Friday, 29 June 2018

வடு...

வடு என்றால் தழும்பு என்று பொருள் தருகின்றன அகராதிகள்.அதாவது காயமோ அல்லது புண்ணோ நன்றாக ஆறியபின் அது ஏற்படுத்தும் தழும்பையே வடு என்கின்றன. நாமும் அந்தச் சொல்லை அதே பொருள்பற்றியே சொல்லிவருகிறோம். ஆனால் வள்ளுவர் மட்டும் எப்படி ஆறாத வடு என்று சொல்லிப் போந்தார்? என்றச் சிந்தனையோடு நாம் வகுப்பறைகளிலும், மேடைகளிலும் அடிக்கடி கேட்ட, மிக எளிதாய் மனதில் நிறுத்திவைத்திருக்கிற ஒரு குறளைத் தேடிப்போனேன்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

என்றக் குறள்தான் அது. தீயினால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். தீய சொற்களால் ஏற்பட்ட புண் ஆறாது. என்ற எளிய விளக்கமே போதுமானதுதான். சொல்லப்போனால் திருக்குறளில் காணப்பெறும் எளிமையான குறள்களில் இதுவும் ஒன்று. ஆனால் "ஆறாதே வடு"  என்பதுதான் இந்தக் குறளுக்குள் நம்மை இழுத்து மூழ்கடிக்கிறது. சொல்விளக்கம் அதிகம் தேவைப்படாத குறள் இது.


உடம்பில் நெருப்புப் பிடித்து தீக்காயம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நெருப்பு சுடுகிறபோது பெரும் வேதனையைத் தரும். புண்ணாகும். புண்ணின் அளவைப் பொறுத்து மருந்திட்டோ அல்லது இயல்பாகவோ அந்தப் புண் ஆறிவிடும். சில வேளைகளில் தீக்காயமும் வடுக்களை ஏற்படுத்தும். தீ திசுக்களை எரித்து தீய்த்துவிடுகிறபோது பெருங்கொடுமையை அது ஏற்படுத்தும். அதனால் உண்டாகும்  வடுவோ அதனினுங் கொடுமை. நாம் இதை நிறையப் பார்த்திருப்போம். எனில் தீயினாற் சுட்டாலும் வடு வரலாம். ஏனெனில் ஆறிய புண் தான் வடு.

நாம் ஒருவரை கடுஞ்சொல்லால் தாக்கிவிடுகிறோம். அது அவரது உள்ளத்தில் புண்ணை உண்டாக்கி விடுகிறது. அந்தப் புண் ஆறாது என்று வள்ளுவர் சொல்லியிருந்தால் இன்னும் எளிதாய் இருந்திருக்குமே. ஆனால் அவரோ வடு என்கிறார். அப்படியென்றால் நாவினாற் சுட்ட இந்த வடுவும் ஆறித்தானே போயிருக்க வேண்டும்.

நான் குறளுக்கு உரையெழுதும் நோக்கில் வரவில்லை. குறள் என்பது ஒரு பேரறிவுவாழ்க்கையின் சாறு என்று உணர்கிறேன். அந்தச் சாற்றை பிழிந்தெடுக்க வள்ளுவர் பயன்படுத்தும் சொல்லாட்சியைக் கண்டு பெருவியப்போடு நிற்கிறேன். அந்த வியப்பின் துளிகளை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே. இப்பொழுது குறளுக்குள் போகலாம்.

நமக்குத்  தீயினால் எற்பட்ட வடு இருக்கிறது என்று கொள்வோம். அந்தத் துன்பம் நிகழ்ந்து ஆண்டுகள் பலவும் கடந்துவிட்டது. இப்பொழுது தீப்புண் ஏற்பட்ட அன்று நாம் அடைந்த வலியை, வேதனையை அப்படியே மீண்டும் நினைவு படுத்திவிட முடியும் என்று எண்ணுகிறீர்களா? கடினம் தான். இது உடலியற்கை. அந்த வடு வெளியில் தெரிந்தாலும் நம்மால் முற்றுமுழுதாக அந்த வலியை மீட்டுணர முடியாது. உள்ளத்தில் அந்த வலியின் பொருண்மை குறைந்துவிடும் அல்லது இல்லாமலேயே போய்விடக்கூடும். ஆம், தீப்புண் ஏற்படுத்திய புண்ணின் வலி "உள்ளாறும்".

