Monday 27 December 2021

நெல்லையாரின் சறுக்கல்


 


ஐயமில்லை அது சறுக்கல்தான்.

 ஆனால், ஓர் அரசியல்வாதியின் சாதாரண நடவடிக்கை இது. இன்று நேற்றல்ல. இந்தச் சறுக்கல்களெல்லாம் அவரது வழமையே.

இதற்காக நண்பர்கள் சிலர் வருத்தத்தோடு பதிவுகள் இட்டிருக்கிறார்கள்.

 பெரிதாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. இதற்கு முன்பும் அவர் ஒன்றும் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுத்தவர் இல்லை. அவர் சார்ந்த காங்கிரசு இயக்கமும், பெருந்தமிழர் வ.உ.சியையே புறந்தள்ளிவைத்த இயக்கம்தான்.

 ஏற்கனவே, வ.உ.சி. 150 விழாவில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளுக்காக "வயதில் இளையவரானாலும் முதல்வர் சுடாலினின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் என்று நக்கீரன் இதழுக்குப் பேட்டியளித்தவர் நெல்லையார். இப்பொழுது நா தழுதழுக்கக் கூப்பிய கரங்களோடு நேராகச் சொல்கிறார் அவ்வளவுதான். அவரைப் பொறுத்தவரை இது அதனுடைய நீட்சியே.

மேடையில் இருந்தவர்களும் ஒரே நிலைப்பாட்டில் எப்பொழுதுமே இருந்தவர்களும் அல்ல என்பதையும் மறந்துவிடாதீர்கள். அது அரசியல் மேடை. கண்ணன் ஒரு தமிழர். அதுவே தமிழர் சிலரது வருத்தமான பதிவிற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆனால், முகநூலில் ஏராளமான பதிவுகள். தமிழே சென்று தலைவணங்கியதுபோல் காட்டப்படுகிறது. (வேண்டுமென்றே செய்யப்படுகிறதா தெரியவில்லை?)

 நல்ல பேச்சாளர். அரசியல்வாதி. தேர்ந்த அரசியல்வாதியா தெரியவில்லை. அவர் அழுது பேசிவிட்டதால் தமிழுக்கு இழப்பொன்றும் இல்லை.

பதிவுகளில் ஏராளமானோர் “தமிழர்” “தமிழறிஞர்” தரம் தாழ்ந்தார். “மானம் கெட்டு வாழ்வது ஒரு வாழ்வா?” “வ.உ.சி க்கு வறுமை வரவில்லையா?” “பாரதி வறுமையை எதிர்கொள்ளவில்லையா?” “எல்லோராலும் கவரிமானாக வாழ முடியாது” எனப் பலவாறாகப் பதிவிட்டிருந்தார்கள். இதில் எத்தனை பேர் தமிழர்கள் என்று தெரியவில்லை? பதிவிட்ட தமிழர்களுக்காக மட்டும் சில…

வ.உ.சி யோடு கண்ணனைச் சேர்க்காதீர்கள். வ.உ.சி. போராளி. தமிழர்கள் கைவிட்ட போராளி.

பாரதியோடு பாதி சேர்க்கலாம். வறுமையை எதிர்கொள்ளத் துணிவிருந்த பாரதி, போராட்டத்தை, விடுதலையைக் குறித்து எழுதுவதைக் கைவிடுவதாக ஆங்கில அரசுக்கு எழுதிக் கொடுத்துவிட்டுத் தான் கடையத்தில் வாழ்ந்தார்.

இவரை அப்படியெல்லாம் ஒப்பிடவேண்டியதில்லை.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நான் சொல்ல நினைத்தது வேறு
-------------------------

 பொருள் வசதி இருப்பதால் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்காமல் ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்துவிட்டு, பிள்ளைகளுக்குத் தமிழை மறக்கடிக்கச் செய்துவிட்டு புள்ளிமானாகக் கூட வாழாமல், மூப்பால் அவதியுறும், நோய்களால் துன்புறும், வறுமையில் உழலும் தமிழறிஞர்கள் மட்டும் “கவரிமானாக” இருக்கவேண்டுமென்று எண்ணுகிறோமே இது எந்த வகை அறம்?

 இதோ சனவரி 6ல் சென்னையில் புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. போய்ப் பாருங்கள். நாம் முழுமையாக அறிந்திராத தமிழறிஞர்களின் பெரு நூல்களையெல்லாம் அச்சிட்டு வைத்துக்கொண்டு, வாங்குவோர் வரவுக்காகக் காத்திருக்கும் ‘தமிழ்மண்’ போன்ற பதிப்பகங்களை.

தொண்ணூற்றொன்பது விழுக்காடு தமிழர்கள் வெறுமனே அவற்றைக் கடந்து செல்கிறோம். உள்ளே நுழையும் அந்த ஒரு விழுக்காடு தமிழர்களில் பாதிப்பேரிடம், உள்ளத்தில் ஆசையிருக்கும் அளவிற்குப் பையில் பணமிருக்காது.

   சாகித்திய அக்காடெமி போன்ற பெரிய பதிப்பகங்களில் பத்து ஆண்டுகளாக விற்காமல் அட்டை கிழிந்து, பாதி விலைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் போன்றோரின் நூல்கள் இந்த ஆண்டிலாவது விற்றுவிடுமா தெரியவில்லை.

