Saturday 17 December 2022

கன்னத்தில் அறைந்த காலம்



இன்று கண்விழிக்கும் போதே பறையொலியும், சங்கொலியும் கேட்டன. சோகத்தின் ஈனக்குரலாய் இடையிடையே மணியொலியும். யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு கதவைத் திறக்க முனைகையில், துணைவியார்...

"பக்கத்து வீட்டுக்கெல்லாம் தண்ணிக் கேன் போடுறான்ல அந்தப் பையனோட மனைவி இறந்துட்டாங்களாம்" 
 
"என்னாச்சு திடீர்னு?... வயசு குறைவுதானே?"
 
"ஆமா. நாப்பது வயசு போல தான் இருக்கும். ரெம்ப நாளாவே கேன்சர் இருந்துதாம்"
 
"அப்படியா?"
 
"ஆமா.. பாவம் ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க வேற"

பட்டென்று யாரோ இடது கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. மனம் பின்னோக்கி ஓடத் தொடங்கியது.

Sunday 11 December 2022

பாரதி எனும் பெருவியப்பு!

 

நாட்டு நலம் உரைத்த நல்ல

பாட்டுத் திறக்காரன் நீ!

வேட்டல் விடுதலை யென்ற

தேட்டை வளர்த்தவன் நீ!

ஏட்டுக் கவிகளிடை நல்ல

பாட்டுப் பெரும்புலவன் நீ!


கூட்டுப் புழுக்கள் என்றே வீட்டில்

பூட்டிக் கிடந்த பெண்கள்

Saturday 10 December 2022

மணநாள் 2022

 


நீ,

தூசி தட்டுகிறபோதும்

இசைக்கிறது யாழ்.

 

அடிக்கடி நடக்கும்

சின்னச் சண்டைகளால்

அகத்திணைக்குள் மட்டும்

அடங்காது

புறத்திணைக்குள்ளும்

முகங் காட்டும்

நம் காதல்.

 

ஆனாலும்,

உன்

காதல்வரி தீராது

காதுகள் நிறைய;

கானல்வரி பாடாது

கழிந்தது என் காலம்.

 

மறுபிறப்பு இல்லையெனும்

அறிவியலைத் தள்ளிவைத்தேன்.

பிறப்பறுக்கும் பெருங்கருத்தை

வெறுக்கின்றேன் உன்னாலே.

இன்னொரு முறையும்

இந்த வாழ்க்கைக்

கிடைக்குமென்ற ஆசையிலே.


Wednesday 30 November 2022

அனல் மேலே...



அண்மையில் இணையத் திரைத் தளம் (OTT) ஒன்றில் "அனல் மேலே பனித்துளி" திரைப்படம் பார்த்தேன். சிறப்பான படம்தான். துளியும் ஐயமில்லை. பெரும்பாலும் திரையில் பேசப்படாத செய்தியொன்றை, பெண்களின் மீது இயல்பாக நடத்தப்பெறும் பேரவலமொன்றைக் களமாகக் கொண்டு, இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக பெருமுனைப்புடன் எடுக்கப்பட்டப் படம் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

படம் பார்ப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன், இயக்குநர் கெய்சர் ஆனந்து, நடிகை ஆண்டிரியா போன்றோர் கலந்துகொண்ட இந்தத் திரைப்படம் குறித்தான ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு கலந்துரையாடலாக இருந்தது அது. படம் குறித்த, காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், படப்பிடிப்பின் போது நடிகர்களின் மனநிலை, ஆண்டிரியாவுக்கு வந்த மன உளைச்சல் என ஏராளமான செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதுதான் பிரச்சனையே.

Tuesday 29 November 2022

வழிப்போக்கன்

நான் வழிப்போக்கன்.

தடம்பதித்துக்கொண்டே
கடற்கரையில் நடக்கிறேன்.
என் காலடித் தடங்கள்
உங்கள் பார்வையில் படுமென
எண்ணிக்கொள்கிறேன்.
அது;
அலைகளுக்குத் தெரியாது.

பாடிக்கொண்டே
பாதைகளில் நடக்கிறேன்.
என் குரலின் அதிர்வுகள்
உங்கள் காதுகளில் கேட்குமென
எண்ணிக்கொள்கிறேன்.
அது;
காற்றுக்குத் தெரியாது.

நீங்கள்
பார்த்தீர்களா? கேட்டீர்களா?
எனக்குத் தெரியாது.

நான் 
நடந்துகொண்டேயிருக்கிறேன்.

