Wednesday, 30 December 2020

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

 

எம் மண்ணில் எழுந்துயர்ந்த
ஆலமரம்.
வேரினும் மிகுதி
விழுதுகள்.
சாதி கடந்த அரசியல்.
மதம் கடந்த மனிதம்.
உம்மை அறிந்திடாத
நாள் வரையில்
யார் அறிவார்
மண்ணின் பெரியார் யாரென.
 
 
Image may contain: 1 person


======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
30-10-2020
======================

தமிழர் மணம்

 


மனிதர்களைச் சொற்களாகக் கொண்டு காலம் எழுதும் கவிதையே ஆகச் சிறந்த கவிதை என எண்ணுகிறேன். அப்படியொரு கவிதையின் வரிகளாய் நடந்த ஒரு திருமணத்தில் நானும் ஒரு சொல்லாக இருந்த நிகழ்வு மறக்க இயலாதது.

சென்றுவருவது, கலந்து கொள்வது, பங்கேற்பது, நடத்துவது என ஒரு திருமணத்திற்கும் நமக்குமான பிணைப்பு மாறுபடும். கடந்த 19-11-2020 அன்று திருச்சியில் நடைபெற்ற மு.ஜானகி இரா.தமிழமுதன் திருமணத்தில் நான் பங்கேற்றேன். 
 
ஜானகி, முத்துக்குமாரசாமி கவிதா இணையரின் மூத்த மகள். எட்டாண்டுகளுக்கு முன்னால் “அருண்மொழிவர்மன்” எனும் சொல் அவரையும் என்னையும் இணைத்தது. பின்னாளில் மாமா, மாப்பிள்ளை, மருமகள் என உற்றாராக மாற்றம் பெற்றது. காவிரிக்கரையில் எனக்கென ஒரு உறவை உருவாக்கிக் கொடுத்தது காலம்.
 
இரண்டு நாள்களுக்கு முன்பாகப் பயணம். சென்னையில் தொடங்கி திருச்சிராப்பள்ளி வரை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. வண்டியிலிருந்து இறங்கி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரோடு சேர்ந்து மணம் நிகழப்போகும் அரங்கத்தைப் பார்க்கச் சென்றேன். அரவமற்று இருந்த அந்த அரங்கில் அடுத்தநாள் மாலை தொடங்கி நடைபெற்ற நிகழ்வுகள் அடடா… மறக்க இயலாது.
 
மறுநாள் 18-11-2020 மாலை 5 மணி. காவிரியாற்றைக் கைகளில் முகந்து மலைக்கோட்டையை நீராட்டிக் கொண்டிருந்தன மேகங்கள். பொதியில் மலையின் குற்றால அருவி சிராமலையில் பாய்ந்து அகழிச்சாலையில் வடிந்து செல்வது போலிருந்தது தோற்றம். இரவில் மணமக்கள் ஊர்வலம் வேறு நடந்தாக வேண்டும். ஏற்கனவே மிளகுபாறைப் பகுதி படகில்தான் ஊர்வலம் நடத்தமுடியுமோ என்ற அளவுக்கு  நீரால் சூழப்பட்டிருந்தது.

ஆன்றோர் கேட்கை அறிவின் தாக்கோல்

 Image may contain: 2 people

இன்று காலை ஒன்பதரை மணிக்கு கைப்பேசி ஒலித்தது. ஊரிலிருந்து தங்கையின் கணவர் "ஒரு நிமிடம் தாயம்மாள் அறவாணன் உன்னிடம் பேசவேண்டும் என்கிறார். கொடுக்கிறேன்" என்று சொன்னார். 
 
எனக்குள் வியப்பு. இதுவரை அவரிடம் பேசியதில்லை. அறிமுகமும் இல்லை.
 
"நான் தாயம்மாள் அறவாணன், உங்களோடு பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசலாமா? " என்றார்.
 
"மகிழ்ச்சி அம்மா.."
 
பதினைந்து நிமிடங்களுக்கு நீடித்தது உரையாடல்.   ஐயா க.ப.அறவாணன் குறித்தான நினைவுப் பகிர்தல்கள். அம்மாவின் தற்போதைய எழுத்துவேலைகள். மூப்பின் காரணமாக, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நூலோடு தான் எழுத்துப்பணியை நிறைவு செய்யப்போகும் செய்தி.  ஐயாவின் எழுத்தை உலகுக்கு மேன்மேலும் கொண்டுசெல்ல அவர்கள் எடுத்துக்கொண்ட உழைப்பு. என ஏராளமானவற்றைச் சொன்னார்.
 
"அம்மா ஐயாவின் நினைவேந்தலாக தமிழர் கண்ணோட்டம் இதழில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்" என்றேன்.
 
"நானும் படித்திருக்கிறேன். நீங்கள் தானா அது. மிக்க மகிழ்ச்சி. மணியரசன் மிகச்சிறந்த மனிதர். அவரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிக்கையில் நீங்கள் எழுதுவது சிறப்பு வாழ்த்துகள் என்றார். சிராப்பள்ளி என்று பெயரில் சேர்த்திருக்கும் போதே தனிப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ளவர் என்று எண்ணியிருந்தேன். அப்பொழுதே தொடர்பு கொண்டிருக்கவேண்டும். விட்டுவிட்டேன். உங்கள் முகவரியைத் தாருங்கள் சில நூல்களை அனுப்புகிறேன்" என்று முகவரியும் வாங்கிக் கொண்டார்.
 
"ஐயாவின் திருக்குறள் உரை ஒன்றே காலமெல்லாம் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மா" என்று நான் சொன்னபோது நெகிழ்ந்துவிட்டார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அந்த இணையரின் காதல் வாழ்க்கை சில சொற்களில் வெளிப்பட்டது.
 
"சரி நூல்களை அனுப்புகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள்"
 
"கிடைத்தவுடன் செய்தி சொல்லுகிறேன் அம்மா" என்று கைப்பேசியை அணைத்தேன்.
 
ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. மீண்டும் அழைத்தார்.
 
"ஐயாவுக்கும் எனக்கும் பிடிக்காத வேலை இங்கே நடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது. உலகமெல்லாம் சுற்றி இத்தனை எழுதி சொந்த மண்ணில், குருதிச் சொந்தங்களிடையே கூட மாற்றம் வரவில்லையே.
என்ன செய்யலாம் சொல்லுங்கள்? " என்றார்.
 
"உங்கள் வேலையில் ஒரு விழுக்காட்டைக் கூட செய்து முடிக்காத எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மா. இருந்தாலும் முயற்சிக்கிறேன்" 
 
இரு முனைகளிலும் சில நொடிகள் மௌனம்.
 
"சரி தம்பி.. நான் வைக்கிறேன்" கைப்பேசி அணைந்தது.
கனத்துக்கிடக்கிறது மனம்.
===================
சிராப்பள்ளி ப.மாதேவன்
29-11-2020
===================

தண்டமிழ்ப் பாவை - பாடல்

 

            தொகை

முதல் ஒலி முதல் குரல்
முதல் சொல் முதல் எழுத்து என
மாந்தர் உலகெங்கும் பேசும் மொழிகள்
ஈன்று புறந்தந்த எங்கள் தமிழே வாழி!
எல்லம் முதற்கொண்டு பல்லூர் மகர்க்கும்
சொல்லின் வேர்தந்து மங்காத தமிழே வாழி!
யாதும் ஊரே யாவரும் கேளிரென
ஓதுவார் தமைப்பெற்று ஓங்கிய தமிழே
வாழி! வாழி!!
 
