Wednesday 1 September 2021

மெய் ஒன்றுதான்



சில செய்திகளை பகிர்ந்துகொள்வோம்.

1. தன்னேரில்லாத தமிழின் செவ்விலக்கியங்கள் (சங்ககால இலக்கியங்கள்) 2010 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஒரே தொகுதியாக வெளியிடப்பட்டது. "செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்" எனப் பெயரிடப்பெற்ற, 1565 பக்கங்கள் கொண்ட இந்த அழகிய நூல் 300 ருபாய் விலை வைக்கப்பெற்று கழிவு போக 270 ருபாய்க்குக் கிடைக்கிறது.

2. இதனுள் 41 செவ்விலக்கியங்கள்  அடங்கி இருக்கின்றன.

3. அனைத்துப் பாக்களும் சந்தி பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இருப்பதையே இன்னொரு (இல்லாத) பெயரில்  புதியது போல் வெளியிடுதல்.... ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. திராவிடம் என்றொரு மொழியே இல்லாதபோது அதற்கேது களஞ்சியம்.

=================================

 சந்தி பிரிப்பதால் மூத்த தமிழ் மொழியின் பாடல்கள் உண்மை உரு இழக்கும். படிக்க எளிது என்று சொல்வதை ஏறுக்கொள்வது என்பது தமிழைக் கொல்வதற்கான ஒப்புதல் அன்றி வேறில்லை என்றே கருதுகிறேன்.

 ஏற்கனவே கவிதைகள் என்ற பெயரில் மொழியின் மூச்சுக்குழாயை நசுக்கி இருக்கிறோம். ஓசைக்காகவோ அல்லது சொல் அறியாததாலோ பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தி தமிழின் நுரையீரலுக்குள் புற்று வளர்த்திருக்கிறோம். திரைப்படப் பாடலாசிரியர்களும், பாவகை அறியாத பாவலர்களும் செவ்விலக்கணத்தைப் புறந்தள்ளி செழுமையில்லாத படைப்புகளைக் குவித்து வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பிழைக்கவே அன்னை கதறுகிறாள்.

இந்நிலையில், இலக்கண அமைதியுடன் செறிந்துகிடக்கிற செவ்விலக்கியத்தைச் சீர் பிரித்தால் பலவேளைகளில் சீர் கெடும், தளை தட்டும், மொழி கெட்டு அழகிழக்கும், பொருள் திரியும். மெல்ல மெல்ல பல்லாயிரமாண்டு பழமை கொண்ட இலக்கியங்கள் அழியும்.மெல்ல மெல்லத் தமிழும்.

படிக்கும் காலத்தில் மாணவன், பாவகை அறிந்து பழம்பாடல் ஒன்றைத் தேடி, சந்தி பிரித்த பாடலைக் காணும்போது பெரும்பாலும் குழப்பமடைவது தடுக்க இயலாததாகிவிடும்.

காட்டு:- அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:759

1. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
    மெஃகதனிற் கூரிய தில்

2. செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
    எஃகுஅதனின் கூரியது இல்


 ஒன்றாவது இருப்பது குறள் வெண்பா. இரண்டாவது இருப்பதை குறள்வெண்பா என்றால், தொல்காப்பியன் சினந்து கடிந்துகொள்வார்.

பெருந்தகை பாவாணர் இல்லையே,  பாவலரேறு பெருஞ்சித்திரனார் இல்லையே... அரற்றுகிறாள் தமிழன்னை.

அன்புக்குரிய தமிழ்ப் பேராசிரியர்களே, தமிழாசிரியர்களே, தமிழறிஞர்களே வாய் திறந்து பேசுங்கள். தமிழன்னைக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை இதுவென எண்ணிக் குரல்கொடுங்கள்.

வேண்டாம் திராவிடக் களஞ்சியம்.

 






No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்