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
29-11-2021
===========================

Thursday 17 November 2022

கப்பலோட்டிய கதை - மறைந்து கிடந்த வரலாறு


பேருந்தின் குலுக்கலில் மெல்லக் கண் விழிக்கிறேன். மங்கலான ஒளியில் வீரநாராயணமங்கலத்துக் கல்பாலம் கடந்து போவதைக் கண்டேன். இன்னும் ஐந்து நிமிடங்கள்தான். பிறந்து, வளர்ந்து, பேசிச் சிரித்து, அழுது புரண்டு, ஆளாகி எழுந்த தாழாக்குடி வரப்போகிறது.

ஊருக்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று. நரை விழுந்து, பின் மண்டையில் மயிரெல்லாம் உதிர்ந்து, மீசையை மழித்துக்கொண்டு, மூக்கு நுனியில் தொங்கும் கண்ணாடியின் இடுக்குகளில் தெரியும் கண்களால் உருட்டி விழித்துக்கொண்டு இறங்கும் என்னை யாராவது அடையாளம் கண்டுகொள்வார்களா?

யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லை. பேருந்து பொதுக்குளத்தைத் தாண்டிச் செல்கிறது. எழுந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு  முன் வாயில் நோக்கி நடக்க எத்தனிக்கையில்,

Wednesday 16 November 2022

அமைதி

 


மாலையில் இரத்த அழுத்தம் 162/101 இருந்தது. மனம்தான் காரணம் என்பது வெள்ளிடைமலை. நாளை பொழுது விடிவதற்குள், உறக்கம் உடலில் செயலாற்றி காலையில் விழிக்கும்போது இயல்பாகவே அழுத்தம் குறைந்துவிடும். அதற்குள் இப்படிச் செய்துபார்க்கலாமே என்று தோன்றியது.


என் வானிலே ஒரே வெண்ணிலா, பூங்காற்று புதிரானது, பொத்திவச்ச மல்லிக மொட்டு, ஆனந்தராகம் கேட்கும் காலம், கண்ணே கலைமானே, ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே, ஆலப்போல் வேலப்போல், ஆகாய வெண்ணிலாவே, சின்னச்சின்ன வண்ணக்குயில், எந்தன் நெஞ்சில் நீங்காத, என்ன சத்தம் இந்த நேரம்....

ஏறத்தாழ பத்துப் பாடல்கள் (நாற்பது நிமிடங்கள்) கடந்தபோது 148/91 ஆக மாறியிருந்தது அழுத்தம். இப்பொழுது அது இயல்புக்கு வந்திருக்கும்.

இது உங்களுக்கு :
உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேளுங்கள். பாடலைக் கேட்கும்போது உள்ளத்தால் அல்லது உடன் பாடுவது மூலமாக அதன் ஒவ்வொரு நொடியையும் தொடருங்கள். இசை நுணுக்கம் பற்றி அறியாவிட்டாலும் கூட பாடலின் இசைக் கூறுகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். (எனக்கு சுரங்கள் ஏழு உண்டு என்பதைத் தாண்டி இசையில் வேறெதுவும் தெரியாது). பாடலின் இடையே உள்ள இசைத் துணுக்குகளின் ஏற்ற இறக்கங்களை பரவி அனுபவியுங்கள். பாடல்களில் உள்ள சொற்களை ஆழ உணருங்கள். உள்ளுக்குள் பாடகர்களின் குரல் வித்தையைக் கொண்டாடுங்கள். கண்டிப்பாக அமைதி கிடைக்கும்.

இது இளையராசாவுக்கு :
என்னதான் உங்களோடு கருத்துகளில் ஒப்ப முடியவில்லை என்றாலும், சுண்டியிழுக்கிற, கட்டிப்போடுகிற, சிறகு விரித்துப் பறக்கச் செய்கிற, உள்ளத்தை ஆற்றுகிற உயர்ந்த இசைக்குச் சொந்தக்காரன் நீர் என்பதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், இசைக்கு மொழி உண்டு. மொழி உண்டு. மொழி உண்டு என உரக்கச் சொல்லிக்கொள்கிறேன் ஐயா, எங்கள் ராசையா.

