Friday 4 August 2017

காவிரிக்கரையிலிருந்து கோட்டாற்றங்கரை நோக்கி....





     நேற்று (03/08/2017) முழுவதும் ஏதோ ஒன்றை பற்றிகொண்டது போலவும், ஏதோ ஒன்றை இழந்தது போலவும் ஒரு கலவையான உணர்வில் கடந்து போனது. காலையில் முகநூல் நண்பரொருவரின் பதிவும் மாலையில் இன்னொரு நண்பரின் நேரலைக் காணொளியும் இதற்குக் காரணமாயின.

முதலில்:-

  அம்மா மண்டபத்துல பத்து தீயணைப்புப் படை வீரர்கள் மூனு படகுகளை கயிறு கட்டி இழுத்துக்கிட்டு அலையிறாங்க...
Flood rescue team-ஆம்... 
 என்று முகநூல் பதிவு. முதலில் வேடிக்கையாகத் தோன்றினாலும் உள்வாங்கிய பின்பு யாரோ உச்சந்தலையில் இடி இறக்கியது போன்ற வேதனையைத் தந்தது. எத்தனைத் தவறிழைத்திருக்கிறோம்? எப்படி இதைச் சரி செய்வோம்? 

இரண்டாவது;-

  தாழக்குடி யில் இன்று ஆடி பெருக்கு திருவிழாவின் முளைப்பாரி கரைக்கும் விழா-” என்றக் காணொளி ஒருவித ஈர்ப்பையும், மகிழ்ச்சியையும் தூண்டினாலும் பெரும் அயர்ச்சியைத் தந்தது. கண்முன்னே நிகழும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என்ன நேர்வினையாற்றப் போகிறோம்.

    வேறுவேறு இடங்களில் நடந்த ஒரே காரணந்தொட்ட இந்த நிகழ்வுகள், நாம் நம்முடைய மரபு சார்ந்த விழாக்களை எத்துணை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நம் பிள்ளைகளுக்கும் அதையே கடத்திவிட்டோம் என்கிற கொடுமையையும் கன்னத்தில் அறைந்தது போல் சொல்லிச்சென்றன.

ஆடிப்பெருக்கு விழா” 

    ஆடிமாதப் புதுப்புனல் பெருக்கெடுத்துவர, அதில் நீந்தியும், விளையாடியும் சோறுண்டுக் களித்தும் பெருந்துறைகள் தோறும் நடந்த நீராட்டுவிழா.

"செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,             5
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,                                  10
காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,                                15
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!"
                                                அகநாநூறு- 376 - பரணர்
  
"உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
நாணிலை மன்ற-யாணர் ஊர!
அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,
குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின், -
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்          

கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும்,
வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்,
விடியல் வந்த பெருநீர்க் காவிரி,             
                                 
தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு
முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள்,
வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி       

போரடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே".
                                     அகநாநூறு- 226 - பரணர்

    சங்கத் தமிழர் கொண்டாடிய பல விழாக்களின் பெயர்களை அகநானூற்றில் காணலாம். சங்க காலத்தில் விழா என்று சொல்லாமல் விழவு என்பர்.

கழார்ப் புதுப்புனல் விழவு (சோழநாட்டில் காவிரியில் நீர்ப்பெருக்கு வரும்போது கழார் என்று பெயர்கொண்ட பெருந்துறையில் நீராட்டுவிழா நடந்தது)

விழா

   கரிகாலன் சுற்றத்தொடு வீற்றிருக்க கழார்ப் பெருந்துறையில் நீராட்டுவிழா நடைபெற்றதென பரணர் (அகம் 376) பாடல் தெரிவிக்கிறது. பெருகிவரும் நீரில் ஆட்டனத்தி நீர்நடனம் நிகழ்த்துகிறான். 
 
   "நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்,
    விடியல் வந்த பெருநீர்க் காவிரி,               
                            
    தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு
    முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள்,"
 என்கிறது பரணரின் பாடல் (அகம் 226) 

பெருநீர்----
         இரவெல்லாம் இடியும், மின்னலும் பெரு மழையும் பெய்து, மறுநாள் விடியலில் நெடிய வெண்மருதுகளும், பெரு வஞ்சி மரங்களையும் சாய்த்துவிடும் வேகத்தில் காவிரியில் பெருக்கெடுத்து வரும் புதுவெள்ளம். அப்படியொரு புனலில் ஆடிக்களிப்பதே “பெருக்கு”
.
உணவு--- 

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியடு தூங்கி
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்
தாம் நம் உழையராகவும் நாம் நம்
பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் தோழி நம் காதலோரே
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள்
தோழிக்குச் சொல்லியது ஆற்றாள் எனக்
கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்

                              கழார்க் கீரன் எயிற்றியார்.  நற்றிணை 281
"மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியடு தூங்கி"
     மாசற்ற மரங்கள், காக்கைச் சிறகசைத்துப் பறக்கமுடியா பெருங்காற்று இவையெல்லாம் அது ஆடித்திங்கள் என்பதையே காட்டுகின்றன. கழார்த்துறையில் ஆடிமாத நீராட்டு.

