Sunday, 26 January 2020

கருவறை மொழி


கருவறையில் பிண்டமாய்
காதுகளின்றிக் கிடந்தபோது,
உணர்வுகளின் முடிச்சின்வழி
தாயின் குருதி - என்
தலையில் சேர்த்தமொழி.

கையிரண்டும் பின்னி
காலிடையே சேர்த்துவைத்து
தலைகீழாய் இருந்தபோது,
தாயின் காதருகே - தந்தை
தலைகோதி சொன்னமொழி.

முன்னே வயிறுதள்ளி
முந்நூறு நாள் தாங்கி
என்னைச் சுமந்தவள்,
முதுகு வலியெடுக்க - அம்மா
என்றழைத்த அருமைமொழி.

மண்ணைத் தொடும்முன்னே
மருத்துவச்சி கைவீழ்ந்து
முதல் மூச்சு இழுக்கையிலே,
"ஆணம்மா" என்றென் - காதில்
அன்பாக அறைந்தமொழி.

முட்டூன்றி நடக்கையிலே
முகம்பார்த்துச் சிரிக்கையிலே
முன்னுச்சி மயிர்கோதி
முதுகிழவி ஆசையினால் - ராசா
என்றழைத்த அன்புமொழி.

பள்ளி வகுப்பறையில்
எழுத்தறியா சிறுவயதில்
சின்னக் கைபிடித்து
சீராய் முகம்பார்த்து - ஆசான்
சொல்லிக் கொடுத்தமொழி.

பள்ளித் தோழருடன்
பழகிக் களித்துச்
செல்லச் சண்டையிட்டு
சிரித்து மகிழ்ந்திருந்த - என்நாவில்
எந்நாளும் நின்றமொழி.

கல்லூரிக் காலத்தில்
காதல் கடிதத்தில்
காமம் செப்பாது
கவிதைச் சொல்லாகி - இன்னும்
மறவாத இன்பமொழி.

தாத்தாவின் சிதைமுன்னே
ஊரும் உற்றாரும்
ஒருசேரக் கூடிநிற்க
அரிசிபோட வாருங்கோ - என்று
அறிவிப்பைச் செய்தமொழி.

அப்பாவை எரித்தசாம்பல்
ஆற்றில் ஒழுகவிட்டு
நோன்பிருந்து சிலநாளில்
கல்லெடுப்புச் செய்கையிலே - காதருகே
தொழுதிடுங்கோ என்றமொழி.

என்வாழ்வாய் இருந்தமொழி,
கருவறைக்கும் கல்லறைக்கும்
நடுவிலாடும் வாழ்வதனில்
இறைவணங்க ஆகாதென்றால் - பிழை
மொழியிலில்லை இறையிலில்லை;
இடைநிற்போர்
உள்ளத்தே உள்ளதையா. 

Friday, 24 January 2020

தொல்காப்பியம் சொல்லும் மந்திரம்


பெருநூல் தொல்காப்பியத்திற்கு பழம் உரையாசிரியர் அறுவர். இதில் இளம்பூரணர், பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் மட்டுமே பொருளதிகாரச் செய்யுளியலுக்கு உரை கண்டிருக்கிறார்கள். 

காலம்
இளம்பூரணர் – 11 ஆம் நூற்றாண்டு
பேராசிரியர் – 12- ஆம்  நூற்றாண்டு இறுதி
நச்சினார்க்கினியர் – 14 ஆம் நூற்றாண்டு.

பொருளதிகாரச் செய்யுளியலுக்கு எழுதப்பெற்ற பழைய உரைகள் இந்த மூன்று மட்டுமே. வேறில்லை. இவற்றில்; இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை எனவும், பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது எனவும், நச்சினார்க்கினியர் உரை இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது எனவும் போற்றுகின்றார் சான்றோர்.

இனி செய்திக்கு வருவோம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப. “ தொல்-பொருள்-செய்யுளியல் 1436

முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி, பண்ணத்தி என்ற செய்யுள் வகைகளைக் குறிப்பிடும் நூற்பாக்களில் மந்திரச் செய்யுள் குறித்த இரண்டாவது நூற்பா இது.

இனி, இந்த நூற்பாவிற்கான முதுபெரும் உரைகளைப் பார்ப்போம்.

1. இளம்பூரணர் உரை
என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.
அது வல்லார்வாய்க் கேட்டுணர்க.

