Saturday 9 March 2024

எப்போதும் வருகிறது தேர்தல்



முதலைகளின் பல்லிடுக்குகளில்

சேகரித்தச்

சதைத் துணுக்குகள் கோத்து;

தூண்டில் வீசிக்

காத்திருக்கின்றன

விலாங்கு மீன்கள்.


உறுமீன் மட்டுமின்றி

ஓடுமீன் அனைத்திற்கும்

ஒற்றைக் காலில்

காத்து நிற்கின்றன

கொக்குகள்.


எப்பொதோ பார்த்த மலை

எப்போதோ நீர்வந்த ஆறு

எப்போதோ காற்றடித்தக் காடு.


ஆனால்,


தப்பாமல் தவறாமல்

எப்போதும் வருகிறது

தேர்தல்.


தூண்டிலைக் கவ்வாதிருங்கள்.

அங்கே தொங்குவது 

நம் சதைதான்.

Tuesday 5 March 2024

காற்றே வா வா - ஓர் உழுகுடிப் பாட்டு

 



வேளாண்மையில், வாழ்வியலில் நீருக்கு இணையானது காற்று. 

காற்றை வரச்சொல்லி ஓர் உழுகுடி வாழ்வியல் பாட்டு.


பாடலாசிரியர் : சிராப்பள்ளி ப.மாதேவன் 

இசை : இராபர்ட் - முத்துக்குமாரசாமி 

பாடியவர்கள் : ஆகாசு சங்கர், கௌரி, சுவேதா. 

ஒளிப்பதிவு & ஆக்கம் : சிராப்பள்ளி ப.மாதேவன்


தாழக்குடி, ஔவையாரம்மன் கோயில், தோப்பூர், ஆண்டித்தோப்பு,  பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, தேரூர், குறிச்சி, வீரநாராயணமங்கலம், தெள்ளாந்தி முதலிய நாஞ்சில்நாட்டுப் பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்பெற்றது.

=============================


காற்றே வா வா

(கலித்தாழிசை)


தரவு


தாடகை மலை மேலே

தாழஞ் செடி மேலே

நல்ல மணம் தேடும் காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.