Saturday 28 May 2022

முச்சந்திச் சிந்தனைகள்

 

சிறுவயதில் ஆடிக்களித்திருந்த, பருவத்தின் ஏக்கங்களை விளம்பி உளமாறிய, நயினார் நோன்பு நாட்களில் இசையரங்காய் மாறி மகிழ்வித்திருந்த, தாழக்குடியில் பலரும் மறந்திடவியலாச் “சந்தி”யை அண்மையில் சந்தித்தேன்.

கீழத்தெரு சந்தி. நான்கு தெருக்களின் கூடுகைப் புள்ளியில் அமைந்த இடம். கிழக்கே தெரியும் புத்தனாற்றுப் பாலம். மேற்கே விண்ணவன் பெருமான் கோயில். தெற்கே “ஊரம்மன் கோயில்” என அறியப்படும் முப்பிடாரி அம்மன் கோயில். வடக்கே வரலாற்றைச் சுமந்து நிற்கும் “தேர்நிலை”.

கரும்பனைக் கைகளால் பணி தீர்க்கப் பெற்று “வில்லுக்கீறி” ஓடுகளால் வேயப்பெற்ற உயர்ந்த கூரை. கல் பாவப்பட்ட தரை. கோசுப்பாட்டா போல் சொல்வதென்றால் சச்சவுக்கமான கட்டிடம். உள்ளே சிலைகளோ குறியீடுகளோ எதுவுமற்ற, கதவுடன் கூடிய சிறு மாடம். இதன் கல் தூண்கள் அறிந்திராத கதையென்று தாழக்குடியில் எதுவுமில்லை.

இப்பொழுதோ களையிழந்து பொலிவின்றிக் கிடக்கிறது சந்தி. நடந்து சென்று வணிகம் செய்வோர் அருகிப் போனார்கள். மாடுகளற்ற தொழுவங்களில் வெள்ளாமை படுத்துக் கிடக்கிறது. துவர்த்துக்குள் விரல் பிடிக்கும் தரகர்கள் குறைந்து போனார்கள். அமைதியான அந்திப் பொழுதுகள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் தொலைந்துபோயின. மாந்தரின் காலடி படாமல் மரணித்துக் கொண்டிருக்கிறது “சந்தி”.

“என்ன மக்கா. சந்தியவே பாத்துகிட்டு நிக்க. ஏதாவது எழுதப் போறியா”

“ம்… யோசிக்கிறேன்”

“சந்திங்கிறதே வடமொழின்னில்ல சொல்வாங்க. உனக்கு எழுத சரக்கு கிடைக்குமா மக்கா?”

சட்டென பட்டினப்பாலை மனதுக்குள் வந்தது. நண்பர்களோடு பேசியது நினைவுக்கு வந்தது. இது வட சொல்லா? தேடிவிட வேண்டியதுதான்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய “சந்தி”யைப் பேசுகிறது பட்டினப்பாலை. அதைப் “பொதுவில்” (பொது + இல்) என்கிறது. மெழுகப்பட்ட தரையும் உருவமற்ற கந்தும் பலர் வந்து தங்கி இருந்ததையும் குறிப்பிடுகிறது.

“மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ

வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்” (பட்டினப்பாலை)

அந்தி எனுஞ் சொல்லே சந்தி எனத் திரிந்ததாகச் சொற்பிறப்பியல் பேரகர முதலி கூறுகிறது.

“அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்" (சிலப்பதிகாரம்)

ஒருவர் இறந்து பதினாறு நாட்களுக்கு காலையிலும் மாலையிலும் பெண்கள் கூடி “அம்மாடி தாயர” என்று அழுவதற்கு நாஞ்சிநாட்டில் “அந்தியழுதல்” என்பது வழக்கு.

இவையெல்லாம் உந்தித் தள்ள பேரகர முதலிக்குள் நுழைந்தேன்.

சந்தி

   1. கூடுகை

   2. பல தெரு கூடுமிடம்.

“ சதுக்கமுஞ் சந்தியும்" (திருமுருகு. 225);

     'சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா' (பழ.);

   3. இணைப்பு, இசைப்பு.

