Tuesday 14 April 2020

ஊர் போய் சேர்ந்து விட்டீர்களா?


அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.
காற்று இரண்டு நாள்களில்
கடந்துவிடும் நெடுந்தொலைவில்,
ஓடுகள் உதிர்ந்து கிடக்கும்
அவள் வீட்டு முற்றத்தில்
பெரியதாய் ஓர் இலந்தை மரம் உண்டு.
அதனடியில் ஆடிய நினைவுகளைத்
தலையில் சூடி,
கற்பனைக் குளிர்ச்சிக்குள்
காலெடுத்துவைத்து நடக்கிறாள்.
முன்னே,
செருப்பணிந்து சென்றவர்களால்
தேய்ந்து கிடக்கிறது சாலை.
மரங்களற்றப் பெருவழியெங்கும்
நிலம் சேர்ந்து கிடந்தான்
கதிரவன்.
கைக்குள் கிடந்த குழந்தை
நாவறண்டு மார்புதீண்ட,
இல்லாத நிலையறிந்தத்
தாயுள்ளம் ஏங்கியழ,
கண்கள் பனித்து,
காயும் முன் குழந்தையின்
வாயில் விழுந்தன
கண்ணீர்த் துளிகள்.
தாகம் தீர்த்தத் தாய்முகம் பார்த்துச்
சிரித்தது குழந்தை.
அவள் இன்னும் அழுதாள்.

Wednesday 8 April 2020

இப்பொழுதேனும் சொல்லிவிடு கண்ணே



"இன்னும் சில நிமிடங்களில் கிளம்பிவிடப் போகிறேன் கண்ணே. இப்போதேனும் சொல்லிவிட மாட்டாயா?" முருகனின் மனதுக்குள் ஏக்கம் மிகுந்து..  பொற்கொடியைப் பார்த்தான்.

வண்டிச் சாவியையும், தலைக் கவசத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்.  அவன் இப்பொழுது கிளம்பிவிடுவான் என்பது பொற்கொடிக்கும் தெரியும். அவனது பார்வையில் இருக்கும் "அந்த" ஏக்கமும் அவளுடைய பதிலை எதிர்பார்த்துத் தத்தளிக்கும் அவனது உள்ளமும் அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்வாள். அப்பாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. அம்மாவுக்கும் உடல் நிலை அத்தனைச் சரியாக இல்லை. அப்பாவிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். அம்மா... கேட்கவே வேண்டாம்.

Sunday 5 April 2020

முற்றாக் காதல் - நல்லந்துவனார்



உலகின் பெருநகரமொன்று சுறுசுறுப்படைந்தது. கதிரவன் மேலேறிவிட்டான். வணிகர்கள் கடைதிறந்து, கொள்வோர் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அங்கிருந்து சில கல் தொலைவில் பரங்குன்றில் முருகனுக்கு ஏதோ விழாவெடுக்க மக்கள் குழுமத் தொடங்கினார்கள். கூடல் நகருக்கும் பரங்குன்றிற்கும் நடுவே இருந்தச் சிற்றூர் ஒன்றிலிருந்து குயிலி தன் தோழிகளுடன் திருப்பரங்குன்று நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

செல்லும் வழியெல்லாம் பூஞ்சோலைகளாக இருந்தன. தேனூறும் பூக்களைத் தேடி வண்டுகள் அங்குமிங்கும் பறந்தவண்ணம் இருந்தன. இடையிடையே தேனீக்களும் பறந்தன. அவை எழுப்பும் ஒலிகள் ஏழு துளைகள் கொண்ட குழலும், ஐந்து துளைகள் கொண்ட குழலும் இயைந்து ஊதுவதுபோல் இருந்தன. இடையிடையே வீசிய மெல்லிய காற்றில் காந்தளின் மணம் நிறைந்திருந்தது. பலவிதமான மலர்கள் பூத்துக் குலுங்க நடையின் சலிப்பு அறியாது பரங்குன்று வந்து சேர்ந்தார்கள் மகளிர். நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது.

Saturday 4 April 2020

மலர்ச்சோலை அழுதது - ஔவையார்



தன்னிழல் தன்னடி ஆகும் வேளையில் வீட்டிலிருந்து கிளம்பி ஊரெல்லையில் இருக்கும் அழகிய சோலைக்கு வரச் சொல்லியிருந்தான் மத்தி.  உச்சி கடந்து ஒருநாழிகை ஆகும் போது தானும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். 