ஒரு கடுஞ்சொல்லோ, பழிச்சொல்லோ, சிறுசொல்லோ நம்மைக் காயப்படுத்தும் போது அந்தப் புண் உள்ளத்தில் உண்டாகிறது. தீயினால் உடம்பில் காயம் ஏற்படும் போது, காயம்பட்ட இடத்தைத் தவிர ஏனைய உறுப்புகள் அதனதன் வேலைகளைச் செய்துவிடும். அதில் பெருந்தடங்கல் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் உள்ளம் புண்ணாகிறபோது மொத்த உடலுமே தன்னிலை தடுமாறக்கூடும். காலம் ஒருவேளை அதை மறக்கச்செய்யலாம். ஆனால் எப்பொழுதேனும் அந்த நினைப்பு வரும் போதோ அல்லது சொன்னவரைப் பார்க்க நேரும்போதோ மீண்டும் அதே வலி நம் உள்ளத்தில் எழும். சிலருக்கு வலி மிகும்.

விந்தையைப் பாருங்கள். புண் நம்மிடம் இருக்கிறது. வடு இன்னொருவராய் அல்லது இன்னொரு சொல்லாய் இருக்கிறது. தீ ஆயுதமாகும் போது வடு அந்த ஆயுததின் மீது படிவதில்லை. ஆனால் நாக்கு ஆயுதமாகும் போது, புண்பட்டவரை விடுத்து வடு ஆயுதத்தின் உரிமையாளர் மீதே படிந்துவிடுகிறது. அந்த வடுவைப் பார்கிற போதெல்லாம் அல்லது எண்ணுகிற போதெல்லாம் காயம்பட்டவருக்கு வலி ஏற்படுகிறது. ஆம் உடலில் ஏற்பட்ட வலியை உள்ளம் மறக்கலாம். உள்ளம், தானே கொண்ட வலியை எப்படி மறக்கும்?

நினைவிற்கொள்ளுங்கள்.அடக்கமுடைமை அதிகாரத்தில் வரும் இந்தக் குறள் காயம் பட்டவருக்காகச் சொல்லப் பட்டதில்லை. காயப்படுத்துபவருக்காகச் சொல்லப்பட்டது. யாரையும் சொற்களால் காயப்படுத்தாதீர்கள். வள்ளுவர் சொல்கிற வடுக்களைச் சுமந்து திரியாதீர்கள். பெருமை கொள்வதற்கு அவை விழுப்புண்களல்ல.
----------------------------------------------------

சில செய்திகள்

நாவலர் சோமசுந்தர பாரதியார்  உரை செய்கிறபோது "ஆறுதல் வடுவின் தன்மையன்று. புண்ணின் தன்மையே. ஆகவே ஆறாது என்று கொள்ளாமல் மாறாது என்று கொள்ளவேண்டும். நாவினால் சுட்டு அதனால் உண்டாகிய புண் ஆறியும் வடுவானது மாறாது நிலைத்திருக்கும். இதை நோக்கியே மாறாது என்றார் வள்ளுவர்".. இவர் உள்ளாறும் + மாறாதே என இக்குறளைப் பிரித்து நாவினால் சுட்ட வடு (தழும்பு) 'எப்பொழுதும் மாறாமல் நிலைத்திருக்கும் எனப் பொருள் கண்டுள்ளார். மற்றவர்கள் உள்ளாறும் + ஆறாதே எனப்பிரித்து உரை கண்டிருக்கிறார்கள்.


----------------------
வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிய உரையில் இக்குறளில் ஒரு பாடபேதம் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். 

"தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
வாயினாற் சுட்ட வடு. 

வாயினாற் என்பது எதுகையும் மோனையும் ஒத்துத் தொடையின்பம் பயத்தல் காண்க. அன்றியும், வாய் என்பது ஆசிரியர் அடிக்கடி வழங்கும் சொற்களில் ஒன்று. ஆகலான், "வாயினாற்" என்பதே ஆசிரியர் பாடம் எனக்கொள்ளப் பட்டது."
வ.உ.சி,  ஆசிரியர் என்று குறிப்பிடுவது வள்ளுவரை.

---------------------------
மொழிஞாயிறு தேவனேயப் பாவாணர் மரபுரையில் "சூடிடுதல் சில நோய்க்கு மருந்துமாகலின், சுடுசொல் இருவகியில் தீயினுங்கொடியதாம்". என்கிறார்.
 -------------------------------

