Tuesday 9 October 2018

96 - தொல்மரபின் நீட்சி


அரங்கெங்கிலும் ஆரவாரம். இருக்கைகள் எங்கும் இளையவர்கள், நடுவயதுடையோர், நரைகூடிய மனிதர்கள். இதில் மிகுதிப்பேர் அழுவதற்குக் காத்திருக்கிறார்கள் அல்லது தெரிந்தே அழுவதற்காக வந்திருக்கிறார்கள். அழுவதற்கென யாரும் வருவார்களா?


நம் கருமயப் பதிவுகளில் பல்லாயிரமாண்டுகால மரபுக்கூறுகளின் படிமங்கள் உறைந்து கிடக்கின்றன.  "அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்" நீட்சி நம் குருதியுடன் கலந்து இருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களிலும் வாழ்ந்த பெருவாழ்க்கையின் பதிவுகள் நம் மொழியெங்கும் விரவிக் கிடக்கின்றன. காதலைக் கொண்டாடிய ஒரு பெருமரபின் வழித்தோன்றல்களே நாம். ஆனாலும், ஐந்திணைகளில் பாலைத் திணையிலேயே அதிகமான அகப்பாடல்களைக் காணமுடிகிறது. அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள, அவற்றின் துன்பச் சுவையை நம் வாழ்வோடு வைத்து எண்ணிப் பார்க்க மொழியறிவின்றி அவலமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

திரைப்படம் ஒரு காட்சி ஊடகம். நகரும் பொருட்களைப் படம்பிடிக்கும் கருவியும், நாடகங்களின் கதை சொல்லும் உத்தியும், நிழலையும் ஒளியையும் கலந்து தொலைவை உணர்த்திக் கதை சொன்ன பாவைக்கூத்தின் தொழில் நுட்பமும் என பல்வேறு கலைகளின் தொகுப்பாய் நிற்கும் பெரும் ஊடகம். அதை ஆக்கஞ் செய்யும் முறை ஒரு கலை. நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத இலக்கியங்களை, நிகழ்வுகளை, செய்திகளை ஒரு திரைப்படத்தால் எளிதாக நமக்கு அறிமுகம் செய்துவிட முடியும்.

அப்படித்தான் சட்டென்று இருளுக்குள் விரிகிறது பாலைத்திணை பாடும் பிரேம்குமாரின் 96. நீரில்லாத ஆற்றுப்பாலத்தில் யாருமற்ற தனிமையில் உறைகிறது ஒரு காட்சி.  இராமின் நினைவுகளில் குறிஞ்சிக் கவிதையாய் அவனைச் சந்திக்க நிமித்தங்கள் தேடும் ஜானகி. கூடவே ஒரு தோழியும். அகம் உணர்த்த முயலும் குறும்புகள். பண்டு வந்துபோன பள்ளிக்கூடம், அதில் வாழ்ந்த அவனுடைய வாழ்க்கை. இவை எல்லாவற்றையும் கொஞ்சங் கொஞ்சமாய் காட்சிகளாக விரிக்கிறது படம்.

"எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்"

என்கிறது தொல்காப்பியம். இது நமக்குள்ளும் நிகழ்ந்திருக்கும். எல்லோரும் எல்லாவற்ரையும் வெளியில் சொல்வதில்லை. வெளியில் சொல்லப்படாததால் அது நம்மிலிருந்து மறைந்துவிடுவதும் இல்லை. அதனால் தான் நாம் படத்துடன் ஒன்றி விடுகிறோம். இதுபோன்று வேறு படங்கள் வந்ததே இல்லையா என்றால், வந்திருக்கின்றன. அவைகளும் இது போன்ற ஒரு நிலையை அரங்கிற்குள் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் காதல் தொட்டு எடுக்கப்படும் எல்லா படங்களும் அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. என்றோ ஒரு நாள் நாம் உணர்ந்த அளவிலேயே காட்சிகள் அமைக்கப்பட்ட படங்களே நம் உள்ளத்தின்  அருகே வந்துவிடுகின்றன.  இந்தப் படத்தில் களவின் மெய்ப்பாடுகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப் படுகின்றன.