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
16-11-2022
===========================

Tuesday 15 November 2022

நூல் மதிப்புரை - வே.சுப்ரமணியசிவா



சென்னை புத்தகக் கண்காட்சியில் பாவாணந்தம் வெளியீட்டகத்தை கடக்கும் போது ஐயா திருச்சி மாதேவன் அவர்களையும் தோழர் முத்துக்குமாரசாமி அவர்களையும் பார்த்த உடனே அவ்வரங்கில் நுழைந்தோம். நலம் விசாரிப்போடு திருச்சிராப்பள்ளி ப. மாதேவன் ஐயா எழுதிய நூல்களை பற்றிய அறிமுகத்தையும் விளக்கத்தையும் அளித்தார் தோழர் முத்துக்குமாரசாமி அவர்கள். சிறப்பு விலையில் தொகுப்பு நூல்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

நூல்களை பார்த்து விட்டு பிறகு ”வந்து வாங்கி கொள்கிறேன் தோழர்” என்றேன். உடன் வந்திருந்த தோழர் வேல்முருகன் அவர்கள் ”என்னிடம் இருக்கும் பணத்தில் வாங்கி கொள்ளுங்கள்” என்றார். இருந்தாலும் மனம் கொள்ளவில்லை. முத்துக்குமாரசாமி தோழரிடம் "வந்து வாங்கி கொள்கிறேன்" என்று மன சங்கடத்துடனே அரங்கிலிருந்து வெளியே வந்தோம்.
முகம் தெரியாதவர்களின் புத்தக அரங்கில் புத்தகம் வாங்க வில்லை என்றால்

நூல் அறிமுகவுரை - பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்



நூல் அறிமுகம்

பொருநராற்றுப்படை - கதையுரை
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

கடந்தசில ஆண்டுகளில் கவிதை, கதை, கட்டுரை என்று நூல்களை அறிமுகம்செய்யும் பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். என்றாலும், சங்க இலக்கிய உரைநூலொன்றை அறிமுகம்செய்து கட்டுரை எழுதுவது இதுவே முதன்முறையாகும்.

உரைநூலுக்கெல்லாம்கூட அறிமுகக்கட்டுரையா என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். அதற்கானப் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது.

சங்க இலக்கியங்களுக்கு விரிவான, சுருக்கமான பல உரைகளை நான் வாசித்ததுண்டு. ஏறத்தாழ, அவற்றின் உள்ளடக்கம் ஒருபோலவேதான் இருக்கும். அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு எழுத்து வகைமையை, நூலாசிரியர் மாதேவன் இந்த உரைநூலில் கையாண்டிருக்கிறார். ஆம், அதுதான்

முனைவர் கா.ஆபத்துக் காத்த பிள்ளை - கடிதம்


செவ்விலக்கியங்களின் மீதான தீராத காதல் என் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தாக்கத்தோடு எழுதப்பெற்ற எனது கவிதைத் தொகுப்பொன்றை, நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியின் மேனாள் தலைவர், மறைந்த திரு பெ.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் அச்சிட்டு வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியின் மேனாள் தமிழ்த் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வருமான முனைவர் திரு கா.ஆபத்துக் காத்தபிள்ளை அவர்கள் சிறப்புரையாற்றினார். பேச்சின் நடுவே கவிதை நாடகங்களை இயற்றுங்கள் என்று அறிவுறுத்தினார். அந்த எண்ணம் மனதில் பதிந்துவிட்டது.

செவ்விலக்கியங்களில் தோய்ந்து பின் நாடகம் எழுதலாம் என்ற திட்டம், கொரோனா வீட்டக்கிய காலத்தில் நண்பர்களோடு இணையவழியில் செவ்விலக்கியம் பேசுவதாகத் தொடங்கியது. மெல்ல மெல்ல நண்பர் திரு ச. முத்துக்குமாரசாமியின் தூண்டுதலால்

நூல் மதிப்புரை - புலவர் ச.ந.இளங்குமரன்



மதிப்புரை வழங்கியவர் அன்புக்கினிய புலவர்  ச.ந.இளங்குமரன், தேனி.


நூல் : பல்லாயிரங் காலத்துப் பயிர்.

நூலாசிரியர் : சிராப்பள்ளி மாதேவன்

வெளியீடு : பாவாணந்தம் வெளியீட்டகம், திருச்சி.

தொடர்பு எண்: 94428 01889

விலை : 40 உரூ

திருச்சி மதிப்புமிகு ஐயா ச.முத்துக்குமாரசாமி - கவிதா இணையரின் மகள் மு.ஜானகி அவர்களுக்கும், புதுச்சேரி மதிப்புமிகு ஐயா க.இராமலிங்கம் - தேமொழி இணையரின் மகன் இரா.தமிழமுதன் அவர்களுக்கும் நடந்த திருமண விழா தொடர்பாக அச்சிடப்பட்ட நூல் "பல்லாயிரம் காலத்துப்பயிர்" என்னும் நூல். இந்நூல்  32 பக்கங்களைக் கொண்டது.