குறள் படங்கள்

Wednesday, 27 June 2018

பிரிவுத் துயரம்

பொருளாதாரத்தின் துரத்தலில் வெகுதூரம் ஓடி வந்துவிட்டோம். உறவுகள் திசைக்கொன்றாய்ச் சிதறிப் பிரிந்துகிடக்கிறார்கள். சித்தி,சித்தப்பா, மாமா, அத்தை என்றக் குருதிச் சொந்தங்களின்றி வாழுகிற குழந்தைகளையும் பெற்றாகிவிட்டது. முதியோர் இல்லங்களும், குழந்தைகள் காப்பகங்களும், மனநல நடுவங்களும் நாம் ஓடிய ஓட்டத்தில் தோற்றுப்போனதன் அடையாளங்களாக எழுந்து நிற்கின்றன. நம் கடிகாரத்தின் முட்கள் காலக்கணக்கைச் சொல்வதை விடுத்துப் பொருட்கணக்கைப் பேசிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பகல் நமக்கு இரவு என்ற ஒரே காரணத்திற்காக அயனாவரத்தில் நள்ளிரவு குளித்துக் கிளம்புகிற இளஞனைப் பார்க்கையில் பொருளாதாரம் படுத்தும் பாடு புரிகிறது.

பணம், பொருள், வீடு, நகர வாழ்க்கை, நாகரிக உடைகள், பல நாட்டு உணவுகள், இணையத்தில் விளையாட்டு, கைப்பேசியில் திண்ணைப் பேச்சு என பொருளாதாரம் புரட்டிப் போட்ட வாழ்க்கையில் பரண் மீது தூக்கி வீசப்பட்டன பல்லாங்குழிகளும் பல உளுத்துப்போன உள்ளங்களும். இந்த உள்ளங்களில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மனைவி என எல்லோரும் இருக்கிறார்கள். அப்படி ஒரு உள்ளத்தின் அழுகுரலைத்தான் இன்று வள்ளுவர் வாய்மொழியாகக் கேட்கப் போகிறோம்.

காமத்துப்பாலின் கற்பியலில் பிரிவாற்றாமை அதிகாரத்தில் வரும் குறள் இது.

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு  உரை. 

மணமுடித்து சில நாட்களில் வேலை மற்றும் பொருள்தேடிப் பிரியப் போவதாய்ச் சொல்லும் கணவனிடம் மனைவி சொல்வதாய் வள்ளுவர் சொன்னக் குறள் இது.

"செல்லாமை"  என்றால் கண்டிப்பாக எக்காலத்திலும் பிரிந்து செல்லாமல் இருப்பது என்று பொருள். தற்காலம் பிரியாமல் பிறிதொரு நாள் பிரிவேன் என்றால் "இப்பொழுது செல்வதில்லை" என்றப் பொருள் தரும் சொல்லை வள்ளுவர் எடுத்தாண்டிருப்பார்.

"உண்டேல்"  என்றச் சொல்லாடல் ஆழம் மிகுந்தது. அது மிகத் தெளிவாய் ஒற்றைப் பொருள்பற்றி நிற்கிறது. செல்லாமை என்பதே இறுதிப் பொருள் தரும், அதை இன்னும் உறுதி செய்ய "உண்டேல்" என்கிறார்.

"செல்லாமை யுண்டேல் எனக்குரை"  என்னைப் பிரிந்து செல்வதில்லை என்றால் என்னிடம் சொல் என்று துணை தன் இணையிடம் சொல்கிறாள்.

அடுத்துவரும் "மற்றுநின்" என்றத் தொடர்வழி பெண்ணின் உள்ளத்தை எத்துணை நுட்பமாக பேராசான் சொல்கிறார் பாருங்கள். நீ பிரிந்து செல்வதில்லை என்பது எனக்கானது, அதைவிடுத்து மற்ற எதுவாயினும் அது என்னுடையது இல்லை என்று துணையின் உள்ளவேட்கையைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லும் மிகநுட்பமான சொல்லாட்சி இது.

"வல்வரவு"  என்பது அடுத்த சொல். மிகவிரைந்து வருவது எனப் பொருள் தரும். வேலைமுடித்து திரும்பி வருவதற்கான அத்தனைத் திட்டங்களும் தீட்டியாகிவிட்டது. கணவன் சொன்ன நாளில் திரும்பி வந்துவிடுவான். ஆனாலும் மனைவி என்ன சொல்கிறாள்?

"வாழ்வார்க்கு உரை"  என்கிறாள். நீ திரும்பி வரும்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் போய் உன் வல்வரவைச் சொல் என்கிறாள்.

செல்வதில்லை என்றால் என்னிடம் சொல்  அதுவன்றி விரைந்து திரும்பி வருவேன் என்பதை நீ வரும் வரை வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் சொல் என்கிறாள் துணை. அப்படியெனில் கணவன் திரும்பி வரும் போது அவள் உயிருடன் இருக்கமாட்டேன் என்கிறாளா?

இங்குதான் பேராசான் கோடி கோடிப் பெண்களின் குரலாய் ஒலிக்கிறார்.