2.பேராசிரியர் உரை
இது,  மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று.
நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையராவார். ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப்  புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும்  என்றவாறு.
அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. “தானே'” யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும்; பாட்டாகி அங்கதமெனப் படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க.
 அவை,

"ஆரிய நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா"

எனவும்,

"முரணில் பொதியின் முதற்புத்தேழ் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானத்தஞ் சேர்க்க சுவா"

எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின. மேற் பாட்டுஉரை நூல் என்புழி அங்கத மென்றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்ன வாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டா கலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தே பற்றிப் பிறரும்?

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்' (குறள் உஅ) என்றாரென்க. 

அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை,
'அங்கதப் பாட்டவற் றளவோடு ஒக்கும்”
என மேற்கூறினானென்பது.

3. நச்சினார்க்கினியர் உரை
இது மந்திரச் செய்யுள் கூறுகின்றது.
 (இ-ள்.) சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்று பயக்கச் சொல்லு மாற்றலுடையார் அவ்வாணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு.
அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க.  தானேயென்று பிரித்தார், இவை தமிழ்மந்திரமென்றற்கும்,  மந்திரந்தான் பாட்டாகி யங்கத மெனப்படுவன வுள, அவை நீக்குதற்கு மென்றுணர்க.
அவை

“ஆரிய நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா”

“முரணில் பொதியின் முதற்புத்தேழ் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானத்தஞ் சேர்க்க சுவா”

இவை தெற்கில் வாயில்திறவாத பட்டிமண்டபத்தேல் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும்பாடி யின்னவாறாக வெனச் சவித்தற் பொருட்டாய்வந்த மந்திரம் பாட்டாய்வருதலின் அங்கதமாயிற்று.
இதனான்

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’ (திருக். உஅ) என்றார்.

இவற்றிலிருந்து நாம் அறிந்து கொண்டவை.
1.   நிறைமொழி மாந்தர் - சொல்லிய சொல்லின் பொருண்மை என்றும் குறைவின்றிப் பயக்கச்  சொல்லும் ஆற்றலுடையவர்.
2.   மறைமொழி - புறத்தார்க்குப்  புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர்.
3.    தானே'” யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும் தானே என்ற சொல்லால் பிரித்ததால் இவை தமிழ் மந்திரம் என்பதற்கும்,

பழம்பெரும் உரையாசிரியர் யாரும் தொல்காப்பியத்தின் ‘நிறைமொழி மாந்தர்’ என்பதற்கு “முற்றுந்துறந்தவர்” என உரையெழுதவில்லை. ‘மந்திரம்’ தமிழ் மந்திரம் என்றும் குறிப்பிடுகின்றனர். அப்படியிருக்க, இணையப் பக்கங்கள் சிலவற்றில் வேறு பொருள் குறித்தான உரைப்பொருள்கள் காணப்படுகின்றன. பேராசிரியரைக் காட்டிலும் சிறந்த பண்டைய உரைகாரர் யாரெனத் தெரியவில்லை. நச்சினார்க்கினியரும் சொல்லாத அந்தப் பொருள் எங்கிருந்து வந்தது என்றும் அறியக் கிடைக்கவில்லை. சரி, எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே எனும் சூத்திரப்படி நோக்கினாலும், “நிறைமொழி மாந்தர்” என்பதற்கு முற்றும் துறந்தவர் என பொருள்கொள்ள இயலவில்லை.

வள்ளுவன், பேராசான், பேரறிஞன் "நிலத்து" என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறான். தொல்காப்பியன் "தானே" என்றது போல. வெண்பாவின் இலக்கணம் வெளிப்படையாய்ச் செய்து வைத்த தொல்காப்பியம் இருப்பதனால் நக்கீரன் பிழைத்தான். இல்லையென்றால் அவனும் "சுவாகா" தான்.

ஆனாலும், வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். பாவாணர் இதுபோன்று சொன்ன போது "என்ன அறிஞர்களை இப்படிக் கூறுகிறாரே என்று எண்ணியதுண்டு. ஆனால் பட்டறிவும் காலமும் அதை மெய்யென்று அறிவித்தன. எப்படியானாலும் எச்சரிக்கையாயிரு தமிழினமே. ஒவ்வொரு முறையும் நீ உள்ளிருந்தே வீழ்த்தப் படுகிறாய். உன் மண்ணில் கிணறு தோண்டி நீரெடுத்துக் காய்ச்சி, உன் மண்ணின் மரங்களின் வேர்களில் பாய்ச்சுகிறார்கள்.

விழுதுகள் வீழ்த்த முனைகின்றன, மூதாலமே கவனமாயிரு. 

