Sunday 26 May 2024

சாதியும் காதலும்



“காதல் திருமணங்கள் ஓரளவுக்கு சாதியற்ற சமூகத்தை உருவாக்குகிறது, அங்கேயும் சாதி ஆணவமே” என்ற தோழர் ஒருவரின் பின்னூட்டத்தின் தொடர்பாக எழுதியதே இந்தப் பதிவு.
இன்றைய காலகட்டத்தில், காதலர் இருவரும் ஒரே நிலைமையில் உள்ள பணக்காரர்களாக இருக்கும் போதோ, அல்லது எதுவுமற்ற ஏழைகளாக நகரத்தில் வாழும் போதோ பெரும்பாலும் சாதி செத்துவிடுகிறது. இருவரில் ஒருவர் மட்டும் பணக்காரராய் இருக்கும் போது, சாதி, சமூகத்தின் வழியாகக் குரூரமாக இடை மறிக்கிறது. வலுவாக எதிர்க்க இயலவில்லை என்றால் விலக்கி வைக்கிறது. அதுவும் முடியவில்லை என்றால் சமூகம் விலகிவிடுகிறது. இங்கே "சமூகம்" எனப்படுவது அதே சாதியைச் சேர்ந்த பெருந்திரள் கூட அல்ல. ஒரு சிறு பகுதி சார்ந்த, சில உறவு முறைக் கூட்டம் மட்டுமே. அதனால் இந்தப் பதிவில் சாதி என்பதை விட சாதியம் என்று எடுத்துக்கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

சாதியம் தனி உடைமையின் / முதலாளியத்தின் கூறாகவே இருக்கிறது. சொத்துடமை இல்லை என்றால் சாதியம் செத்தொழியும் வாய்ப்புகள் அதிகம். சொத்துடமையின் செல்லப்பிள்ளையாகவே சாதியம் வலுவடைகிறது. அது சொத்தில்லாத, அதே சாதியைச் சார்ந்தவரின் மனதிலும் (எதிர்ப்பு சக்தி இல்லையென்றால்) தொற்றுநோயாகப் பரவுகிறது.
நெடுங்காலமாகச் சமூகத்தில் "பெருமை" என்பதன் ஆணிவேர் பணம் / பொருளின் மீது படர்ந்து அதுவே பொது மனநிலையாக மாறிவிட்டது.
சமூகத்தில் "பெருமையுடன்" வாழவேண்டும் என எல்லா நிலை மனிதர்களுக்குள்ளும் எண்ணம் எழுகிறது. அதற்காக அவரவருக்குக் கிடைக்கும் பல விதமான வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். உணவு, இருப்பிடம், உடைகள், வண்டி, தொலைக்காட்சி, கைப்பேசி முதலியன பெருமைக்கானப் பட்டியலில் இயல்பாகச் சேர்ந்துவிடுகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் பொருள்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபடலாம்.
"பெருமையில்" பொருள் குறித்த சிந்தனை ஏழைச் சமூகங்களிடையே எங்கிருந்து வருகிறது?
வணிக நோக்கில் பரப்பப்படும் விளம்பரங்கள் பெரும்பாலும் "உடைமை" குறித்தே பேசுகின்றன. அவர்கள் மெல்ல அதை நோக்கி நகருகிறார்கள். அந்தப் பொருள்களை வைத்திருக்கும் நபர்களை, உற்றுநோக்கும் விதமாகக் கதைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் இத்தகையச் சூழலில் மிக வேகமாக வேலை செய்கின்றன.
பாவாணர் எத்தனை நூல்கள் எழுதியிருப்பார் என்ற கேள்விக்கு ஏராளமானோர் பதில் குறித்துச் சிந்திக்கக் கூடத் தலைப்பட மாட்டார்கள். ஆனால், இந்தியாவில் பெரிய பணக்காரர் யாரென்று கேட்டால் "டாட்டா" "பிர்லா" என்று பழைய பெயர்களையாவது சொல்லிவிடுவார்கள்.
தன் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நாட்டுக்கு உழைத்தவர்கள், மக்களின் வாழ்வியல் ஏற்ற இறக்கங்களைக் களைய முற்பட்டவர்கள், இலக்கியம், மொழி மற்றும் பண்பாடு குறித்துப் பேசிய அறிஞர் போன்றோரைப் பின்பற்ற வேண்டுமென்று நினைப்பவர்; அந்தச் சமூகத்திலேயே ஒன்றிரண்டு பேர் வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால் ஒரு சமூகத்தின் பெரும்பகுதி, பொருள் சேர்த்தவர்களையே குறியீடாகக் கொள்கிறது. அவர்களுக்குத் தரப்படும் சமூக அங்கீகாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறது. அதையே தானும் இயன்ற அளவில் அடைந்துவிடத் தீர்மானிக்கிறது.
நான் நூறு ருபாய் சம்பாதித்துவிட்டேன் என்பதை பத்தாயிரம் சம்பாதித்தவரிடம் பெருமையாகச் சொல்ல முடியாது. அவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு சிறப்பு மரியாதை எதுவும் தர மாட்டார்.

அதனால் பத்து ருபாய் சம்பாதிக்கச் சிரமப்படுபவரிடம் எனது நூறு ருபாயைக் காட்டுவேன். நான் சம்பாதித்த கதை சொல்லுவேன். அவரிடம் இல்லாத பொருள் ஒன்றை வாங்கி அவரிடம் பெருமையாகக் காட்டுவேன். இப்படியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது பொது மனநிலை.
இதே மன நிலையின் நெருக்குதலில் "பொருள்" எதுவுமே இல்லாத போது என்ன செய்வது? ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டிருக்கும் புறச்சூழலில் என்ன செய்வது?
என்னால் எளிதாக எடுத்தாள இயலுகிற ஒன்றை, பொருட்செலவின்றி கிட்டுகின்ற ஒன்றைத் தேடுகிறேன். கட்டமைக்கப்பட்ட சாதியம் கண்ணெதிரே நிற்கின்றது. "இது எங்க சுடுகாடு" என பெருமை பேச வைக்கிறது. மனதுக்குள் மெல்ல மெல்லச் சாதியம் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கிறது. மெல்ல, தன் குழந்தைகள் (குறிப்பாகப் பெண்கள்) இந்தப் பெருமையைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆசையையும் வளர்த்துவிடுகிறது.

உணவு, உடை போன்ற அன்றாட பயன்பாடுகளில் நெகிழ்வும், பொதுத்தன்மையும் வந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் பொருளின் மீது நிற்கும் பெருமையை மதம், சடங்கு முறைகள், திருமணம் போன்றவற்றில் தேடும் மக்களின் மனதுக்குள்தான் சாதியத்தின் பிடி இறுகிக் கிடக்கிறது.

செல்வம் படைத்தவர்களில் பெரும் பகுதியினரும், அன்றாட வாழ்வையே இன்னல்களோடு வாழந்து கடப்பவரில் பலரும் இந்தப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டோ அல்லது சூழலின் நிமித்தம் விடுவிக்கப்பட்டோ வெளியேறி விட்டார்கள். இடைப்பட்டவர் மட்டுமே இந்தச் சங்கிலிக்குள் மாட்டிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கும் தெரியும் அந்தச் சங்கிலியைப் பிடித்துகொண்டிருப்பது அவர்களல்ல, சமூகம் என்று. ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே சாதியம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

===========================

26-05-2021 அன்று எழுதியது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்