மணம் முடித்தவுடன் தனிக்குடித்தனம் என்பது பண்டைய தமிழ் மரபு.  அவர்கள் தங்கள் உள்ளத்தாலும் உடலாலும் அறிந்து, தெரிந்து நல்வாழ்க்கையும், நன்மக்கட்பேற்றையும் பெறவேண்டி இந்த மரபு தமிழர்களால் பின்பற்றப் பட்டது. தமிழின் இலக்கியச் செல்வங்களில் இது காணக்கிடைக்கிறது.  அது மட்டுமல்ல, இயற்கையின் பெருவிதியும் அதுதான். இயற்கை எப்பொழுதும் தன் இயல்பு மாறாமல் இயங்கிக்கொண்டே  இருக்கிறது.  அதன் இயக்கத்தில் உயிர்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குருவிகளும், குரங்குகளும் இணையோடு இருப்பதையே எப்பொதும் காண்கிறோம். இது விலங்காய்ப் பிறந்த மாந்தனுக்கும் பொருந்தும். இயற்கையின் உந்துதலில் இணையென்பது கட்டாயமாகிறது. இதை அந்தப் பெண்ணின் வாய்ச் சொல்லால் உணர்த்த நினைத்த வள்ளுவர் "வல்வரவு வாழ்வார்க்கு உரை" என்கிறார்.

கணவனுடைய அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் இவர்களையே "வாழ்வார்கள்" என்று சொல்கிறாள் அந்தப் பெண். அவன் வேறு ஊரிலோ, நாட்டிலோ இருந்து ஈட்டும் பொருள், பணம் இவற்றை அவர்கள் துய்த்து இன்பம் பெற்று வாழ்கிறார்கள். அப்படி என்றால் இவளுக்கு அவையெல்லாம் கிடைக்கவில்லையா?

கிடைக்கிறதே. ஆனாலும் அவள் ஏன் தான் வாழவில்லை என்கிறாள். அம்மா, அப்பா, உடன்பிறந்தார் இவர்களால் துய்த்து இன்பம் பெற முடியாத, அவள் மட்டுமே துய்த்து இன்பம் பெற முடிகிற ஒன்று அவள் இணையிடம் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. அது செய்பொருளன்று. இயற்கையின் விதி. அதை அவளால் எங்கனம் மாற்றிவிட முடியும்.

இது போதாதென்று அவன் பேசிச் சென்ற சொற்கள், அவன் மெய்த்தீண்டல், அவன் கைப்பிடிக்குள் அடங்கிய கொல்லேறு என பார்க்கும், எண்ணும் பொருளனைத்தும் உள்ளத்தை நலிவடையச் செய்யும். அதனால் தான் அவள் வாழவில்லை என்கிறாள். எத்துணை ஒப்புரவாக வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள்.

காமம் அத்தனைக் கொடியதா என்ன? என்று நமக்குள் கேள்வி வரலாம். ஆனால் இயற்கை பெரியது. அந்த இயற்கையைப் பொருள்தேடலின் பொருட்டு மறுதலிப்பதை வள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை போலும்.

அதனால்தான் இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண்கள் கூடச் சொல்லத் தயங்குவதை, உள்ளத்தில் வைத்துக் கொண்டு உளுத்துப் போவதை ஒரு பெண்ணின் வாய்மொழியாய் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்திருக்கிறார் வள்ளுவர்.

பிரிந்துசென்றக் கணவனோடு பேச்சுத் தொடர்பு இல்லாத காலம் அது. அவனது சொற்களும் நினைவுகளும் மட்டுமே இருந்த நிலையில், உள்ள வேட்கை நாட்படக் குறைந்துவிடக் கூடும். உடல் வேட்கையை வெற்றிகொள்ள அது உதவக் கூடும்.

இன்றோ, தொடுதிரைக் கணினிகள், கையடக்கத் திறன் பேசிகள், நேருக்கு நேர் காணொளி உரையாடல்கள், வரவேற்பறையில் நாளெல்லாம் ஒளிரும் தொலைக்காட்சி, இணையம் என்று உள்ளவேட்கையை மறக்கடிக்க முடியாத சூழல். தொடுதிரையில் துணையின் கண்ணீரைக் காணலாம். துடைத்துவிட முடியாது. உலகத்தை முழுவதும் இணைக்கிற இணையத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. கைபேசியைத் தொட்டுப் பேசலாம். கையைத் தொட்டுப் பேசமுடியாது.

பொருள் கட்டாயம் தான். ஆனால் வாழ்க்கை அதைவிடக் கட்டாயமானது.

