Monday 25 June 2018

கசடற...

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."

தெரிந்த குறள்தானே இதிலென்னப் புதிதாய் என்று நிறுத்திவிடாதீர்கள். கொஞ்சம் இந்தக் குறளுக்குள் இறங்கி மூழ்கிப் பார்ப்போம்.

ஒற்றைச் சொல்லில் உலகளக்கிற சொல்லாளுமை வள்ளுவப் பேராசானுக்குக் கைவந்தக் கலை.  முதலில் "கற்க" என்று கட்டளை இடுகிறார். உயிரென இந்த உலகில் பிறந்தால் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டளைச் சொல் பயன்படுத்துகிறார். யானையாய் இருந்தாலும் தன் தடமறிந்து பயணம் செய்யக் கற்றிருக்கவேண்டும். இல்லையெனில் பருவ மாறுபாடுகளின் போது உணவுக்காய் பரிதவிக்கவேண்டி வரும். எறும்பாய் இருந்தாலும் மழை வருவதை அறிந்து உணவு சேகரிக்கக் கற்றிருக்க வேண்டும். புலிக்குட்டியும், பூனைக்குட்டியும் தம் பெற்றோரிடமிருந்து வேட்டையாடக் கற்றுக்கொள்வதைப் போல.

அப்படியெனில் "கற்றல்" என்பது "படித்தல்" அல்ல என்று விளங்கிவிடுகிறது. சரி நம்மிடம் வந்து ஒருவர் "கற்க" என்று கட்டளையிட்டால், உடனே  நாம் "ஏன் கற்கவேண்டும்?, எதற்காக" என்றெல்லாம் கேள்வி கேட்போம்.

அதற்கான பதிலை "கசடற" என்று இரண்டாவது சொல்லில் வைக்கிறார்.
"கசடு" என்றால்? ஒரு பொறுள்குறித்த உள்ளத்தின் ஐயப்பாடுகளே கசடுகள். பாலில் கொஞ்சம் மோர் ஊற்றி உறையவிட்டால் அது தன் நிலையை மாற்றித் தயிராகிவிடுகிறது. அதை நாம் கேட்டுப்போன பால் என்று சொல்வதில்லை. உறைந்து நிற்கும் தயிரைக் குடிக்க ஏதுவாக கடைந்து மோராக்குகிற போது, அதன் திடக்கசடு வெண்ணெய்யாய் வெளிவந்து மிதக்கிறது. வெண்ணெய்யை உருக்கி நெய்யாக்குகிறபோது, நெய்யுடன் கொஞ்சம் கசடு கீழே மிஞ்சுகிறது. நாம் பாலை அப்படியே குடிக்கிறபோது இந்தக் கசடுகளைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அவையெல்லாம் அதற்குள்ளே தான் இருந்துகொண்டிருந்தன.

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் போகும் போது ஐயப்பாடுகளை அதாவது கசடுகளை நீக்கிக்கொண்டே செல்லவேண்டியிருக்கிறது. அதனால் தான் கசடற வேண்டுமெனில் கற்க என்று பேராசான் கட்டளையிடுகிறார்.

வள்ளுவர் வாக்கினை ஏற்று நாம் கற்க ஆரம்பித்துவிட்டோம் என்று வையுங்கள், எதைக் கற்றுக் கொள்வோம்? அவரவர்க்கு எதில் ஐயப்பாடுள்ளதோ, எதன் கசடை அறுக்கவேண்டுமோ, எதில் அடுத்த நிலையை எய்தவேண்டுமோ அதைத் தானே கற்றுக்கொண்டிருப்போம். அதனால் தான் அதற்கான சொல்லை "கற்பவை" என்று அவரவர்க்கு உரியதாய்ப் பொதுமைப் படுத்துகிறார். ஏனெனில் வெண்ணெய் வேண்டுமென்று மோரைக் கடைந்து கொண்டிருப்பது வீண்வேலை. இது வள்ளுவருக்கும் தெரியும்.

சரி... ஐயம் தீரக் கற்றுக்கொண்டாகிவிட்டது. அவ்வளவுதானே என்று நாம் எண்ணுகிறபோது இந்தக் குறளின் முகாமையான சொல்லை நிறுவுகிறார் வள்ளுவர்.

"நிற்க"

நிற்க என்றால், ஏதோ ஒரு பக்கத்தில் நூலிழை சாய்ந்தாலும்கூட மண்ணில் பிடிப்பின்றி  நிற்கிற பொருட்கள் மண்ணின் ஈர்ப்புவிசையில் முழுதும் சாய்ந்து கீழே விழுந்துவிடும். செங்குத்தாக, அதாவது எந்தப்பக்கமும் சாயாமல் நிற்கிற பொருட்கள் விழுவதில்லை. கற்றபின், கசடறுந்து இப்படித்தான் , மறுபடியும் அந்த ஐயப்பாட்டின் மீது சாயாமல் "நிற்க", செங்குத்தாக ஐயமற நிற்க என்கிறார் வள்ளுவர்.

ஆனால், உடனடியாக ஒருவர் முற்றும் உணர்ந்தவராய் ஆகமுடியாது என்று தெரிந்துதான் "அதற்குத் தக" என்று முடிக்கிறார். அதற்குத் தக என்றால், எந்த ஐயத்திற்காகக் கற்றுக்கொண்டீர்களோ, அந்த ஐயம் அறுந்து அதற்குத் தக நிற்க என்கிறார்.


ஆனால், நமக்கு என்னச் சிக்கல் என்று பார்த்தோமானால் " வெள்ளைச் சர்க்கரை தீதோ?" என்று ஐயம் வந்துவிட்டது. உடனே  அதுபற்றி அறிந்து கொள்ள முனைகிறோம். அதில் கந்தகம், குளோரின் போன்ற வேதிப்பொருட்கள் எல்லாம் கலக்கப்படுகிறது என்று அறிந்துகொள்கிறோம்.  அறிந்தபின்னும் "நிற்க அதற்குத் தக" என்று நிற்காமல் போனோமே...

ஏனெனில் நாம் கற்கவில்லை. படிக்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------

இதன் ஒலிப்பதிவு

கசடற... ஒலிப்பதிவு


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்