Wednesday 12 October 2022

வேள்பாரியைக் கொன்றது மூவேந்தர்களா?

 


===================

கதையல்ல வரலாறு

===================

வேள்பாரியின் இறப்புக்குக் காரணமான மூவேந்தர் குறித்து எனது பதிவும், அதற்கு பின் ஐயா சி.அறிவுறுவோன் அவர்களுக்கும் எனக்கும் நடந்த சிறு தருக்கமும்.

பறம்புமலையின் வேள்பாரி இறந்துபட்ட பின் பாரியின் அணுக்கத் தோழனும் பெரும் புலவருமான கபிலர் சென்ற முகாமையான இடங்களில் ஒன்று செல்வக் கடுங்கோ வாழியாதனின் கருவூர். சேர நாட்டின் தலைநகரம். சேரப்பெருவேந்தன் கடுங்கோவைப் பார்த்து அவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தில் இருக்கின்றன. அதில்

முதல் பாடல்...

"பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்

வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,

ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,

பாவை அன்ன நல்லோள் கணவன்,

பொன்னின் அன்ன பூவின், சிறியிலை,

புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,

புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,

மலர்ந்த மார்பின், மா வண் பாரி

முழவு மண் புலர, இரவலர் இனைய,

வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என,

இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;

'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;

ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்

நல் இசை தர வந்திசினே யொள்வாள்  

உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை

நிலவி னன்ன வெள்வேல் பாடினி

முழவிற் போக்கிய வெண்கை

விழவி னன்னநின் கலிமகி ழானே."   

பலாப்பழங்கள் மிக்கப் பழுத்ததால் வெடித்து ஒழுகும் தேன், வாடைக்காற்றில் கலந்து மணம் வீசும் நாட்டின் வீரம் மிக்கத் தலைவன், மிகச் சிறந்த ஓவியம் போன்று புனையப்பட்ட வீட்டில் பதுமை போன்ற நல்ல பெண்ணின் கணவன், பொன் போல் பூத்துச் சிறிய இலைகளுடன் தோன்றும் உன்ன மரம் வாடிய குறியைக் காட்டினாலும், அந்தச் சகுனத்தைப் பொருட்படுத்தாமல் போருக்குச் சென்று வெற்றி காண்பவன் என் தலைவன். பரந்த மார்பு, மார்பில் காய்ந்த சந்தனம், காயாத ஈகை, பெருங்கொடையாளன் பாரி. அவன் திரும்பி வாராத இடத்துக்குச் சென்றுவிட்டான். எனவே கொடை தருகஎனக் கேட்டு உன்னிடம் நான் வரவில்லை. மிகைபட உன்னைப்பற்றிப் புகழ்ந்து கூறவில்லை.

நீ தந்துவிட்ட பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று உன்னைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். கொடுக்கும்போது பெருமையாக எண்ணி மகிழ்வதும் இல்லையாம். கொடுக்கும்போதெல்லாம் மிகப் பெரியதைக் கொடுப்பாயாம். இப்படி உன்னைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்களே, பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்.

உன் யானை புலால் நாற்றம் அடிக்கும் பாசறையில் இருக்கிறது. நிலாவைப் போல் குளுமையான வெள்ளைநிற வேலைக் கையில் ஏந்திக்கொண்டும், அவ்வப்போது தன் முழவை முழக்கிக்கொண்டும் பாடினி பாடியாடும் விழாக்கோலம் பூண்டுள்ளதே என்று உன் பாசறையைக் காண வந்துள்ளேன். அவ்வளவுதான். என்று கடுங்கோவின் முன்னே பாடுகிறார்.

மலர்ந்த மார்பின் மாவண்பாரியை, தன் உயிர் நண்பனைக் கொன்றெறிந்தச் சேரனை கபிலரால் பாடமுடியுமா? இல்லை கடுங்கோவின் நேரே நின்று அவன் எதிரியைப் புகழ்ந்து பாடத்தான் முடியுமா?

ஆனால், வெளியே பேசப்படும் கதைகள் கொஞ்சம் இடிக்கிறது. மூவேந்தர்கள் வேள்பாரியை வஞ்சித்துக் கொன்றார்கள் என்றால் கபிலரால் பாரி இறந்தபின் சேரமன்னனைப் எப்படி பாட முடிகிறது.

பாடல்களின் பொருளை ஆய்ந்தறிந்து கொள்ளவேண்டும் போல இருக்கிறது. போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்ல இது கதையல்ல. வரலாறு.