பல்லவி

முன்னம் பிறந்த மொழி
எண்ணிற் சிறந்த மொழி
அன்னைத் தமிழ் தானடா!
நெஞ்சில் அதை நிறுத்தி
கண்ணின் இமை போல
காக்க எழு வோமடா!
மண்ணின் இயல்போடும்
தொன்மைப் பண்போடும்/
வாழ்ந்த மாந்தர்களின்
வாழ்க்கை தனைத்தாங்கி /
(முன்னம்)
 
சரணம்

தெற்கே கடலடியில் போனவொரு நாடுமுண்டு/
பொற்றை அடிமடியில் குமரியென்ற ஆறுமுண்டு/
சங்கம் வைத்துதமிழ் ஓங்கிநின்ற காலமுண்டு/
சாகா இலக்கியங்கள் சேர்த்துவைத்த மன்னருண்டு/
முற்பா அடியெடுத்துப் பாடுகின்ற புலவருண்டு/
கற்றா மனம்போல கசிந்துருகப் பாணருண்டு/
தாயாய் இம்மண்ணில் பன் நூறுமொழி பெற்றெடுத்த/
                                                                                                                  (முன்னம்)
 
ஒல்காப் புகழுடைய தொல்பொருளும் கையிலுண்டு/
எல்லோர் மனமகிழும் வள்ளுவனின் சொல்லுமுண்டு/
கல்லா மனிதரையும் பாடிவைத்த பத்துப்பாட்டு/
நல்லூழ் அறிவுறுத்தத் தேடிச்சேர்த்த கீழ்க்கணக்கு/
பொற்றா மரையாகச் சூடிக்கொண்ட எட்டுத்தொகை/
கற்றால் சிறக்குமினி கண்ணிழந்த மாந்தரினம்/
வானாய் இம்மண்ணில் எந் நாளுமிங்கே பாச்சொரியும்/
                                                                                                                 (முன்னம்) 
 Image may contain: 2 people, text that says 'தமிழ் தமிழ'

தமிழர் இசைக்கருவிகள் - 10 தண்ணுமை

 

ஒரு புற முழவில் வாயின் வேறுபட்ட அளவுகளில் இசை மாறுபாடு அடைவதைக் கண்டவர்கள்; முழவின் இன்னொரு புறத்திலும் வாய் இருக்குமாறு (வேறுபட்ட அளவில்) மண்ணால் குடம் செய்தார்களோ என்னவோ, இருபுற முழவு பிறந்து விட்டது. 
 
இரண்டு வேறு பட்ட தாள அடிகளை ஒரே முழவில் இசைக்க இயன்றது அடுத்த படி நிலை வளர்ச்சியானது. இரு புறங்களிலும் உள்ள தோல் பகுதிகளை ஒரே கயிற்றால் இழுத்துக் கட்டியதால், குளிர்காலங்களில் கூட தாளத்தில் குழப்பமில்லை. கயிறை இழுத்தும் தளர்த்தியும் தோலை ஒரே நிலையில் வைக்க முடிந்தது.
 
பெருமழையும், பனிப்பொழிவும் கலந்து பெய்தபோதும் நீலமலையில் ஒலித்த முழவின் குரலை ஒடுக்க இயலாது போனது. இன்றைய
மிருதங்கத்திற்குப் பாட்டன் முறையான தாளி / தண்ணுமை என்ற இருபுற முழவு இப்படித்தான் பிறந்து செழித்தது. 
 
நீலமலையின் இருளர்கள் இதைக் “கடிமெ” என்று அழைக்கிறார்கள். மண்ணாலும் தோலாலும் இணைத்துச் செய்யப்பட்ட இந்த “கடிமெ" இசைக்கருவி குன்னூர் வட்டத்தில் உள்ள குஞ்சப்பனை, கோளிக்கரை, செம்பனாரை, மூப்பக்காடு, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் வாழும் இருளர்களிடம் இன்றும் காணக் கிடைக்கிறது.
 
மண்ணாலான குடம் போல் வடிவம் பெற்றுள்ள இக் ’கடிமெ’, இருபுறமும் வாய்ப் பகுதிகள் அமைந்திருக்குமாறு செய்யப்படுகிறது. பின்னர், சுடப்பட்டு எடுக்கப் படுகிறது. இதன் இரு புற வாய்ப் பகுதிகளிலும், பதப்படுத்திய தோல்கள் கொண்டு ஒட்டப்பட்டு, தோல் கயிறுகளால், மண் குடப் பகுதிகளின் மேல் இழுத்துப் பிணைத்துக் கட்டப்படுகின்றது. தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, வாசிப்பதற்கு ஏற்ப தோல் கயிறும் அமைக்கப்படுகிறது. ஏனைய தோலிசைக் கருவிகளின், தோல் பகுதியை அடிக்கடிச் சூடுபடுத்திக் கொள்வது போல, இதையும் செய்து கொள்கின்றனர்.
 
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்
பின்வழி நின்றது முழவே . . . (சிலம்பு)
 
செவ்விலக்கியங்களில் பல இடங்களில் தாளக்கருவிகள் சொல்லப்படுகின்றன.
இன்றைய மிருதங்கத்தின் பாட்டன் முறையே இந்த “தாளி / தண்ணுமை” எனும் இருபுற முழவு, ஆனால் எங்கேயோ ஒப்பாரிப் பாடல்களின் இடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது. சில கோயில்களிலும்...
 
==========================
 
தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06
(திருமுறை)
 
தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9
(திருமுறை)
 
Image may contain: text that says 'தாளி/ தண்ணுமை இருபுற முழவு தமிழாடும் முன்றில்'

Monday, 14 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 9 . குடமுழா / குளிர்மாந்த இனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் நிகழ்வுகளில் ஒன்று மண்ணால் பாண்டங்கள் செய்தல். அதனுடைய வளர்ச்சி இசையிலும், இசைக்கருவிகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. உடல் பெரியதாகவும் வாய் குறுகியும் உள்ள மண்குடங்களின் வாய்ப்புறத்தில் வெறுங்கையால் தட்டினால் ஓசை எழும். அதன் நீட்சி ஆதிக் குழு இசைகளில் காணக்கிடைக்கிறது.
 
வாய்ப்பகுதில் தோல் கட்டுதல், கட்டாதிருத்தல் என இரண்டு வகையாக இவை இருந்திருக்கின்றன. தோல் கட்டாமல் இசைக்கப் படுபவை முதல் வகையாக இருத்தல் கூடும்.
 
நெல்லை, குமரிப் பகுதிகளில் பரவலாக இருந்த வில்லுப்பாட்டில் வில்லோடு இணைத்துக் கட்டப்பெறும் “குடம்” பாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. வெறுங்கையால் இல்லாமல் கமுகம் பட்டையால் செய்யப்பட்ட விசிறி போன்ற “பத்தி”யைக் கொண்டு குடத்தின் வாய்ப்பகுதியில் அடித்தும், மற்றொரு கையால் “சொட்டிக்கட்டை” கொண்டு தட்டியும் தாளம் இசைக்கப்படும்.
இந்தக் குடம்; சிறந்த பானை செய்யும் களிமண் கலவையுடன் ( குமரி மாவட்டம் தாழக்குடி, திருநயினார் குறிச்சி, பெருஞ்சவிளை, நெல்லை மாவட்டம் ஏரல் ) முட்டை, பதநீர், கருப்புக்கட்டி ஆகியன சேர்த்து செய்யப்படும். ஒரு குடம் செய்ய 10 முட்டைகள், 2 கிலோ கருப்புக்கட்டி, 1 பக்கா பதநீர் தேவைப்படும். அப்படி செய்யப்பட்ட குடங்களின் மீது சாயம் ஏற்றப்படாத துணியை வேப்பம் பசையைத் தடவி ஒட்டி விடுவார்கள். “பத்தி”யால் அடி வாங்கும் கழுத்துப் பகுதியில் பழைய உடுக்கின் தோல் பகுதியாலோ புதிய தோல் பகுதியாலோ ஒட்டி வைக்கின்றனர். வாய்ப்பகுதி திறந்தே இருக்கும். வாய்ப்பாட்டோடு சேர்த்து இதை அடித்து ஒலிக்கும்போது பேரோசை எழும். 
 
