Thursday 21 February 2019

உலகத் தாய்மொழி நாள்காலப்பெருவெளியில்
ஒரு நாள்
காற்று பிறந்தது.
மழை கொடுத்து
காடு வளர்த்து
உயிர் பெருக்கியது.
மூங்கிலில் நுழைந்த காற்று
முதல் இசையானது.
மாந்தர் குரல்வளையில்
மறுபடி நுழைந்து
தமிழானது.
விரிநீர் சூழ் உலகின்
தாய்மொழியானது.

Tuesday 19 February 2019

சிறிதெனினும்...


உங்கள் வண்ணங்களால்
என்னை நிறைக்க முயலாதீர்கள்.
நான் மிகக் கருமையானவன்,
எல்லா வண்ணங்களையும்
விழுங்கிவிடுகிறேன்.

உங்கள் கட்சி வலைவீசி
என்னைப் பிடிக்க முயலாதீர்கள்.
நான் மிகச் சிறியவன்,
வலையின் இடுக்குகளின் வழியே
வெளியேறிவிடுகிறேன்.

உங்கள் கொடிமரங்களுக்கு
என்னைக் கும்பிடுபோட வைக்காதீர்கள்.
நான் சிறு புல்,
என் இதழசையும் காற்றில்
கொடி பறக்கப்போவதில்லை.

உங்கள் பாடல்களை
என்முன்னே இசைக்க முயலாதீர்கள்.
மிகச்சிறிய செவிகள் எனக்கு,
இரைச்சலை ஏழிசையாய்ப் பிரித்தறிய
அவற்றால் இயலாது.

நீங்கள் விரும்பும் மலர்களை
எனக்குச் சூட்ட முயலாதீர்கள்.
கடுகினும் சிறியது என் நாசி,
அதன் ஓட்டைகள் எங்கும்
ஏற்கனவே நிரம்பி வழிகிறது
எம் குருதியின் நாற்றம்.

இறுதியாய் ஒன்று,
உங்கள் முகமூடிகளை
என்முகத்தில் அணிவிக்க முயலாதீர்கள்.
சிறிதெனினும்
என் நகங்கள் வலிமையானவை.

சிராப்பள்ளி ப.மாதேவன்,
19-02-2019

Monday 18 February 2019

மண்புழுவின் கவிதை


மகரந்தங்கள் சேகரிக்க வேண்டும்;
மலையேறிக்கொண்டிருக்கிறேன்.
கால்களின் கீழே
ஆறுகள் மரங்கள் தொடுவானம்.

என் தோளில் எச்சமிட்டுவிட்டு
பெயர் சொல்லாமல் பறந்துவிட்டது
ஒரு பறவை.

ஏய்...

உயிரின் வெப்பம் உணர்கையில்
பெயர்கள் தேவையற்றவை;
பாம்பின் குரல்.

விலகிப்போ, உன்னிடம் நஞ்சு
அதனிடம் எச்சம்; நான்
மகரந்தங்கள் சேகரிக்க வேண்டும்;
மலையேறிக்கொண்டிருக்கிறேன்.

ஈரமண்ணில்,
உண்டு செரித்த வளைகோடுகள்.
பாம்பின் மகரந்தம் நஞ்சு,
பறவையின் நஞ்சு எச்சம்,
பூக்களின் எச்சம் மகரந்தம்,
ஒரு பால் கோடாமை
சான்றோர்க்கு அணி.
மண்புழுவின் கவிதை.

Thursday 7 February 2019

இயற்கை முடிவற்றது...


    சில திரைப்படங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. அவை சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடும் என்ற உறுதி இல்லாத போதும், அவற்றால் ஏற்படும் தாக்கங்களை மறுப்பதற்கில்லை. குறிஞ்சி நிலத்தில் உணவை சேகரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மனிதன் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேடிக்கொண்டு வாழ ஆரம்பிக்கிறான். இத்தனை ஆண்டுகாலம் அவன் கண்டு வைத்திருக்கும் தற்காலிகத் தீர்வுகளே வாழ்வியலாக இன்று அவன் முன்னே நின்றுகொண்டிருக்கின்றன. இருக்கும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளும் பொருட்டோ அல்லது மறுதலிக்கும் பொருட்டோ அல்லது இன்னொரு தற்காலிகத் தீர்வை நோக்கி நகரும் பொருட்டோ; கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என ஏதோ ஒன்றைப் படைத்துக் கொண்டே இருக்கிறான். அப்படியொரு படம் தான் “பேரன்பு”.