   சாத்தூர் சேகரனார் போன்ற பெரிதாக அறியப்படாத ஆய்வாளர்களின் நூல்களைக் காண்பதே அரிது. இதற்கு முன்னால் அவை பெரிதாக விற்பனையாகவில்லை என்பதே காரணம்.

   ஒரு கடையில் தமிழறிஞர் க.ப. அறவாணன் அவர்களின் நூற்களுடன் அவரது துணைவியார் காத்துக்கிடப்பார். வருத்தத்தோடு சொல்கிறேன்,  கடந்து செல்லும் கூட்டத்தின் பெரும்பகுதி அதை ஒரு கடை என்று எண்ணியிருக்குமா? என்பதே ஐயந்தான். (சராசரியாகப் பத்து இலட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வந்து போகிறார்கள் என்பதையும் மறந்துவிடவேண்டாம்)

   பொன்னியின் செல்வனை வாங்குவது மிக எளிது. பாவாணரின் நூல்களைப் பார்க்கவே நாம் அலையவேண்டியிருக்கும்.

  வேங்கடசாமி நாட்டார், க.அப்பாத்துரையார், சண்முகம், மயிலை சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்க நாயகர், எல்.டி.சாமிக்கண்ணு, தமிழவேள், அரசஞ் சண்முகனார், சி.வை.தாமோதரனார், சோமசுதர பாரதியார், கே.என்.சிவராசன் (பட்டியல் நீளும்..) இவர்களுடைய நூற்கள் உங்கள் பார்வையில் உடனே பட்டுவிட்டால் நீங்கள் பேறு பெற்றவர்களே. அவை மலைச் சுனையினும் காண்பதற்கு அரிதாம்.

தொ.பரமசிவன், அ.கா.பெருமாள் போன்றோரின் நூல்கள் கொஞ்சமாகவும், ம.இராசேந்திரன், ரா.பூங்குன்றன், போன்றவர்களின் நூல்கள் ஒன்றிரண்டும் விற்றுக்கொண்டிருக்கின்றன.

கடந்த புத்தகக் காட்சி (2021) ல் ஒரு நாவலாசிரியரோடு ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவரது நூலை வாங்கிக் கொண்டார்கள். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஊடே “பொருநராற்றுப்படை” என்ற இலக்கியம், பத்துப்பாட்டில் இருப்பதே அறிந்ததில்லை, அதன் பெயரே தெரியாது என்றார். உண்மையை மறைக்காமல் பேசிய அவரது பண்பு மதிக்கத் தக்கதென்றாலும், எனக்குப் பகீரென்றது.

 அவர் சாகித்திய அக்காடெமி விருதுபெற்றவர். விருதுபெற்ற அவரது புதினம் “மன்னராட்சி தொடங்கி மக்களாட்சியின் நீட்சியினை” பொருளடக்கமாகக் கொண்டது. அப்படியான கதையை எழுதியவர்; மன்னன் ஒருவனுடன் தங்கி நேரடியாகக் கண்டு ஒரு படைப்பாளி இயற்றிய நூலொன்றை, அதிலும் தமிழிலக்கியத்தின் முகாமையான பத்துப் பாட்டின் நூலொன்றின் பெயரைக் கூட அறியாதிருந்தது வியப்பையும் வருத்தத்ததையும் ஒருசேரத் தோற்றுவித்தது. ஆனால், புதினத்தின் விற்பனை நன்றாக நடந்தது.

கருத்தில், ஆய்வில், எழுத்தில், சிந்தனையில் சறுக்கிய தமிழறிஞர்களைத் தள்ளி வைத்துவிடலாம். வாழ்வில் சறுக்கி விழுபவரை?

பேசும் முன் சற்று சிந்திப்போம்.

தமிழறிஞர்களை அடையாளம் காண்போம். அறிவோம். வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நூல்களை வாங்குவோம். படிப்போம். குழந்தைகளுக்குக் கற்றுத்தருவோம். மேலும் எழுதுமளவுக்கு அறிஞர்களை ஊக்குவிப்போம். 

(இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு பதிவிட்டவர்களின் மனநிலையை, இனத்தின் மீதான காதலை மதிக்கிறேன். அவர்களுக்கானதல்ல இந்தப் பதிவு)

அதைவிடுத்து,

தேடித்தேடி வாங்கிய பளிங்குக்கல்லும், கிரானைட் கற்களும் பதிக்கப்பட்ட வீட்டில் இருந்துகொண்டு மலைகளும் இயற்கை வளங்களும் அழிக்கப்படுவது குறித்துப் பேசுவதுபோல, மொழி அழிவது குறித்தும் தமிழறிஞர்கள் தடுமாறுவது குறித்தும் பேசுவதென்பது வீணே.

“லைக்” வாங்குகிற, காழ்ப்புடன் அயலார் விரும்புகிற ஒரு முகநூல் பதிவாக வேண்டுமானால் அது இருக்கலாம். அதனால் தமிழுக்கு ஒன்றும் நேர்ந்துவிடப் போவதில்லை என்பதை மறவாதிரு என்னருமைத் தமிழினமே.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்