இந்தக் குடத்தின் வாய்ப்பகுதியில் தோலால் மூடி அதைக் கையால் அடித்து இசைக்கும் வழக்கம் தெற்குக் கேரளப் பகுதிகளில் காணப்படுகிறது. பண்டைய சேர நாட்டின் இசை மரபில் இந்தக் “குடமுழவு” தொடர்ந்த பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 
 
இன்றும் வட கேரளத்தில் “புள்ளுவன் பாட்டு” எனப்படும் பழந்தமிழ் மரபு இசை வடிவம் இசைக்கப்படிகிறது. குழ முழவில் நாணேற்றி நாணில் அடித்து இசைக்கும் வழக்கம் கொண்டது அது. (புள்ளுவன் பாடல்களில் பெரும்பகுதி தமிழ்ச்சொற்களே)
 
பறையைப் போலவே ஆதியில் பறவைகள், விலங்குகள் இவற்றை விரட்ட இந்த குழமுழவு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். பின்னர் அது குழுப்பாடல்களில் பின்னிசையாக இடம்பிடித்திருக்கலாம். 
 
பின்னாள்களில் இதுவே சோழ நாட்டில் ஐந்து வாய்களுடனும், ஏழு வாய்களுடனும் செய்யப்பட்டு அதில் தோல்கட்டி இசைக்கப்பட்டது.
ஐம்முக முழவு இன்னும் கோயில்களில் இசைக்கப்படுகிறது.
 
ஒருபுற முழவில் “குடமுழவு” வில்லுப்பாடில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால் ஏழுமுக முழவம் இசைக்கப்படுவது இல்லை. அது போலவே ஐம்முக முழவமும் இசைக்கும் புலவரின்றிப் போகும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
 
மீளுமா முழவம்?
 
==============================
"முழவிசைப் புணரி எழுதரும்" (நற்.67:11);, 
 
"மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென" (புறநா.50:12);.
 
முழவின் முழக்கீண்டிய" (சீவக.2399);. "முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி" (அகநா.61:15);,
 
"குடமுழாத் திழிலை மொந்தை" (சேதுபு.இராமநா. 65);.
 
"குடமுழவென்பது பயிற்றினேன்" (பெருங்.மகத.14:184);.
 
கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.5 (திருமுறை)
 
தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்
காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்
குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.3 (திருமுறை)

Friday, 11 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 8 . தடாரி

 Image may contain: 1 person, outdoor

லைநீர் நாட்டின் அழகிய நகரம். செறிவுடைய முற்றம் ஒன்றில் நிற்கிறாள் ஔவை. தோழியரோடு சேர்ந்து செல்கையில் மன்னன் நாஞ்சில் பொருனனையே “கொடை மடயனே” என்று சொல்லிய ஔவை. கையில் இருக்கும் தடாரியின் துணிவிலக்கி அந்தக் கரிய மலையே அதிரும் வண்ணம் ஓங்கி இசைக்கிறாள். இரண்டு மூன்று பாடல்கள் பாடியிருப்பாள். அதற்குள்ளாக வெளியே வந்தான் மன்னன் அதியமான் நெடுமானஞ்சி. ஔவயின் தடாரி இசையில், பாட்டில், அழகில் இசைந்த அதியமான் தன்னோடு அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறான். 
 
அந் நிகழ்வை, பல நாள்கள் அல்ல ஒருநாள் தடாரி அறைந்து பாடியதற்கே அதியன் என்னை அழைத்துக் கொண்டான் என்று மகிழ்ந்து பாடுகிறாள் ஔவை.
 
"கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்,
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்,
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின் " (புறம் 390 - ஔவையார்).
 
 
காவிரிக்கரையின் ஒரு கருக்கல் காலை. வெள்ளி இன்னும் இறங்கவில்லை. பெருங் கோட்டை ஒன்றின் வாயிலில் நின்ற அவள் தன்னுடைய தடாரியை எடுக்கிறாள். அதன் கண்ணில், அடித்து இசையெழுப்பியதால் உண்டான அழுக்குத் தடங்கள் இருக்கின்றன. அந்தத் தடாரியில் இரு சீர் தாளத்தை அடித்துக்கொண்டே; விடியலின் உணர்வில் ஒன்றிப் பாடுகிறாள். சட்டென மாமன்னன் கரிகாலன் அவள் முன்னே வந்து நிற்கிறான். எவ்வளவு நாளாயிற்று உன்னைப் பார்த்து என்று கூறும் உறவினர் போல அன்பொழுகக் கூறி அவள் துன்பம் களைகிறான்.
 
இப்படி, தான் தடாரி அறைந்து பாடுகையில், அந்தக் காலையிருளில் கூட சட்டெனக் கரிகாலன் எழுந்து வந்த நிகழ்வை பொருநராற்றுப்படையில் விரிக்கிறார் தாமக்கண்ணி என்னும் முடத்தாமக்கண்ணியார்.
 
"பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி 70
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி 75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ"
(பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்)
 
 
பெரும் போர்க்களம். வைகைக்கரைப் பெரு வேந்தன் தலையாலங்காலத்துச் செருவென்ற பாண்டியன் போர்முடித்த வெற்றிக் களிப்பில், செருக்கில் அமர்ந்திருக்கின்றான். அவனைக் கண்டு பகைவர் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்க, குருதியும் சதையும் சிதறிக்கிடந்த அந்த இடத்தில் தடாரி அறைந்து பாடும் ஒலி கேட்கிறது. பாண்டியன் அத்திசை நோக்கினான். பொருநன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். எல்லோரும் நெருங்க அஞ்சும் பாண்டியனை நெருங்கி “என் தடாரியை அடித்துக் கொண்டு நான் எதற்கு வந்தேன் தெரியுமா மன்னா, உன் கழுத்தில் நிலவுபோல் மின்னும் அந்த பொன்னாரத்தை வங்கிக் கொண்டு போகலாம் என்றே வந்தேன்” என்று அச்சமின்றி எளிதாகக் கூறுகிறான்.
 
“விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
……… ……… …………… ………… ……… ……..
……… ………… …………
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.”
(புறம் 372 – மாங்குடிக் கிழார்)
 
 
க்கையின் சிறு வடிவத்தில் தடாரி இருந்திருக்கக் கூடும். சிலர் கிணையும் தடாரியும் ஒன்றுதான் என்கின்றனர். 
 