 
படம் தொடங்கும் போது ஆழ்ந்த குரலில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னுடைய வாழ்க்கையின் சில பக்கங்களிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று அமுதவன் பேச ஆரம்பிக்கிறார். உண்மையில் அப்படியொரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்திருக்கிறதா? அந்த தொடக்கம் சரியானதா? என்றால், அன்புகொள்ள முதலில் ஒருவருக்கு அணுக்கமாக இருக்க வேண்டியிருக்கிறது. தன்னை இழந்து, முன்னிருப்பவரை அன்பால் நெருங்க நேர்மறையாக அணுகுதலே சிறந்த வழி. அந்த நெருக்கத்தை நம்மிடம் ஏற்படுத்திக்கொள்ளவே இப்படித் தொடங்குகிறார் அமுதவன். அவர் நம்மை நெருங்கியிருந்தார் என்பதை திரையரங்கில் பெரும்பாலும் நிலவிய பேரமைதியும், அடிக்கடி கேட்ட குழந்தைகளின் “பாப்பா” என்ற குரலொலியும் உறுதி செய்தன. ஆனால், அமுதவன் இயல்பிலேயே இப்படியொரு குணம் கொண்டிருந்தவர் தானா? இப்படியொரு பேரன்போடு அவரைப் பேச வைத்தது எது என்பதுதான் படம்.

கதையின் முதல் மூன்று கதைமாந்தர்கள் ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுகிறார்கள். படத்தின் அழுத்தம் இங்கிருந்து தொடங்குகிறது. மூளை முடக்குவாதத் தாக்கமுற்ற பெண்குழந்தையின் முன்னே உட்கார்ந்து யாருடனோ போய்விட்ட, சமூக முடிவுகளின் படி ஓடிப்போய்விட்ட மனைவியின் கடிதத்தைப் படிக்கிறார் அமுதவன். வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தத அவர்; மகள் இப்படிப் பிறந்துவிட்டது தெரிந்து ஊருக்கு வருவதை குறைத்துக் கொண்டோ, பின்னாட்களில் வருவதை நிறுத்தியோ விட்டது அமுதவனின் மீது நமக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்துகிறது. "பதினோரு ஆண்டுகள் நான் பாத்துக்கிட்டேன். இனி நீ பாத்துக்க". "அவளுக்கு எல்லாம் கத்துக் கொடுத்திருக்கேன்". போன்ற வரிகள் ஒரு உயிரைப் பேணிய அவர் மனைவியின் அக்கறையையும், குடும்பத்தால் பெற்ற அவமானங்களையும், அவரது பொறுப்புணர்ச்சியையும் பரிமாறுகின்றன. இப்படிப்பட்ட குழந்தையை; தானே அறியா வயதிலிருந்து உண்ண, உடுக்க என கற்றுக் கொடுத்து மற்றவர்களிடமிருந்து பாதுகாத்து வளர்ப்பதென்பது எளிதான செயலல்ல. 
 
