Wednesday 24 April 2019

இருவர்


நீண்ட நாட்களுக்குப் பிறகு, 1997 ல் வெளியான "இருவர்" படத்தை Prime Video வில் பார்த்தேன். (நம்புங்கள் இப்போதுதான் பார்க்கிறேன்).  ஊருக்குள் கேள்விப்படும் கருப்பசாமி கதைகள் போல இந்தப் படத்தைப் பற்றி நிறையக் கதைகள் கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் மறந்து விட்டு படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். "இது உண்மைக் கதையல்ல" என்கிற அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. படம் முடியும் போது இந்த அறிமுகமே சரியானதென்பதும் நான் கேள்விப்பட்ட கதைகள் வெறும் முகப்பூச்சுகள் என்பதும் தெரிந்தது.

திரைத்துறையில் கதாநாயகனாக ஆகிவிடவேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்  இளைஞன்ஆனந்தன். துறையில் கொஞ்சம் பழக்கம் இருக்கிற பெரியவரோடு இணைந்து வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே வசனம் எழுதிக்கொண்டு இருக்கிற தமிழ்ச்செல்வத்தோடு நட்புக்கொள்கிறான். இந்த நட்பின் நீட்சியும், அதனூடே வளரும் இருவரின்


 தனிப்பட்ட ஆசைகளும் அதன்  முடிவுகளுமே இருவர் திரைப்படம்.

அருகில் இருந்து பார்க்கிறபோது வேறு வேறான சிந்தனை கொண்டவர்கள் போலவும், தொலைவில் இருந்து பார்க்கும்போது ஒற்றைப் புள்ளியை நோக்கி நகரும்  இருவராகவும் அறிமுகம் ஆகிறார்கள் ஆனந்தனும், தமிழ்செல்வமும். தொடக்கக் காட்சிகளில் தமிழ்செல்வம் பேசும் மொழி கொஞ்சம் அயலாக உணரவைக்கிறது. வசனத்தின் பிழையா? இல்லை நடிகர் தேர்வா?  இதை; அந்தப் பாத்திரத்தின் நிலைமாற்றத்தைக் (Transition) குறிக்க அந்த மொழி பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று ஆற்றுப் படுத்திக் கொண்டாலும், ஒருவித அயற்சி வருவதை மறுப்பதற்கில்லை.

ஆனந்தனின் ஆசை விவரிக்கப்பட்ட விதமும் அழகும் அருமையாக இருக்கிறது. அதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிற நிறக்கோர்வையும், படப்பிடிப்புக் கோணங்களும் மிகச் சரியாக செய்தியை நம்மிடம் கொடு சேர்க்கின்றன.  ஆனால் அவர் திரைத் துறையில் வெற்றிபெற்று மக்களிடம் செல்வாக்குப் பெறுவதில், காட்சி அழுத்தம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று படங்கள் வெற்றிப்படமானது போல் காட்சிகள் வந்திருக்கலாம் அல்லது வேறு வேறு ஊர்களின் வெற்றிக் காட்சிகளின் கலவை, வேறு வேறு படக் காட்சிகள் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் படத்தின் உயிரோட்டமான; நட்பின் முரண்பாடுகளுக்கான காரணமே அது தானே. ஆனந்தனின் திரைத்துறை வெற்றி இன்னும் தெளிவாக, அழுத்தமாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.

தமிழ்செல்வத்தின் உள்ளக் கிடக்கை இருவரின் மொட்டைமாடி சந்திப்பில் அருமையாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. "உன் கையில் நாடு ஒப்படைக்கப் பட்டால் என்ன செய்வாய்" என்ற ஆனந்தனின் கேள்விக்கு முதலில் "நான் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை" என்பார் தமிழ்செல்வம். இங்கே "நான்" என்பதை படத்தின் இறுதிவரை பயணிக்கும் ஒரு குணமாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர். இப்படி சரியான வசனங்களை எழுதிய சுகாசினி, ஏராளமான இடங்களில் ஒட்டாத, அல்லது தெளிவற்ற உரையாடல்களையும் எழுதியிருக்கிறார்.