காலத்தின் எல்லைக்கல், மாற்றம், வேட்டை, குறிஞ்சிக் காதல், பொய்யும் வழுவும், முல்லையில் நாள்செய்தல், மருத மணம், இழையணிந்த மருதம், வெளியே வாருங்கள் உள்ளிட்ட பத்துத் தலைப்புகளை உள்ளடக்கியது.

நூல் முழுமைக்கும் பிற சொல் கலவாத அழகுத்தமிழில் நெய்யப்பட்டிருக்கிறது. மனிதன் தோன்றி

Saturday 12 November 2022

சீரிதழ்களில் மொழி ?


வாய்மொழியாக இருந்து வரிவடிவம் கொண்டு ஓலைச்  சுவடிகளில் பாக்களாய், இலக்கியமாய், நாடகமாய் வளர்ந்து வந்த தமிழ் அச்சேறியது 1554 ல். ஆனால் பல்லாயிரமாண்டுப் பழமை கொண்ட வரிவடிவம் இல்லாமல் ரோமானிய எழுத்துருவில் அச்சேறியது. இப்பொழுது பலர் AMMA என்று தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதுவதுபோல ரோமானிய எழுத்துருக்களில் எழுதப்பட்ட "தமிழ்ச்சமய வினாவிடை" என்ற இதழ்தான் அது.

தமிழ் வரிவடிவத்தில் "தம்பிரான் வணக்கம்" அச்சேறியது 1557ல். இவையெல்லாம் சமயம் சார்ந்ததாக இருக்க சென்னையிலிருந்து 1785 ல் வெளிவந்த "மெட்ராசு கூரியர்" என்ற ஆங்கில இதழிலும் தமிழ்ப் பக்கங்கள் அச்சாயிருந்தன என்பர். ஆனால் இதற்குச் சான்றில்லை. 



சான்றாகப் திருக்குறள் அச்சுப்படி கிடைத்ததைக் கொண்டு பார்த்தால் சென்னையிலிருந்து 1812 ல் வெளிவந்த "மாசத் தினச் சரிதை" என்ற இதழே தமிழ்நாட்டிற்குள் வெளிவந்த

Friday 11 November 2022

ரெங்கையா முருகன் பிறந்தநாள் வாழ்த்து

 


உறிப்பானை உன்னித்தொட்ட மறுநாள் தொடங்கி

    முலைப்பால் மறந்தோடும் மதலை போல

அறவாளன் பெருந்தலைவன் அடலேறு சிதம்பரனார்

     நிலைச்செரு வறிந்த பின்னே நில்லாது

அறிந்தோர் அறியாதோர் தெரிந்தோர் தெரியாதோர்

      மலைக்கும்  வினாக்களொடு ஊர் திரிந்து

பறித்தெடுத்தப் பூக்களெலாம் பலரும் கொள்ள

    அலைந்து திரியும் அலந்தலை மறந்து

செறிவுறு சொற்களால் நிறைவுறப் பேசி

   உலைப்பாடு கொண்டு ஆங்கிலேயர் அஞ்சித்

தெறித்திட வாழ்ந்தத் திருமகன் வஉசி

    மலைக்காது செய்த மாப்போர் உரைக்கும்

அறிவுறு ரெங்கையா முருகன் வாழி!

   மலையுரசும் கதிரவனும் ஒளிரு மாறே.

குருசாமி மயில்வாகனன் பிறந்தநாள் வாழ்த்து



இலைக்கள்ளிச் செடிபோல் எல்லா இடத்தும்/ வலைவிரித்துச் சூழ்ச்சியால் நாடு கொண்டு/ தலையழித்து வளமனைத்தும் களவு செய்த/ துலைமாந்தர் கனவுடைக்கத் துணிவு கொண்டு/, அலையுரசும் தூத்துக்குடிக் கரையில் நின்று/ தலையுயர்த்திக் கப்பல் விட்டத் தாளாளன்/ மலைபோல் இங்கு வாழ்ந்த மாமனிதன்/ உலகநாதன் பரமாயி தலைமக னாம்/ நிலைகுலையாப் பெருமகனாம் சிதம்ப ரத்தின்/, பலரறியா வாழ்க்கைதனைப் பிறருணர நூலாக்கி/ விலைபோகா உளங்கொண்டு தனை வருத்தி/ வலியறிந்து தரவுபல தேடிச் சேர்த்து/ வலவன்பாடா செய்திசேர பெரியவர் வாழ்வை,/ முலைதழுவும் குழவிபோல் நாங்கள் துய்க்க/ வலைத்தளத்தும் நூல்புறத்தும் எழுதிச் சேர்க்கும்/ கலம்பகமாம் குருசாமி மயில் வாகனன்/ காலமெலாம் வாழி! வாழி! வாழியவே!!

