Monday 20 March 2023

காக்கை சிரிக்கிறது




இரவெல்லாம் வௌவால்கள்
ஆடிய அரசமரக்கிளைகளில்
வைகறையில் கிளிப்பாட்டு.

கீழ்வானம்
மெல்ல வெளுக்கையில்
சின்னக் குருவிகளின் சேர்ந்திசை.

அடுக்ககச் சுவர்களிலிருந்து
அரசமரக் கிளைக்குத் தாவும்
அணில் இணைகளின்
அன்பின் பேரோசை.

வடபழனி மெட்ரோவில்
வதியும் செருக்குடன்
அரசமரத்தை
வட்டமிட்டுச் செல்லும்
மாடப்புறாக்கள்.

நட்டநடுச் சென்னையில்
மனிதன் தீண்டியிராத மரம்.
அவன்
எச்சில் பட்டிராத இலைகள்.

கிழக்கே நீண்டிருக்கும்
கிளையொன்றில்
தனியாய் ஒரு காக்கைக் கூடு.

பறவைகளின் இசையிடையே
எமக்குப்
பழக்கமான பாட்டொன்று
மாசடைந்த காற்றில்
மறுபடியும் கலக்கிறது.
'மக்கும் குப்பை, மக்காத குப்பை
அபாயகரமான குப்பை'

காக்கா என்பதை மறந்து
கலகலவெனச் சிரிக்கிறது
காக்கை.