பொருநராற்றுப்படையின் நோக்கில் தடாரி அடிகோல் இல்லாது விரல்களால் அடித்து இசைக்கப்பெறும் கருவி எனக் கொள்ளலாம். தோளில் மாட்டிக்கொண்டு எவ்விடத்தும் செல்லும் அளவுக்கு, தக்கையை விட சிறியதாக இருந்திருக்கலாம். பெண்களும் இதைச் சிறப்பாக இசைத்திருக்கின்றனர்.
 
செவ்விலக்கியங்களில் இன்னும் ஏராளமான இடங்களில் தடாரியின் ஓசை கேட்கிறது. வானமலை எங்கும் அதன் எதிரொலி இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காவிரியின் சலசலப்புக்கிடையே தடாரியின் இருசீர் தாளமும் இழையோடிக்கொண்டுதான் இருக்கிறது.
 
நாம் தான் அதன் வடிவத்தை கூட மறந்துபோனோமோ என்று தோன்றுகிறது.
 
மாமன்னர்களின் உள்ளம் தொட்ட அந்த இசை மீண்டும் ஒலிக்குமா?
 
==============================
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத்,
(பதினொன்றாம் திருமுறை – சேரமான் பெருமான் நாயனார் – திருக்கயிலாய உலா)
===================

 

தமிழர் இசைக்கருவிகள் - 7 . எக்காளம் / நமரி

 

 Image may contain: one or more people, text that says 'எக்காளம் / நமரி தமிழ்நாடு தமிழாடும் தமிழாடும்முன்றில் மன்றில் இமாச்சலம் நேபாளம்'

விலங்குக் கொம்புகளின் ஓசை பிடித்துப்போக, மாழைகள் / உலோகங்கள் குறித்த அறிவு வர வர கொம்புகளை ஒத்த ஒலிதரும் குழல் கருவிகளைச் செய்தனராகலாம். அவற்றைக் “காளம்” என்று அழைத்தனர்.
ஒலி குறித்தான நுண்ணறிவும், உலோகங்களின் கலவைகள் செய்வதில் பெற்ற பேரறிவும் “எக்காளம்” பிறக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஏ + காளம் - எக்காளம் → எக்காளம். ஏ = உயர்வு, நீட்சி. எக்காளம் = நீண்டகாளம் என்னும் இசைக்குழல் : என்று சொல்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
 
எக்காளம் நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி. நாதசுரத்தை போல நான்கு மடங்கு நீளம். அடிப்பகுதி யானையின் கால்கள் அளவுக்கு விரிந்து இருக்கிறது. நடுவே உள்ள இணைப்பு மோதிரம் என்று அழைக்கப்படுகிறது. ஊதலில் தான் வேறுபாடு காட்டலாமே அன்றி கட்டுப்படுத்தும் துளைகள் இல்லை. 
 
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. சங்கும் கொம்பும் இணைந்து இறுமாப்பைத் தரும் பேரொலி இதிலிருந்து கிளம்பும். போரில், எதிரியின் இருப்பிடம் அறிவித்தலும், வெற்றியின் பின்னே கூத்தாடுதலிலும் “எக்காளம்“ பங்கு வகித்தது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னர் குரவைக்கூத்து ஆடுவர். தொல்காப்பியம் குரவைக் கூத்தினை முன்தேர்க்குரவை பின்தேர்க்குரவை என்ற அடிப்படையில் போர்க்கள ஆடலாக கூறுகின்றது.
 
“குரவை ஆடிய வலம்படு கோமான்
முன் தேர்க் குரவையும்
ஒன்றிய முரவில் பின் தேர்க் குரவையும்”
( தொல் : புறம் - 2ம் சூத்திரம் )
என்ற தொல்காப்பியம் புறத்திணையியலின் இருபத்தியோராம் சூத்திரம் தேரின் கண் வந்த அரசர்கள் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பிலே தேரின் முன்னே நின்று ஆடியது முன்தேர்க்குரவை என்றும் தேரின் பின்னே நின்று ஆடியது பின்தேர்க்குரவை என்றும் பொருள் தருகிறது.
 
வெற்றிக்களிப்பில் வேந்தன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தேர்த்தட்டில் நின்று வீரர்களோடு கையிணைந்து குரவை ஆடுகிறான் என பதிற்றுப்பத்து ஐம்பத்தாறாம் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
 
“ வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
திலங்கும் பூணன் பொலாங்கொடி யுழிஞையன்
மடம் பெரு மையி னுடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே........” (பதிற்றுப்பத்து)
 
மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலை நாட்டை வென்ற பின்னர் போரில்லாது போனதால் அவனது மக்கள் வருந்தினராம். வருத்தம் சினமாக மாற குரவை ஆடினார்கள் என்கிறது புறநானூற்றின் 22வது பாடல்.
 
“குற்று ஆனா உலக்கையான்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,
பொலந் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க;” (புறநானூறு)
 
இக் குரவைக் கூத்தானது போர்க்கள ஆடலாக ஆடப்பட்ட போது சூழலைப் பொறுத்து மிகவும் கடுமையாவும், வேகம் நிறைந்ததாகவும் ஆடப்பட்டிருப்பதையும் ஆடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை மற்றும் இசை வாத்திய கருவிகள் அனைத்தும் போரினைப் பின்னணியாகக் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. 
 
“மாற்றான் ஒடுக்கமும் மன்னர் உயர்ச்சியும்
மேற்பகக் கூறும் வென்றிக் கூத்தே” என்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையும் குரவைக்கூத்துக்கு போர்க்களப் பெயரும் பகர்கிறது.
 
வெற்றியின் ஒலியாக இருந்த “எக்காளமே” பின்னாளில் ‘எக்காளமிடுகிறான்” என்ற சொல்லாடலையும் தோற்றுவித்திருக்கும்.
 
இப்படி வீர மரபில், போர் நுணுக்கங்களில் பயன்பாட்டிலிருந்த எக்காளம் கால மாற்றத்தில் கோயில் வழிபாட்டு ஊர்வலங்களில் இசைக்கப்படும் கருவியாக மாறிப்போனது. இன்றும் பல இடங்களில் ஊர்க் கோயில் தெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் அல்லது மருளாடுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும் எக்காள இசையின் பங்கு முகாமையாகவே இருக்கிறது.
 
எக்காளம் வேறு பெயர்களில் சில உருவ வேறுபாடுகளுடன் இந்தியா முழுவதிலும் மற்றும் நேபாளத்திலும் பரவலாக புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் தான் அழிவின் விளிம்பில் உள்ளது. 
 
நேபாளத்தில் “பஞ்ச் பாசே” என்ற அவர்களின் பாரம்பரிய ஐந்து இசைக்கருவிகளில் ஒன்றாக ”கர்னால்” என்ற பெயரில் எக்காளம் திகழ்கிறது. இமாச்சலத்தில் இக்கருவி ”தொங்கரு” என்று அழைக்கப்படுகிறது.
 