வள்ளுவர் சொல் கேட்போம். பெண்களை, அவர்களின் உள்ளத்தை, உணர்வை மதிப்போம்.
-------------------------------------------------

பதிவின் காணொளி கீழே இணைப்பில்

பிரிவு கொடிது

Tuesday, 26 June 2018

பொய்யாமை என்னும் அறம்

ஓசை நயத்தோடு உள்ளத்தில் பதியவைப்பதற்காக இந்தக் குறளை இப்படிப் படித்திருப்போம்

"பொய்யாமை பொய்யாமை ஆற்றின்...
அறம்பிற -
செய்யாமை செய்யாமை நன்று"

இப்படிப் படித்ததால் அதன் பொருள்குறித்த ஒரு மயக்கத்தோடு, "அது எப்படி வள்ளுவர் அறத்தைச் செய்யவேண்டாம் என்று சொல்லியிருப்பார்" என்றக் கேள்வியோடு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். வாழ்க்கையில் நான் கடந்து வந்திருக்கிற ஐம்பது ஆண்டுகளும், சந்தித்த மனிதர்களின் பண்புகளும், குறளுக்கு உரையெழுதிய அறிஞர்களும், வள்ளுவரின் சொல்வன்மையும் கொடுத்தப் பட்டறிவு இந்தக் குறளைப் படிக்கிற முறையை எனக்குக் கற்றுத்தந்தது. அது...

"பொய்யாமை...
பொய்யாமை ஆற்றின் அறம்."

"பிற செய்யாமை...
செய்யாமை நன்று"

இப்பொழுது மடல் பிளந்தத் தென்னம்பூவின் மணிக்குருத்தாக இந்தக் குறளின் பொருள் வெளிப்படுவதைப் பாருங்கள்.

"பொய்யாமை"

பொய்யாமை என்பது ஒரு நற்பண்பு. பொய் சொல்லாமல் வாழ்வது. நிறைய பேரிடம் இந்தப் பண்பு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், வள்ளுவர் இந்தக் குறளிலே "பொய்யாமை" எனும் அந்த நற்பண்பை எப்படி அறமாகச் செய்வது என்று கற்றுத் தருகிறார்.

" பொய்யாமை ஆற்றின்"

பொய்யாமை எனும் இந்த நற்பண்பை, பொய்யாமை எனுஞ் செயல் வழி ஆற்றவேண்டும் என்கிறார் வள்ளுவர். நாம் இந்தப் பண்பு நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனாலும் நிறைய நிலைகளில் நாம் சிறு சிறு பொய்களைச் சொல்லிவிடுகிறோம். நான் அப்படியெல்லாம் இல்லையென்று யாரேனும் சொல்லக்கூடும். ஆனால் அது உண்மைதானா?

எங்கோ சாலையில் நடந்துகொண்டிருக்கிறபோது, எதிரே வந்து "ஐயா" என்று கைநீட்டும் இரப்போரிடம் இல்லையென்பது போல் தலையாட்டிவிடுகிறோம். அல்லது சில்லறையில்லை என்று சொல்லிவிடுகிறோம்.  வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு வெளியே நிற்கும் இரப்போரிடம் "கை வேலையாய் இருக்கு" என்று சொல்லிவிடுகிறோம்.

குழந்தைக்கு நாளைக்குப் பள்ளிக் கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது என்று உதவி கேட்கிற ஒரு முகமறிந்த மனிதரிடம் "என்ன நீங்க, இதெல்லாம் ரெண்டு மூணு நாளைக்கு முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?" "இன்னைக்கு காலையில் தான் இன்னொருத்தருக்குக் கொடுத்தேன்" என்று சொல்லி விடுகிறோம். ஒருவேளை அவர் திருப்பித் தராமல் போய்விடுவாரோ என்ற அச்சம் நமக்கு. ஆனால் நாம் யாருக்கும் தீங்கு செய்கிற விதமாய்ப் பொய் பேசியதேயில்லை. நடந்த உண்மைகளை மறைத்ததும் இல்லை. இது நற்பண்பு மட்டுமே. பொய்யாமை என்கிற இந்த நற்பண்பினை எந்த நிலையிலும் பொய்யின்றி ஆற்றவேண்டும். அப்பொழுதுதான் அது அறமாகும்.

