Wednesday 1 November 2017

1947 க்கு பின் ஒரு விடுதலைப் போராட்டம்...       
       15/08/1947  க்குப் பின் 1956 நவம்பர் வரை ஏறத்தாழ பத்தாண்டுகள் போராடிய வரலாறு கொண்டது குமரி. இன்று தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு என்ற நான்கு வட்டங்களைக்கொண்ட குமரி 1956 க்கு முன் கேரளாவோடு இணைந்திருந்தது என்பது பற்றி இன்றைய தலைமுறை எவ்வளவு அறிந்திருக்கும் என்று தெரியவில்லை.           குமரியின் பகுதியெங்கும் எல்லாக் காலகட்டத்திலும் தமிழே பேசப்பட்டு வந்தது. திருவிதாங்கூர் அரசு 1941 ல் வெளியிட்ட Topographical List Of Inscriptions இன் படி திருவிதாங்கூரில் 1100 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 823 கல்வெட்டுகள் தமிழில் அமைந்தவை. இவை ஏறத்தாழ கி.பி.900 க்கு முற்பட்டவை. இன்றும் திருவனந்தபுரம் ஓலைச்சுவடிக் காப்பகத்தில் உள்ள குமரிமாவட்டம் தொடர்பான 16, 17, 18 ம் நூற்றாண்டுச் சுவடிகளனைத்தும் தமிழிலேயே உள்ளன.
             இந்தக் குமரியைத்தான் தங்களோடு வைத்துக்கொள்ள மலையாளப் பிரதேச காங்கிரசு, மலபார் மாகாண காங்கிரசு கமிட்டி, கொச்சி பிரசா மண்டல், திருவிதாங்கூர் சமத்தான காங்கிரசு என மூன்று பிரிவாகச் செயல்பட்ட மலையாளப் பிரதேச காங்கிரசு தலைவர்கள் ஒன்று கூடி 'காசர்கோடு முதல் குமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக ஆக்க வேண்டும்' என்று தீர்மானம் செய்தனர்.  இதை பி.எஸ். மணி கடுமையாக எதிர்த்தார். "நாஞ்சில் நாட்டையும் சேர்த்து கேரள மாநிலம் அமைக்க காங்கிரஸ் திட்டமிடுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். திருவாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடுதான் இணைக்கப்பட வேண்டும்" என்று அவர் குரல் கொடுத்தார். இருப்பினும், மாநிலப் பிரிவினையின்போது, தமிழகத்தின் தெற்கு எல்லையான நாஞ்சில் நாடு கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விட்டது.

         பிரித்தானிய இந்தியாவில் குமரி மாவட்டத் தமிழர்களின் மொழியுணர்வு 19 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மேலெழுந்தது.
         மனோன்மணியம் நாடகம் மூலம் சுந்தரம்பிள்ளையும், கவிதைகள் வாயிலாக கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும், வஞ்சிகேசரி இதழ் மூலம் கே.என்.சிவராசபிள்ளையும், தமிழன் பத்திரிகை வழியே பி.சிதம்பரம்பிள்ளையும் தமிழுணர்வை பொறியளவு பற்றவைத்தார்கள்.

         1945 நவம்பர் 18 ம் தேதி கேரள சமத்தானக் காங்கிரசு உடைந்தது. அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசு பிறந்தது. முதல் கூட்டம் 1945 டிசம்பர் 16 ம் தேதி நத்தானியல் தலைமையில் நடந்தது. அ.தி.த.கா உறுப்பினர்கள் திரு தமிழக நிலப்பரப்பைத் தாயகத்துடன் இணைத்தல், தமிழ் மொழி வளர்ச்சி, இந்திய விடுதலைக்குப் பாடுபடுதல், சிறுபான்மைத் தமிழருக்குப் பாதுகாப்பு என்ற குறிக்கோள்கள் அச்சிடப்பட்டத் துண்டறிக்கைகளை குமரியெங்கும் கொடுத்தார்கள். இது சென்னைக்கும் பரவியது. 1946 சனவரி 24 ல் நத்தானியல் தலைமையில் பி.எஸ். மணி, இரா.வேலாயுதப்பெருமாள், சிரீ.வி.தாசு ஆகியோர் சென்னை சென்று காமராசர், பக்தவச்சலம், ஜீவா, ஏ.என்.சிவராமன், கலைவாணர், டி.கே.எஸ் ஆகியோரைச் சந்தித்தனர்.
      சமத்தான காங்கிரசு தமிழர் தேசிய காங்கிரசு என்று ஒரு சங்கத்தை நிறுவி பரப்புரை செய்து அ.தி.த.கா வை ஒடுக்க முயற்சி செய்தது.
     தமிழன் பத்திரிகையில் பி.சிதம்பரம்பிள்ளை தமிழ் மாகாணம் அமைக்க வேண்டிய காரணத்தை எழுதியதைப் படித்த நத்தானியல் அவருடன் விவாதித்தார். அதன் பலனாக திருவிதாங்கூரில் தமிழ் மாகாணம் ஒன்று அமையவேண்டும் என்றும் நாடு விடுதலை பெற்றதும் அம்மாகாணம் அப்படியே தமிழகத்துடன் சேர்ந்து கொள்ளலாம் என்றும் கருத்து மலர்ந்தது. அதனால் அ.தி.த.கா என்ற பெயர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்று பெயர் மாற்றப்பட்டது.
 