பண்பாட்டுக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள், குலதெய்வ வழிபாடுகள் மறக்கப்படுதல், நமது அறியாமையால் ஊர்க்கோயில்களில் நிகழும் சமற்கிருத நுழைவு, அயல் பண்பாட்டுக் கூறுகள், படையலிடுவதை மறத்தல் போன்ற இன்னபிற காரணக்களால் ஆங்காங்கே ஒலிக்கும் “எக்காளமும்” காணாது போய்விடலாம். காப்பது நம் கடமை.
==============================
 
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181
(திருமுறை)
======================

 

தமிழர் இசைக்கருவிகள் - 6 . யாழ்

 Image may contain: text that says 'II. வில் யாழ் III. ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் னி ருந்த யாழ்க் கருவி m ரு2 படங்கள் ஐயா விபுலானந்த அடிகளின் "யாழ்நூல்" தமிழாடும் முன்றில் யாழ் IV. சீறி யாழ் A. சகோட யாழ்'

செவ்விலக்கிய மலைச் சாரலில் ஓயாது பொழிந்துகொண்டே இருக்கிறது யாழ் எனும் பெருங்கருவியின் இசை மழை. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் வரிகளுக்கும் மேலாக ஊடாடி காதலையும், ஊடலையும், பசியையும், பெருமையையும், இறுமாப்பையும், கொடை மடத்தையும் பல்லாயிரமாண்டுகளாய்த் தமிழரிடையே இசைத்துக் கொண்டே இருக்கின்றன அவற்றின் நரம்புகள். கால மாற்றத்தில் உருவம் காணாது போய்விட்டாலும் முடத்தாமக்கண்ணியின் சீரிய விரல்கள் சுண்டியிசைக்க, மாமன்னன் கரிகாலன் வாள் மறந்து மயங்கி நிற்க, பேரியாழொன்றின் நரம்பிலிருந்து எழுந்த மெல்லிசை இன்னும் அடங்கவில்லை.
 
தமிழரின் அறிவில் கிளைத்த இசைக்கருவிகளில் தலையாயது யாழாக இருத்தல் வேண்டும். இசையின் நுண்ணறிவை பெருங்கருவியாக்கி, பல்வேறு பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர் தமிழர். இசைவாணர் இன்னும் வியக்கும் அதன் பண்ணமைதி மிகச்சிறப்பானது.
 
செவ்விலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ள, மூவகை யாழ் பற்றிய குறிப்புகள் வருமாறு :- 1. வில்யாழ், 2. சீறியாழ், 3. பேரியாழ்.
வரலாற்றிற்கு எட்டாத தொன்முது காலத்தே அமைக்கப்பெற்ற நரம்புக்கருவியே வில்யாழாகும். வில்லின் நரம்பினை (நாணினை); நெருடுங்கால் விளைந்த இன்னிசையொலியே பல்வகை யாழ்க்கருவிகளின் வளர்ச்சிக்கு அடிகோலின என்று இசை வல்லுநர் இயம்புவர். 
 
இது பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மொழிவது :-
"நரப்புக்கருவி வில்நாண் ஒலியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிதலால், வில்யாழே முதன்முதல் தோன்றிய யாழ்வகையாக இருத்தல் வேண்டும்" (மறுப்புரை மாண்பு.பக்.121);. 
 
முற்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்கள், துறைக்கருவியாகிய வேய்ங்குழலையும், நரம்புக்கருவியாகிய யாழையும் துணைக்கொண்டே குரல் முதலிய ஏழிசைகளையும், குற்றமற ஆராய்ந்து, பெரும்பண்களை அமைத்துள்ளனர். இப்பண்களின் வழிப்பிறக்கும் திறங்களை ஒர்ந்துணர்ந்து இசை நுணுக்கங்களை இனிமை பொருந்துமாறு இசைத்து வகைப்படுத்தியுள்ளனர். 
 
மிகச்சிறந்த இனிமையை வகைப்படுத்த பேராசான் வள்ளுவரும்
"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
என்று யாழையும் குழலையும் இணைத்துக் கொள்கிறார்.
 
முற்காலத்தில், யாழ்க் கருவியை நிலைக்களனாகக் கொண்டே பெரும்பண்களும், அவற்றின் திறங்களும் தெளிவாகத் தெரிந்து வகைப்படுத்தப்பட்டன. யாழ் நரம்பின் துணைகொண்டு, நுணுகி ஆராய்ந்து கண்ட பண் வகைகளைத் தொல்காப்பியர், "யாழின் பகுதி" (தொல்.அகம்.15); என்றும், அப் பண்களின் பாங்கினையும், இயல்புகளையும் திறம்படத் தெரிவிக்கும் இசை நூலை, "நரம்பின் மறை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“மாந்தரிடையே இன்று பயன்பாட்டிலுள்ள அனைத்து நரம்புக் கருவிகளுக்கும் பிறப்பிடம், யாழே யாகும். முதல் மூலநரப்புக் கருவியாகிய யாழனின்றே, நரம்பிசைக் கருவிகள் அனைத்தும் தோன்றின” என்பது பாவாணர்தம் கருத்தாகும்.
 
அதனால்தான் மொழிஞாயிறு "யாழ் என்னும் தமிழ்ப்பெயர், பண்டைக்காலந் தொட்டு, தமிழ் நாட்டில் மட்டுமின்றி, ஞாலமெங்கனும், முக்காலும் வழங்கும், நரப்புக் கருவி கட்கெல்லாம் பொதுப்பெயர்" என்று குறித்துள்ளார். மேலும் அவர் கூறுங்கால், "ஒரு நரம்புள்ள சுரையாழ் முதல் ஆயிரம் நரம்புள்ள, ஆதியாழ் வரை எல்லா நரப்புக் கருவிகளும், கழக இலக்கியப் பனுவல்களிலும், அதற்கு முன்னர் இயற்றப்பட்ட பாடல்கள் பலவற்றிலும் யாழ் என்றே குறிக்கப்பட்டுள்ளன. யாழ் என்னுஞ் சொல்லைச் சிறப்புப் பெயராகக் கொண்ட எந்தவொரு தனிக்கருவியும் கடைச் சங்க காலத்திருந்ததில்லை. அன்றிருந்த பல்வகை யாழிற் தலைசிறந்தது, செங்கோட்டு யாழேயாகும். வீணை என்பது, செங்கோட்டியாழையே குறித்து வழங்கிற்று. 
 
யாழைக் குறித்து வழங்கிய பல்வகைப் பெயர்களுள், வீணையும் ஒன்று. யாழ் வேறு, வீணை வேறு என்பது, இருவகையில் தவறான திரிபுக் கொள்கை என்றும் அறிந்து கொள்க". யாழ் என்னும் தென்சொல், பிற்காலத்து வழக்கற்றதினாலேயே, முற்காலத்தில் சுரையாழ் என வழங்கியது.
யாழ், வீணை என்னும் இரு சொற்களும் ஒருபொருட் கிளவியாய், ஒரே கருவியையே குறிக்கும். இசை நுணுக்கமறியாதோரே யாழ்வேறு, வீணை வேறு என்பர். 
 
பண்ணிசைத்தற்குரிய பண்டை யாழ் வகைகளுள், செங்கோட்டியாழ் ஒன்றே, இன்று சிறிது, உருக்கரந்தும், பெயர் மாறியும் வழங்கி வருகின்றது. நரம்பு அல்லது கம்பி கொண்ட இசைக் கருவிகளெல்லாம், தமிழில் யாழ் என்றே பெயர் பெறுதற்குரியன (மறுப்புரை, மாண்பு. பக்.122);. 
 
யாழ் என்பது, ஒரு தனிப்பட்ட கருவியின் சிறப்புப் பெயராகாது. அது தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக் கருவி என்னும், நால்வகைக் கருவியுள், நரப்புக் கருவியையெல்லாம், பொதுப்படக் குறிக்கும் பொதுப் பெயராகும். இப்பாகுபாட்டின்படி இற்றை வீணையும் ஒருவகை யாழாயிருக்க அதை மட்டும், எங்ஙனம் வேறு பிரித்துக் கூற முடியும்.
பண்ணைக் குறித்த யாழ் என்னும் சொல் 'ஏழ்' என்பதின் திரிபு. யாழ் என்னும் நரம்புக் கருவி. தோன்று முன்னமே குறிஞ்சியாழ், பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னும் சொல் வழங்கியது. 
 
கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை எழுப்புதல், எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ். ஏழ் = இசை. இசைச் சுரங்கள் ஏழு. 'ஏழிசைச் சூழல்', 'ஏழிசை வல்லபி என்னும் வழக்குகளை நோக்குக. 'ஏழ்' என்னும் இசையின் பெயர் அதன் கரத்தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது. நரம்புகளாற் கட்டப்பெற்றதும், மரம் (தந்தம்); மருப்பு, தோல் போன்றவற்றால் நன்கு பொருத்தப் பெற்றதுமான இசைக்கருவி. 
 
அடியார்க்கு நல்லார் யாழ்பற்றிக் கூறுவது :- யாழ் நால்வகைப்படும்; அவை பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழிற்கு இருபத்தொன்றும், மகாயாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாறும், செங்கோட்டி யாழிற்கு ஏழும் கொள்ளப்படும் (அடியார்க்கு நல்லார். சிலம்பு.3:26);.
யாழுருவங்கள் அனைத்திற்கும் வில்யாழே மூலமாகும். தேவநேயர்தம் கருத்தும் இஃதேயாகும்.
 
இதனையடியொற்றியே சீறியாழ், பேரியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் முதலாக ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் யாழ் ஈறாக, எத்தனையோ யாழமைப்புகள் நரம்பிசை வல்லுநர்களால் நன்கு இசையறிவிற் தேர்ந்து தெளிந்துணர்ந்து வடிவமைக்கப்பட்டன. 
 
இடையனொருவன், உள்ளே துளையுடைய குமிழ மரக்கொம்புகளை வில்லாக வளைத்து, மரல்நார்க் கயிற்றினை நரம்பாகக் கட்டித் தானே செய்து கொண்ட வில்யாழில், குறிஞ்சிப்பண்ணை இசைத்து இன்புற்ற நிகழ்வினைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார், தாம் பாடிய பெரும்பாணாற்றுப் படையில் பேசுவது வருமாறு :- 
 
"ஞெலிகோற் கொண்ட பெருவிரல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கிருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையிற் குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பு
வில்யா ழிசைக்கும் விரலொறி குறிஞ்சி"
 
வில்யாழின் இசையானது, வண்டுகளின் இன்னொலியை ஒத்தது. அண்மையிலுள்ளோர் செவிக்கே புலப்படும் தன்மைத்து. வில்லாக வளைக்கப் பெற்ற குமிழங் கொம்பும், அக்கொம்பினுள்ளே அமைக்கப்பட்ட சிறுதுளையும், நரம்பின் ஒலியை, ஒரு குறிப்பிட்ட அளவே பெருகச் செய்தன. 
 
யாழ் அமைப்பு :- வில்யாழின் இன்னிசைப் பெருக்கினை இனிதுணர்ந்த இசைவல்லுநரும், இசைக் கருவியாளரும், பின்வருமாறு வில்யாழினை வடிவமைத்தனர். முதற்கண் நல்ல விளை நிலத்தில் விளைந்து நன்கு பருத்து முற்றியதும், மாசுமருவற்றதும், வண்டுகள் துளைக்காத தன்மையுள்ளதுமான குமிழ மரத்தைத் தெரிவுசெய்தனர். பின்னர் அம்மரத்தினை வேண்டிய அளவுக்குத் துண்டாக அறுத்தனர். அதன்பின் அறுத்த மாத்தினொரு பகுதியை, உள்ளே குடைந்து வெற்றிடமாக்கினர். மரத்துண்டின் மேற்பரப்பினைத் தோலினால் மூடினர். குமிழ மரத்தில் தோல் நன்கு இறுகிப் பொருந்தும்படி ஓரங்களில் சிறிய அணிகளை முடுக்கிப் பத்தர் என்னும் யாழுறுப்பினை அமைத்தனர். பின்பு, பத்தரிலும் கோட்டிலும் நன்கு பொருந்தும்படி, நீளத்தாற் சிறியனவும், பெரியனவும் அகிய நரம்புகளை அளவறிந்து இணைத்துக் கட்டி, யாழினை வடிவமைத்தனர். இவ்வாறு வடிவமைத்த யாழில், முதற்ண் பண்டைக்காலத்தே. மாட்டின் நரம்புகளைத் தெரிவு செய்து, இசை நரம்புகளாக அமைத்தனர். 
 
காலப்போக்கில் மாட்டின் நரம்புகள் மழையாலும், வெயிலாலும், நெகிழ்ந்தும். இறுகியும், அடிக்கடி குரலோசையை (சுருதியை); வேறுபடுத்திக் காட்டியதால், குழலோசையின் துணையுடன், யாழ் நரம்பிற்கு இசைகூட்டி, மகிழ்ந்தனர்.
( குமிழமரம் - தேக்கின் ஒரு வகை )
 
==============================
 
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே யாழின் இசைக்கூறுகள் குறித்த நூல்களும், தமிழிசை நாடக நூல்கள் வழக்கொழிந்திருக்கலாம். அதனால் சிலம்பு அச்சுப்பதிப்பாக வந்தபோது அதிலிருந்த இசை நுணுக்கங்களை உணர்ந்து துய்க்க இயலாது தமிழறிஞர் திகைத்தனர். ஆனால், “நரம்பின் மறை” என தொல்காப்பியரால் சொல்லப்பட்ட யாழ் குறித்தான “யாழ்நூல்” எனும் பெரும் ஆய்வுநூலைப் படைத்து அன்னைக்குச் சூட்டினார் ஈழத்தில் பிறந்த விபுலானந்த அடிகள்.
 
தமிழர்தம் உள்ளத்தின் அடியாழத்தில், யாரோ விரல்தொட்டு இசையெழுப்பக் காத்துக்கிடக்கிறது…
“எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல” … நரம்புகளைக்கொண்ட, அதன் இசைச் செறிவால் ஈர்க்கப்பட்டு, பொருநனுக்கு பொற்றாமரையைப் பரிசளித்து அவன் பின்னே ஏழடி நடந்து சென்று மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்த கரிகால்சோழனின் உள்ளங் கவர்ந்த பேரியாழ்.
===================

 

 

 

தமிழர் இசைக்கருவிகள் - 5 . தக்கை

 

 Image may contain: text that says 'தமிழாடும்முன்றில் முன்றில் தக்கை'

 மெல்ல உருப்பெற்ற குமுகத்தில், இருபுறமும் தோல் இழைத்து உருவாக்கப்பட்ட பறையாக தக்கை பிறந்திருத்தல் வேண்டும். இன்றைய "தவிலுக்கு்" தாத்தா போன்ற தோற்றம். இதன் இசை நடையும் ஒத்திசைவும் பறையைப் போலவே இருக்கிறது. பறையொலிகேட்டால் எப்படி உள்ளூர மனம் ஆடுமோ அதுபோலவே இந்த “தக்கையும்” நம் மெய்ப்பாடுகளில் மாற்றம் செய்கிறது.

