Wednesday 28 March 2018
Tuesday 20 March 2018
மூழ்கிக்கொண்டிருக்கிற மொகஞ்சதாரோக்கள்
அந்தப் பிணம் அநாதையாய்க் கிடந்தது. அதுவும் “சந்தி” என்கிற ஊரின் மையமான பொது இடத்தில். பெரிய கட்டிடம் இல்லை அது. கற்களால் பெரிய மேடை போன்று எழுப்பப் பட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டிருந்தது. இருபது இருபத்தைந்து பேர் அமரக்கூடிய இடம். அங்குதான் கிடந்தது “அது”. ஆட்கள் சந்தியைத் தாண்டி போய்வந்து கொண்டிருந்தார்கள்.
“சே.. ஒரு பயலும் இதுக்கொரு வழி பண்ண மாட்டெங்கானே. இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள எடுத்துப் போட்டு, தெரு சுத்தி கிளிகெட்டி இழுத்து அதுக்கப்புறந்தா சாமி வாகனம் எடுக்கமுடியும்" கோசுப்பாட்டா அலுத்துக் கொண்டார். நிறையக் கவலை இருந்தது அவர் புலம்பலில்.
.
நான்கு வருடங்களுக்கு முன் அந்த ஊரில் இப்படி யாரும் கவலையோடு பேசியதில்லை. எல்லாவற்றிற்கும் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டிருந்தார்கள். வயலில் உழவு ஆரம்பிப்பதிலிருந்து பெரியகுளம் நீர்ப்பெருக்கால் உடைத்துக் கொள்ளும் போது உதவுகிற வரை எல்லோரும் சேர்ந்தே எல்லாம் செய்தார்கள்.
Sunday 18 March 2018
ஒருமுறை.. ஒரேமுறை..
மனித வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்து மீண்டும் நிகழவே முடியாத நிகழ்வுகளில் பள்ளி வாழ்க்கை முகாமையானது.
"கற்க" என்பது வள்ளுவப் பேராசானின் கட்டளை. உலகில் பிறக்கிற எல்லா உயிர்களும் கற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது. கற்றலன்றி உயிர் வாழ்தலென்பது உலகில் நடக்காத ஒன்று. தன் இணை எறும்பின் குறியீட்டு உணர்வுகளைக் கற்றுக் கொள்ளாத எறும்பு அடுத்தவேளை உணவின்றித் தவிக்க நேரிடும். பெரும் யானையொன்று தன் வழித்தடங்களை, வாழ்விடங்களை, நீர்நிலைகளைத் தன் பெற்றோரிடம் கற்றுத் தேர்ந்திருக்காவிட்டால் வாழ்நாளைக் கழிப்பதென்பது இயலாததொன்றாகிவிடும். எல்லா உயிர்களும் கற்றுக் கொண்டேயிருக்கின்றன. மனிதனும் அப்படியே. ஆனால் பெரும் நினைவுத் திறனும், ஒப்பீட்டு நோக்கும், உருவகப்படுத்தும் ஆற்றலும் மனிதனை ஆறாம் அறிவை நோக்கி நகர்த்திவிட்டன.
மனிதன் தான் பார்க்கிற விலங்குகள், பறவைகள், மரங்கள் என்று எல்லா உயிர்களிடமிருந்தும் மரபறிவைச் சேமித்துவைத்து, ஒப்புநோக்கி உருவகப்படுத்தும் ஆற்றலால் அதைப் பயன்பாட்டு அறிவாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பிக்கிறான். அதைத் தன் இன மனிதனுக்குச் சொல்லித்தர முனைகிறபோது "கல்வி" பிறந்தது. கற்றலுக்கான வழிமுறைகள் தோன்ற ஆரம்பித்தன. எழுத்தும் மொழியும் செழிக்கத் தொடங்கின. மாந்த இனத்தின் பல்லாயிரமாண்டுப் பயணத்தில் ஓர் நாள் "பள்ளிக்கூடம்" பிறந்தது. மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே "கல்வி" பற்றிப் பேசிய திருக்குறள் வந்தது. மொழியின் உச்சத்தைத் தொட்டு நின்றத் தொல்காப்பியம் உதித்தது. பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்றப் பெருஞ்சொல் ஒலித்தது. பள்ளிக்கூடம் மாந்த வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத இடத்தைத் தொட்டது.
