Thursday 30 May 2024

கனவுக்குள் கனவு



கோடரிக் காம்புகள்

துளிர்க்கும் என்பதெல்லாம்

கனவுக்குள் கனவே.

Monday 27 May 2024

எத்தனைக் காலம்தான்...



நேற்றிரவு அந்தக் காணொலியைப் பார்த்ததிலிருந்து மன வருத்தமும் உளைச்சலும் ஆட்கொள்ள, களைப்போடு இருக்கின்றேன்.

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்ற தஞ்சை இராமையாதாசின் பாடல் உள்ளத்தின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்!  என்று பாரதி ஒருபுறம் புலம்புகிறான்.

அப்படியெதுவும் நிகழாது என்று "முதலெனப்படுவ"தென்ற தொல்காப்பியமும், "தருக்கமும்" பழந்தமிழர் "விண்ணியலும்" சொல்லிச் சென்றுவிட்டனவே பாரதி. நீ அறியாதிருப்பாயா? அவற்றையெல்லாம் அறிந்தவர் தாமே ஏமாற்றுகிறார்.

இல்லையென்று மறுப்பீராயின் அறியாது உளறுகிறார் என்றாவது உரைப்பீர்.

பாவம் பலர். மந்தை மந்தையாய்...

27-05-2024

Sunday 26 May 2024

சாதியும் காதலும்



“காதல் திருமணங்கள் ஓரளவுக்கு சாதியற்ற சமூகத்தை உருவாக்குகிறது, அங்கேயும் சாதி ஆணவமே” என்ற தோழர் ஒருவரின் பின்னூட்டத்தின் தொடர்பாக எழுதியதே இந்தப் பதிவு.
இன்றைய காலகட்டத்தில், காதலர் இருவரும் ஒரே நிலைமையில் உள்ள பணக்காரர்களாக இருக்கும் போதோ, அல்லது எதுவுமற்ற ஏழைகளாக நகரத்தில் வாழும் போதோ பெரும்பாலும் சாதி செத்துவிடுகிறது. இருவரில் ஒருவர் மட்டும் பணக்காரராய் இருக்கும் போது, சாதி, சமூகத்தின் வழியாகக் குரூரமாக இடை மறிக்கிறது. வலுவாக எதிர்க்க இயலவில்லை என்றால் விலக்கி வைக்கிறது. அதுவும் முடியவில்லை என்றால் சமூகம் விலகிவிடுகிறது. இங்கே "சமூகம்" எனப்படுவது அதே

Saturday 25 May 2024

கா.அப்பாத்துரையார் நினைவு நாள் 2024





(ஆசிரியப்பா)

மங்கா மொழியின் மாக்கடல் ஆடி
சங்க இலக்கிய முந்நீர் குளித்து
எண்ணில் அடங்கா முத்துக்கள் சேர்த்த
தென்மொழி தமிழின் பன்மொழி முத்தே
எழுத்தின் ஒலிப்பும் சொல்லின் ஒலிப்பும்
வழுவற நின்று வளர்ந்தச் செம்மொழி
எம்மொழி தமிழே என்றுரை செய்த
வண்டமிழ் நிலத்தின் வெந்திறல் அறிவே
தொல்தமிழ் வேந்தர்த் தோள்வலி காட்டிய
தோழக்க ணக்கின் தாழாப் போர்கள்
தொகுத்துக் கொடுத்தெம் தொன்மை நிறுவிய
தொல்படை முதல்வ,யாம் தொழுந்த கையே.

Wednesday 22 May 2024

காலத்தை விட்டுவிட்டு...

 


 

காலத்தின் கைகளை

விட்டுவிட்டு

நடக்கிறேன்.

 

எனக்கு முன்னால்

வெகுதொலைவில்

நரை திரை மூப்பெய்திய

ஒரு பள்ளித்தோழன்.

 

எனக்குப் பின்னால்

கூப்பிடு தொலைவில்

வகுப்புத் தோழி.

 

காலத்தின் கைகளை

விட்டுவிட்டு

நடக்கிறேன் நான்.

Sunday 12 May 2024

வடந்தைத்தீ - Aurora Borealis




வடந்தைத்தீ vaḍandaittī, பெ. (n.) வடதிசை நெருப்பு (L.);; aurora borealis.


"சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" (காஞ்சிப்பு. இருபத்.384);.

[வடம் → வடந்தை + தீ = வடதிசை நெருப்பு அல்லது வட வைக்கனல் (வ.மொ.வ.2 பக்.78);. வடந்தை = வடக்கிலுள்ளது. வடக்கிலுள்ளதாகக் கருதப்படும் கனல்.

==================

தமிழர் வரலாறு நூலில் பாவாணர் கூற்று வருமாறு:

படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். "மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்" (திருமந். 2031).

பரவன் - பரதவன் = 1. மீன் பிடிப்போன். "மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்" (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். "தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378).

பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். "படர்திரைப் பரதர் முன்றில்" (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2). 3. வணிகன். "பரத குமரரும்" (சிலப். 5:158).

பரதவர் கடலோடிகளும் (Mainers) சுற்றுக் கடலோடிகளுமாய் இருந்ததனால் (Circumnavigators), வடதிசைச் சென்று

Saturday 11 May 2024

ஆடிக் களிக்கும் தமிழ்



 

ஆடு āṭudal, செ.கு.வி. (v.i.)

 

 

 

1. அசைதல்; to move, to wave, to swing, to shake, to vibrate.

 

2. கூத்தாடுதல் (பிங்.);; to dance, to gesticulate, to play.      "அம்பலத்தாடுவான்" (பெரியபு. கடவுள் வா);.

 

3. விளையாடுதல்; to play.  "அகன்மலையாடி" (மணிமே. 10:55) 

 

4. நீராடுதல்; to bathe, to play in water.

 

5. அசைந்தாடுதல், மென்மெல அசைதல்; to sway. தென்றலில் பூங்கொடி அசைந்தாடுகிறது.

 

6. ஆலையாடுதல், ஆலையிலிட்டு அரைத்தல்; to crush in a machine இன்றுதான் கரும்பு ஆலையாடி முடிந்தது.

 

7. இணலாடுதல்-புணர்தல்; to copulate, as snake do. பாம்பு இனலாடுகிறது.