நன்றாகப் பாருங்கள் வள்ளுவர் "செய்யின் அறம்" என்று சொல்லவில்லை.  "ஆற்றின் அறம்" என்கிறார். ஆற்றுதல் என்ற இந்தச் சொல் அத்தனை மதிப்பு மிக்கது. தன்னலமின்றி, பிறர்க்கென, பிற உயிர்களுக்கெனச் செய்வதை அதையும் வலிந்து செய்யாமல் தன்னியல்போடு ஒன்றைச் செய்தலை "ஆற்றுதல்" என்கிறது தன்னேரில்லாத தமிழ். இப்பொழுது பொய்யாமை...பொய்யாமை ஆற்றின் அறம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சரி. இப்படி இருந்துவிட முடியுமா?  நம்மிடம் யாரேனும் பொருள், பணம் என்று ஏதேனும் உதவி கேட்டால் பொய்யாமை பற்றிநின்று நாம் எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடுமே. இதை ஏன் வள்ளூவர் நம்மிடம் சொன்னார் என்று எண்ணி மயங்கவேண்டாம். இந்தக் குறள் துறவறவியலில் வருகிறது. இந்த அறம் துறவிகளால் கடைப்பிடிக்கப்படவேண்டியது என வள்ளுவர் சொல்கிறார். இல்லறத்தானால் கடைப்பிடிக்க முடிந்தால் தவறொன்றும் இல்லை. ஆனால் துறவிகளுக்குப் பொய்யாமை அறமாக இருக்கவேண்டும் என்கிறார் ஐயன். துறவறத்திலிருப்பவரிடம் செல்வம் இருக்கப் போவதில்லை. இன்றைய துறவிகள் எப்படி என்று என்னைக் கேட்காதீர்கள். வள்ளுவர் சொல்கிற துறவி முற்றுந் துறந்தவர். பொருட்செல்வத்தின் மீது பற்று இல்லாதவர். உட்கார்ந்திருக்கும் ஓரடி நிலம் கூட தன்னுடையதில்லை என்று உணர்ந்தவர்.

சரி. இத்தனை துறந்த துறவி பொய்யாமை என்னும் பண்போடுதானே இருப்பார். அவரிடம் போய் ஏன் இதை பொய்யாமை ஆற்றின் என்று சொல்கிறார் வள்ளுவர். பொருள் மீது பற்றில்லாதவர் எங்கே பொய் சொல்லிவிடப்போகிறார்.

ஒரு துறவியிடம் அவரைச் சார்ந்து ஒழுகும் ஒரு சீடன் " ஐயா நானும் இத்தனை ஆண்டுகளாகத் துறவுபூண்டு  உங்களோடு அலைந்து கடவுளைக் காணத் துடிக்கிறேன். இன்னும் முடியவில்லை. ஆதலால் நாளையே நான் என் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வதாய் வைத்துக் கொள்வோம். அதற்கு அந்தத் துறவி "இல்லை சீடனே, இன்னும் கொஞ்சநாட்களுக்கு இந்தத் துறவு வாழ்க்கையத் தொடர்ந்து வா." என்று அவன் அவன் உயிர்விடுவதைத் தடுக்கும் முகமாகச் சொல்கிறார். இப்பொழுது அவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்ற ஐயம் எழுகிறது. சீடன் தன் உயிரை மாய்த்துவிடக்கூடாது என்று அவர் அப்படிக் கூறினால் அவரைப் பற்றற்றத் துறவி என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்ற ஐயமும் எழுந்துவிடுகிறது. அதனால்தான் பொய்யாமையை துறவிகள் பொய்யாமல் ஆற்றுவதே அறம் என்று வள்ளுவப் பேராசான் சொல்கிறார். சீடன் இறப்பதைப் பற்றிக் கவலை கொண்டால் துறவு கேள்விக்குறியாகிவிடும்.

இந்த அறத்தோடு மட்டும் இருந்துவிட்டால் போதுமா?

"பிற செய்யாமை"  என்று அடுத்துச் சொல்கிறார். துறவிகள் செய்யவே கூடாது என்று சொல்லப்படுகிற "செய்யாமைகளை" செய்யாமை நன்று என்கிறார். துறவிகளுக்குப் பழிசேர்க்கும் செய்யக்கூடாத செயல்களை செய்யாமலிருப்பதே நல்லது. அப்படியெனில் செய்யாமையைச் செய்கிறவர்கள் துறவிகள் இல்லை என்கிறார் பேராசான். துறவிகளில் நல்ல துறவி, கெட்டத் துறவி என்றில்லை. துறவி ஒருவர்தான். அவர் பொய்யாமையை அறமாகச் செய்வார், செய்யக் கூடாததைச் செய்யவே மாட்டார். இந்த இரண்டில் ஒன்றில் தவறினாலும் அவர் துறவியில்லை. எத்தனை எளிதான துல்லியமான அளவுகோலிது. இதைப் பயன் படுத்துவோம். மயக்கம் வேண்டாம்.
-----------------------------------------------------------

இதன் காணொளி கீழே இணைப்பில்

பொய்யாமை என்னும் அறம்

Monday, 25 June 2018

கசடற...