இப்படித்தான் தாழக்குடி அரசு மேனிலைப்பள்ளியும் என் வாழ்க்கையில் பெரும் நினைவாய் மாறிப்போனது. நான்கு சுவர்களுக்குள்ளே கல்வி கற்றுத் தருகிற பள்ளிக்கூடங்கள் தனக்குப் பிடித்ததில்லை என்று ரவீந்திரநாத் தாகூர் சொன்னதாய்ப் படித்திருக்கிறேன். ஒருவேளை அவர் படித்த நகர்ப்புறப் பள்ளி அவருக்குள் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் எங்கள் பள்ளியின் சுவர்கள்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது. இன்றும் கூட காதுகொடுத்துக் கேட்டால் அந்தக் கதைகளைச் சுவற்றின் கற்கள் பேசுவதைக் கேட்கலாம். சொல்லப்போனால் வெளிப்புற மதிற்சுவர்களில் நாங்கள் தூக்கிச் சுமந்தக் கற்களும் இருக்கலாம்.
படிப்பதற்கு மட்டுமே இங்கு வந்து போனதாய் எனக்கு நினைவில்லை. என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இப் பள்ளியின் கூறுகளைக் காண்கிறேன்.
திரு சிவானந்தம். ஒன்றாம் வகுப்பில் என் பிஞ்சுவிரல் பிடித்து உலகின் மூத்த மொழியின் முதலெழுத்தை எழுதிக்காட்டிய இறைவன். என் வகுப்பில் நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்பார்கள் என்று நினைவு. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கிறேன். "ஒண்ணாங் கிளாசு வாத்தியார்" என்று மிக எளிதாக அழைக்கப்பட்ட அந்த ஆசிரியர் எத்தனை ஆயிரம் பேருக்கு, எம் மொழியை, எழுத்தை அறிவிக்கிற இறைவனாய் இருந்திருக்கிறார். பெரும் பேறு அது.
இரண்டாம் வகுப்பு பள்ளிக்கு வெளியே இருந்தக் கட்டிடத்தில் நடந்தது. ஏழு வயதில் ஏற்றத்தாழ்வுகளின் முகம் தென்படக் கண்டேன். முத்துக்கருப்பன் அலுமினியப் பெட்டி, என்னிடம் தகரப் பெட்டி, சேகரிடம் துணிப்பை, முருகனும் சந்திராவும் வெறுங்கையோடு, மூன்று நான்கு பேரிடம் மட்டுமே புத்தகங்கள் என, முதன்முறையாய் அறிவு அரும்புகையில் இந்தச் சமூகத்தின் முகம் எனக்கு இப்படித்தான் அறிமுகமானது. எல்லோரும் தரையில்தான் அமர்ந்திருப்போம். ஒன்றாய்த்தான் விளையாடினோம். ஆனாலும் சீருடை அறிமுகம் செய்யப்படாத, வேறுபாடுகள் களையப்படாத அந்தக் காலம் என் நண்பர்களில் சிலருக்கு எத்தனைக் கடினமாய் இருந்திருக்கும் என்பதை நினைக்கையில் கண்ணின் ஓரத்தின் கசிவை இன்றும் கூடத் தவிர்க்க இயலவில்லை.
பாடப் புத்தகங்களைக் கற்றுத் தருவது எல்லாப் பள்ளிக்கூடத்திலும் நடந்துவிடும். பள்ளிக்கூடமே பாடப்புத்தகமாய் மாறும் அதிசயம் எம் பள்ளியைப் போன்ற ஒருசில பள்ளிகளிலேயே நடந்திருக்கும்.
நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஐந்தாம் வகுப்பாசிரியர் திரு சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய கதைகளைப் பள்ளியின் கட்டிட மூலைகளிலும், நம்பியாங்குளக் கரையிலும் பகிர்ந்துகொண்டோம். "அவரு கயத்த புடிச்சு தொங்கவிட்டு அடிப்பாரு. அவரே பிரம்பு செஞ்சு தீயில சுட்டு எடுத்துட்டு வருவாரு" என்பது போன்றப் பெருங்கதைகள் உலவின. ஐந்தாம் வகுப்பில் நுழைந்தது முதல் ஆண்டு முழுவதும் அந்தக் கயிற்றையும் பிரம்பையும் தேடிக்கொண்டே இருந்தேன். என் போதாத காலமோ என்னவோ அவர் அந்த இரண்டையும் கொண்டுவரவேயில்லை.
இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு என்பது கல்லூரிக்குள் நுழைவது போன்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஒருவேளை ஓட்டுக் கட்டிடத்தில் இருந்து முதன்முறையாக காங்ரீட் கட்டிடத்தில் நுழைந்ததாலோ அல்லது பள்ளி முழுமைக்குமான மதிய உணவுக்கான பொருட்கள் எங்கள் வகுப்பறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம். அதுமட்டுமின்றி பள்ளிக்கான மொத்த வரலாறு புவியியல் வரைபடங்களும் எங்கள் வகுப்பறையிலேயே வைக்கப்பட்டிருந்தன. ஓரளவுக்குப் படிப்பவனாய் இருந்ததாலோ என்னவோ, ஆசிரியர் திரு அணஞ்சபெருமாள் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்குத் தேவைப்படும் வரைபடங்கள் எடுத்துத் தரும் பணியை என்னிடம் கொடுத்திருந்தார். ஆசியா, ஐரோப்பா, உலகப்படம் எனப் பலவிதமான படங்களை என்னிலும் மூத்தோருக்கு எடுத்துத் தருகிறபோது அவற்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. ஆதி மனிதன் தொடங்கி ஐரோப்பா வரை அறிவுக்கு மீறிய அறிமுகம் கிடைத்தது. சிறுவயதில் துளிர்த்துவிடுகிற ஆர்வம், வாழ்க்கைத் திசைமாற்றி இழுத்துக் கொண்டுபோனாலும் என்றேனும் ஓர்நாள் மீண்டும் உயிர்த்தெழும். இப்போது நான் கீழடி அகழ்வாய்வின் துணைகொண்டு மாந்த வரலாற்றுப் பாதை பற்றிய நூலொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். மூன்றாண்டு உழைப்பு அது. அந்த உழைப்புக்கு விதைபோட்ட ஆசிரியர் திரு அணஞ்சபெருமாள் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுப் பாதையில் ஆசிரியர் திரு சவரிமுத்து, திரு முகமதுஹபீப் அவர்களுக்கும் இணையான இடமுண்டு. ஆனால் "சவரிமுத்து சார்" வகுப்பில் தரும் வேலைகளை நான் ஒழுங்காகச் செய்தவனில்லை என்பது வேறுவிசயம். ஐயா, உங்களைத் தொடர்ந்தே பயணம் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கான மன்னிப்பும் இருக்கிறது என நம்புகிறேன்.
பாடத்தையும் சமூகத்தையும் கற்றுக்கொண்டே ஏழாம் வகுப்பில் நுழைகிறேன். அங்கே என் முதல் வியப்பு "பாக்கியமுத்து டீச்சர்". நீண்டகாலச் சமூக அனுபவத்தின் பிறகு இன்று புரிகிறது திருவாட்டி பாக்கியமுத்து அவர்கள் சமூக மாற்றத்தின் குறியீடாக இருந்திருக்கிறார் என்பது. கல்வி ஒருவரைச் சமூக அவலங்களிலிருந்து மீட்டெடுத்துவிடும் என்பதை நேரடியாகக் கண்ட முதல் அனுபவம் அது. மிக நேசமாக எல்லோருடனும் பழகும் தன்மை கொண்டவர். என் தனிப்பட்டப் பிரச்சனை பற்றி நான் முதன்முதலில் பேசியது அவரிடந்தான். ஆசிரியருக்கு இன்னொரு பரிமாணம் உண்டென்பதை உணர்த்தியவர்.
