Sunday 18 August 2019

ஆவணி



 
அடர் மழை பெய்து வெறிக்கும் நேரத்தில் பளிச்சென, சிறு துளியொன்றை கண்ணாடித் துண்டுபோல் சொட்டி நிற்கும் மாவிலை போல இன்னும் நெஞ்சில் அந்த நினைவுகள் சொட்டிக்கொண்டே இருக்கின்றன. இன்று 18-8--2019 ஞாயிற்றுக்கிழமை. ஆவணி முதல் நாளும் கூட.

ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை புலரும் முன்னே பாட்டி, அம்மா எல்லோரும் எழுந்துவிடுவார்கள். நான்கு மணிக்கு முன்னே புத்தனாற்றில் குளித்து பித்தளைக் குடத்தில் நீர் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டு, நல்ல துணிகளை உடுத்துக்கொண்டு பொங்கல் வைப்பதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  

தைப்பொங்கலுக்கும் இந்த ஆவணிப் பொங்கலுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு.  "தைப்பொங்கல் விடுகதுக்கு நேரம் பாக்காண்டாம் மக்கா, விடிஞ்சதுல இருந்து சாய்ங்காலம் வரைக்கும் எப்பண்ணாலும் விடலாம். ஆனா, ஆவணி ஞாறாச்ச பொங்கல்விடுகதுன்னா சூரியன் தலைகாட்டச்சில பால்பொங்கி கொலவ விட்டு எறக்கிவச்சிருக்கணும். அதுக்குப் பொறவு விடப்பிடாது" என்று பாட்டி நூறு முறையாவது சொல்லக் கேட்டிருக்கிறேன். வழக்கமாக காலை உணவுகூட பச்சரிசி அடை, அல்லது பச்சரிசி தோசையாக இருக்கும்.

எதற்காக இந்த ஆவணிப் பொங்கல் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. ஆண்டுத் தொடக்கமாக இருக்குமோ?

பக்கத்தில் இருக்கும் கேரளம் ஆவணியையே ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டிருக்கிறது. விரவிக்கிடந்த பண்டைய தமிழகத்தில் தை மாதமே ஆண்டுத்தொடக்கமாக இருந்திருக்கிறது. அது தைப்பொங்கல் நாளாக இருக்கிறது. இதற்கு ஏராளமான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. பின்னீடு என்றோ சித்திரை ஆண்டுத்தொடக்கமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அது தொடர்பான பண்டையச் செய்திகள் நெடுநல்வாடையின் ஒரு குறிப்பைத் தாண்டி வேறேதும் கிடைக்கவில்லை போல் தோன்றுகிறது.

சரி ஆவணிப் பொங்கலுக்கு வருவோம்.

பிட்டங்கொற்றன். ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன்னமே வாழ்ந்த குதிரமலைத் தலைவன், மன்னன். அவனைக்குறித்த பாடல் ஒன்று (புறம் 168) கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது அவனது முற்றத்தில் சமைக்கப்ட்ட "புன்கம்" என்ற பொங்கலைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. மூங்கில்கள் நிறைந்த மலை நிலத்தில் கார்காலத்தில் பூக்கும் "குளவியும்" "கூதாளமும்" பூத்துக் கிடக்கின்றன. அங்கே புன்கம் வைக்கப்பட்டு அனைவருக்கும் விளம்பப் படுகிறது. (இதை இந்த இணைப்பில் முழுவதும் படிக்கலாம்
 
  https://www.chirappallimathevan.com/2018/09/1.html ). 


"நன்னாள் வருபத நோக்கி" புன்கம் வைக்கப்படுவதாய் பாடல் குறிப்பிடுகிறது.  பண்டைய தமிழர் மரபில் ஆட்டை தொடக்கமும், வேளாண்மைக்கான பாட்டமும் ( விதைப்புக்கான நாட்களும் ) பறையறைந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இவை பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கலாம். அப்படியொரு  நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து; குறவர் தாம் உழாமல், பன்றிகள் கிளறிவிட்டுப் போன நிலத்தில் சிறிய தினையை விதைக்கிறார்கள். அது பெரிய தோகை விரித்து விளைந்து பருத்தக் கதிர் முற்றிக் கிடக்கிறது. அந்தப் புதுவிளைச்சலை அறுத்து, புதிது உண்ணவேண்டி புங்கல் வைக்கிறார்கள். கார்கால நன்னாள் என்பது ஆவணி முதல் நாளாய் இருக்கலாம். திங்களின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையாகவும் இருக்கலாம். தமிழர் நாட்கணக்கில் திங்களின் தொடக்க நாள் ஞாயிறாக இருந்திருக்கலாம்.

சேரநாட்டுத் தமிழில் (சமற்கிருதம் கலந்த மலையாளம்)  அண்டு அல்லது ஆண்டு என்ற சொல் மூங்கிலைக் குறிக்கும். மூங்கில் அருகருகே முளைக்கும் தன்மையுடையது. அதுவே அண்டு முளை எனப்பட்டது. (சொற்பிறப்பியல் அகரமுதலி). குமரித் தமிழில் "என்னடே அம்மைக்க அண்டையிலேயே இருக்க, அடக்கோழி போல" என்றெல்லாம் கேட்கலாம். சென்னைத் தமிழில் 'கோயிலாண்ட" "வீட்டாண்ட" என்றெல்லாம் கேட்கலாம். வியப்பான செய்தி என்னவென்றால் மூங்கில் கார்காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை முளைக்கும் தன்மை கொண்டது. மூங்கிலைக் குறிக்கும் அந்த "அண்டு' "ஆண்டு" என்ற சொல்லே காலத்தில் ஆண்டைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியிருக்கலாம்.

ஆவணியில் முளைக்கும் அண்டு, ஆண்டாக மாறி சேரமண்ணில் ஆண்டுப்பிறப்பாக நடந்தேறி இருக்கலாம். இன்று கர்நாடகத்தில் இருக்கும் குதிரைமலையில் இருந்து கன்னியாகுமரிவரை ஆவணியில் பொங்கல் ஆண்டாண்டுகளாய் இருந்திருக்கலாம். 

மேலே குறிப்பிட்ட எல்லா இடங்களிலும் இந்த நாளில் ஏறத்தாழ ஒரே வகையான உணவுப்பழக்கமும் இருக்கிறது. பச்சரிசி, சருக்கரை, பழம், தேங்காய் இட்டுப் பிசைந்த "பருப்பரிசி" வானமலை (மேற்குத் தொடர்ச்சி மலை) எங்கும் சிதறிக்கிடக்கிறது.

குறிஞ்சியிலும், முல்லையிலும் செழிப்பான கார்காலம் கொண்டாடப் பட்டிருக்கும். மருதத்தில் முன்பனி கொண்டாடப் பட்டிருக்கும். ஆனால், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் மெல்லப் பாலையாகத் திரியும் இளவேனில் நடுவே, சித்திரை; ஆண்டுத் தொடக்கமாய் எப்படி நுழைந்தது என்பதுதான் விளங்கவில்லை.


பொங்கலும், பருப்பரிசியும், பச்சரிசித் தோசையும் நாவில் ஊற; பெண்களின் குரவை ஒலி காதில் கேட்க கடந்து போன ஆயிரமாயிரம் ஆண்டுகள் மனதுக்குள்ளே படமாய் ஓட  ஆவணி பிறந்தது.
 

ஓவியம் : மறைமலை வேலனார்


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்