Wednesday 9 November 2022

தரையில் நிழல் விரிக்கும் தஞ்சைக் கோபுரம்

 


உலகக் கட்டிடக்கலை வல்லுநர்கள் பலர் வியக்கும் வண்ணம், வெகுசிறப்பான தொழில் நுட்பத்தின் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரம்.

தஞ்சைக் கோவிலுக்குத் தலபுராணங்கள் எதுவும் புனையப்படவில்லை என்றாலும்,

 'கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது!' 

'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!'

'இரவு நேரத்தில் பெரிய கோயில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்லும்!'

'கோபுர நிழல் கீழே விழுவதில்லை!'

போன்ற  வதந்திகளுக்கு மட்டும் குறைவில்லை.

'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!' என்பதை சிந்துவெளி காலத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாடோடிச் சமூகங்கள் நாகரிகச் சமூகங்களைச் சந்திக்கிற இடங்களில் "ஒரே இரவில் கடலில் மிதக்கும் பெரிய மாளிகைகளைக் கட்டிவிடுவார்கள்,  ஒரே இரவில் அவற்றை அழித்தும் விடுவார்கள்" என்பன போன்ற; இயல்பைப் புரிந்துகொள்ள இயலாத, வளர்ச்சியில் பெரும் கால இடைவெளி அளவிற்குப் பின் தங்கியிருக்கிற மாந்தர்களின் சொல்லாடல்களை உலகம் கேட்டுக்கொண்டே வளர்ந்திருக்கிறது.

இவற்றின் ஊடே சில உண்மைகள் புதைந்து, மறைந்து கிடக்கின்றன.

Friday 4 November 2022

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவு

 


"என்ன கவிஞரே... நலமா?"
அன்பைக் குழைத்தெடுத்த அந்தக் கணீரென்றக் குரலைக் கேட்டு நாளாயிற்று. இனி அதற்கான வாய்ப்பும் அற்றுப் போயிற்று.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஐயா மறைந்துவிட்டார்.
முந்தாநாளிரவு நண்பர் இராசாரகுநாதன்.நா பதிவில் அவர் உடல் நலமற்றிருப்பதை அறிந்துகொண்டேன். நேற்று மாலை சென்று பார்க்கவேண்டும் என நினைத்திருந்தேன். கடுமையான மழை. (மீறிச் சென்றிருக்க வேண்டும் நான்).
நேற்றிரவு நண்பர் Muthukumarasamy Shanmuguasundaram தொலைபேசியில் "ஐயாவைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நாளை போகிறேன் என்று சொன்னேன். முழுமையாக வாய்ப்பற்றுப் போனது. இயலாமையாக உணர்கிறேன்.
இன்று வைகறையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியே காணக்கிடைத்தது.
மொழிக்கும், பண்பாட்டிற்கும் பேருழைப்பை நல்கிய பேராசிரியர். நுணுக்கமான பார்வைகொண்டு திருத்தம் சொல்கிற பெரும் பண்பாளர்.
சில கருத்துக்களோடு உடன்பாடில்லை என்றாலும் தமிழுக்கு நல்கிய உங்கள் பேருழைப்பிற்கு தலைதாழ்ந்த வணக்கம் ஐயா.
உமது பாட்டே உமக்குப் படையல்.
========================
"கயல் எழுதி வில் எழுதிக்
கடுஞ்சினத்துப் புலி எழுதி !
புயல் எழுதும் இமயத்துப்
பொற்கோட்டில் தமிழ் ஏற
செயல் எழுதி !
வையத்து திசையெல்லாம்
மானமெனும் உயில் எழுதி
சென்றவர்கள் உன் முன்னோர்! - என்று
அறிவாயா? அறிவாயா?"
=========================

அறியச்செய்தமைக்கு, காலத்துக்கும் கடப்பாடுகொள்ளும் தமிழினம். சென்று வாருங்கள் ஐயா
🙏

Sunday 30 October 2022

முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் 2022

 


கதிரவனை விரல்களால்

மறைத்துவிட நினைத்தன

கைகள்.


 இமயத்தை நிழலால்

மூடிவிட எத்தனித்தன

இலைகள்.


விளைந்த பொன்னை

வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது

காலம்.


 நல்லவை கொண்டால்

நலம்பெறுமே நாடு.


Friday 28 October 2022

உள்ளொன்று புறமொன்று

 


 

கட்டியணைத்து அந்தக்

கதிரவன் முதுகைத்

தட்டிக்கொடுக்க ஆசை.

விரல்கள் என்னவோ

தீக்குச்சி நெருப்பையே

தீண்டுவோமா என்கின்றன.