        கேரளத்தில் காங்கிரசு தலைவர் கேளப்பன், பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆகியோர் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றனர். டில்லியில் பிரதமர் நேருவின் நண்பர் வி.கே. கிருஷ்ணன் மேனன், வெளி உறவுத் துறைச் செயலாளராக இருந்த கே.பி.எஸ். மேனன், உள்துறைச் செயலாளராக இருந்த வி.பி. மேனன், துணை அமைச்சராக இருந்த லட்சுமி மேனன் மற்றும் டில்லியில் மலையாள அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் கேரள மாநிலத்தை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் தீவிரமாக பணிபுரிந்தனர்.
 
    குமரி மாவட்டம், செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். நத்தானியல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை உருப்பெற்று, வலு அடைந்தது. நேசமணியின் வருகைக்குப் பின்னரே இது மக்கள் இயக்கமாக மாறியது.
 
      1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லைச் சிக்கலில், சிமோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை 'தினமணி' கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு , அதேபோல் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கவேண்டும் என்று பரப்புரை செய்தார் பி.எஸ்.மணி. 

     1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பி.எஸ்.மணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்த சமரசத் திட்டத்திற்குத் தயார் இல்லை என்றும் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்டத் தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல், பொதுக்கூட்டங்கள் நாள்தோறும் குமரி மாவட்டத்தில் நெடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று பதினாறு தமிழர்கள் போலிசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
                 1954ஆம் ஆண்டில் தேவிகுளம் - பீர்மேடு பகுதியில் திட்டமிட்டு மக்களை வெளியேற்றும் நிலைமையை ஆராய நேசமணி தலைமையில் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்தும் குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடந்த. குஞ்சன் நாடார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சிறைப்பட்டனர். கேரள அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது.
           குமரி பகுதிகளில் 11.8.1954 அன்று தமிழர் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று தமிழர் பகுதிகளில் முழு கடை அடைப்பு நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசு அலுவலங்களின் முன்னால் மறில் போராட்டம் தொடர்ந்தது.
         புதுக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, கலைந்து ஓடிய மக்களை வழிமறித்துக் காவல் துறையினர் வெறிகொண்டு தாக்கினர். போராட்டத் தளபதியான குஞ்சன் நாடார் சிறைப்பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். அதனாலேயே அவர் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.
        நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும், போராட்டத் தளபதிகள் போலிஸாரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த பி.எஸ். மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலிஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டடங்கள் நடத்திய கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். 
       தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழ்ப் பகுதிகளைத் திரும்பவும் தமிழகத்தில் சேர்க்க அனைத்துக் கட்சி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. முதல் நாள் ஜீவா கைது செய்யப்பட்டார். சென்னையில் காவல் துறை கண்ணீர் புகை வீச்சு, கல் வீச்சு என்று பதட்ட நிலையில் சென்னைக் கடற்கரைக்கு மக்கள் பேரணி சென்றதும் பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். அண்ணா கலந்து கொண்டார்.
      பல படி பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1/11/1956ல் குமரி தமிழகத்தோடு இணைந்தது.
     இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி. சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது. மாறுமோ?

 -----------------------------------------------------------------------------------------------------------------------------

-தென்குமரியின் சரித்திரம் -
அ.க.பெருமாள்

மற்றும் 
வலைப் பதிவுகள்

படங்கள் - இணையம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்