இதனிடையே ஒரு பெண்ணுக்கான உடல் தேவைகள் அவருக்கும் இருந்திருக்கும். காமம் என்பது கழற்றியெறிந்துவிடும் உடுப்பல்ல. இயற்கையின் கொடை. இந்தப் பேருலகை உயிர்ப்போடு வைத்திருக்க அது பயன்படுத்தும் ஆயுதம். இதிலிருந்து தப்பித்துக்கொண்டதாய் கற்பிதம் செய்துகொண்டு அடிக்கடி குழப்பிக்கொள்கிறது சமூகம். "11 ஆண்டுகளில் 100 நாட்கள் தான் ஊரில் இருந்தாய்" என்ற அவருடைய கடித வரியில், இயற்கையின் நிறுத்தமுடியா இந்த  விளையாட்டு வெளிப்படுத்திய தாகமும், வலியும் அடங்கியிருக்கிறது. அமுதவன் பணம், பொருள் அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டெதுவும் கடிதத்தில் இல்லை. ஒரு பெண்ணாக அவருடைய உடல் தேவைகள் ஈடு செய்யப்படாத போது வாழ்வின் மீதான பிடி தளர்ந்து விடுகிறது, ஆனால் இயற்கையில் குறைபாட்டுடன் பிறந்துவிட்ட குழந்தையை விட்டுவிட மனமின்றி பதினோரு ஆண்டுகள் வளர்த்து விடுகிறாள். அன்பின்றி இது சாத்தியமில்லாதது. நாம், படம் முழுவதும் பாப்பாவை வைத்துக் கொண்டு அமுதவன் படும் இன்னல்களைப் பார்க்கிறோம். அந்தக் கடினமான நிலைகளை அவரது மனைவியும் கடந்துதான் வந்திருப்பார். நேரடியாக அந்தச் செய்திகள் சொல்லப்படவில்லை என்றாலும் வேறு காட்சிகளில் அமுதவன் வாய்மொழியாகவும், காமம் குறித்த இயல்பின் விளக்கங்களின் போதும் அவர்மீதும் பேரன்பு பிறக்கத்தான் செய்கிறது. இது ஒரு கவித்துவம்.

கவிதைகளில் ஓரிடத்தில் சொல்லப்படாத சொற்கள் பிறிதொரு இடத்தில் நம் மனதில் பொருளாய் உருவகம் எடுக்கும். அது போலத்தான் இந்தப் படமும். "வீட்டுக்கு வந்துட்டியா" என்ற கைப்பேசி உரையாடல் அப்படியொரு கவித்துவமானது. அவளுக்குள்ளும் அமுதவனைப் பற்றிய மதிப்பீடுகள் இருக்கின்றன. மகளை விட்டுவிட்டுப் போய்விடமாட்டான் என்கிற திடமான நம்பிக்கை இருக்கிறது. அவளுக்கான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து நகர்ந்துவிடும் முன் "பாப்பா"வின் பாதுகாப்பை, தொடர் வாழ்க்கையை உறுதிசெய்து கொள்கிறாள்.

அமுதவனோ தன் மகளின் நிலையை நோயெனக் கருதி அதன் தீர்வுக்கென பொருளீட்டுவதற்காக வெளிநாட்டிலேயே வேலையைத் தொடர்ந்திருக்கலாம். மனைவி கவனித்துக் கொள்வாள் என்ற எண்ணத்தில் பணம் சேர்த்து அனுப்புவதிலேயே நாட்டம் கொண்டிருக்கலாம். பாப்பாவை வளர்க்க, பாதுகாக்க பொருள் பற்றி அவர் சிந்திப்பதை பின்னால் வரும் நான்கைந்து காட்சிகள் உறுதி செய்கின்றன. ஆனால், மனைவிக்கும் அவருக்கும் இடையிலான அன்புப் பரிமாற்றம் இல்லாது போனதால், சரியான கூடல் தொடர்புகள் அற்றுப் போனதால் "இயற்கை வெறுப்பானது" என்ற அவரது கதையின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. எல்லோர் மீதும் பேரன்பு கொள்ளவேண்டும் என்கிற செய்தியும் இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது. அமுதவனுக்கு மனைவியிடமிருந்து ஒரு பெரும் பொறுப்பு கையளிக்கப்படுகிறது. பணம் பொருள் தாண்டி அந்தப் பொறுப்பை அதன் முழுப் பரிமாணத்தில் சந்திக்கிற வாய்ப்பு ஏற்படுகிறது. "அப்பாடா .....பாப்பா நான் அப்பாடா" என்று மகளிடம் தன்னை ஒத்துக்கொள்ள வைக்க அவர் பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. அப்பாவை ஒரு வெறும் உருவமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கத்தத் தொடங்குகிறாள் பாப்பா. சமூகம் விழித்துக்கொள்கிறது.

