Friday 9 August 2024

காலச் சுனை



ப்பொழுது தான் ஒடித்துத் தோலுரிக்கப்பட்ட வாகைக்குச்சி ஒன்று வீட்டின் பின்புறமிருந்த களத்தின் தென்மேற்கு மூலையில் மண்ணில் வரையப்பட்ட வட்டத்திற்குள் வழவழவென்று வெண்ணிறமாய்க்  கிடக்கிறது. அருகில் இருந்த வேப்பமரத்திலும் பூவரசமரத்திலும் குரங்குகள் போலே தொங்கிக் கொண்டும் அங்குமிங்கும் ஏறி இறங்கி குச்சியை எடுப்பதற்காகப் போக்குக் காட்டிக்கொண்டும் இருந்தார்கள் நண்பர்கள். அந்த வாகைக் குச்சியையும்  காவல் காத்தாக வேண்டும், அவர்களில் யாரையாவது தொட்டுவிடவும் வேண்டும் என்ற முனைப்பில் நான் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன். பூவரச மரத்தின் ஒல்லியான கொப்பைப் பிடித்ததால் சறுக்கி விழுந்த வேலப்பனை சட்டென்று தொட்டுவிட எத்தனிக்கையில்...

"மக்கா.. மக்காஆஆஆ"

அளிபோட்ட சன்னல் வழியாக அம்மாவின் குரல்கேட்டு 'மரக்குரங்கு' விளையாட்டை மறந்துவிட்ட அந்த ஒரு நொடியில்  வேப்பமரத்திலிருந்து பாய்ந்து வந்த சுப்பிரமணி குச்சியைக் கைப்பற்ற... ஒரே ஆரவாரம். அந்த ஒலிகளுக்கிடையே, 

"மக்கா.. மக்காஆஆஆ" மீண்டும் அம்மாவின் குரல்.

"ன்னா வாரேம்மா.." 

"என்னய அம்ம கூப்பிடுகா.. கேட்டுட்டு வந்திரட்டா?"

"லே.. மக்கா போயிற்று வந்து நீதாண்டே கொரங்கு புடிக்கணும். சொல்லியாச்சு. சீக்கிரம் வந்துரு என்னா"

நண்பர்களின் குரல்கள் பின்னிசையாக புழக்கடை வாயில் நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்.

டுக்களைக்குள் தோசையின் மணம். அம்மா சேலைத் தலைப்பால் சோத்துவாளியைத் துடைத்து கூடைக்குள் வைத்துக் கொண்டிருந்தாள். 

"எதுக்கும்மா கூப்டே"

"அப்பா மரம் அடிக்க வயலுக்குப் போயிருக்கா. இந்த காப்பியக் கொண்டு குடுத்துற்று வாறயா?" 

ஆங்கிலேயர்களின்  வருகை தந்த கொடை(?) நாஞ்சில் நாட்டின் காலை உணவு "காப்பி" என்ற சொல்லாலேயே அழைக்கப்படுகிறது.

பெரியகுளத்தாங்கரைச் சொள்ளமாடன் கோயில் தாண்டும் போது அப்பா எந்த வயலில் நிற்பார் என்று கேட்காமல் வந்துவிட்டோமே என்று தோன்றியது.

"என்னப்போ பரக்கப் பரக்கப் பாத்துக்கிட்டு நிக்க. ஒங்க அப்பன தேடுகியோ?"

"ஆமா பாட்டா"

"கரையடிச் சாத்தாங்கோயில்ல எறங்கி காலு வரப்பிலேயே போ. தெரட்டடி வயல்ல நிக்கது தெரியும். எண்ணைக்காம் ஒருநா திருநா பாக்கது மாரி வயலுக்கு வந்தா இப்பிடித்தான்" சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் கோசுப்பாட்டா.

வரப்பில் இறங்கும் முன்னமே உரமேறிய கைகள் காற்றில் அளைவது தெரிந்தது. அப்பா யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார். இலக்கு தெரிந்ததும் விரைந்து நடக்கலானேன்.

கோயிலின் அருகில் சாய்த்துக் கிடத்தப்பட்டிருந்தது பச்சை வண்ண இருக்கை கொண்ட அப்பாவின் மிதிவண்டி. சோறு சுமந்து வந்ததைச் சாக்காகக் கொண்டு இன்னைக்குக் கொஞ்சம் குறங்குப் பெடல் அடிச்சுப் பார்க்கலாம் என எண்ணிக்கொண்டே வாய்க்காலில் இறங்க சில்லென்று விரல்களுக்கிடையே பரவிய நீரின் தழுவல் இதமாய் இருந்தது. கூடவே துள்ளி நீந்தும் மீன்களும். ஆனால், மரம் அடிக்கும் வயலுக்குச் சோத்துவாளியோடு வருவது இதற்காக அல்ல. இதெல்லாம் புத்தனாற்றிலும், தெப்பக்குளத்திலும் பாராததில்லை.