வீட்டு வாயிலில் அமர்ந்து முற்றத்தில் நின்று கொண்டிருந்த புன்னை மரத்தைப் பார்த்துக் கொடிருந்தாள். அதன் நிழல் மரத்தை ஒட்டி கீழே  இருந்த கேணியில் முழுவதுமாக விழும் வரைக் காத்திருந்தாள். அருகே தென்னை ஓலையில் உணக்குவதற்காக வைக்கப் பட்டிருந்த மீன்களைக் காகம் ஒன்று எடுத்துச் செல்வதில் கூட அவள் கவனம் செல்லவில்லை. விழி மூடாது கேணியையே பார்த்திருந்தாள். ஒருவழியாக அந்த நொடியும் வந்தது. வேளை உச்சிப்பொழுது என்பதை உணர்ந்தாள். உள்ளே ஓடிச் சென்று ஓலைப் பொதியில் வைத்திருந்த சுட்ட திருக்கைத் துண்டங்களை எடுத்துக் கொண்டு மெல்ல வெளியே ஓடினாள். வீட்டின் பின்புறமிருந்து படலை விலக்கிக் கொண்டு "கயற்கண்ணீஈஈ.. என்றழைத்த அம்மாவின் நீளமான குரல் கூட அவள் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை.

Friday 3 April 2020

சண்டையிடக்கூட அன்பு வேண்டும் - அள்ளூர் நன்முல்லையார்



சேந்தன் மனதில் பெரும் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். பளிங்கு போல் நீர் மெல்ல ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றில் கால்கள் இரண்டும் இளைப்பாறிக் கொண்டிருந்தன. தங்கத்துகள்கள் போல் மின்னும் மணல், நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது. வண்ணங்களின்றிக் கண்ணாடியில் செய்ததுபோல் இருந்த அவை மெல்ல அவனது கால்களில் இருந்த அழுக்கையும், ஊறிக்கிடந்த இறந்த தோல் செதில்களையும் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவன் அதையெல்லாம் உணர்ந்தானில்லை. எப்படியேனும் கொமரி,  கடநங்கையிடம் ஏதாவது எடுத்துச் சொல்லி அவளை அமைதிப் படுத்தியிருப்பாள். ஒருவேளை கடநங்கை உடன்படவில்லை எனில் என்ன செய்வது? செய்த தவற்றின் பொருண்மை இப்பொழுதான் அவனுக்கு உறைக்கத் தொடங்கியது.

Thursday 2 April 2020

நண்டிடம் சிக்கிய நாவல்பழம் - அம்மூவனார்



முடிநாகன், பேரியாற்றங்கரை முசிறியிலிருந்து மாந்தை நகருக்கு வந்து பதினேழு ஆண்டுகள் ஓடிவிட்டன. மன்னன் குட்டுவன் கோதையின் தம்பி கேட்டுக் கொண்டதற்கு இணங்க துணைவியையும் ஒன்றரை வயது மகள் இளவெயினியையும் அழைத்துக் கொண்டு மாந்தைக்கு வரவேண்டியதாயிற்று. முசிறியைப் போன்ற ஆற்றுத் துறைமுகத்திற்கும் மாந்தையைப் போன்ற கடலடித் துறைக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. அவர் சிறுவனாக இருந்த போதே முசிறி உலகறிந்தத் துறையாக இருந்தது. அன்று மாந்தை, சிறுதுறைதான். செங்கடல் வணிகம் சிறக்க இன்னொரு பெருந்துறை வேண்டிவந்ததால் மாந்தையை வளமாக்கும் பணியில் மன்னன் ஈடுபாடு கொண்டான். மாந்தையும் வளரத் தொடங்கியது. கூடவே இளவெயினியும்.

இன்று சீனத்திலிருந்து மீன்பிடி வலைகளைச் சுமந்து வரும் பெருங்கலமொன்று வந்து விடும். அதிலிருந்து இறக்கும் வலைகளை எண்ணி முத்திரையிட்டு சுங்கம் பெற வேண்டும். எப்படியாகினும் உச்சிப்பொழுது தாண்டிவிடும். உணவுக்கு வீட்டுக்கு வருவதை விட எடுத்துச் செல்வதே சிறப்பென்று தோன்றியது. 

Wednesday 1 April 2020

என்னுள் பெய்த உவகை - கபிலர்


நல்மான்கோம்பையின் சிறிய தெருக்கள் கதிரவனின் மெல்லிய மஞ்சள் வண்ணக் கீற்றில் குளிக்கத் தொடங்குகின்றன. தாயங்கண்ணி மாடுகள் அடைபட்டிருக்கும் பட்டியை மெதுவாகத் திறந்துவிடுகிறாள். தமையன் அவற்றை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வான். தலைநிமிர்த்தி மேற்கே பார்க்கிறாள்.  வானமலை செம்மஞ்சள் பூசி நிற்கிறது.

"இன்றேனும் அவன் வந்து விடுவானா? இல்லை பொழுது கடந்து போய் விடுமா?" அவள் மனதில் மெல்லிய கவலை எழுந்தது. குடிலை நோக்கி நடக்கலானாள்.
"எனக்குத்தான் மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது. ஆனால், அவளுக்கு அந்தக் கவலை சிறிதும் இல்லையே. எந்த வருத்தமும் முகத்தில் இன்றி இருக்கிறாளே. இன்று கேட்டுவிட வேண்டும்" என்று எண்ணியபடி குடிலுக்குள் நுழைந்தாள்.