Saturday, 29 June 2019

பட்டறிவு


எறும்பை வைத்து அளவெடுத்தால்
யானை மிக உயரம்.
திமிங்கிலத்தால் அளவுகொண்டால்
பனைமூட்டில் மலைவாழை.
அளவுகோல் மாறுவதால்
ஆனை உயரம் மாறாதே.
கடல்களுக்கு எல்லைக்கோடு
கரைகள் இல்லையே.
கடலடியில் நீண்டுசெல்லும்
தரையும் கூடவே.
பெரியதென்றும் சிறியதென்றும்
உலகில் எதுவும் இல்லையே.


Tuesday, 25 June 2019

பாட்டுக்குப் பாட்டு


மீன் குஞ்சுக்கு நீந்தும் அறிவை

பிறக்கையில் கொடுக்குது - இயற்கை

வான் பறவைக்கு சிறகின் அசைவை

பறக்கையில் கொடுக்குது

மண் புழுவுக்கு உண்ணும் உணவை

சொல்லிக் கொடுக்குது — இயற்கை

மாட்டின் கன்றுக்கு மடியின் இடத்தை

நாவில் வைத்தது மனிதன் மட்டும் இயற்கையில் இருந்து

மாறிப்போனானே – அறிவை

மடமை என்னும் பொருளைக் கொண்டு

மூடிவைத்தானே

அறிவைப் பணத்தால் வாங்கிட முனையும்

ஆசைகொண்டானே – பாவி

இயற்கையை அழித்து அதனுடன் சேர்ந்து

தானும் செத்தானே.வரிக்குக் கட்டிய வரிகள்


காற்றில் அசையும் இலையின் சிலிர்ப்பு
கையோடு உரசும் காற்றின் சிரிப்பு
வானில் பறக்கும் பறவையின் ஓசை
வண்டுகள் பூக்களை வாழ்த்தும் ஒலிகள்
கரையில் மோதும் அலையின் தழுவல்
மலையில் நடக்கும் மேகத்தின் முனகல்
அருவிகள் பாறையில் அடித்திடும் தாளம்
குருவிகள் கூடி இசைத்திடும் குரவை
செண்பகப் பறவையின் கொஞ்சிடும் மிடற்றொலி
செம்புலம் சேரும் மழையின் உயிரொலி
பாலையில் காற்று பரந்திடும் இரைச்சல்
ஆழித் திமிங்கிலத்தின் அழகிய இசைச்சொல்
அசைந்திடும் யாவும் கொடுக்கும் ஒலியில்
இசையும் பிறந்தது இயற்கை மடியில்
இயங்கும் முறைமையும் இயக்கும் இயற்கையும்
மயக்கும் மனதைப் பாட்டாய் மாறி.


(“அசையும் பொருளில் இசையும் நானே” என்ற கவியரசரின் ஒற்றை வரிக்கு பின்பாட்டாய்....)

 
Sunday, 23 June 2019

வேப்பம்பழம்


கல்லாய் இருக்கும் கடவுளுக்கு
காதுகள் இல்லையடா.
சொன்னால் கேட்கும் சொந்தங்களும்
தொலைவில் ஆனதடா.
தொட்டவுடன் விளிக்கும் கைப்பேசி
தொடர்பு எல்லைக்கு வெளியே
எப்போதோ போனதடா.
காலம் ஒளித்துவைத்த
காவிரியின் நீர் போலே - என்
கண்ணீரும் போனதடா.
ஊர்வலத்தில் தேர்போலே வாழ்க்கை
ஒருநாள் ஆட்டமடா.
கார்காலம் முடிந்தவுடன்
கைமறந்த குடைபோலே — எனை
யார் நினைப்பார் என
மனது ஏங்குமடா.
காதுக்குப் பசியென்றால் என்
கவிதை தீர்க்குமடா.
வயிற்றுப் பசிதீர்க்க என்
வாழ்வால் ஆகாதடா.
பாலுக்குப் பிள்ளையழும்
பசியாலே தாயழுவாள்
படிக்கையில் சிரித்தேனடா.
மனையாள் நோயென்று
மடிமீது சாய்ந்திருக்க
மேட்டூர் அணைபோலே
வங்கிக் கணக்கிருக்க
பசித்தழுத தாய்மனது — என்
நெஞ்சாங்குலை ஆனதடா.
கையில் காசின்றி
கடும்பசி சூழ்ந்துநின்றால்
பத்தென்ன மொத்தமுமே
பட்டமெனப் பறக்குமடா.
காசிருந்தால் வாழ்க்கை
கரும்பென இனிக்குமென்றால்
வேப்பமரம் மருந்தென ஏன்
இயற்கை விதித்ததடா.
யாருக்கும் என் எழுத்தால்
மருந்தாவேன்
பாருக்குத் தேவையென சில
பாடல்கள் சொல்லி வைப்பேன்
ஊருக்குத் தேவையென்றால்
ஓரமாய் வையுங்கள்
வேண்டாமென நினைத்தால்
வீசிவிட்டுப் போய்விடுங்கள்
வேப்பம்பழம் காக்கைக்கு
உணவாகும்.Sunday, 16 June 2019