"டேய் அவ வாயப் பொத்துடா" என கூக்குரலிடும் பாட்டியின் குரல் ஏராளமான வீடுகளில் நிகழ்த்தப் படும் வன்முறை. அவருக்கு பாப்பாவின் குரலை நிறுத்துவது ஒன்றே தற்காலிகத் தீர்வு. வாடகை வீட்டை காலி செய்யச் சொல்லிவிடுவார்களோ என்ற சமூக பயம் பிரச்சனையை மூடிவைக்கச் சொல்கிறது. திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டு அச்சமூட்டவும் செய்கிறது.

அப்பாவைப் பார்க்க மறுக்கிற ஒரு பெண், குருவி கீழே விழுந்து கிடப்பதற்காக ஓலமிட்டு அழுகிறாள். உறவு என்பது நீங்கள் எவ்வளவு அருகில் இருக்கிறீர்கள் என்பதே ஒழிய, நாம் கட்டமைத்துக் கொண்ட அமைப்பு தொடர்பானது அல்ல என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது. மகளிடம் நெருக்கமாக வர நினைக்கிற அமுதவனுக்கு குருவி ஒரு கருவியானது. மகளுக்காக குருவியைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் போக எத்தனிக்கையில் சமூகம் திண்ணையில் உட்கார்ந்து கேள்வி கேட்கிறது. ரிட்டையர்மென்டுக்குப் பிறகு நிம்மதியாக வாழும் (?), அமைதியாக வாழும் (?) சமூகம் அடிப்படை விருந்தோம்பலை, நாகரிகத்தை மறுக்கிறது. ஒரு கட்டத்தில் எளிய மனிதனாய் தன் பொறுப்பை எளிதாகப் புரிந்துகொள்ள, கையாள முனையும் அமுதவனைக் கோபம் கொள்ளச் செய்கிறது. குருவியை ஓங்கி தரையிலடிக்கச் செய்து மகளுக்கும் அவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்திவிட்டு வெளியேறுகிறது. கையறு நிலையில் யாருமற்ற, குருவிகள் சாகாத இடம் நோக்கி நகர்த்துகிறது.

உலகமயமாக்கலுக்குப் பிறகு யாருமற்ற, குருவிகள் செத்து வீழாத இடமொன்று இருக்குமா என்ன? மகளைப் புரிந்துகொள்ள தடுமாறிக்கொண்டிருக்கும் அமுதவனைக் குருவியொன்றின் வருகை அமைதிகொள்ளச் செய்கிறது. ஆனால், கல்குவாரி மனிதர்கள் அச்சப்படுத்துகிறார்கள். வன்முறையைக் கையிலெடுத்து தாக்கப்படும் அமுதவனை இயற்கையின் மீது அன்புகொண்டிருக்கிற ஒரு பத்திரிகையாளனின் அன்பு தற்காலிகமாகப் பாதுகாக்கிறது. குதிரை, குருவி என மகளின் நெருக்கத்திற்குப் பிற உயிர்கள் காரணமாகின்றன. அமுதவனும் அன்பை உணர ஆரம்பிக்கிறான்.

தன் விதியின் முகாமையான இனப்பெருக்கத் தேவை சார்ந்த உடல் வளர்ச்சியை பாப்பாவின் உடலில் நிகழ்த்திக் காட்டுகிறது இயற்கை. படுக்கை விரிப்பில் கண்ட குருதியின் தடம் அமுதவனை யோசனைகொள்ளச் செய்கிறது. யாரையோ அழைத்துவந்து சுத்தம் செய்து பேட் மாற்றச் செய்கிறான். மறுநாளே அந்தப் பெண் வர மறுக்கிறாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் இன்னொரு விதி. தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்த அமுதவன் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, முன்பே வன்முறையை ஏவி தோல்வியுற்ற வணிகம், விஜயலெட்சுமி மூலம் அடுத்த ஆயுதத்தை கையிலெடுக்கிறது. அது ஆசையைத் தூண்டல். மனித மனம் இதிலிருந்து தப்பிப்பது அரிதே. இதுவே உலகெங்கும் இன்று வணிகம் நடத்திக்கொண்டிருக்கிற பெரும் வன்முறை. உங்கள் உறவுகளின் மீது, குழந்தைகளின் மீது நீங்கள் காட்டபோகும் பேரன்பே இந்த வன்முறையிலிருந்து உங்களையும் அவர்களையும் காக்கும்.

