Monday 26 June 2023

மாரி செல்வராசு - மாமன்னன்

 


"தமிழ் திரைப்படங்களில் நகரத்தைக் குறித்து உருவாக்கும் கதைகளைக் குறித்து நான் நிறைய வருத்தப் பட்டிருக்கிறேன். அவங்க நகரமாகவே யோசித்து விடுகிறார்கள் அதை. எப்படிப் பார்த்தாலும் அதனுடைய வேரை, கிராமத்தை தவிர்த்துவிட்டு; இங்கேயே நகரத்தில் முளைத்த உயிர்னு ஒண்ணு இருக்கில்ல அதற்குக் கூட கிராமம் சாராத வாழ்வுன்னு ஒண்ணு இல்லவே இல்ல. ஏதோ ஒண்ணு,  ஏதோ ஒரு வேர் அங்கதான் இருக்கு."

அண்மையில் சுதிர் சீனிவாசனுடனான நேர்முகத்தில் இயக்குநர் மாரி செல்வராசுவின்  இந்தச் சொல்லாடல்களினூடே, கலையின் மீதான மிக நுணுக்கமான பார்வை கொண்ட படைப்பாளியை, அது தவறுகின்றபோதெல்லாம் வருந்துகிற கலைஞனை, சமூகத்தின் எல்லாப் பக்கங்களையும் காட்டிவிடத் துடிக்கிற எழுத்தாளனைக் காண முடிந்தது.

"இங்க நாம்ம ஒரு சைக்கோ திரில்லர் பண்றோம் இல்ல அதமாதிரி ஏதோ ஒண்ணு பண்றோம்னா, நாம பார்த்த ஐரோப்பிய சினிமாவின் மாதிரியிலேயே அத படமாக்குகிறோம். ஆனால் நம்ம சைக்கோ மனம் வேறு. நம்ம ஊர்ல ஒரு சைக்கோபாத், சோசியோபாத் இருக்கான்னா நாம அவன நம்ம உளக்கருத்தியலில் கையாள்வது கிடையாது. நாம ஐரோப்பிய மாதிரியாகத்தான் கையாள்கிறோம்."

"இங்க ஒரு சமூகமுரணி (Sociopath) உருவாகிறான் என்றால் அவனுடைய எல்லா படிநிலைகளும் நம்ம ஊரு வாழ்வியல் படிநிலைகள்தானே? அத கவனிக்கணும் இல்ல. ஆனா அத விட்டுட்டு நவீனப்படுத்துகிறோம் என்று வேற ஒரு உளக்கருத்தியலில் அத காட்டுறோம். நம்ம ஊர்ல இன்னும் அத மாதிரியான படங்கள் வரல. அது வரும் போது கிராமம் நகரம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் போய்விடும்."

"இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவனால கண்டிப்பா பின்னோக்கிப் போகாமல் இருக்க முடியாது. இங்கே எழுபது வயது வரை வாழும் ஒருவர் அவருடைய எழுபதாவது வயதிலாவது பின்னோக்கிப் பார்க்காமல், அவருடைய வேருக்குப் போகாமல் மரணத்தை அடைய மாட்டார் என்று நான் நம்புகிறேன்"

இப்படி தன்நேர்மையோடு சிந்தித்துப் பேசும் இந்தப் படைப்பாளியை வியப்போடு பார்க்கிறேன். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வணிக நோக்கும், திறமையும், அதற்கான பெருவாய்ப்பும், அதைச் செயல்படுத்தும் திறனும் கொண்ட நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் போதும், சமரசமின்றி இந்த நேர்மையை ஒரு படைப்பாளியாக மாரி நிறைவேற்றியிருப்பார் என எண்ணுகிறேன். வணிகத்தத் தாண்டி படத்தில் ஊற்றெடுக்கும் உண்மையின் விகிதம் தான் மாமன்னனா? மன்னனா? என்பதைத் தீர்மானிக்கும்.

வாழ்த்துக்கள் மாரி.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்