தந்தையர் தினம் 2019


அள்ளி உண்ட சோற்றுப் பருக்கையில்
வியர்வை மணமாய் அப்பா.
துள்ளி விளையாடிய பொழுதுகளில்
மெல்லச் சிந்திய குருதி துடைத்த
துவர்த்தின் கறைகளில் அப்பா.
பள்ளி வாத்தியார் படிக்கச் சொல்லி
அழிசங் கம்பால் அடித்த இடங்களில்
தடவிய எண்ணெய் படலத்தின் மேலே
படிந்த விரல்தடமாய் அப்பா.
நெல்லவிக்கும் வார்ப்புகளில்
வாய்கீறும் நெல்மணியின் நறுநாற்றம் கலந்து
பனிவிழும் இரவில் பக்குவமாய் உதடுதொடும்
சுக்காப்பியின் இளஞ்சூடாய் அப்பா.
தலையில் ஏற்றிவைத்த கடவத்தின் சுமை
தலைதாங்கும் வரை தாங்கி நின்ற
உரம்பாய்ந்த கைகளாய் அப்பா.
இறந்தவுடன் வாசல்வந்து உன் அப்பன்
இதுவெல்லாம் எனக்குத் தரவேண்டும்
என்றெவனும் உனைத்தேடி வரமாட்டான்,
உனக்குக் கடனின்றி உயிர்விடுவேன்
என்றுரைத்த அவர் வாய்மொழியோ,
காதுகளில் சொல்லொலியாய் அப்பா.
Saturday, 15 June 2019

என்னில் எனக்கு...


என் வாழ்க்கை,
பிறரது மதிப்பீடுகள் என்றால்;
என்னால்
மாறிக்கொண்டே இருக்க முடியாது.
என்னுடையதும் இல்லை.
எனக்கெதற்கு என்னைப்பற்றிய
மதிப்பீடுகள்.
நிலவு நான்...
மூன்றாம்பிறை என நினைத்தால்
காத்திருந்து காணுங்கள்.
முழுநிலவானால் மகிழ்ந்து
கொண்டாடுங்கள்.
மறைநிலவென்றால் கரித்துக்
கொட்டுங்கள்.
கறையைப் பாரென்று
கைகொட்டிச் சிரியுங்கள்.
ஔவைப் பாட்டியென
ஆனந்தம் கொள்ளுங்கள்.
என்னில் எனக்கு
இவையாவும் இல்லை.
எனக்கெதிரே
பூமிதான் சுற்றிக்கொண்டிருக்கிறது.Thursday, 13 June 2019

பணம்


பணமில்லாதவன்
பசியின் குரலும்
நோயின் ஓலமும்
வௌவாலின் வாய்மொழிகள்.
யார் காதிலும் விழுவதில்லை.


Wednesday, 12 June 2019

விந்தை


தற்கொலை தீர்வாகாது என்று
உயிரோடு இருப்பவர்களோடு
பேசிக்கொண்டிருக்கிறது உலகம்.
விந்தை...