 

ஓட்டமாய் ஓடி இந்த

உலகப்பந்தின் நேர்நிரைக்

கோடுகள் கடந்துவிட ஆசை.

கால்கள் என்னவோ

சாலை கடக்கவே

தடுமாறுகின்றன.

 

துள்ளிக்குதித்து அந்தக்

கடலில் முழுதாய்

பள்ளி கொண்டுவிட ஆசை.

உடல் என்னவோ

ஒருவாளி நீருக்கே

உதறல் எடுக்கிறது.

 

இறுதிப்புள்ளி அறிந்திராதப்

பெருங்கோலமாய்,

ஒவ்வொரு நாளும்

இருவேறு வாழ்க்கை;

உள்ளொன்று புறமொன்று.


Wednesday 26 October 2022

மருதிருவர் தூக்கிலிடப்பட்ட நாள்

 



நேர்நின்று எமை மாய்த்தவர்
அரிதினும் அரிதே.
சேறுழலும் கேழல் மனம்
ஊழ் நின்று வேரறுக்கும்
இரண்டகத்தின் சான்றாக,
தூக்குக் கயிறுகளும்
துவக்குகளும்.
ஊடாடி உயிர் குடித்த
பல நாளில்
ஒரு நாள் இன்று.

==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
24-10-2022
==========================

Saturday 15 October 2022

மூன்று செய்திகள்: ஒரு கவிதை

 


மூன்று செய்திகள்: ஒரு கவிதை.


மீத்தேனை வெல்லுதல்: காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மீத்தேன் உமிழ்வைத் தடுப்பது ஏன் முக்கியமானது?

இந்தியாவில் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள் பெரும்பாலும் விவசாயத் துறையில் இருந்து பதிவாகியுள்ளன, ஏனெனில் கால்நடை உர மேலாண்மை மற்றும் விவசாயம் ஆகியவை மீத்தேன் ஆதாரங்களாக உள்ளன" என்று, பெங்களூருவை சேர்ந்த சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் (CSTEP) காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையின் துறைத் தலைவர் இந்து மூர்த்தி,

Wednesday 12 October 2022

வேள்பாரியைக் கொன்றது மூவேந்தர்களா?

 


கதையல்ல வரலாறு

===================

வேள்பாரியின் இறப்புக்குக் காரணமான மூவேந்தர் குறித்து எனது பதிவும், அதற்கு பின் ஐயா சி.அறிவுறுவோன் அவர்களுக்கும் எனக்கும் நடந்த சிறு தருக்கமும்.

பறம்புமலையின் வேள்பாரி இறந்துபட்ட பின் பாரியின் அணுக்கத் தோழனும் பெரும் புலவருமான கபிலர் சென்ற முகாமையான இடங்களில் ஒன்று செல்வக் கடுங்கோ வாழியாதனின் கருவூர். சேர நாட்டின் தலைநகரம். சேரப்பெருவேந்தன் கடுங்கோவைப் பார்த்து அவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தில் இருக்கின்றன. அதில்

Sunday 9 October 2022

இல்லாதது எது?

 


இந்த முறை ஊரிலிருந்து திரும்புகையில்போச்சுல இதயெல்லாம் கொண்டுபோஎன்று சில பொம்மைகளைத் தந்தார் அம்மா.

நாஞ்சிநாட்டிலிருந்து வணிகத்திற்காக திருவனந்தபுரத்திற்குப் பண்டு நகர்ந்த கூட்டத்தின் கிளையில் பூத்த மலர் அவர். அங்கு குடியேறிய பலர் புரட்டாசியில் கொலு வைப்பதைப் பழக்கமாக்கி விட்டிருந்தார்கள். நான் சொல்வது இருநூறு ஆண்டு கதை. அப்படிப் பழக்கமான அம்மாவின் வருகைக்குப் பின் தான் எங்கள் தாழக்குடி வீட்டிலும் பொம்மைகள் கொலுவேறியிருக்கின்றன. அதற்கு முன் அந்தப் பழக்கம் எங்கள் பாட்டி குடும்பத்தில் இல்லை.

கொலு வைப்பதோடு சேர்ந்த ஒரு கொசுறான பழக்கம், தங்கள் குழந்தைகளுக்கு வழிவழியாகப் பயன்படுத்தும் பொம்மைகளில் சிலவற்றைத் தருவது. அப்படித்தான் சில பொம்மைகள் என் கைக்கு வந்து சேர்ந்தன.

Thursday 6 October 2022

எட்டி! எட்டி !