விஜயலெட்சுமியின் விரல் நகத்தில் காணப்படும் பச்சைவண்ண நகப்பூச்சு; பிற்றை நாளில் பாப்பாவால் பொம்மையின் மார்புகளின் மீது தடவப்படுகிறது. பாப்பாவைத் தூண்டியதன் அடையாளமாக் கூட இதை எடுத்துக்கொள்ள முடியும். அமுதவன் தொடர்பாகக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வணிகம் ஆசையைத் தூண்டப் பயன்படுத்துகிறது. மனைவியைப் பிரிந்து இருக்கும் அமுதவனின் காமத்தைத் தூண்டி நேராக இல்லையென்றாலும் இன்னொருவர் மூலமாக அது வீழ்த்த முனைகிறது. அந்த இன்னொருவரை ஏதோ ஒரு வகையில் அணியப்படுத்துகிறது, இல்லை பணியச் செய்கிறது. சரியான நேரத்தில் அமுதவனை வீழ்த்துகிறது. அந்தக் குடும்பத்தில் விஜயலெட்சுமிக்கு ஒரு இடத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், காமம் எப்போதும் ஏமாற்றுவதாய் இருக்கமுடியாது. அது மெல்லிய அன்பை விதைக்கும், கத்தியை  நழுவவிடும், தன்னை அடித்துத் துரத்தும் போது "என்னைக் காப்பாத்திட்டீங்க" என்று மண்டியிடும். அதனால் வணிகம் ஏமாற்றுதலை ஆரம்பிக்கிறது. சமூக விதியொன்றைச் சொல்லி அமுதவனிடமிருந்து இடத்தைப் பிடுங்கிக்கொள்கிறது. இடத்தை, பொருளை இழந்தவனை நகரம் நோக்கி நகர்த்துகிறது.

நகர வாழ்க்கையென்பது அத்தனை எளிதானதல்ல. அது ஏராளமான முகங்களைக் கொண்டிருக்கிறது. அமைதியான இடத்திலிருந்து இங்கே வந்தவர்கள் கொஞ்சம் குழம்பி நிற்கிறார்கள். ஆனால், போக்குவரத்து அதிகமான மேம்பாலங்களின் கீழே நிம்மதியாகப் படுத்து உறங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். இயற்கை வியப்புக்குரியது. அது அமைதியை ஓசைகளுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறது. பொருள் தேடலும், பாப்பாவைப் பாதுகாத்தலும் பெரிய வேலையாகிப்போன நிலையில் "விடுதி"களை நம்ப வேண்டிய சூழல் அமுதவனுக்கு. பாப்பா போன்ற குழந்தைகள் தந்தையைப் பிரிவது கொடுமையானது.
 
 தனிமை, அப்பா அறிமுகப்படுத்திய திரைப் பிம்பத்தோடும் உடல் உற்பத்தி செய்கிற காமத்தோடும் அந்தக் குழந்தையை ஆக்கிரமிக்கிறது. ஆனால், சமூகம் அதை மறுக்கிறது, தண்டிக்கிறது. "இங்க ரோட்ல போறவன் வாரவனெல்லம் அடிக்கிறதுக்கு, அங்க ரூமுக்குள்ள வச்சு தான அடிக்கிறாங்க. மாதா பாத்துக்குவா" என்று ஒரு அப்பாவைப் பேச வைக்கிறது. அவர் பேசுவது சரியா எனக் கேட்டால், சரி அவர் வேறு என்ன செய்வார் எனத் திருப்பிக் கேட்கிறது. 
 