என் வாழ்க்கையில், ஏன் என்னோடு தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையிலும் என்றும் கூடச் சொல்லலாம், முகாமையான இடத்தைப் பிடித்துக்கொண்ட ஆசிரியர் ஒருவரை ஏழாம் வகுப்பில்தான் சந்தித்தேன். திரு சங்கரநாராயணபிள்ளை தான் அவர். கணிதம் கற்பித்தார். மிகக் கண்டிப்பானவர். வடிவியல் (Geometry) அவருடைய சிறப்பான கவனம் பெறும் பாடம். மரத்தால் செய்யப்பட்ட பெரிய காம்பஸ், கோணமானி போன்றவற்றைக் கொண்டு கரும்பலகையில் அவர் வரைகிற திருத்தமான வடிவகணிதப் படங்கள் என்னுள் பேரார்வத்தை உண்டாக்கின. உருவகப் படுத்துதல் உந்தித் தள்ள அது ஒரு கலையாகவே என்னுள் மாறிப்போனது. பிற்காலத்தில் என்னிடம் பொறியியல் வடிவமைப்புக் கற்றுக்கொண்ட மாணவர்களில் இரண்டாயிரம் பேருக்கு மேல் இவரையும், இவர் எனக்குக் கற்றுக்கொடுத்த அடிப்படை வடிவகணிதத்தையும் எடுத்துப் போயிருக்கிறார்கள்.
புலவர் திரு பிச்சையாபிள்ளை. மறக்கமுடியா தமிழாசிரியர். "முத்துன்னு எழுதச் சொன்னா மூணு எழுத்தும் பிழையா எழுதியிருக்கியே" என்று சிரித்துக் கொண்டே அவர் சொல்வது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சீர்திருத்த எழுத்தைப் பழக்கப்படுத்திய ஆசிரியர்."ஐ" என்றுதான் சொல்லிக்கொடுத்தார். "அய்' அல்ல. இவரை, இருக்கும்போது கொண்டாடப்படாதப் பேராசிரியர் என்றே சொல்வேன். ஐயா, திருச்சிராப்பள்ளித் தெருவெங்கும், காவிரிக்கரை முழுதும் உமது பெயரைச் சுமந்து திரிந்திருக்கிறேன். இந்தத் தமிழைத் தவிர உமக்குப் படையலிட உயர்ந்த பொருளெதுவும் என்னிடம் இல்லை.
அடுத்துப் பெருநினைவென்றால் பத்தாம் வகுப்புத்தான். என் சாளரங்கள் திறந்து உலகைப் பார்க்கத் தொடங்கிய பருவம். பொதுத் தேர்வு என்ற பயம் தாண்டி கலைகளோடு இணந்த மகிழ்வான நேரம். திரு கணபதி. தமிழாசிரியர். கறுப்பானக் களையான முகம். கணீரென்றக் குரல். அவர் வகுப்பெடுக்கும் முறை அற்புதமானது. நாடகமொன்றில் நடிக்கவேண்டும் என்றார்.எனக்குள் கதாநாயகன் கனவு வந்துவிட்டது. இரவெல்லாம் தூங்க முடியவில்லை. அடுத்தநாள் மாலை, " சிவானந்தம் பண்ணையாராக நடிப்பான், நீ வேலைக்காரனாக நடிக்கவேண்டும். சுப்பிரமணி போஸ்ட் மாஸ்டர், மனோகர் ஐயராக நடிப்பான்." என்று சொன்னார். எனக்கு என்னவோ போலாகிவிட்டது. என் கதாநாயகக் கனவு உடைந்தது. என்ன செய்வது. ஆனால் வேலைக்காரன் தான் கதாநாயகன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அது வேலைக்காரன் கதாநாயகனாக முடியாது என்ற சமூகத்தின் தாக்கமாகக் கூட இருக்கலாம். "வினோதமானா வேலைக்காரன்" என்று பெயரிடப்பட்ட அந்த நாடகம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் அரங்கேறியது. ஒரு நாடகப் போட்டி அது. நெல்லை மாவட்டம், இன்றைய தூத்துக்குடி மாவட்டம், குமரி மாவட்டம் என ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்டப் பள்ளிகள் கலந்து கொண்டன.