"விடக்குடைப் பெருஞ் சோறு"

    விடக்கு- கறிக்குழம்பில் ஒரு வகை. விடக்குடன் பெருஞ்சோறு கழார்த்துறையின் கரையெங்கும் வழங்கப்பட்டது.
    புதுப்புனல், பெருவெள்ளத்தில் ஆடிக்களித்து உற்றாரோடும் உறவோடும் கலந்து சோறுண்டு மகிழும் ஒரு விழாநாளே ஆடிப்பெருக்கு. காவிரியின் கரையெங்கும் இவ்விழா கொண்டாடப்பட்டது. முல்லையிலிருந்து மருதம் புகுந்த மாந்தர் தன் இயல்பான ‘புதுவெள்ளம் பார்த்து மகிழ்ந்து களிப்பதை’ இங்கும் தொடர்ந்திருக்கவேண்டும். நம் மரபறிவென்பதே இயற்கையிடமிருந்து நாம் பெற்றதே. மன்னர்கள் ஆண்டுக்கணக்குகள் தெளிவுசெய்த போது ஆடி மாதத்தின் 18ம் நாள் புதுப்புனல் வரவு அமையவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டிருக்கலாம். அப்படி முடியுமா என்றால் தென்னன் மெய்ம்மன் https://www.facebook.com/profile.php?id=100015069696713  அவர்களின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். நான் சொல்ல முனைந்தால் இந்தப் பதிவே விரியும்.

03/08/2017 ஆடிப்பெருக்கு- காவிரி. 

      இப்படி ஆடிப்பெருக்கை நாம் புதுப்புனலாடுவது என்று உள்ளக்கிடக்கையோடு உணர்வில் ஒன்றிக் கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் புதுத் துணி உடுத்துவது, தாலிச்சரடு மாற்றிக்கொள்வது, நீருக்கு நன்றி சொல்வது, தர்ப்பணம் பண்ணுவது, கோயிலுக்குப் போவது என்று ஒரு கட்டத்துக்குள் அடைக்கிற சடங்காய் மாற்றிவிட்டோம். ஆம். ஆடிப்பெருக்கு இன்று ஒரு சடங்குபோல் நடத்தப்படுகிறது. அரைமணி நேரத்துக்குள் தண்ணீல்லாதக் காவிரியை விட்டு விலகி விடுகிறோம் .புதுப்புனல் ஆடிக்களிக்காத “ஆடிப்பெருக்கு” பொருளற்றது என்ற எண்ணம் நமக்குத் தோன்றவில்லையே?  ஏன்?   காவிரி நம் உணர்வுகளில் இல்லாமல் போய்விட்டாளா? இந்தப் பரந்த ஆற்றுச் சமவெளியில், ஆடித்திங்களின் தொடக்கம் முதலே பெருநீர் வரவேண்டும். இயற்கையின் விதி அதுதான். அது பிழைக்கிற போதெல்லாம் அரசு அதற்கான காரண காரியங்களைக் கண்டு களையவேண்டும். மக்களும் காவிரியைக் கொண்டாடவேண்டும். போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சொட்டுகிற குழாயிலிருந்து இரண்டு துளி நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு புது மஞ்சள்கயிற்றை மாற்றிக்கொண்டு, கொடுமணற் சூட்டில் நடந்து வருகிறோமே இதுவா ஆடிப்பெருக்கு. கோயிலில் சொல்லப்படும் மந்திரத்தில் எப்படி நம் உடை அவிழப் புனலாடுவது. இந்தச் சடங்கையா “பெருக்கு” என்று நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரப் போகிறோம். வெட்கம்.
   ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கும் மேல் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறாள் என்று புவியியல் சொல்கிறது. அவள் கரையெங்கும் எம் முன்னோர் ஆடிய பெருந்துறைகள். எம் பண்பாட்டின் வளர்ச்சியைச் சுமந்து நிற்கும் ஊர்கள். புதுப்புனலாடவேண்டும் என்ற வேட்கையோடு வாழ்ந்த நம் முன்னோரின் உணர்வு நம்மிடம் இல்லாது போனது பெருங்குறை. ஆற்றை நேசித்த அவர்களின் வாழ்வியல் முறையின் வழிவரும் தலைவர்களை, அரசைத் தேர்ந்தெடுக்காமல் போனது பெரும்பிழை. இதற்கு அந்த வாழ்வியலைத் தொலைத்த நாமும் ஒரு காரணமே.
    காவிரியை நம் உணர்வுகளில் ஏற்றுவோம், உணர்ச்சியில் மட்டும் அல்ல. அவள் பெருக்கெடுத்து வரவேண்டும் என்று வேட்கை கொள்வோம். நம் குழந்தைகளிடமும் அந்த உணர்வை வளர்ப்போம். ஆடிப்பெருக்கும், உறந்தை விழவும், கூடல் விழவும் வேண்டும் வேண்டும் என்று பெருவேட்கை கொள்வோம். இந்த வேட்டலே உணர்வைப் பெருக்கும். பொது உணர்வே உரிமைப் போராட்டங்களில் வலு சேர்க்கும். அந்த உணர்வே நாளை அவள் வந்து சேர்வதற்கான வழியைத் திறக்கும். அவள் வருவாள். வானமலை கறுத்து பெருமுழவின் ஒலியெழுப்பி வருவாள்.