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."

தெரிந்த குறள்தானே இதிலென்னப் புதிதாய் என்று நிறுத்திவிடாதீர்கள். கொஞ்சம் இந்தக் குறளுக்குள் இறங்கி மூழ்கிப் பார்ப்போம்.

ஒற்றைச் சொல்லில் உலகளக்கிற சொல்லாளுமை வள்ளுவப் பேராசானுக்குக் கைவந்தக் கலை.  முதலில் "கற்க" என்று கட்டளை இடுகிறார். உயிரென இந்த உலகில் பிறந்தால் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டளைச் சொல் பயன்படுத்துகிறார். யானையாய் இருந்தாலும் தன் தடமறிந்து பயணம் செய்யக் கற்றிருக்கவேண்டும். இல்லையெனில் பருவ மாறுபாடுகளின் போது உணவுக்காய் பரிதவிக்கவேண்டி வரும். எறும்பாய் இருந்தாலும் மழை வருவதை அறிந்து உணவு சேகரிக்கக் கற்றிருக்க வேண்டும். புலிக்குட்டியும், பூனைக்குட்டியும் தம் பெற்றோரிடமிருந்து வேட்டையாடக் கற்றுக்கொள்வதைப் போல.

அப்படியெனில் "கற்றல்" என்பது "படித்தல்" அல்ல என்று விளங்கிவிடுகிறது. சரி நம்மிடம் வந்து ஒருவர் "கற்க" என்று கட்டளையிட்டால், உடனே  நாம் "ஏன் கற்கவேண்டும்?, எதற்காக" என்றெல்லாம் கேள்வி கேட்போம்.

அதற்கான பதிலை "கசடற" என்று இரண்டாவது சொல்லில் வைக்கிறார்.
"கசடு" என்றால்? ஒரு பொறுள்குறித்த உள்ளத்தின் ஐயப்பாடுகளே கசடுகள். பாலில் கொஞ்சம் மோர் ஊற்றி உறையவிட்டால் அது தன் நிலையை மாற்றித் தயிராகிவிடுகிறது. அதை நாம் கேட்டுப்போன பால் என்று சொல்வதில்லை. உறைந்து நிற்கும் தயிரைக் குடிக்க ஏதுவாக கடைந்து மோராக்குகிற போது, அதன் திடக்கசடு வெண்ணெய்யாய் வெளிவந்து மிதக்கிறது. வெண்ணெய்யை உருக்கி நெய்யாக்குகிறபோது, நெய்யுடன் கொஞ்சம் கசடு கீழே மிஞ்சுகிறது. நாம் பாலை அப்படியே குடிக்கிறபோது இந்தக் கசடுகளைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அவையெல்லாம் அதற்குள்ளே தான் இருந்துகொண்டிருந்தன.

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் போகும் போது ஐயப்பாடுகளை அதாவது கசடுகளை நீக்கிக்கொண்டே செல்லவேண்டியிருக்கிறது. அதனால் தான் கசடற வேண்டுமெனில் கற்க என்று பேராசான் கட்டளையிடுகிறார்.

வள்ளுவர் வாக்கினை ஏற்று நாம் கற்க ஆரம்பித்துவிட்டோம் என்று வையுங்கள், எதைக் கற்றுக் கொள்வோம்? அவரவர்க்கு எதில் ஐயப்பாடுள்ளதோ, எதன் கசடை அறுக்கவேண்டுமோ, எதில் அடுத்த நிலையை எய்தவேண்டுமோ அதைத் தானே கற்றுக்கொண்டிருப்போம். அதனால் தான் அதற்கான சொல்லை "கற்பவை" என்று அவரவர்க்கு உரியதாய்ப் பொதுமைப் படுத்துகிறார். ஏனெனில் வெண்ணெய் வேண்டுமென்று மோரைக் கடைந்து கொண்டிருப்பது வீண்வேலை. இது வள்ளுவருக்கும் தெரியும்.

சரி... ஐயம் தீரக் கற்றுக்கொண்டாகிவிட்டது. அவ்வளவுதானே என்று நாம் எண்ணுகிறபோது இந்தக் குறளின் முகாமையான சொல்லை நிறுவுகிறார் வள்ளுவர்.

"நிற்க"

நிற்க என்றால், ஏதோ ஒரு பக்கத்தில் நூலிழை சாய்ந்தாலும்கூட மண்ணில் பிடிப்பின்றி  நிற்கிற பொருட்கள் மண்ணின் ஈர்ப்புவிசையில் முழுதும் சாய்ந்து கீழே விழுந்துவிடும். செங்குத்தாக, அதாவது எந்தப்பக்கமும் சாயாமல் நிற்கிற பொருட்கள் விழுவதில்லை. கற்றபின், கசடறுந்து இப்படித்தான் , மறுபடியும் அந்த ஐயப்பாட்டின் மீது சாயாமல் "நிற்க", செங்குத்தாக ஐயமற நிற்க என்கிறார் வள்ளுவர்.

