுக்கு வந்திருக்கலாம்.
அதனால் "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவனின் ஒன்றேமுக்காலடிக் குறளுக்கு
இத்தனைப் பெரிய கற்றளி விளக்கத்தைக் கட்டிவிட்டான் போலும். நீரைத்தேடிப் போகிற
வடிவமாய்க் கோயிலையும் வடிவமைத்து விட்டான். எம் முன்னோர் மரபறிவை வியந்து
கொண்டே கருவறை அருகில் சென்றேன். சுவற்றில் ஓட்டைகள் மட்டுமே இருந்தன.நேராக
வாயில்இல்லை. நிறைய ஆண்களும் பெண்களும் முட்டி போட்டு நின்று கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்க்கிற புதியவர்களும் முட்டி போட்டு வணங்குகிறார்கள். எனக்குள் கேள்விகள்
வரத்தொடங்கின. தமிழர் அறிவின் உச்சமான ஒரு கோயிலில் எப்படி இது போன்ற நிகழ்வுகள்
நுழைகின்றன.
        ஆனைக்கா. ஆனைகள் இருந்தக் காடாக இந்த இடம் இருந்திருக்கலாம். கரிகாலனும்
ஆனைப்படை வைத்திருந்தவன்தான். பொருந்துகிறது என்றாலும் அது வேறு ஆய்வு. இந்த ஆனைக்காதான் திருவானைக்காவாகித் திருவானைக்காவில், திருவானைக்கோயில்
என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மரபறிவிலிருந்து விலகி வள்ளுவனை மறந்து சுற்றிலும்
நடந்த வேளாண்மையைப் புரிந்துகொள்ளாமல் "நீர் தலம்" என்று பக்தியோடு அழைக்கப்
படுகிறது. அந்தப் பெருங்கோயிலின் குறியீட்டைப் புரிந்துகொள்ள யாருமில்லை. பலவாறு
எண்ணிக்கொண்டு வீடு திரும்பினோம். கொஞ்சநேரத்தில் "உங்களுக்கு சாப்பாடு தயாராயிடுச்சி"
சாப்பிட வாங்க என்று நண்பரின் துணைவியார் அழைத்தார். இரவு உணவை அங்கேயே
முடித்துவிட்டுக் கிளம்பி என் வீடு வந்து சேர்ந்தேன்.
         எண்ணம் சுழன்றுகொண்டே இருந்தது. எம் முன்னோர் பேரறிவு எங்கே போயிற்று?
இந்தச் சுழற்சியில் ஒரு பாடல் எழுதினேன்.
 


அள்ளக் குறையா ஆனைக்காச் சிவனைச்
சொல்லக் குறையாச் சோணாட் டோம்பலைச்
செல்வங் குறையாச் செய்திட்டக் கோயிலில்
வல்லம் போல்வளைந்து காண்.

 
       இதன் பொருளை நாளை சொல்கிறேன். ஆனைக்கா செல்லும் அன்பர்களே, பேரறிவின்
வழித்தோன்றல்களே திருவானைக்காவில் மண்டியிடாதீர்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
எனக்குத் தெரியாது. வணங்கவேண்டுமா? வேண்டாமா? நான் சொல்லப் போவதில்லை. ஆனால்
ஒன்று உறுதியாகத் தெரியும். ஆனைக்கா பேரறிவின் சின்னம்.