Wednesday 26 June 2024

கலையாத உறக்கம்

 


கழுகுமலையில்
சிலைவடித்த உளிகள்
அம்மி கொத்திக்கொண்டிருக்கின்றன,
அரவை எந்திரம்
இல்லாத வீடுகளில்…

சித்தன்னவாசல் ஓவியமெழுதிச்
செழித்துக்கிடந்தத் தூரிகைகள்
சுண்ணாம்பு பூசிக்கொண்டிருக்கின்றன,
கழுதைகள் உரசும்
கட்டைச் சுவரில்….

நாமோ,
கொலைவாட்களைக்
கோபுரத்தில் ஏற்றிவைத்தோம்.
அவை
நம் மீது விழுந்தே
உயிர் குடிக்கின்றன.

தாயின் மாரில்
வாளிறங்கியபோதும்
தனயன் உறக்கம்
கலைந்திடவில்லை,


என் செய்ய?

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்