ஆனால், உடனடியாக ஒருவர் முற்றும் உணர்ந்தவராய் ஆகமுடியாது என்று தெரிந்துதான் "அதற்குத் தக" என்று முடிக்கிறார். அதற்குத் தக என்றால், எந்த ஐயத்திற்காகக் கற்றுக்கொண்டீர்களோ, அந்த ஐயம் அறுந்து அதற்குத் தக நிற்க என்கிறார்.


ஆனால், நமக்கு என்னச் சிக்கல் என்று பார்த்தோமானால் " வெள்ளைச் சர்க்கரை தீதோ?" என்று ஐயம் வந்துவிட்டது. உடனே  அதுபற்றி அறிந்து கொள்ள முனைகிறோம். அதில் கந்தகம், குளோரின் போன்ற வேதிப்பொருட்கள் எல்லாம் கலக்கப்படுகிறது என்று அறிந்துகொள்கிறோம்.  அறிந்தபின்னும் "நிற்க அதற்குத் தக" என்று நிற்காமல் போனோமே...

ஏனெனில் நாம் கற்கவில்லை. படிக்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------

இதன் ஒலிப்பதிவு

கசடற... ஒலிப்பதிவு


Sunday, 24 June 2018

காணவில்லை

விழிப்படைந்தேன்,
கனவுகளைக்
காணவில்லை.


Sunday, 17 June 2018

தருக்கம்

தருக்கத்தின் மீது வளர்ந்ததே மாந்த இனத்தின் வளர்ச்சி. தருக்கமின்றி எதைச் செய்கிறபோதும் அது அழிவை நோக்கியே நகர்ந்திருக்கிறது. எல்லா முடிவுகளும் தருக்கத்திற்குப் பின்னேதான் வெளியிடப்படவேண்டும்.

["35 ஆண்டுகளுக்கு முன் எனக்கு டைபாயிடு சுரம் என்று அறிந்த மருத்துவர், ஒரு நாளைக்கு 6 அமொக்சிசிலின் மாத்திரை கொடுத்து நோயைக் குணப்படுத்தினார். இன்றோ புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பின் கிருமித்தொற்று வராமலிருக்க மொத்தமே (ஒரு நாளைக்கு அல்ல) 5 அமொக்சிசிலின் மத்திரைக்கு மேல் கொடுக்கக் கூடாது என்கிறது மருத்துவம்." இது அறிவியல்.]

அறிவியல் பரிசோதனை சார்ந்தது. முடிவுரைப்பது அல்ல. ஆனால் தருக்கம் இயலிலிருந்து தோன்றுவது. இயல் என்பது கணக்கீடுகளல்ல. அது இருப்பது. தமிழரின் தருக்கவியல் உலகறிந்தது. அது கடவுளைக் கூட தருக்கத்திற்கு உட்படுத்தியது. எண்ணியக் கோட்படுகளும், ஆட்டைக் கணக்குகளும், உணவு முறைமையும், நோயறிதலும் அதனால்தான் தோன்றின.

"எப்பொருள்-
யார்-
யார் வாய்க் கேட்பினும்-
அப்பொருள்-
மெய்ப்பொருள்-
காண்பது-
அறிவு."

"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு"

"உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு."

தருக்கம் என்பது விவாதமல்ல.

தருக்கமின்றி எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

Sunday, 3 June 2018

என்று விழிப்பாய்...


வறண்டுபோன புற்களுக்கென்று

வானம் பொழிவதில்லை.

விதைகள் முளைக்கவேண்டுமென்று

வெயில் காய்வதில்லை.

களைகள் வளர்ந்ததென்று

மண் கவலைகொள்வதில்லை.

புலிகள் கொல்லாதிருக்கவேண்டி

மான்கள் பூசைகள் செய்வதில்லை.

ஆனை அழிக்கும் மரங்கள்பற்றி

ஆடுகளுக்கு அச்சமில்லை.

அடர்ந்திருந்த இயலுக்குள்

ஆறாமறிவு கூராய் நுழைந்ததனால்

கற்சிறை கசியும் நீர்போல் ஆசை

மெல்ல மெல்லவே இந்த

மேதினி அழித்ததடா

எண்ணியத்தில் திண்ணியராய்

இறுமாந்திருந்த மண்ணே

என்று விழிப்பாய்.