ஆனால், இதே சமூகம் தான் அமுதவனின் மனைவியை ஓடிப்போனவள் என்கிறது. திருநங்கைகள் காமத்தின் தீர்வுகளுக்கு மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என நம்புகிறது. அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறது. அவர்கள் மீது இரக்கம் காட்டுபவனை "உனக்கெதுக்கு வீண் வேலை" நீ பாதுகாப்பாய் இரு என எச்சரிக்கை செய்கிறது. சமூகம் விதிகளற்றது.

இந்த விதிகளற்ற சமூகத்தின் மாந்தர்களாக ஏராளமானோர் இந்தப் படமெங்கும் நடந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கென்று அவர்களே வகுத்து வைத்திருக்கிற தனிப்பட்ட விதிகள் இருக்கின்றன. வேலை செய்த கூலியை "தரையில் வைத்துவிடுங்கள் சார்" என்று கேட்கும் பெண்ணும் படத்திலுண்டு. இது தீண்டாமை அல்ல. தீண்டிவிடாமல் இருக்கப் போடப்பட்ட தற்காலிக விதி. "பணத்தைத் திருப்பித் தரமுடியாது" எனச் சொல்லும் தங்கும் விடுதிக் கணக்கர். இது கணக்கு விதியல்ல. பணத்தை அபகரித்துக் கொள்ளும் விதி. "கஸ்டமர்களுக்கு மட்டுந்தானா? ரூம் பாய்க்கு இல்லையா?" என தொழில் வாய்ப்பை சிக்கலாக்குவது போல் கேள்வி கேட்பவர் உண்டு. இது பாலியல் சுரண்டல் விதி. இப்படியான மனிதர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமுதவனை துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் யார் மீதும் அவரும் அன்பு பாராட்டியதில்லை. எல்லோரும் அவரவர் நிலைகளிலேயே இருக்கிறார்கள், பாப்பாவும்.

யார் முதலில் இறப்போம் என்று அறிய முடியாத இயற்கை விதி அமுதவனையும் பேரன்பின் வெளிப்பாடாக பாப்பாவின் உடல் சார்ந்த தேடலுக்கு ஏதும் வடிகால் கிடைக்குமா என்று தேட வைக்கிறது. உடனே கேள்வி கேட்டு விடாதீர்கள். சமூகம் விதிகளற்றது. அவரவர்களுக்கென்று அவர்களே வகுத்து வைத்திருக்கிற தனிப்பட்ட விதிகள் இருக்கின்றன. அதில் அமுதவனும் இருக்கிறார். என்னுடைய விதிகட்கு அவர் உட்பட வேண்டியதில்லை. அதைவிட பேரன்பு அளவுகோலற்றது. அது எல்லைகளற்றுக் கடலின் அடியாழத்திற்கும் செல்லும் வல்லமை படைத்தது. அது போல அலையின் சுழலிருந்தும் நம்மை மீட்டெடுத்துவிடும் ஆற்றல் கொண்டது.

என்றோ பொழிந்த அன்பின் சிறுதுளி, பேரலையியின் அமைதியற்ற இரைச்சலிலிருந்து, சமூகத்தின் துரத்தல்களிலிருந்து அமுதவனை, பாப்பாவை வேறு ஒரு உலகம் நோக்கி அழைத்துச் செல்கிறது. இதுவும் தற்காலிகமானதே. நாளை வேறேதும் நடக்கலாம். ஏனெனில் சமூகம் விதிகளற்றது.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. கேள்விகளும் சில இருக்கின்றன. ஆனாலும் முடித்துவிட வேண்டிய நேரமிது. அமுதவன், மனைவியோடு நல்ல ஒரு இல்லறத்தை நடத்தியிருந்தால் அத்தியாயங்கள் வந்திருக்காது. குவாரி நடத்துபவர் இயற்கை மீது பேரன்பு கொண்டிருந்தால் அடுத்த அத்தியாயம் வந்திருக்காது. ஆனால் வேறு ஏதேனும் நடந்திருக்கும். ஆம், இயற்கை முடிவற்றது.  இயற்கை பாப்பாவின் மீது நிகழ்த்தும் படைப்பின் விளையாட்டிற்கு தீர்வுகளற்று நின்று கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் அமுதவன்களை விட நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம்.