சித்த மருத்துவரும், எழுத்தாளருமான ஐயா முத்துநாகு அவர்கள் 04-10-2022 அன்று எட்டிப்பழம் பறித்த நிகழ்வைப் படங்களோடு பதிவிட்டிருந்தார். படத்தில் வழமைபோல முழு கால்/கைச் சட்டையோடு காட்சிதந்தார்.

அதன் கீழே ஒருவர் "எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன" என்று பழமொழியொன்றைக் குறிப்பிட்டிருந்தார்.
எட்டி.. எட்டி.. சட்டி புட்டி என சில சொற்கள் மனத்துள் ஓடின. வைத்தியரோடு வம்பிழுக்கும் பாட்டாக்களின் நாட்டுப்புற மொழி மரபு தோன்ற ஐயாவைக் குறித்து சிறு பாட்டொன்று எழுதினாலென்ன என்று தோன்றியது.

Wednesday 5 October 2022

வள்ளலார் 200

 



ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்/

பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்/

மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்/

யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.'/ :-

(உய்வகை கூறல் - வள்ளலார்)

தருக்கம் மனிதகுலத்தின் பெருஞ்சொத்து. சரி அல்லது தவறு என்பதே தருக்கத்தின் படி இறுதி செய்யப்படவேண்டும். மனிதன் என்று தொடங்கும்போதே குறைந்தது ஐம்பதினாயிரம் ஆண்டுகளையாவது நாம் மனதில் உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மனிதன் பலவாறான சிந்தனைக்கு ஆட்பட்டவன். இல்லையென்றால் 

Tuesday 4 October 2022

தஞ்சைப் பத்து

 


தஞ்சைப் பெருவுடையார் கோவிலின்

ஒரு நாள் பொழுது.


காலம் : இராசராசன் காலம்

சான்று : கல்வெட்டு + திருவிசைப்பா

குறிப்புகள் அளித்தவர் : திரு தென்னன் மெய்ம்மன்


விடியற்காலையில் யாழ் ஒலி சிலம்பும். வட சிறகு தென் சிறகு வீடுகளில் இருந்து தளிச்சேரிப் பெண்டுகள் நாயகஞ் செய்து அழைத்து வரப்படுவர். உடுக்கை கொட்டு மத்தளம் சக டை இவற்றோடு நாடக சாலை என்ற முன் மண்டப மேடையில் விலங்கல் செய்து ஆடுவார்கள்.சிங் கடி வேம்பி மழலைச் சிலம்பி என்பன அவர்களின் பெயர்களுள் சில.


இவர்கள் ஆடக் கூடிய பகுதிக்கும் கருவறைக்கும் இடையில் 

 .


ஆ → ஆய் → ஆய்தம்

ஆய்தல் = நுனுகுதல், சிறுத்தல், கூர்மையாதல் ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி அல்லது படைக்கலம். (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி)

“மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும்” (தொல்காப்பியம்)

பகைவரை அழித்த வாளின் வெற்றியைக் கொண்டாடுதல் அல்லது போற்றுதல்.

"மங்கல மொழியும்" (தொல்.பொருள்.244)
"மங்கலமென்ப மனைமாட்சி" (குறள், 60)

"மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த/
கொற்றவை நிலையும் அத்திணை புறனே"
என்றதால். தாய்வழிக் குடி கொற்றவைக்குக் கூறப்பட்டுள்ளது. மேலும் மறம் என்பது ஆகுபெயர் மறம்பொருந்திய மறவரை மூதில் முன்றிலில் கூட்டுதல் குலம் அல்லது இனக்குழுத் தலைவியின் வேலை. அதைச் செய்பவள் கொற்றவை!

Sunday 25 September 2022

நெடும்பயணம்


பதினோராம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் திரு அழகப்பபிள்ளை அவர்கள் "நீ தமிழ் படி. கரந்தையில் போய் படி. ஆசிரியராக, விரிவுரையாளராகப் போ. அது உனக்கு சிறந்த பணியாக இருக்கும். அப்பாவிடம் சொல்கிறேன்" என்று சொன்னதோடு மட்டுமின்றி அன்று மாலையே  தந்தையாரிடமும் சொல்லியிருக்கிறார். நாங்கள் இருவரும் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. 

நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தது 1983ல். காலை 9:40 வரை மாவட்ட மைய நூலகம். அங்கிருந்து நடந்து கல்லூரி. கல்லூரியில் பிடித்த இடங்கள் வடக்கு வாயிலில் தொடங்கும் மரங்களடர்ந்த நடை பாதை. நூலகம், சிற்றுண்டிச் சாலை. சில நேரங்களில் வகுப்பறை. 