 
இது அகப்புறமுழவு (தண்மை, தக்கை, தகுனிச்சம்); மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. அகப்புற முழவு என்றால், புற வெளிகளிலும் கட்டிடங்களின் உள்ளும் இசைக்கத் தகுந்தவை. ஏழிசையில் இது “உழை” எனும் அளவொலியாகும். எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ‘இதன் ஓசை நடுத்தரமானது’, அவ்வளவே.
ஊடலிசைக்கருவி என்றும் இது அழைக்கப்பட்டிருக்கிறது. 
 
========================
 
"யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடிவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கம் உரிப்பொருள் இயக்கி" (சிலப் 3; 26-29)
என்ற சிலம்பின் வரிகளுக்கான அடியார்க்கு நல்லார் உரையில் தக்கை குறிப்பிடப்படுகிறது.
 
தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. (திருமுறை 7.36.9)
கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
(திருமுறை 3.76.5) 
 
===============================
 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கும் “தக்கை” என்னும் பறையின் ஓசை எல்லாவிடத்தும் நின்று சிறந்து, பண்டைய இசைக்கும் நமக்குமான ஊடலைத் தீர்த்துவைக்கட்டும்.
===================

தமிழர் இசைக்கருவிகள் - 4 . பறை

 No photo description available.

தமிழர் வாழ்வில் அறிந்துகொள்ள இயலாத காலந்தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிற தோல்கருவிகளில் முகாமையானது “பறை”. மிக எளிமையான, சிக்கலற்ற, இசைக்கருவி இது. வேட்டைச் குமுகமாக மாந்தன் வாழத்தொடங்கிய காலத்தில் இது தோன்றியிருக்கலாம்.
“பறை” என்ற சொல்லுக்கு வட்டம், சொல்லுதல், அறிவித்தல் போன்ற பழம் பொருள்களும் உண்டு. அதுவல்லாது எல்லா தாளக்கருவிகளுக்குமான பொதுப்பெயராகவும் "பறை" எனும் சொல் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
தொகாப்பியம் காட்டும் கருப்பொருள்களில் 
 
முல்லை - ஏறுகோட்பறையும்
குறிஞ்சி - தொண்டகப் பறையும் வெறியாட்டுப் பறையும்
பாலை - ஆறலைப் பறையும் சூறைகொண்ட பறையும்
மருதம் - நெல்லரிப் பறை
நெய்தல் - நாவாய்ப் பறை (தொல்.பொருள். இளம்.2005: 17-18)
ஆகியவை ஐந்து நில குமுக மாந்தர்களின் பறைகளாகச் சொல்லப்படுகிறது. 
 
வேட்டைக் குமுகத்தில் உருவாகி, வேளாண் குமுகத்தில் பலவித மாற்றங்களையும் பெற்று உயர்ந்த பறை, இன்று வணிக உலகத்தில் தடுமாறும் நிலையை எய்தியிருப்பது கவலைக்குரிய ஒன்றே. 
 
==============================
 
“... ... ... ... ... மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்” (அகநா. 211: 2-3)
"சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும் ... ... ... ... ... ” (மலைபடு. 343 -344)
“குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும்” (நற். 4-6)
கறங்கபறைச் சீரின் இறங்க வாங்கிக்
களைகால் கழீஇய பெரும்புன வரகின்’(அகநா. 194: 7-9)
"ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிப்பறை” (மது. 261-262)
"கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப் புந்து” (புறநா. 396 : 3-4)
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. ( திருமுறை 1.45.6 )
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. ( திருமுறை 1.86.1 )
==================================
 
இப்படி தமிழர் வாழ்வில் எல்லா இடங்களிலும் “பறை”யின் ஓசை இழைந்ததை, ஒலித்துக் கலித்ததைச் சுமந்து கொண்டு நிற்கின்றன நம் செவ்விலக்கியங்கள். குறிஞ்சியின் வெறியாட்டுக் களங்களில் முழங்கிய பல்லாயிரமாண்டு “பறை”யை அடுத்த தலைமுறைக்கு கடத்தாது போனால் நம் வாழ்வு வீணே.
===================

தமிழர் இசைக்கருவிகள் - 3. குழல்

 No photo description available.

 

தமிழர் வாழ்வில் அறிந்துகொள்ள இயலாத காலந்தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிற இசைக்கருவிகளில் முகாமையானது “குழல்”. இசையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெற்ற முதல் ஊதுகருவியாக இது இருத்தல் கூடும். மிக எளிமையான, சிக்கலற்ற, இணைப்புகளற்ற அமைப்பு கொண்ட ஒற்றையுறுப்பு இசைக்கருவி இது. இசையோ, பேராசான் வள்ளுவரின் குறளிலேயே இடம் பிடித்துவிட்டது. அத்தனை இனிமை.
குறிஞ்சித் தலைவன் “முருகன்” குழல் ஊதுபவன், சங்கொலி இசைப்பவன், பலவிதமான இசைக்கருவிகளை இசைக்கத் தெரிந்தவன் என்கிறது “திருமுருகாற்றுப்படை”
பண்டு மூங்கிலாலும் பின்பு உலோகத்தாலும் செய்யப்பட்டது.
மூங்கிலால் செய்யப்பட்ட குழலை மட்டுமே “புலாங்குழல்” என்று சொல்லவேண்டும் என்கிறது தமிழ்.
புல் + ஆம் + குழல். புல் = உட்டுளை, உட்டுள்னயுள்ள பயிர்வகை அல்லது மூங்கில், புல்லாங் குழல் = மூங்கிற் குழல்
 
==============================
 
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
: - ( திருமுருகு : 209 )
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.35.7 
 
===============================
. :- இன்னும் ஏராளமான பாடல்களின் ஊடே, பன்னிரு திருமுறைகள் எங்கிலும் நீள ஒலிக்கிறது பழந்தமிழரின் “குழல்” 
===========================

தமிழர் இசைக்கருவிகள் - 2. கொம்பு

 Image may contain: text that says 'கொம்பு தமிழாடும் முன்றில்'

 

பண்டைய நாள்களில் மன்னர்களின் வருகையையும், தமிழர் கோயில்களில் இறைவனது வருகையையும் அறிவிக்கும் விதமாக இசைக்கருவிகளில் முதல் வரிசையில் நின்று ஊதப்பட்டது கொம்பு. முதலில் "சங்கு" முழங்க தொடர்ந்து கொம்பின் பேரோசை நகரெங்கும் நிறையும். கால ஓட்டத்தில் காணமல் போன, அல்லது சில குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே காணக்கிடைக்கும் கருவியாகிப் போனது கொம்பு. மீண்டும் அது நம் வாழ்வியலுக்குள் வரவேண்டும்.
கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.
============================================
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்/
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்/
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி/
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்/ 12.0654
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க/
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்/
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று/
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்/ 12.2182
. :- பன்னிரெண்டாம் திருமுறை 

தமிழர் இசைக்கருவிகள் - 1. சங்கு

 

 Image may contain: shoes and outdoor

தமிழர் வாழ்வியலில் எல்லா நிகழ்வுகளிலும் முதன்மையாக இருந்த "சங்கு" மறக்கப்பட்டு விட்டது. மறக்கப்பட்டது மட்டுமல்ல. அது மங்கலமானது அல்ல என்பது போன்ற சிந்தையும் வந்துவிட்டது.
செவ்விலக்கியங்களில், திருமுறைகளில் பெருமைக்குரிய இடம்பெற்றிருக்கும் சங்கு தமிழர் வாழ்வில் மீண்டும் வரவேண்டும். 
 