கதை சொல்ல ஆரம்பித்து அறிமுகங்கள் முடிந்தவுடன் கொஞ்சம் அலுப்புத் தட்ட ஆரம்பிக்கிறது. முதல் சிறுகதையோ அல்லது கதையோ எழுதும் போது நிறையபேருக்கு வரும் இந்தப் பிரச்சனை இத்தனை படங்களுக்குப் பிறகு மணிரத்தினத்துக்கு ஏன் வருகிறது என்று புரியவில்லை. கதையைப் பொதுமைப்படுத்தும் ஆசையும் இருக்கிறது. கூடவே கமர்சியலாக வெற்றிபெற, கேரக்டர்களின் மீது சில பிம்பங்களை ஏற்றிச் சொல்லும் எண்ணமும் இருக்கிறது. இருவராக இருந்துவிட்டாரோ இயக்குநர். இதுவே இந்தப் படம் சரியாக வெற்றியடையாமல் போனதற்குக் காரணமாக இருக்கிறது.

படம் பார்ப்பவரின் உள்ளத்தில் ஒரு பாத்திரம் குறித்த பிம்பம், வெளியே இருக்கும் ஒன்றாகக் கட்டமைக்கப் படுமானால், படத்தில் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் குறித்த முன் முடிவுகளுக்குப் பார்வையாளர் வந்துவிடுகிறார். இது இயக்குநருக்கு பெரும் சவாலாய் மாறிவிடும். சவாலைச் சமாளிக்க முடியாத போது படம் நினைத்த வெற்றியைப் பெறாமல் போகும். இதுவே "இருவரு"க்கு நிகழ்ந்திருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு அருமையாக படத்தை நகர்த்துகிறார் இயக்குநர். ஒளிப்பதிவு மிக அழகாகக் கை கொடுக்கிறது. காட்சிகளின் ஆழம் அடடா.. அருமை. கல்பனாவின் வருகைக்குப் பின் கதையும், வெளிப் பிம்பக் கட்டமைப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பிக்கிறது. புஷ்பாவை போன்ற தோற்றம் கல்பனாவுக்கு என்ற கதைப்போக்கு அதற்குக் கை கொடுக்கிறது.  கல்பனாவுக்கு விபத்து நடக்கும் போது பார்வையாளர்கள் முழுவதுமாக பிம்பத்திலிருந்து வெளியேறி விடுகிறார்கள்.

திருமணமொன்றில் அருகருகே மீண்டும் அதே பண்டைய நட்பு ஆனால் வேறு வேறு பரிமாணங்களில், ஒற்றைப் புள்ளியில் அமர்கிறது. இறுதியில் நட்பொன்றை இழந்த கையறுநிலை உணர்வோடு முடிகிறது படம்.

நன்றாக வந்திருக்க வேண்டிய படம். சில பல சறுக்கல்கள். யார் தவறு எனத் தெரியவில்லை. இல்லை வரலாற்றுப் படம் போல் இருப்பதாய் ஆரம்பகால விமரிசனங்கள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதோ?  தமிழிலும், தெலுங்கிலும் "இது உண்மைக் கதையல்ல" எனத் தொடங்கும் படம் மலையாளத்தில் இந்த அறிவிப்பு இன்றியே தொடங்குகிறது. அப்படியென்றால் இது இயக்குநரின் தவறுதான் என நினைக்கிறேன்.  

இந்தச் சிக்கல்கள் இன்றி "பொன்னியின் செல்வனை" வெளிக்கொணர்வாரா மணிரத்தினம் என்றக் கேள்வியோடு நேற்றைய பொழுது முடிந்தது.

சிராப்பள்ளி ப.மாதேவன்,
24-04-2019.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்