மாடுகள் இழுத்துச் செல்லும் மரத்தின் பிளக்கப்பட்ட கழிக்கோல்களுக்கு நடுவே வைக்கப்பட்ட பிரம்புக் குட்டை தான் எனது மகிழ்ச்சிக்குக் காரணம். பொடிப் பருவத்தில் உழுதபின் நிலத்தைச் சமன் படுத்த மரமடிக்கையில் அந்தக் குட்டையில் உட்கார்ந்து வயலில் பயணம் செய்வது அத்தனை இன்பம்.

"எல்லா வயக்களும் ஒண்ணு போலதான் இருக்கு. எப்பிடித்தான் அடையாளம் கண்டு பிடிப்பாங்களோ?" என்று நினைத்துக்கொண்டே அப்பாவின் அருகே வாளியை வைத்துவிட்டு முருகண்ணனைப் பார்க்கலானேன்.

"பாட்டோவ்.. நீதான் இன்னைக்கு காப்பி கொண்டாந்தியோ? மாடு அவுக்கதுக்குள்ள மழ வந்திருமே"

வெற்றிலைச் சாயமேறியப் பல் தெரியச் சிரித்த முருகண்ணன் கேள்வியில் எக்காளம் தொனித்தது.

"ம்.. ஆமா.."

"செனப்படாத டே. வந்து குட்டைல ஏறி இரி பாப்பம்"

அவ்வளவுதான். ஒரே தாவலில் பிரம்புக் குட்டையில் இருந்தேன்.  பெருங்கட்டிகள் உருள்வதும், சிறிய கட்டிகள் உடைவதுமாகப்  பயணம் தொடங்கியது. தொளிப் பருவத்தில் மாடுகளின் பின்னால் மேகக் கூட்டம் போல கொக்குகள் பறந்து பறந்து அமரும். பொடி என்றால் அவை வாராது.  நகர்ந்து கொண்டிருந்த மரத்திலிருந்து ஒரு கையை நீட்டிப் புழுதி தொடவும் சடசடவெனத் தூறல் தொடங்கவும் சரியாக இருந்தது. தாடகமலையைப் பார்க்கிறேன். மஞ்சு கவிகிறது.

 "செயிசா... மழ பெலக்கும் போலயே. என்னச் செய்ய?" மாடுகளை நிறுத்தாமல் முருகண்ணன் அப்பாவிடம் கேட்டார். (செகதீசா என்பதன் மரூஉ தான் செயிசா).

"பெலக்க மாரி தெரியல முருகா. பாப்பம்" பாதித் தோசை மட்டுமே தின்றிருந்தவர் வாய்க்காலில் கை கழுவிவிட்டு, இரு கைகளையும் சேர்த்து நீரள்ளிக் குடித்தார்..

உணங்கிய புழுதியில் தூறல் வீழ்ந்த பின் எழும் மணம், பிசுக்கென மரத்தில் ஒட்டும் புழுதி என எல்லாவற்றையும்  தொட்டுவிடுகிற தொலைவில் பார்ப்பது இதுவே முதன்முறை. (சம்சாரியா இருக்கிறது கட்டம்னு நெனச்சு படிச்சு வேலைக்குப் போகணும்னு எங்கள வய பக்கமே வராம பாத்துக்கிட்டாரு அப்பா. அதனால் அது மீண்டும் நிகழவேயில்லை என்பதுதான் வாழ்வின் பெருவருத்தம்.) மனம் துள்ள இரு கைகளாலும் மண்ணைத் தொட முயல பிடிமானமின்றிக் குப்புற விழுந்தேன்.

"என்னடே சமுசாரிக்க மகனா நீ... மரத்துல இருக்கத் தெரில. எந்திரி டே"  என்ற முருகண்ணன் குரல் தாடகமலைக்கு அந்தப்புறம் வெகுதொலைவில் கேட்கிறது. என் கக்கத்தில் ஒரு கை நுழைய மெல்ல எழுகிறேன். புழுதி படிந்த என் முகத்தோடும் கைகளோடும் சேர்ந்து முளைத்தெழுகின்றன ஆயிரமாயிரம்  சொற்கள்.

எழுந்து நின்று பார்க்கிறேன் வயல்வெளி எங்கும் சொற்கள். மேல மலையில், உலக்கை அருவிச் சரிவில், கடுக்கரைப் பொத்தையில், பழையாற்றங் கரைகளில் என எங்கிலும்; பூட்டிகளும் பாட்டிகளும் பூட்டன்களும் பாட்டன்களும் பேசிச் சிரித்த, அழுது புலம்பிய, அரற்றித் திரிந்த, தனிமை கழித்த சொற்கள். அப்பாவைத் தேடுகிறேன். பச்சையம் போர்த்திய தாடகை மலை முகடுகளில் சொற்களாய்...