பெரும் பொருட்செலவில் வந்திருந்த தூத்துக்குடியின் சத்திரபதி சிவாஜியையும், மாமன்னன் அசோகனையும், ஆங்கிலம் பேசிய நெல்லையின் கிளாடியேட்டர்களையும் வீழ்த்தி கறுப்பாகத் தெரியவேண்டிச் சிரட்டைக் கரி பூசிக்கொண்ட வேலைக்காரனும், உடலெங்கும் பவுடரும் சந்தனமும் பூசி வெள்ளையான மனோகர் ஐயரும் வென்றது பெரும் வரலாறு. அன்று சமூகத்தின் அழுக்குப் படிந்த இடங்களில் வெந்நீர் ஊற்றிக் கழுவிக்காட்டிய கணபதிசார் இன்றுவரை என் எழுத்துகளின் ஊடே நடந்துகொண்டிருக்கிறார். அவரே எங்களை வேறொரு நாடகத்திற்காக திருவனந்தபுரம் வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்று பதிவு செய்தார். அன்று ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சிதான் தாழக்குடிப் பள்ளிக்கூடம் கலந்துகொண்ட முதல் வானொலி நிகழ்ச்சியாக இருக்குமென்று நினைக்கிறேன். ஊரெங்கும் என் குரல் கேட்டது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
பதினொன்றாம் வகுப்பின் முதல் நாள். இந்தப் பள்ளியின் மேனிலை முதலாண்டில் முதன்முதலில் நுழைந்த மாணவர் கூட்டத்தில் நானும் ஒருவன். அன்று எல்லாப் பாடங்களுக்குமான ஆசிரியர்கள் கூட நியமிக்கப் பட்டிருக்கவில்லை.
திரு அழகப்பபிள்ளை அவர்கள் வகுப்புக்குள் நுழைந்தார். தமிழாசிரியர். என் தந்தையின் பள்ளித் தோழரும் கூட. எல்லோரும் வணக்கம் சொன்னோம். "நான் உங்களுக்குப் பாடம் நடத்தப் போவதில்லை. அதற்கு வேறு ஆசிரியர் வருவார். நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை ஒவ்வொருவராகச் சொல்லுங்கள்" என்றார். ஆம் அரசு விதிகளின்படி அவர் பதினொன்றாம் வகுப்புக்குப் பாடம் நடத்தமுடியாது. ஒன்றிரண்டு பேர் ஏதேதோ சொல்ல என் முறை வந்தது. திருவள்ளுவரையும் அவர் மனைவியையும் பற்றி ஒரு கதை சொன்னேன். எல்லோரும் கேட்ட கதைதான். ஆனால் நான் சொல்லும் விதத்தை மாற்றி நாடகக் கதைபோன்று சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்த அழகப்பபிள்ளை சிரித்தார். அது 1981 ம் ஆண்டு. பொறியியல் மற்றும் மருத்துவம் தவிர்த்த எதுவுமே படிப்பில்லை என்ற நச்சுமரம் முளைவிட்டுத் துளிர்த்துக் கொண்டிருந்தக் காலம். "நீ தமிழ் படி. தமிழாசிரியராக, விரிவுரையாளராக வேலைக்குப் போ" என்று என்னிடம் சொன்னார். அன்று மாலையில் இதையே என் தந்தையிடமும் சொல்லியிருக்கிறார். ஆனால் நாங்கள் இருவருமே அவர் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. நான் பொறியியல் படித்தேன். பெரு நிறுவங்களிலும் தொழில்நுட்பம் கற்றுத்தரும் இடங்களிலும் பணி செய்தேன். கிட்டத்தட்ட முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாவாணரின் திருக்குறள் மரபுரை அடியொற்றி திருக்குறளுக்கான விரிவுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
முதல் முக்கால் மணிநேரத்தில் ஒரு மாணவனை முழுமையாக அறிந்துவிட முடிந்த அழகப்பபிள்ளை போன்ற சிறந்த ஆசிரியர்களை அந்த மாணவனுக்குப் பாடம் நடத்தமுடியாது என்று தடுக்கும் தகுதி பற்றிய விதியை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அழகப்பபிள்ளை இன்னும் எனக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சொல்லப்பட வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள். நெஞ்சமெங்கும் நிறைந்து கிடக்கிற எண்ணங்கள் பெருநூலாக விரிந்து விடும்.