   காமத்துப் பாலில் பெண்ணின் குரலாக வள்ளுவர் சொல்லிப்போன குறள் வரியொன்று நினைவுக்கு வருகிறது. 

"செல்லாமை யுண்டேல் எனக்குரை".

எல்லோரும் அன்பு பாராட்டுங்கள்.

 இயக்குநர் ராமிற்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
07-02-2019.

Monday 4 February 2019

பேரன்பு


படம் தொடங்கும் இருளுக்குள், வானமலைத் தொடரின் கொடைமலைக் குறிஞ்சிக் காடு ஒன்றின்  மஞ்சு கவிந்திருக்கும் ஏரி நீர்ப்பரப்பின் மேலே தொடங்கி நம் உள்ளத்தின் அடியாழம் நோக்கிப் பாய்கிறது ஒரு குரல். "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள்".

உண்மையிலேயே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தானா?

இயற்கையை எந்த மறுதலிப்புமின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் அது உண்மைதான் என்பது படம் முடியும் போது புரிகிறது. ஆனால், நம்மை நோக்கிய கேள்விகள் ஏதுமின்றியே படம் தன்போக்கில் நகர்கிறது. பேரன்பின் முழுமைத்தன்மை அளவுகோலற்றது. "வீட்டுக்கு வந்துட்டியா" என கைப்பேசியில் ஒலிக்கும் அமுதவனின் மனைவியின் குரல், பதின்மூன்று ஆண்டுகாலம் பாதுகாத்து; கற்றுக்கொடுத்த ஒரு உள்ளத்தின் கடைசி உறுதிக் குரல், ஒப்படைத்துவிட்ட கடமை முடிந்த நிலையில் துண்டிக்கப்படுகிறது.

அமுதவனோடும், மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது குழந்தையோடும் நாமும் பயணிக்கத் தொடங்குகிறோம். பதின்ம வயதுடைய இது போன்றதொரு மகளுடன் ஒரு அப்பாவின் வாழ்க்கையே காட்சிகளாய் விரிகிறது.

இயக்குநர் ராமின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும். 1977 ல் பாரதிராஜா "பதினாறு வயதினிலே" மூலம் துணிச்சலுடன் அன்றைய திரைப்பட மரபுகள் சிலவற்றை உடைத்தெறிந்து ஒரு புதுவெள்ளம் பாய்ச்சினார். கடந்த ஆண்டு "மனுசங்கடா" வணிக சினிமாத்தனம் எதுவுமின்றி வெளிவந்தது.

இப்பொழுது ராமின் "பேரன்பு". மிகச் சிக்கலான; ஆனால், சமூகத்திற்குக் காட்டப்பட்டே ஆகவேண்டிய ஒரு கதைக்களம். பெரும்பாலான நிமிடங்களில் அரங்கத்திற்குள் பேரமைதியைக் கண்டேன் (பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." என்ற ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரலைத் தவிர). வியப்பு என்னவென்றால் எந்தக் காட்சியிலும் நமக்கு கதை மாந்தர்கள் மீது பரிதாபம் வரவில்லை. அயற்சியும் இல்லை. மாறாக காட்சிகளைக் கடந்து கொண்டே வருகிறோம். நிறைய இடங்களில் முப்பது முப்பைத்தைந்தாண்டு திரைக் கற்பனைகளைப் புறந்தள்ளி நகர்கின்றன காட்சிகள். கூரான உரையாடல்களும், உடல்மொழிகளும் வழமையை உடைத்தெறிகின்றன.

இயல்பின் உரையாடல்கள் சிலநேரம் உள்ளத்தில் அறைகின்றன. காட்டாக,  "இங்க அவன ரோட்ல போட்டு எல்லோரும் அடிக்கிறதுக்கு, அங்கே ரூமுக்குள்ள தானே அடிக்கிறாங்க. பரவால்ல";  "நீங்க பேசாம காருக்குள்ள உக்காருங்க. வண்டிய நிறுத்துனமா தூங்குனமா ன்னு போயிட்டே இருக்கணும்.  அதுக அப்படித்தான். அதுல தலயிடாதீங்க."  போன்ற இடங்கள். சமூகத்தின் காது மடல்களை விரிக்க இயக்குநர் முனையும் ஏராளமான இடங்களில் அரங்கம் அமைதி கொள்கிறது (பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." அதே மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரலைத் தவிர).