  4. பல பொருத்து அல்லது கணுவுள்ள மூங்கில் (பிங்.)

   5. நட்பாக்குகை (குறள், 633, உரை)

   6. தறுவாய்; crisis, critical point of time.

          நல்ல சந்தியில் வந்தான்.

   7. ஒரு பெரும்பண் (பிங்.); a primary melody-type.

   8. நாடகச்சந்தி (சிலப். 3:13, உரை); division of a drama.

   9. வரிக் கூத்துவகை (சிலப். 3: 13, உரை). 

    [உத்து (ஒத்து); → அத்து. அத்துதல் = ஒட்டுதல், பொருத்தித் தைத்தல். அத்து → அந்து → அந்தி. அந்தித்தல் =]

   1. நெருங்குதல்

 வேதமந்தித்து மறியான்" (திருவிளை. நகர. 106);

  2. கூடுதல், ஒன்று சேர்தல்] 

 உம் → உந்து → அந்து → அந்தி என்றுமாம். இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில் அந்தியெனப்பட்டது. காலையில் நிகழ்வது காலையந்தியென்றும் மாலையில் நிகழ்வது மாலையந்தியென்றும் சொல்லப் பெறும்.

 “காலை யந்தியும் மாலை யந்தியும்" (புறம். 34);

காலையந்திக்கு முன்னந்தி, வெள்ளந்தி யென்றும், மாலையந்திக்குப் பின்னந்தி, செவ்வந்தியென்றும் பெயருண்டு. அந்தி யென்னும் பொதுச்சொல் சிறப்பாக ஆளப் பெறும்போது மாலையந்தியையே குறிக்கும் என்பது, அந்திக்கடை, அந்திக் காப்பு, அந்தி மல்லிகை, அந்திவண்ணன், அந்திவேளை முதலிய சொல் வழக்கால் அறியப்படும்.

இடவகையில் அந்தி என்பது முத்தெருக்கள் கூடுமிடத்தைக் குறிக்கும்.

அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்" (சிலப், 14, 213);

   பிற்காலத்தில் அந்தி என்னும் சொல் சகரமெய் முன்னிடம் பெற்றுச் சந்தி என்றாயிற்று. ஒநோ: இளை → சிளை;   உதை → சுதை;ஏண் → சேண்.

அந்தி அல்லது சந்தி என்னுஞ் சொல் தலைக் கூடுதற் பொருளில் பண்டையிலக்கியத்தில் அருகியே வழங்கியமையாலும் சொற் புணர்ச்சியைக் குறிக்கச் சந்தி என்னும் சொல் வடமொழியிலேயே ஆளப் பெறுவதாலும், தமிழ்ப்பற்றுள்ள பெரும் புலவரும் சந்தி என்பது வடசொல்லென்றே மயங்கி வருகின்றனர். ஆயின், ஆய்ந்து பார்க்குங்கால், இதன் தென்சொல் மூலம் வெளிப்படுவது வியக்கத்தக்கதா யிருக்கின்றது.

இச்சொல் முதலில் தமிழில் வழங்கிய வடிவம் அந்து என்பதே. அந்துதல் = கூடுதல். அந்து → அந்தி = கூடியது, கூடிய நேரம் அல்லது

இடம். அந்து - சந்து (முதனிலைத் தொழிற் பெயர்);

   1. பொருத்து (பிங்.)

   2. உடற்பொருத்து (பிங்.); தொடைப் பொருத்து, இடுப்பு.

   3. இரு பகைவர் பொருந்துதல் (ஒப்புரவாதல்);

     'உயிரனையாய் சந்துபட வுரைத்தருள்" (பாரத. கிருட்டிணன்);

   “நடுநின்றா ரிருவருக்குஞ் சந்து சொல்ல" (சிலப். 8: 101 உரை)

   4. பலவழி கூடுமிடம்.

 சந்து நீவி" (மலைபடு. 393);  சந்து → சந்தை = பல கடைகள் கூடுமிடம்.

