Monday 6 September 2021

வ.உ.சி பாடற்றிரட்டு விளக்கம் 1

 

செழுமையான இலக்கணத்தோடு இயற்றப்பெற்ற வெண்பாக்களும், ஆசிரியப்பாக்களும், கட்டளைக் கலித்துறைகளும் கொண்ட நூல் பெரியவர் வ.உ.சிதம்பரனார் எழுதிய “பாடற்றிரட்டு”. அது குறித்து பெரியவர் வாய்மொழியாகவே பார்ப்போம்.

 எனது தனிப்பாடல்களில் முந்நூற்றைம்பது வெண்பாக்களும், ஒருதாலாட்டும், மூன்று விருத்தங்களும், பதினைந்து கட்டளைக் கலித்துறைகளும், நானூற்று நாற்பத்துமூன்று வரிகள்கொண்ட பதினொரு நிலமண்டல ஆசிரியப்பாக்களும் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. யான் இராஜநிந்தனைக் குற்றத்திற்காகச் சிறைக்கு அனுப்பப் பட்டதற்குமுன் யான் பாடிய பாக்களில் தொண்ணூற்றேழு இதன் முதற் பாகமாகவும் யான் சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாக்களில் இருநூற்றெண்பத்துநான்கு இதன் இரண்டாம் பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லாதாரும் எனது பாக்களின் பொருள்களை இனிது உணருமாறு எனது பாக்களில் ஆங்காங்குக் காணப்படுகிற அரும்பதங்களுக்கு உரைகள் எழுதி இதன் முடிவில் சேர்த்துள்ளேன்.


இப்புத்தகத்திலுள்ள முந்நூற்றெண்பது பாக்களில் ஏறக்குறைய ஒருநூறு கடவுளைப்பற்றிக் கூறுவன; மற்றொருநூறு ஒழுக்கம் முதலியவற்றைப்பற் றிக் கூறுவன; மீதநூற்றெண்பதும் எனது சுற்றத்தார் களுக்கும் நண்பர்களுக்கும் யான் எழுதியவை.

இப்பாக்கள் யான் என்ன சமயத்தைச் சேர்ந்தவனென்பதையும், எனதுமனம் எதனை முதன்மையாகப் பற்றி நிற்கின்றதென்பதையும், யான் சிறையில் எனது கால த்தை எவ்வாறு கழித்தேனென்பதையும், எனது சுற்றத்தார்களிலும் நண்பர்களிலும் யார்யாரை எவ்வெவ்வாறு யான் நேசித்து வருகிறேனென்பதையும், எனக்கு அவர்கள் என்ன என்ன உதவிகள் செய்துள்ளார்களென்பதையும், யான் எனது சிறைவாசத்தில் எவ்வித மேம்பாட்டை அடைந்துள்ளே னென்பதையும் வெளிப்படுத்தும்.


யான் சிறையில் சுகமாயிருந்து படித்தற்கும் எழுதுதற்கும் எண்ணரிய உதவிகள் புரிந்து யான் அங்கிருந்து எழுதியனுப்பிய நூல்களையும் பிறவற்றையும் பாதுகாத்து வைத்திருந்து யான் வெளிவந்த பின்னர் என்னிடம் தந்து கோயமுத்தூரில் இனிது வாழ்ந்துவரா நின்ற எனது மெய்த்தம்பி சிரஞ்சீவி கோ. அ. இலக்குமணபிள்ளைக்கும் யான் சிறையுட் புகுந்த நாள்முதல் எனது குடும்பத்தாருடைய சரீரப் பாதுகாப்புக்கும் எனது நூல்களை அச்சிடுவதற்கும் பொருள் உதவிக்கொண்டு தென் ஆபிரிக்காவில் இனிது வாழ்ந்துவரா நின்ற எனது மெய்ச்சகோதரர் ஸ்ரீமாந் சொ. விருத்தாசலம்பிள்ளை யவர்களுக்கும் ஸ்ரீமாந் த. வேதியப்பிள்ளை யவர்களுக்கும் யானும் எனது குடும்பத்தாரும் நன்றியறிதலுள்ளவராயிருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


திருமயிலை, சென்னை.                        வ. உ.சிதம்பரம்பிள்ளை.
{ஆனந்த தை 11 }

 

இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லாதாரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாகத் தான் எழுதியிருப்பதாக ஐயா கூறியிருந்தாலும் இன்று அவற்றைப் படிப்பது கடினமாகவே இருப்பதாக நண்பர்கள் உணர்கிறார்கள். ஐயா தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை செய்யுள்களாகத் தந்திருப்பதால், நிகழ்வுகளை அறிந்துகொள்ளவேண்டி பாடல்களுக்குப் பொருள் அறியவேண்டிய தேவை இருக்கிறது. ஐயா அதில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்? தொடர்ந்து பார்ப்போம்.

 

முதல் பாடலாக கணபதி துதி. தொடர்ந்து ஈகை, அன்பு, உண்மை எனுந் தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் பத்து வெண்பாக்கள் இருக்கின்றன. அவற்றை முதலில் பார்ப்போம்

 

1. கணபதிதுதி

 

சிவன்றன் குமரன் றிருமான் மருகன்/
தவந்திகழ் நான்முகன் றன்னோ - டுவந்துவிளை/
யாடும் பெருமா னறுமுகற்கு முன்வந்தோன்/
பாடும் படியருள்க பா./

 

பொருள்:

சிவனது மகன். திருமாலின் மருமகன். தவமியற்றும் நான்முகனோடு விளையாடும் ஆறுமுகப் பெருமானுக்கு முன்வந்தோன், எனக்கு பாடும் படி அருள்க.

 

ஈகை - ஒன்றாம் பாடல்

 

இல்லார்க் கிரங்கியுட னீவதுதா னீகையில்லா/

ரல்லார்க் களிப்பதஃ தன்றாகு - மல்லாம/

லீவதனா னற்புகழு மீயாமை யாலிழிவு/

மாவதுன்னி யீவதுமஃ தன்று./         

 

ஈகை என்பதன் விளக்கமாக இந்தப் பத்து வெண்பாக்களும் இருக்கின்றன.

 

பொருள்:

ஒன்றுமில்லாதவருக்காக இரங்கி, வேறு சிந்தை உள்ளத்துள் புகுமுன் சட்டென அவருக்குத் தேவையானதை தந்துவிடுவதே ஈகை. இருப்பவருக்கு ஏதேனும் அளிப்பது ஈகையாகாது. அதுமட்டுமல்ல, பொருளைத் தருவதால் புகழ் கிடைக்கும் என்பதற்காக அளிப்பதும்; பக்கத்தில் எல்லோரும் தருகிறார்களே நாம் கொடுக்காமல் இருந்தால் இவர்கள் நம்மை இழிவாக எண்ணுவார்களோ? என்றெண்ணிக் கொடுப்பதும் ஈகை அல்ல.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்