Friday 28 June 2024

மறப்பது இயல்பே!


 
பிறப்பதும் இறப்பதும் இறந்தவர் நினைவினை
இருப்பவர் மறப்பதும் இயல்பென இருக்கையில்
மறைந்தபின் இருப்பவர் மனதினில் இருந்திட
இருக்கையில் அரியவை நிகழ்த்திடல் சிறப்பே.

(தூங்கிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா)

Wednesday 26 June 2024

கலையாத உறக்கம்

 


கழுகுமலையில்
சிலைவடித்த உளிகள்
அம்மி கொத்திக்கொண்டிருக்கின்றன,
அரவை எந்திரம்
இல்லாத வீடுகளில்…

சித்தன்னவாசல் ஓவியமெழுதிச்
செழித்துக்கிடந்தத் தூரிகைகள்
சுண்ணாம்பு பூசிக்கொண்டிருக்கின்றன,
கழுதைகள் உரசும்
கட்டைச் சுவரில்….

நாமோ,
கொலைவாட்களைக்
கோபுரத்தில் ஏற்றிவைத்தோம்.
அவை
நம் மீது விழுந்தே
உயிர் குடிக்கின்றன.

தாயின் மாரில்
வாளிறங்கியபோதும்
தனயன் உறக்கம்
கலைந்திடவில்லை,


என் செய்ய?

 

Monday 17 June 2024

வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாள்

 

வாஞ்சிநாதன் மனைவி பாத்திரம்கழுவி வயிறு வளர்த்தத் தெரு


கொடியவனைச் சுட்டுவிட்டுத்

தன்னுயிர் மாய்த்த

கட்டியவன் வீரவாஞ்சியானான்.

 

நம்பி வந்த பொன்னம்மாள்

நலங்கெடப் புழுதி வீழ்ந்து

நாற்றிசையும் அலைந்தலைந்து,

எச்சில் பாத்திரம் விளக்கியே

எலும்பிடைச் சிறுத்திருந்த

இடும்பைகூர் வயிற்றின்

பசியடைத்தாள்.

 

ஒட்டியிருந்தப் பருக்கைகளைக்

கழுவிக் களைந்தாரோ?

அன்றி,

ஒருவேளை உணவாகுமென

பழையதில் சேர்த்தாரோ?

 

ஒழியா வயிற்றுக்காய்

அவர் பட்ட பாடெல்லாம்

அழியாதிருக்குதையா,

 

அத்தனையும்

மெய்யாய் இருந்ததனால்!

 

வாஞ்சியின் சிலை அருகே ரெங்கையா முருகன்

================

படம் திரு ரெங்கையா முருகன்

Saturday 15 June 2024

எல்லோர் வீட்டிலும் கிடை போடுங்கள்

 

 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மேசை மேல் கிடைபோட்டு கிடக்கிறது கிடை எனும்  மேய்ச்சல் சமூக - பண்பாட்டு ஆய்வுக் காலாண்டிதழ். அவ்வப்போது மென்நிழலில் படுத்து அசைவெட்டும் மாட்டைப்போலே அங்குமிங்கும் போகும்போதும் வரும்போதும் அதன் பக்கங்களை மெல்லத் திருப்பிக் கொண்டிருக்கிறேன்.

சுவரில் முதுகுசாய்த்து உட்கார்ந்து கொண்டு கிண்ணத்தில் இருந்து காரச்சேவு எடுத்துக் கொறித்தபடியே படிக்க ஏதுவான நூலல்ல. மேடும் பள்ளமும் என பல நூறு கிலோமீட்டர்கள் பலநூறு ஆடுகள் / மாடுகளோடு நடந்து, வேளாண்மையின் முகாமையான அங்கமாகிய மண்ணை வளமாக்கும் பணியைச் செய்யும் மேச்சல் சமூகம் குறித்தான வாழ்வியலும் இருப்பும், நாளை குறித்தான கேள்விகளோடும் வார்க்கப்பட்டிருக்கும் காலாண்டிதழ்.

Thursday 13 June 2024

மரத்துப்போன மரம்

 

விரிந்துகிடக்கும்
நெடுந்திடல்களில்
விளையாட்டுச் சிறுவர்களின்
ஆராவாரம் கேளாமல்
பகலுறங்குகின்றன பறவைகள்.
 
பிஞ்சுக்கைகள் தீண்டாததால்
நெடுமூச்செறிகின்றன
பெருமரங்கள்.

பள்ளிப்பாடமும்
வீட்டுப்பாடமும்
பகுத்தறிய நேரமின்றி
மனனம் செய்தே
மரத்துப்போன மனமொன்று
தாளட்டைகளில் செய்துவைத்த
மரங்களின் கீழே
மஞ்சள் வண்ணத்தில் மின்னுகின்றது;

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்"

Sunday 9 June 2024

தாகம்




பால் வீதிகளை மாற்றிப்
பதியம் போட்டாலும் 
ஒரு நாள்
பார்தொழ முளைத்தெழும் 
செங்காந்தள் .

ஆயுதங்கள் மாறியிருக்கின்றன.
போராட்டம்
அப்படியே இருக்கின்றது.

உலைத்துக் கலைந்திட
தாயகம் எமக்குக்
கனவல்ல,
கோடி உயிர்களின்
ஒற்றைத் தாகம்.

Thursday 6 June 2024

சிறகுகள்

 


உன்னால்

பறக்க முடியுமா

என்பதை

உன் சிறகுகள் மட்டுமே

அறியும்.

வார்த்து வைக்கப்பட்டிருக்கும் வரலாறு





நாகர்கோயில் தலைமை அஞ்சல் நிலையத்தில் இருக்கும் இந்த அஞ்சல்பெட்டி பழமையானது. திருவாங்கூர் அரசின் காலத்தில் 1729 ல் அஞ்சல் துறை ஆரம்பிக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அஞ்சல் கொண்டு செல்ல "அஞ்சல் ஓட்டக்காரர்"கள் இருந்தார்கள். அவர்கள், ஒரு கையில் அரசு முத்திரை பதித்த ஈட்டி, மணிகள் கோர்க்கப்பட்ட பட்டையும், மற்றொரு கையில் சிறிய மணியும் கொண்டு ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஓடும்போது "ஓய்.. ஓய்" என்று கூறிக்கொண்டே ஓடுவார்கள். ஒருநாளைக்கு இருபது முப்பது கிலோமீட்டர் தொலைவு கூட ஓடவேண்டியிருக்கும். ஓடும்போது யாராவது தடுத்தால் ஈட்டியால்

Sunday 2 June 2024

இளையராசா 2024 பிறந்தநாள்




மூன்றாம் பிறையல்ல
முழுநிலவு நீ.

அறிந்தோர் உன்னுள்
மலைகளுண்டு என்கிறார்கள்.
அறியாதோர்
அவற்றைக் கறை என்கிறார்கள்.

ஆனால்,
எல்லோருக்குமாக
வெட்ட வெளியினில்
கொட்டிக்கிடக்கிறது
வெள்ளொளியாய் 
உன் இசை.
வாழி நீ!