வேந்தர் என்று யாரும் பிறந்து வரவில்லை. வேளிர் காலம் தாண்டி மெல்லமெல்ல பேரரசுக் காலம் தொடங்கிய போது வேந்தர் உருவாயினர். சில வேளிரே வேந்தராயிருத்தலும் நடந்திருக்கலாம். கைலாசபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் வேந்தர் புகழ்பாடும், பாணர் மரபு அழிந்து புலமை மரபு மேலோங்கிய காலமாகவும் கொண்டால்; வேளிரைப் பாடிய பாணனாகவும் வேந்தனைப் பாடிய புலவராகவும் கபிலரைப் பார்த்தல் தகுமா? பொய்யில் கபிலன் என சமகாலத்துப் புலவர்களால் புகழப்பட்ட கபிலரை அப்படி எண்ணிப்பார்ப்பது சரியா?

அறிவுருவோன் ஐயா

அப்பாடலில் சொல்லப்பட்ட மூவேந்தருள் சேரன் சேரர் கிளைஞரில் ஒருத்தனாக இருத்தல் வேண்டும். கபிலர் பாரியின் வலிமையை மிகுத்துக்காட்ட மூவேந்தரும் இணைந்து போரிட்டனர் என்று பொய் கூறியிருந்திருக்கமாட்டார். இனக்குழுக் குமுகத்தை வெற்றிகொள்ள மூவேந்தர் இணைவு தேவைப்பட்டிருந்திருக்கும். இது மகட்பாற்காஞ்சியின் இரண்டாவது கட்டம்.

நான்

"நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்" - புறம் 109

"கடந்து அடு தானை மூவிரும் கூடி" - புறம் 110

இந்த இரண்டு வரிகளைப் பொதுவாக சேர சோழ பாண்டியர் என்ற பொதுப்பெயரில் பொருள்கொண்டே உரைகள் மிகுந்து கிடப்பதால்....

"புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,

மலர்ந்த மார்பின், மா வண் பாரி

முழவு மண் புலர, இரவலர் இனைய,

வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என,

இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;" - என்ற பதிற்றுப்பத்தின் வரிகள் மீதான ஐயம் பிறக்கிறது.

பொய்யில் கபிலரின்,

"செல்வக் கோவே சேரலர் மருக

கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி

நனம்தலை உலகஞ் செய்தநன்(று)

உண்(டு)எனின்

அடைஅடுப்(பு) அறியா அருவி ஆம்பல்

ஆயிர வெள்ள ஊழி வாழி

யாத வாழிய பலவே" : என்னும் வரிகள் ஐயத்தை மேம்படுத்துகின்றன.

"கபிலர் வாழ்ந்த காலத்தில், சோழ பாண்டிய நாடுகளில் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் சிறந்திருந்தனரேயன்றி, முடிவேந்தர் எவரும் புலவர் பாடும் புகழ் கொண்டு விளங்கவில்லை. இந்நிலையைக் கபிலர் பாடிய பாட்டுகளைக் காண்போர் நன்கு காணலாம். இந் நிலையால் நாட்டில் வாழ்ந்த பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலிய பலரும் செல்வக் கடுங்கோவின் திருவோலக்கம் நோக்கி வருவாராயினர். அவர்கட்கு ஏற்ற வரிசையறிந்து வரையா வள்ளன்மை செய்த கடுங்கோவின் புகழுக்கு எதிரே அச் சோழ பாண்டியர் பெயரும் பிற செல்வர் சிறப்பும் விளங்கித் தோன்றவில்லை. இதனைப் புலமைக் கண்கொண்டு நோக்கிய கபிலர், வேந்தனை நோக்கி, “சேரலர் பெரும், விசும்பின்கண் ஞாயிறு தோன்றி ஒளிருங்கால், அங்குள்ள விண்மீன்கள் ஒளியிழந்து அஞ் ஞாயிற்றின் ஒளியில் ஒடுங்கிவிடுகின்றன; அதுபோலவே, நின்புகழ் ஒளியில் ஏனைவேந்தர் அனைவரும் ஒளியிழந்து ஒடுங்கிவிட்டனர்; பரிசிலர் கூட்டம் நின்னை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது; அதே நிலையில் அக் கூட்டத்திடையே நின்பால் வந்தபின் பசியும் இல்லை; பசியுடையோரைக் காண்பதும் அரிது; அம் மகிழ்ச்சி யாலன்றோ நின்னை இப் பாசறை இடத்தே காண வந்தேன்என்று பாடி அவனை மகிழ்வித்தார். வந்தோர் பலருக்கும் விடை கொடுத்த கடுங்கோ - கபிலரை மட்டும் தன்னோடே இருத்திக் கொண்டான்." என்ற ஔவை துரைசாமி ஐயாவின் "சேரமன்னர் வரலாறு" நூலின் செய்திகளும் எளிதில் மறுக்க இயலாதவை.