ஏறத்தாழ நாநூறு பக்கங்களுக்குக் கவிதைகள். எழுபது பக்கங்களில் சிறுகதைகள். அவற்றையெல்லாம் 

Sunday 21 August 2022

நாகர்கோவிலும் சிந்துச்சமவெளியும்

 


ஆவணி மாதம் பிறந்துவிட்டாலே “மக்ளே எட்டரை காருக்கு நாரம்மன் கோயிலுக்குப் போலாமா?” என்ற ஆச்சியின் குரல் கேட்பதற்காகக் காத்துக் கிடக்கும் உள்ளம். ஆவணி மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருக்கும் நாகரம்மன் / நாகராசா கோவிலுக்குப் போவதென்பது குமரி மக்களின் நெடுநாளைய வழக்கம்.

தூக்கு வாளியில் அல்லது குப்பிகளில் பாலைச் சுமந்து சென்று அங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான நாகச் சிலைகளின் மீது ஊற்றி வழிபடுவதும், உள்ளே கருவறையில் தரப்படுகிற ஈரமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வதும், விளாங்காய், பேரிக்காய், பப்ளிமாசு போன்றவற்றை வாங்கிச் சுவைப்பதும் என சிறுவயது ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மகிழ்ச்சி நிறைந்தவை.

Thursday 18 August 2022

நெல்லை கண்ணன் மறைவு

 


வாழ்வின் சிறப்பதனை

வறுமை விழுங்கிட,

கலந்து கூடி கண்ணன் ஆடிய

தொழுநையாறென;

தன்முகம் தொலைத்து

கடல்முகந் தொடாது,

ஓடும் ஆற்றில் கலந்து மறைந்தாய்.


18-08-2022

Saturday 6 August 2022

நீங்களாய் நிறைகிறேன்

 


 உணர்வு நீர்ச்சுருளை
முகந்த மேகங்களாயின
என் கவிதைகள்.

சில வேளைகளில்
சிந்தும் துளியால்
உங்கள் உள்ளம் நனைக்கலாம்.

பல வேளைகளில்
மழையைச் சொரியாமல்
கடந்து மறையலாம்.

வெயிலை மறைத்து
வேனல் குறைக்கலாம்.

யாரும் நடந்திராத
பாலையில் பொழியலாம்.

அலைகளில் வீழ்ந்து
ஆழ்கடல் கலக்கலாம்.

மலைகளில் கசிந்து
மரங்களைக் கூடலாம்.

ஒவ்வோர் உள்ளத்திலும்
வெவ்வேறு
உருவங்கள் காட்டலாம்.

என்னைப் படிக்க
புத்தகம் தேடாதீர்.

Saturday 28 May 2022

முச்சந்திச் சிந்தனைகள்

 

சிறுவயதில் ஆடிக்களித்திருந்த, பருவத்தின் ஏக்கங்களை விளம்பி உளமாறிய, நயினார் நோன்பு நாட்களில் இசையரங்காய் மாறி மகிழ்வித்திருந்த, தாழக்குடியில் பலரும் மறந்திடவியலாச் “சந்தி”யை அண்மையில் சந்தித்தேன்.

கீழத்தெரு சந்தி. நான்கு தெருக்களின் கூடுகைப் புள்ளியில் அமைந்த இடம். கிழக்கே தெரியும் புத்தனாற்றுப் பாலம். மேற்கே விண்ணவன் பெருமான் கோயில். தெற்கே “ஊரம்மன் கோயில்” என அறியப்படும் முப்பிடாரி அம்மன் கோயில். வடக்கே வரலாற்றைச் சுமந்து நிற்கும் “தேர்நிலை”.

கரும்பனைக் கைகளால் பணி தீர்க்கப் பெற்று “வில்லுக்கீறி” ஓடுகளால் வேயப்பெற்ற உயர்ந்த கூரை. கல் பாவப்பட்ட தரை. கோசுப்பாட்டா போல் சொல்வதென்றால் சச்சவுக்கமான கட்டிடம். உள்ளே சிலைகளோ குறியீடுகளோ எதுவுமற்ற, கதவுடன் கூடிய சிறு மாடம். இதன் கல் தூண்கள் அறிந்திராத கதையென்று தாழக்குடியில் எதுவுமில்லை.

Friday 29 April 2022

நூறில் ஒன்று

 


மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?

பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?

ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?

தேங்கிய ஏரி

ஓடிட எண்ணுமா?

நூறு கூறாய் நொடியைத் துணித்த

இம்மியளவு இடைவெளியில்

உள்ளில் கிளர்ந்த மகிழ்வின் நிகழ்வை

மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?