Tuesday 24 August 2021

அழாததேனோ?


 

அம்மா அப்பா ஆடு இலையென

அத்தனையும் சொன்னபோது;

மொழியின்றிப் பிறந்த நான்

இறந்து போயிருந்தேன்.

 

ஓடி ஒளிந்து விளையாடும்

ஒரு காலம் வந்தபோது;

கையூன்றித் தவழ்ந்து

மண்தின்று மகிழ்ந்திருந்த நான்

மரித்துப் போயிருந்தேன்.

 

இணையென்று வாழ்வில்

துணையொன்று சேர்ந்தபோது;

யார் எனக்குத் துணையாவார்

என்றலைந்தப்

பாழ்மனதுக்காரன் நான்

உள்ளுக்குள் செத்திருந்தேன்.


முதுமையில் கஞ்சியுண்ட

முகவாய் துடைத்தபோது;

முயங்கியே பெற்றகாமம்

முத்தியென நினைத்த

மூடன் நான்

மறுபடியும் மரணித்தேன்.

 

முற்றிய உடலைவிட்டு

சட்டெனப் பறக்கும் போது;

வெடித்து அழுது

வீழ்ந்து புரளும் கூட்டம்,

அத்தனை முறை செத்தபோது

அழாததேனோ?

2 comments:

  1. நிதர்சனம் மாமா. அருமையாக வாழ்வின் உண்மைத் தன்மையை சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்