கோட்டாற்றுக் (பழையாறு) கரை.

    எனக்குத்தெரிந்து நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை “ஆடிப்பெருக்கு” அறியாத ஊர் எங்களுடையது. 1977 வாக்கில் ஆனந்த விகடனில் வந்த ஒரு கேலிச்சித்திரம்
   
       “ என்ன வேலைக்காரி ஆடிக்கிட்டே வீடு பெருக்குறா?
        அதுவா.. இன்னைக்கு ஆடிப்பெருக்குன்னு சொன்னேன் அதான்.
        ஓ ’’

        இது புரியாமல் நீண்டநாட்கள் தவித்தது இன்னும் நினைவிருக்கிறது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கக் கூடும். இப்படிப்பட்ட என் மண்ணில் ஆடிப்பெருக்கு முளைப்பாரி எடுத்துக்கொண்டு போவதைப் பார்க்கையில் அயற்சிதான் வருகிறது. 
03/08/2017 ஆடிப்பெருக்கு-தாழக்குடி-குமரி மாவட்டம்

     சித்திரைப் பத்தில பத்துல வித்து விழும்” என்ற சொல்லாடல் கொண்ட ஊர் அது. சித்திரைப் பத்தாம் நாள் பயிர்த்தொழில் தொடங்க ஏதுவான மலைவளம் மற்றும் மழைவளம் கொண்ட பகுதி அது. இதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக தாழக்குடி “சேந்த நாதன்” கோயிலில் அந்த குறிப்பிட்ட நாளை ஒட்டி கதிரவன் ஒளி உள்ளே சிலை மீது விழுமாறு அமைத்திருக்கிறார்கள். வைகாசி மாதமே ஆறுகளில் நீர் பெருக்கெடுக்கும். ஆனிச் சாரல் சில்லிட ஆறெங்கும் வெள்ளக்காடாகும். ஆறு என்றவுடன் ஏதோ பேரியாறு என்று நினைத்துவிடாதீர்கள். சிற்றாறு ஒன்று. கால்வாய்கள் நிறைய. எல்லாவற்றையும் சேர்த்துக் காவிரிக்குள் வைத்துவிடலாம். வைகாசியிலேயே ஆடித்தீர்க்கவேண்டிய “பெருக்கை” ஆடியில் புதிதாக ஆரம்பித்த காரணம் புரியவில்லை. ஒரு சடங்காகத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
       இயற்கையைப் புரிந்து கொண்டு நேசித்த நிலை மாறி சடங்காய்ப் போனதால் காவிரிக்கரையில் கொடுமணற் சூட்டிலும், கோட்டாற்றுக் கரையில் காலங் கடந்தும் எம் முன்னோர் பேரறிவு வெற்றுச் சடங்காய்க் காட்சியளிக்கிறது.
உணர்வோம்.

2 comments:

  1. அருமை ஐயா. சேர நாட்டில் இருந்த 8 நாடுகள் பற்றி ஒவ்வொரு நாடு வரலாறு நீங்கள் எழுதினால் உதவியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியதையும் முயற்சிக்கிறேன். கொஞ்சம் தரவுகள் இருக்கின்றன.

      Delete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்