நடிகர் மம்மூட்டிக்கு இந்தப் படம் பெரும்பேறு. படத்திற்கு மம்மூட்டி பெரும் பொருத்தம். ராமின் இயல்பின் கடத்தலை தன் உடலெங்கும் பூசிக்கொண்டு நடக்கிறார்.  சாதனாவுக்கு, ஒரு துணிச்சலான இயக்குநரின் கதையைத் தாங்கி காட்சியமைப்பில் அழுத்தம் கொடுக்கவேண்டிய பொறுப்பு. பரிதாபம் தவிர்த்து பேரன்பைப் பெற்றுவிடுகிற நேர்த்தி அருமை. அழகாய் செல்பி எடுத்துக் கொண்டு நடக்கிற வயதில் உடலைக் கோணிக்கொண்டு நடித்த துணிச்சலும் முதிர்ச்சியும் பாராட்டுக்குரியது.
 
படமெங்கும் இழைந்தோடும் யுவனின் இசை, சில இடங்களில் வேகமெடுக்கிறது. சில இடங்களில் நம் அருகில் காதுகளில் ஒலிக்கிறது. நிறைய இடங்களில் மௌனம் பழகுகிறது. அரங்கம் பேரமைதி கொள்கிறது  (பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." என்ற அந்த மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரலைத் தவிர).

இயற்கையின் விதிவழியில் எல்லா உயிர்களுக்கும் இனப்பெருக்கத்திற்கென உடலில்"காமம்" இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளாய் இருந்தபோது "உணர்வு' நிலையிலிருந்த காமம், உருவகப்படுத்தும் திறனும் நினைவு வலைப்பின்னலும் பொருந்திய ஆறாம் அறிவால் "உணர்ச்சி" நிலைக்கு மாற்றப்பட்டது. இப்படியொரு நிலையில்... வண்ணத்துப்பூச்சி, மயில் போன்ற உயிர்கள், வண்ணம் வடிவம் போன்ற அழகுணர்வில் இணைதேடுவதைக் கண்ட மாந்தனின் ஆறாம் அறிவு அதைப்பற்றி எண்ணத் தலைப்பட்டிருக்கக் கூடும். காலங்கள் ஓடிவிட்டன.  ஒரு நிலையில் இன்பம் துய்ப்பதற்கான நுழைவாயில் "பொருள்" என்று ஆனது. அதனால் அடுத்தவரின் காமமும் அதற்கான தேவையும் புரியாமல் போன சமூகமாய் மாறிப்போனோம். மூளைமுடக்கு வாத தாக்கத்தினால் காமம் செத்துப்போவதில்லை. அது இயற்கை விதி. இந்த இடம் வரை பயணம் செய்கிற ராமின்  காட்சியமைப்புகள் தமிழ்சினிமா நீண்ட காலத்துக்குப் பிறகு தொட்டிருக்கிற கொடுமுடி.

கடற்கரையின் அமைதி, அலைகளின் இரைச்சல். எங்கோ தூரத்தில் புரிந்துகொள்ளத் திணறும் சமூகம். அறிந்து கொண்ட அப்பா. படம் முடியும் நேரம். அரங்கத்தில் எல்லோரும் கனத்த அமைதியோடு அமர்ந்திருக்கிறார்கள். இப்பொழுது மறுபடியும் பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." என்ற அதே மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரல். "இல்லடா செல்லம் அது அக்கா டா.. எத்தன தடவ சொல்லிட்டேன்.." கிசு கிசு குரலில் அம்மா. 

"இல்ல பாப்பா.... பாப்பா.. பாப்பா.."  கொஞ்சம் பேரொலியாய்க் குழந்தையின் குரல்.

ராம். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். பேரன்பை விதைத்து விட்டீர்கள். இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன, உயரங்களும்.

வாழ்த்துகள் ராம்.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
03-02-2019