பிரிதலும், பிரிதல் நிமித்தமும் பாலையின் உரிப்பொருள். இராமின் தந்தையின் பொருட்பிணிப் பிரிவு ராமை சொல்லிக்கொள்ள முடியாமல் ஜானகியிடமிருந்து பிரிக்கிறது. வரும் நாள் அறிந்திருந்தால் இன்பத்தை அறிவு நிலையில் வைத்து எண்ணிப் பார்க்க ஜானுவால் இயன்றிருக்கும். ஆனால், ஏதும் அறியா நிலையில் அவளுடன் சேர்ந்து படம் பார்க்கும் கூட்டமும் உள்ளுக்குள் உடைகிறது. நிறைய படங்களில் கண்ட காட்சிதான் எனினும் அகநாநூற்றின் ஒரு பாடல் போல பின்னப்பட்டிருக்கும் காட்சி அமைப்புகள், அந்த பிரிவின் அடர்த்தியை நம்மீது விரவுகின்றன.

சேர்ந்திருக்கும் போது இன்பத்தை உணர்வோம், அதை எண்ணி மகிழ காலம் இருக்காது. ஆனால் பிரிவு மட்டுமே எண்ணி மகிழச் செய்யும் தன்மை உடையது. அப்படியொரு மகிழ்வோடு வாழுகிற இராம், அவனுடைய ஒவ்வொரு நொடியையும் நமக்குள் விதைக்கிறான். அதில் ஐந்திணைப் பூக்களும் மலர்கின்றன. பாலைத் திணையின் சிறப்பே இதுதான். சிறந்த படைப்பாளியால் பாலைக்குள் ஏனைய திணைகளை வைத்துவிட முடியும். மற்ற திணைகளுக்கு இந்த வாய்ப்பில்லை. அந்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

முழுவதும் இல்லையென்றாலும் மிகுதியும் மரபை ஒட்டியே படம் நகர்கிறது. அதை அவர் என்னுடைய பார்வையில் தான் பார்த்தாரா, தொல்காப்பியம் தொட்டு படமெடுத்தாரா என்பது தேவையில்லை. ஆனால் மற்ற இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இது.  உங்கள் உள்ளுக்குள் இருக்கிற மரபை உங்கள் படைப்புகளில் கையாளுங்கள். அது கண்டிப்பாக பார்பவர்களை இருக்கைகளோடு கட்டிப்போடும்.  96 படம் முடிந்து வெளியே வருகிறபோது நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டு போன ஒருவரைப் பார்த்தேன். கண்ணிரைத் துடைத்துக் கொண்டே வெளியேறிய ஏராளமான ஆண்களை, பெண்களைப் பார்த்தேன். இது பல்லாயிரமாண்டுகளாய் மரபைச் சுமக்கும் மண். ஊமைக்கூத்தில் உணர்வுகளை இன்னொருவருக்கு பகிர்ந்த கலையின் பிறப்பிடம். அது இன்னும் கூட "கதகளி" என கேரளத்தில் நிகழ்த்தப் படுகிறது. கலையின் சரியான வெளிப்பாட்டை மக்கள் புறந்தள்ளுவது இல்லை. அப்படித்தான் 96 என்ற இந்தப் பாலைக் கவிதையை ஆரவாரித்து, அழுது, உடைந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் தந்தையாரின் காலத்தில் குடும்ப உறவுகளைப் பற்றிய படங்கள் வந்தன. அது உறவின் மரபுகள் மங்கத் தொடங்கிய காலம். நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சண்டைக்காட்சி வரும் போதெல்லாம் கைதட்டினார்கள். அது வீரம் மங்கத்தொடங்கிய காலம். இப்பொழுது 96 ஐப் பார்த்து அரங்கிற்குள் ஆரவாரம் செய்கிறார்கள். இது ??. . மரபை மீட்டெடுப்பதற்கான காலம் என நான் கருதுகிறேன். படைப்பாளிகள் அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
09/10/2018


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்