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்,
24-01-2020

Saturday, 18 January 2020

கடலிலிருந்து கவிதைகள்இமைகள்
தொட்டுக்கொண்டு விட்டுவிடும்
காலக்கெடுவுக்குள்
எத்தனையோ பிறப்பெடுக்கிறேன்.
எறும்பாய் யானையாய் எருதாய் புலியாய்
பன்றியாய் குரங்காய் அன்றிலாய் குருவியாய்
தும்பியாய் வண்டாய் தேளாய் பாம்பாய்
புல்லாய் மரமாய் கல்லாய் கடலாய்
நிலமாய் நீராய் அவராய் இவராய்
நீங்களாய் நானாய் எல்லாமுமாய்.
உங்கள் உணர்வுகளில்
மூச்செடுத்துக் கொள்கிறேன்.
உங்கள் கனவுகளில்
உடை தைத்துக் கொள்கிறேன்.
உங்கள் மகிழ்ச்சியில்
முகம் துடைத்துக் கொள்கிறேன்.
சில நேரம்,
உங்கள் கண்ணீரால்
என் பேனா நிரப்புகிறேன்.
உங்கள் எழுத்துகளின்
காற்புள்ளிகளில் கருக்கொள்கிறேன்.
அரைப்புள்ளிகளில் வாழ்ந்து முடிக்கிறேன்.
முற்றுப்புள்ளிகளில் சட்டென முகிழ்க்கிறேன்.
இன்னும் பிறக்காத சூல்கள்
தேடியலைகிறேன்.
உங்கள் தொண்டைக் குழிக்குள்
சிக்கிக்கொண்ட சொற்களில்
பாடல் புனைகிறேன்.
நீங்கள் மறந்துபோன
நினைவுகளால் இசைகோர்க்கிறேன்.
உயரப் பறந்து வானம்பாடியாய்
பாடித் திரிகிறேன்.
உள்ளம் களிக்க என்னை மறந்து
உயிர்ப் பந்தாய் விழுகிறேன்;
கடலில் முகந்த நீர்
மழைத்துளியாக
மண் சேர்வது போல்.

அம்மாக்கள்

ஒற்றைச் சொல்லில்
எழுதப்பட்ட
பெருங்காவியம்.
எல்லோர் வாழ்க்கையும்
சித்தன்னவாசல் ஓவியம்தான்
அவரவர் பார்வையில்.
அதில்,
தூரிகையின்றி
அம்மாக்கள் வரைந்தது அதிகம்.
ஒற்றை விரலால்
மேகங்களை விலக்கி
நிலவைக் காட்டினாலும்,
தங்கள் ஆசைகளை
தங்களோடேயே
உடன்கட்டை ஏற்றிப் போனார்கள்.


Friday, 17 January 2020

திசைகளில்லைசுற்றிலும் இருள்
பேரமைதி
மேலலகும் கீழலகும்
உரசுவதை உணர்கிறேன்
கூர் பார்க்கவேண்டி
இருளில் குத்துகிறேன்.
விரிசலின் ஓசை
வெளிச்சக் கீற்று
இறகசைக்கும் காற்று.
ஓசை எழுப்புகிறேன்
எறும்புகள் கூட
திரும்பிப் பார்க்கவில்லை.
தொலைவில் கதிரவன்
வெம்மை தாங்காது
நிழல் தேடி
மெல்ல நடக்கிறேன்.
என் காலடித்தடம் கடக்கவே
ஏழெட்டு முறை
தாவிக் குதிக்கிறேன்.
நான் சென்று தொடும்முன்
நகர்ந்தது மரநிழல்,
எனக்கு முன்னே நடந்தது
என் நிழல்,
பின்புறம் கதிரவன்.
மெல்ல இருண்டது.
மறுநாள் விடியலில்
சிறகசைத்து மரக்கிளை
அடைந்தேன்.
உச்சிக் கதிரவனை
எட்டிப்பிடிக்க
உயரே பறந்தேன்.
உயரே உயரே.
இப்பொழுது
எனது பாதையில்
திசைகளில்லை.
ஆனாலும் நான்
எங்கும் பார்க்கிறேன்
யாதும் காண்கிறேன்.
புற்களின் மீது என்
சிறகின் நிழலால்
ஓவியம் வரைகிறேன்.
ஓசையேதும் எழுப்பவில்லை
ஆனாலும்,
அண்ணாந்து பார்த்து
பெரு மூச்செறிகிறான் ஒரு மனிதன்.


Thursday, 16 January 2020

தலைமுறைகள்


நிகழ்காலத்தின்
கண்ணீரை,
இறந்த காலத்தின்
மகிழ்ச்சியைக் கொண்டு
துடைத்துக் கொள்கிறான்
அவன்.