என் கவிதையையும் கணிதத்தையும் ஒப்பிட்டுச் சொன்ன திரு பழனி, வேதியலை விரல் நுனியில் வைத்திருந்த திரு கில்பட், இயற்பியலின் மூலை முடுக்கெல்லாம் கற்றுக் கொடுத்த திரு நாசர் பைக், ஆங்கில ஆசிரியர் திரு மோகன், தமிழாசிரியர் திரு சுப்பையா, உதவித் தலைமையாசிரியர் திரு முத்துக்குமாரசாமிப்பிள்ளை, என பெரும் பட்டியலே இருக்கிறது. எனக்குக் கற்றுத்தந்த எல்லோரையும் எண்ணங்களிலும் எழுத்திலும் சுமக்கிறேன். என் ஆசிரியர்களின் பெயரை, நடவடிக்கையை, நடத்திய முறையை நாள்தோறும் எங்கோ ஒரு மூலையில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் எண்ணங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.
கட்டிடத்திற்கு வெளியே வருகிறேன். அங்கே நம்பியாங்குளத் திடலில் ஒற்றை மனிதனாய் பலநூறு மாணவர்களைச் சமாளிக்கிற திரு இலட்சுமணன் பிள்ளை நின்று கொண்டிருக்கிறார். திரண்ட தோள். வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகள். படிய வாரியத் தலைமுடி. ஒரு உடற்கல்வி ஆசிரியருக்கான முழுத்தகுதியோடு எல்லோர் வாழ்க்கையிலும் ஒன்றிப் போனவர். இருட்டும் வரை எங்களுக்காகக் காத்திருந்த ஆசிரியர். உடம்பின் துன்பங்களை இன்றுவரை எளிதாகக் கடந்துவிட முடிகிறதென்றால் அது அவர் கொடுத்தப் பயிற்சியே. காலணிகள் இல்லாதக் கிராமத்துக் கால்களுக்கு அணிவகுப்பில் முதல் பரிசு கிடைக்கச் செய்த உறுதி படைத்த மனிதன். "வெறுங் கால்களோடு கடல் மணலில் அணிவகுப்பில் நடக்கமுடியாது" என்று ஒரு காவல் துறை உயரதிகாரி சொன்னபோது "நீங்கள் வேண்டுமானால் கட்டளை சொல்லுங்கள் என் மாணவர்கள் நடப்பார்கள்" என்று அவர் சொன்னதில் இருந்த உறுதியும், அதை நடந்து நிறைவேற்றி, அனைவரும் வியந்து நிற்க முப்பது பள்ளிகளுக்கு இடையே முதல் பரிசைப் பெற்றதும் இன்னொரு முறை பிறந்தாலும் கிட்டுமா எனத் தெரியவில்லை.
தாகூர் படித்த பள்ளிக்கும் தாழக்குடி பள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது திரும்பிப் பாருங்கள் நூறாண்டுகளைத் தொட்டு நிற்கிற அது வெறும் கட்டிடமில்லை. கற்களின் இடுக்குகளில் வாழ்க்கையைக் கற்றுத் தருகிற பெருங்கோட்டம். எல்லா மதத்திற்குமான ஒற்றைக் கோயில்.
இனி ஒவ்வொரு முறை கடக்கிற போதும் இனிய நினைவுகளைப் பரிசாகத் தரும் எமது பள்ளி.
---------------------------------------------------------------------------------------------------------------
தாழக்குடி அரசு மேனிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா 13 -10 2017 சிறப்புமலரில் வெளியான கட்டுரை.
கீழே சொடுக்கவும்.
