Wednesday 24 July 2024

தற்செயல்...

 


நேற்று கூரியரில் (courier-க்கு தமிழில் என்ன சொல்வது?) முனைவர் ஏர் மகராசன் அவர்கள் அனுப்பிய உறையொன்று வந்து சேர்ந்தது. முன்பே நண்பர் செந்தில் வரதவேல் அனுப்பிவைத்த “வேளாண் மரபின் தமிழ் அடையாளம்” நூலும் மேசையில் இருக்கின்றது. அதைப் படித்து விட்டேன். எழுதவேண்டும். (கனமான செய்திகளைச் சுமக்கின்ற நூல் அது)

கடந்த இரண்டு மாதங்களாக எழுத இயலவில்லை. கை கொஞ்சம் முரண்டு பிடிக்கின்றது. தொடர்ந்து எழுதுவதும் தட்டச்சு செய்வதும் கடினமாக இருக்கின்றது.

பேசியே எழுத உதவுகின்ற செயலிகள் அத்துணை வசதியாக இல்லை. முயற்சித்தேன். கையால் எழுதுகின்ற போது வந்து விழுகின்ற சொற்கள், செயலியில் பேசுகின்றபோது சரியாக வரவில்லை. மீண்டும் கையால் எழுதுவது / தட்டச்சு செய்வது என்பதே சரியாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

முனைவர் தென்னன் மெய்ம்மன் அவர்களது “திருமகள் இலக்கணம்” நூலுக்கு மெல்ல எழுதி முடித்துவிட்ட எனது முன்னுரையோடு, அவரது நூலும் வெளிவந்துவிட்டது. அதைத் தனிப்பதிவாக இடுகின்றேன்.

இப்பொழுது சொல்ல வந்தச் செய்தி வேறு. கூரியர் கொண்டு வந்தவர் உறையை என்னிடம் தந்துவிட்டு கையெழுத்தும் வாங்கியபின் “ஐயா, இந்தப் பள்ளியில் தான் நான் படித்தேன்” என ஏர் மகராசன் அவர்களின் முகவரியில் இருந்த “வி நி அரசு மேல் நிலைப்பள்ளி, பெரியகுளம்” என்பதைத் தொட்டுக் காட்டினார். அப்பொழுது அவர் முகம் ஏக்கம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. ஏறத்தாழ ஐம்பது வயதிருக்கும் அவருக்கு. 

“ஐயா இந்த நூலை அனுப்பியவர் அங்குதான் பணியிலிருக்கிறார். நான் நேரடியாகப் பார்த்ததில்லை. கைப்பேசியில் பேசியிருக்கிறேன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்றேன்.

“நான் ஊரை விட்டு வந்து நாளாச்சு ஐயா. எனக்கு அவரைத் தெரியாது” என்றவர், “வேறு ஒன்றுமில்லை ஐயா இந்த வி.நி ன்னு போட்டிருக்கே, அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? ஏன்னா நாங்க படிக்கும் போது அப்படிப் பெயர் எதுவும் இல்லை. அதுக்குத்தான் கேட்டேன்” என்றார்.

“தெரியவில்லை ஐயா. நூல் அனுப்பியவரிடம் கேட்டால் தெரியும்”

"நீங்கள் படித்த காலத்திற்குப் பின்பு யாரவது பெரியவர்களின் பெயரை வைத்திருக்கலாம்" என்றான் என் மகன்.

“பரவாயில்லை ஐயா. எனக்கு நேரமாகின்றது. வருகிறேன்” என்றபடி கீழிறங்கிச் சென்றுவிட்டார்.

நரை கூடிய தலை. ஒல்லியான உருவம். அதற்குள்ளே ஏதோ ஒரு காலத்தின் தேடல். உறையைப் பிரிக்கிறேன்.

“நிலத்தில் முளைத்த சொற்கள்”.

இது என்ன பொருத்தம் எனத் தெரியவில்லை. பூரணகாயபரின் தற்செயல் கோட்பாடுதான் நினைவுக்கு வந்தது. உறை கிழித்து நூலைத் திறந்தேன்.

“கருப்பம் கொண்ட

பிள்ளைத் தாய்ச்சியாய்

உயிர்த்தலைச் சுமக்கின்றன

நிலம் கோதிய சொற்கள்” …. அடடா..

இன்னும் ஒருநாள் அவர் அஞ்சல் சுமந்து வருவார். அதற்குள்ளாக நான் வி.நி என்ன என்பதை ஏர் மகராசன் ஐயாவிடமிருந்து தெரிந்து வைத்திருப்பேன். மீண்டும் அவர் வருகின்ற போது சொல்வேன். நரையேறிய அவர் தலையை அந்தச் சொற்கள் கோதும். 

காத்திருக்கிறேன்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்