மேற்கண்ட புறப்பாட்டுகளின் ஐயம் தீர்க்கும் முடிச்சுகள் எங்கேனும் காணக்கிடைக்கிறதா ஐயா? இருந்தால் சொல்லுங்கள் ஐயா.

ஐயா அறிவுருவோன்

புறநாநூற்றில் வரும் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் இனக்குழுக் குமுகம் முற்றாக அழியும்வரை போரிடுவர் என்பதை மரம்படு சிறு தீயாகத் தலைவியை உவமித்திருப்பதன் மூலம் சுட்டியிருப்பார் புலவர். அப்பாடலில் மூவேந்தரும் சேர்ந்தேதான் தாக்குவதாக வரும். அதன்பொருள் யாதெனின், மூவேந்தர் தனித்தனித்தனியாக மூதூர் மக்களை வெல்லவோ அழிக்கவோ முடியாது என்பதால் கூட்டுசேர்ந்து அழிப்பவரானார். மூவேந்தரது படைகள் திரட்டப்பட்டவை. இனக்குழுப் போராளிகள் தங்கள் இனக்குழுவைக் காப்பதற்காகப் போரிடுபவர்கள். மூவேந்தர் படைகள் அரசனுக்காகப் போரிடுபவை. இனக்குழுப் போராளிகள் எந்த ஒரு தனியாள் நலனுக்காகவும் போரிடுவதில்லை. இனக்குழு நலனுக்காகவே போரிடுவர். அந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க ஒரு வேந்தனால் முடியாது. காரணம், இனக்குழுக்களின் காலம் அதுவாதலின் வேந்தர்கள் உருவாகிய காலம் என்பது ஒப்பீட்டளவில் வேந்தர்கள் வலுவற்றவர்களேயாவர். எனவே கூட்டணி வேந்தர்களிடையே உருவாவது தவிர்க்க முடியாததாகும். இயங்கியல் அடிப்படையில் இஃதே சரியாக இருக்கும்.

மான் மன் னாதலும் மன் மன்னனாதலும் வரலாற்று வளர்ச்சியின் நிகழ்வுகள்.

"சேரமான் வாராயோ என்ற வார்த்தையும்" என்னும் வரி மான் என்பதற்கான பொருளை உணர்த்துவதாகும். மான் சேரர் குடியை உணர்த்த வந்ததைப் போலவே அதியமான் என்பதில் மான் அதியர் குடியை உணர்த்த வந்தது. மூவேந்தரும் தொடக்கத்தில் மான் ஆக இருந்தவர்களே. பின்னர் வேந்தர்களாயினர். அவ்வாறு வேந்தராயினார் படைதிரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால் இனக்குழுக்கள் போராளிகளை இயற்கையாகவே பெற்றிருந்தன. அவற்றை வெல்வது அரிதாக இருந்தது அதனால்தான். மூவேந்தரின் கூட்டணிக்குக் காரணம் இனக்குழுவின் வலிமை மட்டுமே. இதில் உங்களுக்குக் கருத்து மாறுபாடு இருந்தால் தெரிவியுங்கள் ஐயா.

 நான்

//வேந்தர்கள் உருவாகிய காலம் என்பது ஒப்பீட்டளவில் வேந்தர்கள் வலுவற்றவர்களேயாவர். எனவே கூட்டணி வேந்தர்களிடையே உருவாவது தவிர்க்க முடியாததாகும்.//

தங்களின் இயங்கியல் பார்வையை நான் உணர்ந்து கொள்கிறேன் ஐயா. மாந்தவியலின் பாதைகளில் இவ்வாறான கூட்டணிகளை நெடுகிலும் காணமுடிகிறது. அதுபோலவே இனக்குழுக்களின் இயற்கைப் போராட்ட மனநிலையும் காணக்கிடைக்கிறது. தற்போதைய பஞ்சாப் பயிராளிகளின் போராட்டத்தில் கூட, காலவோட்டத்தில் சற்று மங்கலாகத் தெரிந்தாலும்; அந்தக் கூறுகளின் நீட்சியைப் பார்க்க முடிகிறது.

