Monday 26 June 2023

மாரி செல்வராசு - மாமன்னன்

 


"தமிழ் திரைப்படங்களில் நகரத்தைக் குறித்து உருவாக்கும் கதைகளைக் குறித்து நான் நிறைய வருத்தப் பட்டிருக்கிறேன். அவங்க நகரமாகவே யோசித்து விடுகிறார்கள் அதை. எப்படிப் பார்த்தாலும் அதனுடைய வேரை, கிராமத்தை தவிர்த்துவிட்டு; இங்கேயே நகரத்தில் முளைத்த உயிர்னு ஒண்ணு இருக்கில்ல அதற்குக் கூட கிராமம் சாராத வாழ்வுன்னு ஒண்ணு இல்லவே இல்ல. ஏதோ ஒண்ணு,  ஏதோ ஒரு வேர் அங்கதான் இருக்கு."

அண்மையில் சுதிர் சீனிவாசனுடனான நேர்முகத்தில் இயக்குநர் மாரி செல்வராசுவின்  இந்தச் சொல்லாடல்களினூடே, கலையின் மீதான மிக நுணுக்கமான பார்வை கொண்ட படைப்பாளியை, அது தவறுகின்றபோதெல்லாம் வருந்துகிற கலைஞனை, சமூகத்தின் எல்லாப் பக்கங்களையும் காட்டிவிடத் துடிக்கிற எழுத்தாளனைக் காண முடிந்தது.

"இங்க நாம்ம ஒரு சைக்கோ திரில்லர் பண்றோம் இல்ல அதமாதிரி ஏதோ ஒண்ணு பண்றோம்னா, நாம பார்த்த ஐரோப்பிய சினிமாவின் மாதிரியிலேயே அத படமாக்குகிறோம். ஆனால் நம்ம சைக்கோ மனம் வேறு. நம்ம ஊர்ல ஒரு சைக்கோபாத், சோசியோபாத் இருக்கான்னா நாம அவன நம்ம உளக்கருத்தியலில் கையாள்வது கிடையாது. நாம ஐரோப்பிய மாதிரியாகத்தான் கையாள்கிறோம்."

"இங்க ஒரு சமூகமுரணி (Sociopath) உருவாகிறான் என்றால் அவனுடைய எல்லா படிநிலைகளும் நம்ம ஊரு வாழ்வியல் படிநிலைகள்தானே? அத கவனிக்கணும் இல்ல. ஆனா அத விட்டுட்டு நவீனப்படுத்துகிறோம் என்று வேற ஒரு உளக்கருத்தியலில் அத காட்டுறோம். நம்ம ஊர்ல இன்னும் அத மாதிரியான படங்கள் வரல. அது வரும் போது கிராமம் நகரம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் போய்விடும்."

"இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவனால கண்டிப்பா பின்னோக்கிப் போகாமல் இருக்க முடியாது. இங்கே எழுபது வயது வரை வாழும் ஒருவர் அவருடைய எழுபதாவது வயதிலாவது பின்னோக்கிப் பார்க்காமல், அவருடைய வேருக்குப் போகாமல் மரணத்தை அடைய மாட்டார் என்று நான் நம்புகிறேன்"

இப்படி தன்நேர்மையோடு சிந்தித்துப் பேசும் இந்தப் படைப்பாளியை வியப்போடு பார்க்கிறேன். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வணிக நோக்கும், திறமையும், அதற்கான பெருவாய்ப்பும், அதைச் செயல்படுத்தும் திறனும் கொண்ட நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் போதும், சமரசமின்றி இந்த நேர்மையை ஒரு படைப்பாளியாக மாரி நிறைவேற்றியிருப்பார் என எண்ணுகிறேன். வணிகத்தத் தாண்டி படத்தில் ஊற்றெடுக்கும் உண்மையின் விகிதம் தான் மாமன்னனா? மன்னனா? என்பதைத் தீர்மானிக்கும்.

வாழ்த்துக்கள் மாரி.
Saturday 24 June 2023

கண்ணதாசன் பிறந்தநாள் 2023

 பன்மொழிப்புலவர் அப்பாத்துரையிடம்
பணிவொடு கற்ற பைந்தமிழ் கொண்டு,
திரையிசைத் தென்றலில்
நறுஞ்சாந்து கலந்து,
தமிழ்நிலமெங்கும் தூவித் திளைத்தவன்.
 
