Tuesday 6 February 2024

தொழுதுண்ணல்

 


அப்பா சாப்பிடும்போது முதலில் சில சோற்றுப் பருக்கைகளை, இட்டலி என்றால் சிறு துண்டொன்றைத் தரையில் வைத்துவிட்டு அதன் பிறகே சாப்பிடத் தொடங்குவார்.

சாப்பிடும்போது “கீழ சிந்தாம திண்ணு, சின்னப்பிள்ள மாதிரி சிந்திற்று கெடக்க” என்று சொல்லி வளர்க்கப்பட்ட எனக்கு அப்பாவின் இந்தச் செய்கை வியப்பாகவும், புரியாமலும் இருக்கும். அவரிடம் கேட்க முடியாது. (அப்பொழுதெல்லாம் பலருக்கும் என்னைப்போலவே அப்பாவிடம் விரிவாகப் பேசுவதற்கு அச்சம் இருந்திருக்கும்). சில வேளைகளில் அவர் மீது சின்னப் பொறாமையாகவும் இருக்கும். “நானும் வளந்து மீசையெல்லாம் வச்சதுக்குப் பொறவு கீழ போட்டுத் திம்பேன் பாரு” என அம்மாவிடம் சொல்வதுபோல் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்.

வளர வளர இவையெல்லாம் மெல்லப் புரியத் தொடங்கியது. வயதொத்த நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில் “மக்கா இந்தச் சோத்த கொண்டு  வயல்ல  குடுத்துற்று வாரியா? என்று அம்மாவோ பாட்டியோ கேட்கும்போது இப்படியாவது அவருடன் கொஞ்சம் நெருங்கலாம் என்ற எண்ணத்தில் பாதி விளையாட்டை விட்டுவிட்டுப் போனதுண்டு.

அப்படி முதல் முறை கொண்டுபோன சோத்துவாளியிலிருந்து எடுத்தச் சோற்றில்கூட ஓரிரு பருக்கைகளை வயலில் போட்டுவிட்டே உண்ணத் தொடங்கிய அப்பாவைக் கவனித்தேன். வீட்டில் சோறிடும்போது இருந்ததை விட வயலில் அவர் முகத்தின் உணர்ச்சி அழகாக இருந்தாகவே உணர்ந்தேன்.  ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்குப் பின் அவர் தரையில் சோறிட்டதன் காரணம் புரிந்தது. 

அது நிலத்திற்கான படையல். எங்கிருந்து எடுத்தாரோ அதற்கு நன்றி நவிலல் . 

இப்பொழுது உணவருந்தும் போதெல்லாம் தன்னையறியாது இந்த நினைப்பு வந்து செல்லும்.

அவர் மறைந்தபின் வெளியான “மணற்கேணி” என்ற எனது நூலை

வெயிலைக் குடையெனப் பிடித்து

மழையை உடையென உடுத்து

சேற்றைச் செருப்பென அணிந்து,

நெற்றி வேர்வை நிலம் வீழ

நெல் விளைத்து

எமை வளர்த்த,

தந்தைக்கு... 

என்று எழுதி அவருக்குப் படையலாக்கினேன். எழுதி முடித்தபின் அது உழுகுடித் தந்தையர் அனைவருக்குமானது என உணர்ந்தேன்.

எவராவது இலையில் இட்டச் சோற்றின் முன் கைகூப்பி வணங்குவதைக் கண்டால் தற்செய்கையாகக் கண்களின் ஓரம் கசியும். உள்ளம் பெருமிதத்தால் நிறையும். தொழுதுண்ணும் நிலை நினைத்து வருந்தும்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்