👉 குறள் விளக்கங்கள் சில...✅
---------------------------------------------------------------------------------------------------------------------
Saturday 17 March 2018
Wednesday 14 March 2018
Tuesday 13 March 2018
Sunday 11 March 2018
Saturday 10 March 2018
தெரு...
ஒரு ஆங்கிலக் கவிதையும், என் ஆசானின் மொழிபெயர்ப்பும், அதை உண்டு களித்துப் பின் ஊறும் உமிழ்நீராய் என் எழுத்தும்..
============================================
தெரு
----------
பேரமைதியாய்க் கிடக்கிறது இந்தப் பெருந்தெரு.
காரிருளில் நடக்கிறேன் நான்.
காலிடறி வீழ்ந்தெழுந்து விழிகளற்று நடக்கிறேன்.
என் காலடி பட்டுத்
துயிலும் கற்களும் மரணித்தச் சருகுகளும்
மௌனம் கலைத்து ஒலிக்கின்றன.
எனக்குப் பின்னாலும் யாரோ வருகிறார்கள்,
அவர் காலில் மிதிபட்டும் அழுகின்றன
அந்தக் கற்களும் சருகுகளும்.
என்
நடையையும் ஒட்டத்தையும்
நகலெடுக்கிறார் அவர்.
சட்டெனத் திரும்புகிறேன் யாருமில்லை.
கதவுகளின்றி
திக்கெட்டும் இறுக்கி அடைக்கப்பட்ட இருள்.
என்னையறியும் என் காலடிகள்,
நான் வளைவுகளில் ஒழுகியொழுகி
காத்திருப்பார் யாருமற்ற
என்னைப் பின்தொடர்வார் இல்லா
பெருந் தெருவுக்குள்ளே
மறுபடி மறுபடி ஒரு மனிதனைத் துரத்துகையில்,
இடறி வீழ்ந்து எழுந்தவன்
சட்டெனத் திரும்பி
என்னைப் பார்க்கையில் சொல்கிறான்
யாருமில்லை.
சிராப்பள்ளி மாதேவன்
---------------------------------------
தெரு – ஆக்டேவியா பாஸ் கவிதை
----------------------------------------------------------
இதோ, நீண்ட அமைதியான ஒரு தெரு .
நான் மையிருளில் நடந்து, தடுமாறி விழுகிறேன்
மீண்டும் எழுந்து, மீண்டும் பார்வையற்று நடக்க, என் பாதங்கள்
அமைதியான கற்களை, காய்ந்த சருகுகளை மிதித்து ஒலிக்கின்றன.
என்பின்னால் யாரோ ஒருவரும் கற்கள், சருகுகளை மிதித்து ஒலிக்கிறார்;
நான் நடைவேகத்தைக் குறைத்தால், அவரும் குறைக்கிறார்
நான் ஓடினால், அவரும் ஓடுகிறார், நான் திரும்புகிறேன் : யாருமில்லை.
எல்லாமே இருள்; கதவுகளுமில்லை
என் காலடிகள் மட்டுமே என்னை அறியும்.
யாரும் காத்திருக்காத, என்னை யாரும் பின்தொடராத
தெருவுக்கே இட்டுச் செல்லும்
இந்தத் திருப்பங்களில், திரும்பித் திரும்பி,
மனிதன் ஒருவனை நான் பின்தொடர்கையில்,
தட்டுத்தடுமாறி, இடறி விழுந்து, எழுந்த அவன், என்னைக்
காண்கையில் சொல்கிறான் : யாருமில்லை.
---------------------------------------------------------
The Street - Poem by Octavio Paz
Here is a long and silent street.
I walk in blackness and I stumble and fall
and rise, and I walk blind, my feet
trampling the silent stones and the dry leaves.
Someone behind me also tramples, stones, leaves:
if I slow down, he slows;
if I run, he runs I turn : nobody.
Everything dark and doorless,
only my steps aware of me,
I turning and turning among these corners
which lead forever to the street
where nobody waits for, nobody follows me,
where I pursue a man who stumbles
and rises and says when he sees me : nobody.
Subscribe to:
Posts (Atom)