Friday 28 February 2020

அச்சம்...



தெருவில் இறங்கி நடக்கையில்
எல்லா வண்ணங்களும்
அச்சம் கொள்ளச்செய்கின்றன.

சில வேளைகளில்
வானவில்லின் மீதே
ஐயம் வருகிறது.

வண்ணத்துப்பூச்சியைக் கண்டால் கூட
வல்லூறைக் கண்டத்
தாய்க்கோழியாய்த் தவிக்கிறது மனது.

அம்மணமாய்த் திரிந்தபோது
ஏதோ ஒரு கரடி
என்றோ ஒரு சிங்கம்
எதிரே வருகையில்
அச்சம் வந்தது.

ஆடை உடுத்திய காலத்தில்
வண்ணங்களைக் கண்டாலே
வயிறுபுரள அச்சம் பீறிடுகிறது.

மலர்கள் சூடிக்கொண்டிருந்த வரை
வண்ணங்கள் பெருமைகொண்டிருந்தன.
மதங்கள் சூடிய பின்னாலே
அச்சப்படுத்துகின்றன.
எந்த வண்ணத்தை அணிதிருந்தாலும்
மதங்கள் கொப்பளித்துத் துப்புவதென்னவோ
குருதிச் செந்நிறமே.
 
என்ன செய்வது?
நான் சொல்லிக் கொடுக்காத எதையும்
என் கடவுள் பேசுவதில்லை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்