என்னுடைய ஐயம் (இனி அதை ஐயம் என்று சொல்வதா தெரியவில்லை) செல்வக் கடுங்கோதான் பாரிவேளின் கால கட்டத்தில் சேர மன்னரில் பெரும்படையும் பெயரும் கொண்டவன் என்பது கபிலர் மட்டுமன்றி வேறு புலவரும் உரைக்கின்றனர்.

//அப்பாடலில் சொல்லப்பட்ட மூவேந்தருள் சேரன் சேரர் கிளைஞரில் ஒருத்தனாக இருத்தல் வேண்டும்.//

அது யாராக இருத்தல் கூடும் என்பதை நோக்கியே என் தேடல் இருக்கிறது ஐயா. பாரியை வெல்வதற்கு கூட்டணியமைத்த அந்த சேரர் கிளைத் தலைவன் வேறு ஏது பாடலிலேனும் வேந்தனாகபாடப்பெற்றிருக்கின்றானா என்பதைத் தேடுகிறேன்.

எட்டு சேரர் குழுக்களில் வலிவற்றவன், பெருஞ்சேரன் ஒருவனை ஒழித்துவிடுவதற்குக் கூட இதுபோன்ற கூட்டணிகள் பின்னாளில் உருவாகியிருக்கலாம்.

அவ்வாறிருக்க "மூவேந்தர்" என்று பொதுமைப் படுத்துவது சரியா? இந்த சொல் மக்களின் உளவியலில் ஒட்டுமொத்த சேர சோழ பாண்டி மன்னர்களை ஏற்றி வைத்திருக்கிறது. இது எத்துணை சரியானது? என்பதே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதன் முடிச்சுகள் ஏதேனும் பாடல் சொற்களில் தென்படுகிறதா எனத் தேடுகிறேன். முன் முடிவுகளோடு பயணிக்கக் கூடாது என்பதால் காலம் எடுத்துக் கொள்கிறது. அறிந்தார் பகர்ந்தால் கொஞ்சம் எளிதாக இருக்குமே என்று வினாக்களாக்கி வெளியில் இறைக்கிறேன் ஐயா. காத்திருக்கிறேன். 

ஐயா அறிவுருவோன்

சேரர் கிளைர் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டிருப்பர். அவ்வப்பகுதிகளில் நடைபெறும் போரில் அவ்வப்பகுதிக்கான சேரர் கிளைஞர் பங்கெடுத்திருக்க வாய்ப்புண்டு. செல்வக்கடுங்கோவாழியாதன் பதிற்றுப்பத்தால் போற்றப்படுபவன். எனவே இவன் சேரருள் முதன்மையானவன்.

மூவேந்தர் கொடையாளராக விளங்கியமை என்பது இனக்குழுக்கள் பேரளவில் ஒடுக்கப்பட்டபின்னர் தங்கள் புகழ் பாடும் புலவர்களைப் புரத்தல் தேவைகாரணமாகவும் நிகழ்ந்தது என்பதே பெரும்பான்மையாகும்.காந்தியின் தருமகர்த்தா முறை தோன்றுவதற்கு இது தோற்றுவாயாக அமைந்தது எனலாம்.

பாரியின் காலம் இம்மன்னன் காலமாதல் வேண்டும். ஆதலால் கபிலர் பாரியின் இழப்பிற்குப்பின் அவனை சந்தித்திருக்கவேண்டும். ஆதலால் செல்வக்கடுங் கோவாழியாதன் பாரியோடு போரிட்ட சேரன் ஆகான். எனவே வேறொரு சேரனே சோழபாண்டியரோடு சேர்ந்து பாரியோடு போரிட்டு அவனை அழித்தவனாதல் வேண்டும்.

நான்

எனவே பாரி மற்றும் கபிலர் காலத்தைய சேரப்பெருமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பாரியை அழித்தவனாகான் என முடிவுக்கு வர வேண்டியிருக்கிறதுஎனவே பாரியை அழித்தவர் என்றவிடத்தே மூவேந்தர் என்று சொல்லாமல் அறிந்த வேந்தர்களின் பெயரால் குறிப்பிடலாம் என்பதே எனது கருத்து.

தமிழறிஞர்கள் இன்னும் விளக்கலாம். அறிந்தோர் இந்தத் தருக்கத்தை நீட்டித்து விரிவுபடுத்தலாம்.

 ========================

சிராப்பள்ளி ப.மாதேவன்

09-12-2019

#வேள்பாரி

#வீரயுக_நாயகன்_வேள்பாரி

#கபிலர்

#velpari

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்