வடமொழியாளர் சந்தி என்னுஞ் சொல்லை ஸம்+ தி (sam + dhi); என்று பிரித்து ஸம் + தா (sam +{}); என்றுங் கூட்டுச் சொல்லினின்று திரிப்பர். ஸம் = உடன், கூட, together, தா = ({}); இடு, வை, to put. ஸம்தா ({}); = என்பது அவர் காட்டும் மூலம் (செல்வி. மே. 78, பக். 429-431);.

 சந்தி2 candi, பெ. (n.)

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் இணையும் போது ஏற்படும் மாற்றம்; the change, etc. that results when the last letter of a word combines with the first letter of the following word;

சந்தி என்னும் வடிவமும் ஒசையும் ஆராய்ச்சி யில்லாத் தமிழ்ப் புலவரை மயக்கலாம். இதற்கொத்த வடிவும் பொருளுமுள்ள சொற்கள், ஏனைச் சொல்முதல் மெய்களைக் கொண்டும் தமிழில் அமைந்திருத்தல் காண்க.

கும் → குத்து → கொத்து = குலை, குடும்பம், திரள். கும் → கம் → கத்து = உடற்கந்து (திவா.);, மாடு பிணைக்குந் தும்பு. கத்துவான் = மாடு பிணைக்குங்கயிறு. கந்துகளம் = நெல்லும் பதருங்கலந்த களம். கந்து மங்கல் = கப்பும் மங்கலுங் கலந்த சாயம். கந்து மாறுதல் = நுகத்திற் பூட்டிய எருதுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல்.

சந்தி என்னும் சொல், சொற்புணர்ச்சி என்னும் பொருளில் எவ்வகைத் தமிழ் வழக்கிலும் இதுகாறும் இடம்பெறாமற் போயினும் தெருப்புணர்ச்சி என்னும் பொருளில் சந்திக்கிழுத்தல், சந்தி சிரித்தல், சந்தியில் நிற்றல், சந்தி மறித்தல், சந்தியில் விடுதல் என்று உலக வழக்கிலும்,

 சந்தி மிதித்தல்" (திருவிளை. உக்கிர 27);,

 சதுக்கமுஞ் சந்தியும்" என்று செய்யுள் வழக்கிலும், ஊன்றி யிருத்தல் காண்க. சந்திக் கோணம் என்பது ஒரு தேருறுப்பு (பெருங். உஞ்சைக். 58: 51);. அந்து, சந்து என்னும் வினைமுதலிகள் இகரவீறு பெற்று உண்ணி, கொல்லி என்பன போல் செய்வான் பெயர்களாகிப் பின்னர் அஞ்சிக்கை, இரட்டித்தல் என்பன போல் மீண்டும் முதனிலைகளாய்ப் புடைபெயர்ந்தன என அறிக.

அந்து → சந்து;   அந்து → அந்தி;   சந்து → சந்தி;   அந்தி → அந்திப்பு;சந்தி → சந்திப்பு (வ.வ. 7௦,71); இரண்டு உருபன்கள் ஒன்று சேர்வது புணர்ச்சி இது சந்தி என்றும் அழைக்கப்படும். அந்தித்தல் = ஒன்று சேர்தல். அந்தி → சந்தி. புணர்ச்சி, சந்தி ஆகிய இரு சொற்களும் சேர்தல் அல்லது கூடுதல் என்னும் பொருளைக் குறிக்கும் ஒரு பொருட் பன்மொழிகளாம். மூன்று தெருக்கள் கூடுமிடத்தை முச்சந்தி எனவும், நான்கு தெருக்கள் கூடுமிடத்தை நாற்சந்தி எனவும் அழைப்பதை ஒப்பு நோக்குக. சந்தியென்னும் சொல் சமற்கிருதத்திலும் மேலைநாட்டார் எழுதிய மொழியியல் நூல்களிலும் வழங்கப்படுகிறது. தமிழ்வழக்கில் புணர்ச்சியே பெரும்பான்மை.

தெளிவுற்றேன். வழமைபோல் அறிவூட்டிய “கீழத்தெரு சந்தி”க்கு நன்றி கூறி விடை பெற்றேன்.

நான் இறந்து போகும் வரையேனும் இருப்பாயா என்னருமைச் “சந்தி”யே?


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்