Wednesday, 15 January 2020

சுறவம் - புத்தாண்டு - 2020

 
கல்லணை நிறைக்கும்
காவிரிதன்
கரைகள் ஏதென்றால்,
காட்டுதல் எளிதே.
நடுநீர் எதுவென வினவின்;
அத்தனை எளிதா
செப்பம் பகர்ந்திட?

அலைகள் தாலாட்டும்
ஆழியின்
இக்கரை அக்கரை
இயம்புதல் எளிதே.
நடுக்கடல் எதுவென வினவின்;
அத்தனை எளிதா
செப்பம் பகர்ந்திட?

வானில் கதிரவனைக்
காணும் வழியின்
தென்கரை வடகரை;
தன்நிழல் கொண்டே
எண்ணுதல் எளிதே.
நடுவழி எதுவென வினவின்;
அத்தனை எளிதா
செப்பம் பகர்ந்திட?

தென்முதல் தொடங்குதல்
தண்டமிழ் மரபே.
தென்னவன் மீன்குறி
தன்பெயர்ச் சூடிய
சுறவத் திங்களே
மன்னர்க்குத் தொடக்கம்.
முழவு கறங்க
முகிழ்த்தது புத்தாண்டு.

பொங்கல் பொங்கிட
பொலி சிறந்திட
ஏறுகள் களித்திட
யானைகள் மகிழ்ந்திட
கன்னல் தமிழெடுத்து
வையம் வாழி! வாழி!! என
வாழ்த்துவமே.

Sunday, 5 January 2020

தொல்காப்பியம் வரலாற்றுப் பெட்டகமா?


வாழ்வியல் கூறுகளை, இயலை தன்னுள்ளே அடக்கி நிற்கிற தொல்காப்பியம் வரலாற்றுப் பெட்டகமா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஏராளமான வரலாற்றுப் பெட்டகங்களுக்கான திறவுகோல்கள் அதற்குள்ளே இருக்கின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அன்றைய வாழ்வியலின் எல்லா நிலைகளையும்; நிகழ்வுகளாக இன்றி நிலம், உயிர், அறிவு, மொழி, செப்பம், இயல்,இசை, கூத்து, அகம், புறம் என எல்லாவற்றின் அடிப்படைக்கூறுகளாக அடுக்கி வைத்திருக்கிறது அது.

நம் முன்னோர் நடந்தபாதையும், கடந்த பாதையும், தடுக்கி விழுந்த இடங்களும் அங்கே அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. கண்டிப்பாக அவை உதவும். நமக்கு அறிவூட்டும்.

நான் ஏராளமாகப் பெற்றிருக்கிறேன். வேண்டுமானால் ஒன்றைச் சொல்கிறேன் அதன் பிறகு ஒருவர் சிந்திக்க "தொல்காப்பியம்" உதவுமா என்று நீங்களே முடிவெடுங்கள். இல்லை; பதிவை கடந்து சென்று விடுங்கள்.

தமிழகத்தில் ஏராளமான பழங் கோயில்கள் உள்ளன. "அந்த கோயிலுக்குப் போனா அது கிடைக்கும், இந்தக் கோயிலுக்குப் போனா இது கிடைக்கும்" "பரிகாரக் கோயில்" என்பன போன்ற செய்திகள் ஏராளமான கோயில்களைப் பற்றி இருக்கின்றன. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அது போன்ற பெருமை எதுவும் இல்லை. யாரும் 'அங்கு போனால் .. !! " என்று எதுவும் சொவதில்லை? ஏன் தெரியுமா?

காரணம் இதுதான். தஞ்சைக் கோயிலுக்கு தல புராணக் கதை
இல்லை. ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய பெருவுடையார் எந்தக் கதைக்குள்ளும் சிக்கவில்லை. கோயிலைக் கட்டிய போதே அது குறித்தான எல்லாச் செய்திகளையும் கல்லில் வெட்டி வைத்து உண்மை வரலாற்றைச் செம்மையாய் அறிவித்துவிட்டான் மாமன்னன் இராசராசன். தஞ்சை மக்களும் அதை உணர்ந்து பின்பற்றிக் கொண்டார்கள்.

அதனால் கட்டிய வரலாற்றைத் தாண்டி, கட்டுக்கதைகள் நுழையாத கோயிலாய் நிமிர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

தொல்காப்பிய வழியில் இயலை அணுகியபோது சட்டென்று என் மனதில் தோன்றிய கருத்து, நண்பருக்காக இசை குறித்து தொல்காப்பியத்தை அணுகிய போது அண்மையில் முழுமை பெற்றது.

தொல்காப்பியம் அறிவோம். பயன் பெறுவோம்.