==============================
 
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி/
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி/
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்/
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க/
. :- பன்னிரெண்டாம் திருமுறை 
 
==============================

Sunday, 6 December 2020

நீலமலைக் காதல்எயினி, சளவோலையால் வேயப்பட்ட குடிலின் படலை மெல்லத் திறந்தாள். கீழை வானத்தில் கதிரவனின் தலை தெரிந்தது. வெளியே விரிந்துகிடந்த நீலமலை தன் பெயருக்கேற்ற வண்ணத்தில் ஆடை கட்டியிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் நீலக்குறிஞ்சி பூத்துக் குலுங்கியது. மெல்லிய மழைத்துளிகள் பூக்களின் மேல் ஒட்டியிருந்தன. குளிர் காற்று வீசியது. மெல்ல நடந்து குடிலின் அருகே இருந்து ஒரு குறிஞ்சிமலரைப் பறித்தாள். போர் அயரும் முருகனின் கையிலிருந்த மணிபோல இருந்தது அது. நேற்று மாலை…

“ஆறு தடவை குறிஞ்சி பார்த்துவிட்டேன். எனக்கும் வயதாகிறது. நாடுகாவலை வேறு யாரேனும் எடுத்துக்கொண்டால் சிறப்பு.” என்று நாட்டுக் கூட்டத்தில் மூப்பன் சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

குறிஞ்சிதான் இந்த மலையின் சிறப்பு. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிதான் எத்தனை அழகு, அவனைப் போலவே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.“அடியேய் என்ன அங்க ஒத்த பூவ கைல வச்சு வெறிச்சு வெறிச்சு பாக்குற. அதுதான் மலை பூராவும் பூத்துக்கிடக்கிறதே… ம்…” என்ற குரல்கேட்டு தலையுயர்த்தினாள் எயினி. வள்ளி வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்தபின் தான் எயினியின் களிப்பு வள்ளிக்குப் புரிந்தது.

“என்னடி மகிழ்ச்சி அருவியா பொழியுது போல”

“இல்லையே… இந்த பூவின் தேனை உறிஞ்சினேன். அதன் சுவையின்பம் ஒருவேளை என் முகத்தில் தெரிகிறதோ என்னவோ?”

Friday, 4 December 2020

திருமுருகாற்றுப்படை - குறிப்புரை


  
 

தமிழர் தம் சொத்துப்பாட்டு எனப்படும் பத்துப்பாட்டில் முதலாவது பாட்டு திருமுருகாற்றுப்படை. இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும்.  வழிபட விரும்புவோரை முருகனிடம் ஆற்றுப்படுத்துவது இந்நூல். இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார்.

  இது 317 அடிகளைக் கொண்ட நீண்ட அகவற்பாவாகும். குறிஞ்சியின் சிறப்புக் கடவுளை மலை ஒன்றைச் சிறப்பித்துக்கூறி. அம்மலைக்கு உரிமை பூண்ட முருகன் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திரு ஆவினன்குடி, திரு ஏரகம் என்னும் நான்கு சிறப்புடைத் தலங்களில் எழுந்தருளியுள்ளான் என்று உரைக்கிறது. (அறுபடைவீடு என்று சொல்லப்படவில்லை)

  முருகன் உறையும் இடங்கள், அவன் பழந்தமிழ் மண்ணில் வழிபடப்பட்ட முறைகள், வெறியாட்டு, முருகன் அருள்புரியும் திறம் இவற்றைக் கூறுகிறது. அவன் குன்றுதோறாடல் கொண்டவன் என்றும் குறமகள் ஒருத்தி செய்யும் முருக வழிபாடும் கூறி, புதிதாக வழிபடுவோர் எப்படி வழிபடவேண்டுமென்றும் உரைக்கிறது.

  வைப்பு முறையால் மற்ற ஆற்றுப்படை நூல்களிலிருந்து வேறுபடுகிறது.

      ===================================

 

 திருமுருகு ஆற்றுப்படை

(மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்)


உரைப்பாயிரம்
மாதிசைமீ தெங்கு முயர்மா மொழியான/
மேதினிவாழ் மாந்தர் பகரு மொழிகள்தன்/
ஞாதிருவாம் தாய்த்தமிழின் தண்ணடி தானேத்தி/
தீதறுதேன் கூர்திருமு காற்றுப் படைகண்டு/
ஐதமர்சீர் மாப்பொருளை ஓதிடவே தந்தேனே/
மாதேவன் பத்மநாபன் தாழக் குடிநின்றே/
ஞாதிநக்கீ ரன்தாள் பணிந்து./

நான்கு திசைகளிலும் உயர்ந்து சிறக்கும் மொழியாம், உலகெங்கும் வாழும் மாந்தர் ஒருவரோடு ஒருவர் உணர்வைப் பகரும் மொழிகளின் ஆன்மாவாகிய தாய்த்தமிழின் அடியைப் போற்றி வணங்கி, மிக நுட்பமாக ஆக்கப்பட்டத் தீதில்லாத தேனாம் திருமுருகாற்றுப் படையைப் படித்து, நுணுகிச் சிறந்த அதன் பெரும் பொருளைப் படிக்கும் வண்ணம், முன்னோன் நக்கீரன் அடிதொழுது தாழக்குடி பத்மநாபன் மகனாகிய மாதேவன் நான், எழுதிய உரை இது.

 முருகன்

  உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக,  பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, ஒழிவு இல்லாமல் மின்னும் இமையாது ஒளிரும் ஒளியையுடைய,  தன்னைச் சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,  கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,  குற்றமற்ற கற்பினையும்,  ஒளியுடைய நெற்றியினையும்,  உடையவளின் கொழுநன் ஆவான் முருகன்.


  சூலுற்ற மழைமேகங்கள் வானத்தில் வாள்போல் மின்னி வளம்தரும் மழைத் துளிகளைப் பொழியும். கோடைக்குப் பிறகு பெய்யும் அந்த முதன் மழையால் கானம் இருண்டு பசுமையாகும் .வெண்கடம்பு மரங்கள் தழைத்துப் பூத்துக் குலுங்கும். அப்பூக்களால் கட்டப்பட்ட தார்மாலைகள் புரளும் மார்புக்குச்

Friday, 25 September 2020

காற்றாக...

 
முதல் பாடலிலேயே
முழுமையடைந்தவன் நீ.

 
க ச ட த ப எனும்
வல்லோசை கொண்டு
இசைக்கு மொழியில்லை
என்பது பொய்யென;
இசைத்துச் சொன்னவன் நீ.

 
மேனி நோகாமல்,
மெல்லிசையால்
உள்ளம் கொன்றவன் நீ.
உணர்வற்றுக் கிடக்கையில்
ஒற்றைச் சிரிப்பால்
உயிர்ப்பித்தவன் நீ.

 
என்
காதலின் ஓசையாய்,
காமத்தின் தவிப்பாய்,
மகிழ்ச்சியின் தூறலாய்,
வருத்தத்தின் இறுக்கமாய்,
தனிமையின் தோழமையாய்,
என்னோடு வாழ்ந்தவன் நீ.

 
எதுவுமற்று இருக்கையில்
எல்லாமுமாய் இருந்தவன் நீ.

 
இன்னும் இருப்பாய்.
எல்லோர் காதுகளும்
கேட்காது போகும்வரை,
எல்லோர் வாயும்
பாடாது போகும்வரை
எம் அருகே காற்றாக.

 

சிராப்பள்ளி ப.மாதேவன்

25-09 2020