சந்தத்தில் பெய்த
செந்தமிழ் மழையால்
சிறுகூடல்பட்டியை,
ஊரறிந்த பெருங்கடலாக்கியவன்.
 
சங்கத் தமிழின் சாறுபிழிந்து,
திரையிசை மெட்டுகளின்
கோப்பை நிரப்பியவன்.
 
கறுப்பு வெள்ளைத் திரையில்,
கற்கண்டுச் சொற்களால்
வண்ணங்கள் தீட்டியவன்.
 
கற்றோர் படித்துக்
களிக்கும் இலக்கியத்தின்
சொற்றொடர்கள் பிரித்தெடுத்து,
கல்லாதார் திண்ணைகளில்
சொக்கட்டான் ஆடியவன்.
 
ஆத்திகம் நாத்திகம்
இரண்டின் கரைதொட்டு
ஆறாக ஓடிய பெரும்பாவலன்.
 
எனக்கு,
இலக்கியத்தின் தாக்கோல்
இருக்குமிடம் சொன்னவன் நீ.
 
எந்தப்புறமும்
சுவர்கள் இல்லாத நூலகம் நீ
 
பாரதியைக் கம்பனை
இளங்கோவைப்
பதினெட்டுக்குள் பார்த்திடச்
செய்தவன் நீ.
 
கட்டித் தழுவுதலாற்
கால்சேரவேறுதலால்
எனக்
காளமேகம் வாய்பிறந்த
வரியைப் பிளந்தெடுத்து அந்த
வயதில் கொடுத்தவன் நீ.
 
சந்தத்தில் சொல்லடுக்கத்
தடுமாறும் போது
சில வேளை
சங்கதச் சொல் சேர்த்துப்
பாடி வைத்தாய்;
நல் வரப்பின் நடுவே
சிறு நெருஞ்சிபோலே.
 
நல்ல தமிழ்ப் பாட்டிடையே,
கல்லாரிடைகூடச்
செல்லாச் சொல்லும்
சேர்த்து வைத்தாய்;
பன்னாள் தேறல்
பானையில் வீழ்ந்து விட்ட
பாம்பின் விடம் போல.
 
என் செய்வேன்!
 
செந்நாப்போதார்
செய்து வைத்தக்
குறளறியுமுன்னே,
உன்னையறிந்தேனே
உளம் மறப்பேனா?

Sunday 11 June 2023

பெருவிழா சிறக்கட்டும்!!

 


பெ.ம எனும்

பெருநெருப்பின்

புன்னகையில்

என்னைத் தொலைத்த நொடி!

 

அவர்

அன்பெனும் பெருழையில்

என்னை மறந்த நொடி!

 

அந்தப்

புயலின் உசாவலில்

அயர்வு களைந்த நொடி!

 

இந்தப்

புயல் நடந்த

வரலாற்றின் பக்கங்களில்

நான்

எழுத்துப் பிழையாக

இடம்பெற்றாலும் மகிழ்வேன்

 

ஏனென்றால்

நாம் அறிந்திராத

புயலின் மையங்களில்தான்

நமக்கான மழைப் பொழிவு

கருக்கொண்டிருக்கிறது.

Thursday 8 June 2023

சாவியோ? மணியோ?


 சூரியக் கதிரொ ழுக்கில் சிதறும்
சுடுவளியோடு கொஞ்சம்
சொற்களைச் சேர்த்துக் கட்டி, என்
ஆவியை நாளும்
அரற்றிடச் செய்யும்
பாவியோர் செய்தச் செய்கை
பகர்ந்திட விருப்பமுற்றே
மேவிய பாக்கள் பலவும்
சாவியோ மணியோ
சாற்றுவீர் நல் அளவல் கூட்டே!


Wednesday 7 June 2023

வெளிச்சம்

 


விருந்துக்கு ஆடைதான்

முகாமை என்றால்;

நான்

வெளிச்சத்தில் சோறிடமாட்டேன்.