Sunday 12 May 2024

வடந்தைத்தீ - Aurora Borealis




வடந்தைத்தீ vaḍandaittī, பெ. (n.) வடதிசை நெருப்பு (L.);; aurora borealis.


"சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" (காஞ்சிப்பு. இருபத்.384);.

[வடம் → வடந்தை + தீ = வடதிசை நெருப்பு அல்லது வட வைக்கனல் (வ.மொ.வ.2 பக்.78);. வடந்தை = வடக்கிலுள்ளது. வடக்கிலுள்ளதாகக் கருதப்படும் கனல்.

==================

தமிழர் வரலாறு நூலில் பாவாணர் கூற்று வருமாறு:

படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். "மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்" (திருமந். 2031).

பரவன் - பரதவன் = 1. மீன் பிடிப்போன். "மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்" (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். "தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378).

பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். "படர்திரைப் பரதர் முன்றில்" (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2). 3. வணிகன். "பரத குமரரும்" (சிலப். 5:158).

பரதவர் கடலோடிகளும் (Mainers) சுற்றுக் கடலோடிகளுமாய் இருந்ததனால் (Circumnavigators), வடதிசைச் சென்று
வடபார் முனையில் சிற்சில வேளைகளில் தோன்றும் வண்ணவொளியைக் கண்டு, அதற்கு வடவையென்று பெயரிட்டனர்.

வடம் - வடவை = வடதிசை நெருப்பு.
"வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து" (தனிப்பாடல்).

வடவனல் = வடவை.
"அக்கடலின் மீது வடவனல் நிற்க விலையோ"
(தாயு. பரிபூர.9)

"வெள்ளத் திடைவாழ் வடவனலை" (கம்பரா.தைலமா.86)

வடவனலம் = வடவை
கடுகிய வடவன லத்திடை வைத்தது" "(கலிங். 402)

வடம் - வடந்தை = வடதிசையிலுள்ளது,வடகாற்று.

வடந்தைத்தீ = வடவை."சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" (காஞ்சிப்பு. இருபத். 384).
உத்தர மடங்கல் = வடவை (திவா.).உத்தரம் = வடக்கு.
மடங்கல் = கூற்றுவன்போல்உலகையழிக்கும் ஊழித்தீ.
உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ,வடவை (பிங்.).

பாரின் தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்றுமேனும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது.

வடவனல் குமரிநாடு முழுகு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட தேனும், அதைப்பற்றிய குறிப்புள்ள இற்றைப் பண்டை நூல் 7ஆம் நூற்றாண்டினதான திவாகரமே. எனினும் வடவையை முதன்முதல் கண்டவன் தமிழனே என்பதற்கு, அதுவே போதியசான்றாம்.

ஏனெனின், இற்றையறிவியல்களைக் கண்ட மேனாட்டாரும் அதை 17ஆம் நூற்றாண்டிலேயேஅறிந்தனர். காசந்தி (Gassendi) என்னும் பிரெஞ்சிய அறிவியலார் 1621-ல் அதைக் கண்டு அதற்கு 'வடவிடியல்' (Aurora Borealis) என்று பெயரிட்டனர். இன்று அப் பெயர்க்கு வடவொளியென்றே பொருள் கொள்ளப்படுகின்றது,. அதன்விளக்கம்:

"A luminous atmospheric phenomenon, now considered to be of electrical character, occurring in the vicinity of, or radiating from, the earth's northern or southern magnetic pole, and visible from time to time by night over more or less of the adjoining hemisphere, or even of the earth's surface generally; popularly called the Northern (or Southern) Lights............" என்று எருதந்துறை ஆங்கிலப்பேரகரமுதலியிற் கூறப்பட்டுள்ளது.

தமிழ்ப்பெயரும் இலத்தீனப் பெயரும்ஏறத்தாழ முற்றும் பொருளொத்திருத்தல் காண்க.

=================

வேறு நூல் குறிப்புகள் சில:

"இதனை மின்னாற்றல் போன்ற ஒரு வகை வெம்மை ஆற்றல் என்று கருதுவாரும் உளர்." (தாயுமானவர் - பேரா ந.சுப்புரெட்டியார்).

பிற்காலத்தில் வடந்தைத்தீ - பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து ஊழி முடிவில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படுந் தீ - என்ற புராணக் கதையாகிப் போனது.

துங்க மா முடி பொடிபட வட அனல்
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட (திருப்புகழ்)

வடஅனலுங் கொடுவிடமும்
வச்சிரமும் பிறவுமாம் (சேக்கிழார் – திருநின்ற சருக்கம்)

மின்றிரள் சுடரது கடல் பருகும் ** வடவனல் வெளியுற வருவதெனச் ( கம்பன்)

கடல்கள் எல்லாம்
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக (கம்பன் யுத்தகாண்டம்)

நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே வந்தனர் மகர முன்னே (அகிலத்திரட்டு அம்மானை)

===============================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
12-05-2024
===============================
காணொளி - Sivasubramaniapillai இலண்டனிலிருந்து. Laxmi Pathi
படங்கள் : Sivananthy Ganesarayan யார்க்சயர்






No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்