Sunday 7 May 2023

எல்லாமுமாக இருக்கிறான்



ஏப்பிரல் 19, 2020 ல் முக நூலில், "எதிரே" என்ற தலைப்பிட்டு நான் எழுதிய சிறு பதிவொன்று பலராலும் பகிரப்பட்டு இப்பொழுது "கோகுலம் கதிர்" மே 2023 இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. படித்த, பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. கோகுலம் கதிர் இதழுக்கும் நன்றி. இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்ட வள்ளுவரின் படம் தம்பி மறைமலை வேலனார் வரைந்தது.


. ==========
. எதிரே...
. ==========

எங்கேயோ கண்காணாத் தொலைவில் இல்லை, இதோ எதிரிலேயே இருக்கிறான். எல்லோரையும் போல! பாட்டனைப் போல, சந்தியில் இருந்து உரையாடும் மூத்தோரைப் போல, வயல்வெளியில் உழைத்துக் களைக்கும் உழவனைப் போல, கொடைவிழாக் கடைத்தெருவில் குழந்தைக்குப் பொம்மை வாங்கித் தந்து தானும் மகிழும் தந்தையைப் போல, கட்டுமரமேறி கடல்வெளியில் துணிவுடன் செல்லும் வீரனைப் போல, காதலில் திளைக்கும் தலைவனைப் போல, வேரறிந்த மருத்துவன் போல, மலைகளில் இரவறியும் மனிதரைப் போல, காளிஊட்டுக்கு மணக்க மணக்க சமைக்கும் சமையல்காரரைப் போல... இப்படி எல்லோரையும் போல, எல்லாமுமாக இருக்கிறான்.
மகிழ்கிறான், வருந்துகிறான், சினம் கொள்கிறான், கட்டளையிடுகிறான், அறிவுறுத்துகிறான், களிக்கிறான், நகைக்கிறான், நக்கலடிக்கிறான், பெருமை கொள்கிறான், எச்சரிக்கிறான்....
வெகுநிச்சயமாய் அவன் முற்றுந் துறந்தவன் இல்லை. வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன். குருதியும் தசையுமாய் இம் மண்ணில் நடந்த மனிதன்.
நிறைய படங்கள் பார்க்கிறேன். எனக்கு இந்தப் படமே ஓரளவுக்குப் பிடித்தபடம். சந்தியில் படிக்கல்லில் உட்கார்ந்து கொண்டு "வா.. பேரா. எப்ப வந்த? மூணு வருசத்துப் படிப்ப ரெண்டே வருசத்துல முடிசிட்டியாம்ல?" என்று நக்கலாகக் கேட்கிற பாட்டாவாகத் தான் பார்க்க முடிகிறது. படம் வரையத் தெரிந்தால் இன்னும் சிறப்பாக என் மனதில் இருக்கும் உருவத்தை வரைந்துவிடுவேன். வள்ளுவரின் நல்லகாலம் எனக்குப் படம் வரையத் தெரியாது. இங்கே உள்ள வண்ணப்படம் "மணற்கேணி" நூலின் அட்டைப்படமாக தம்பி மறைமலை வேலனார் வரைந்தது.
எத்தனை எள்ளல், எவ்வளவு நையாண்டி.
ஒண்ணு பாக்கலாமா?
================================
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை/
முன்நின்று கல்நின் றவர்./ 771
"தம்பீ.... எங்க ஆள்கிட்ட வச்சுக்காதீங்க சொல்லிட்டேன்"

"பயப்படுத்திறீங்களா? வச்சுகிட்டா என்ன ஆயிடும்?"

"அதோ... நடுகல்லா நிக்கிறதெல்லாம், முன்னால உங்கள மாதிரி நின்னவுக தான்"
====================================
இப்படித்தான் .... வள்ளுவன்.
('அன்' விகுதியில் அவரை அழைத்ததற்குப் பொறுத்தருள்க) நாமதான் அவரை ரெம்ப உயரத்துல தூக்கி வச்சுகிட்டு, அவரு எழுதுனத படிக்காமலேயே விட்டுட்டோம்னு தோணுது...
==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
19-04-2020 (முகநூல்)

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்