காலங்களைக் கடந்து இப்படியான துய்த்தலுக்குள் என்னைச் சுமந்து சென்றது  "நிலத்தில் முளைத்த சொற்கள்" என்ற கவிதை நூல். பண்பாட்டு வேர்களில் நீர் வார்க்கும் ஆய்வுகளைத் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும் மகராசன் அவர்கள் எழுதியது.

தமிழ் மரபில் நிலம் பெண்ணாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலும் வள்ளுவர் சொல் போன்று அவள் "நல்லாளாகவே" பரந்து கிடக்கிறாள். இலமென்று இருப்பாரைக் கண்டால் அவள் நகைக்கிறாள். ஏனென்றால் உழுகுடிகளுக்கு நெல்லும் சொல்லும் அவளே கொடுத்தாள். அப்படியான ஒரு பெருவாழ்க்கையின் வெளிப்பாடாக, சொல்லப்படாத துயரங்களின் சொற்படங்களாக, வெறுமைகளின் கோட்டோவியங்களாக "மைத் தூவலின் அழுகைத் தேய்ப்பில் கசிந்து வழிந்த சொற்களால்" தம்மை வரைந்து கொள்கின்றன அவரது கவிதைகள்.

உள்ளத்துள்ளது கவிதை என்பார் கவிமணி. உள்ளத்தின் அடியாழத்திலிருந்து உணர்வுகள் சுமந்து இயல்பாய்க் கசிந்து வரும் கவிதைகள் உயிர்ப்பானவை. குப்பியில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நிறமற்ற கண்ணாடி போன்ற, தன்னுடைய தன்மை எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்ற  நீரல்ல அவை. மலைகளின் தன்மை சுமந்து, காலத்தின் வரலாற்று அடுக்குகளில் வழிந்தோடி, அப்படியே அள்ளிக் குடிக்கிற பழையாற்று வெள்ளம். பெருங்குடலில் பரவி நிறைந்து தாகம் தணிக்கும் தாமிரபரணித் தண்ணீர். உச்சி குளிர உயிரொடு வழியும் வையைப் புனல். தஞ்சை வயல் வெளியில் நெல்லருந்தும் காவிரி நீர். அப்படி மண்ணின் தன்மை குழைய, வெம்மை தகிக்க, நீர் சுழிய வெடிப்புகள் இழுகி நிரவும் கவிதைகள் நூல் நெடுகிலும் காலங்காலமாய்ப் பேசிச் சிவந்த சொற்களின் வேர் பாய்ச்சி நிற்கின்றன.

உறக்கம் வாராது விழித்திருக்கும் நள்ளிரவுப் பயணங்களில் உங்கள் சாளரத்தின் வெளியே நெடுந்தொலைவில் தெரியும் ஒற்றை விளக்கொளி; அஃது ஊரா? அல்லது ஒற்றை வீடு மட்டுமா? அங்கே குழந்தைகள் இருப்பார்களா? எங்கே படிப்பார்கள்? முதியவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? என்ற எண்ணங்களைத் தந்ததுண்டா?

பகல்பொழுதுப் பயணங்களில்; யாருமற்ற வெம்பரப்பில் மாடு மேய்க்கும் மனிதர்கள் உங்கள் மனதில் இருக்கிறார்களா? ஏரிக்கரைகளில் மகிழ்சியோடு குதித்து நீந்தும் சிறுமிகளின் உற்சாகம் தொலைவிலிருக்கும் உங்களைத் தொற்றியதுண்டா?.

உங்களுக்காகவே, "கருப்பம் கொண்ட / பிள்ளைத் தாய்ச்சியாய் / உயிர்த்தலைச் சுமக்கின்றன" இவரது கவிதைகள். நக்கி நக்கியே காயங்கள் ஆற்றிக்கொள்ளும் புலிகளைப் போல / நெய் கசிந்த மாடக்குழிகளில் / மையெடுத்து வலிகளை வரைந்து போகின்றன சொற்கள்.

வெறும் அவலங்களை மட்டுமே சொல்வதல்ல கவிதை. வலியின் ஊடே துளிர்த்திருக்கும் நாளைய சிந்தனையை விதைக்கவும் வேண்டும். / பனையோலைத் தூர் இடுக்குகளில் / எச்சங்களை விதைத்துச் சென்ற /  ஒரு பறவையின் நம்பிக்கை / ஆலமாய் இறுகப் பற்றி / நம்மையும் நம்பிக்கையின் பக்கமாய் நகர்த்துகிறது.

பெருநகரங்களில் வானுரசும் கட்டிடங்களில், நான்கு சுவர்களுக்கு நடுவே உள்ள வெற்றிடத்தைக் கட்டட விலைகொடுத்து வாங்கியவர்களுக்கு நிலமிழந்து போவதன் வலிகள் புரியாமல் இருந்தால் வியப்பே. நூலின் பச்சையம் போர்த்திய பல கவிதைகள் உங்கள் மனதை வெறுமைக்குள் தள்ளினால், ஏதோ ஒரு வகையில் நீங்கள் நிலமிழந்திருக்கிறீர்கள். நீங்களாகவே  வெளியேறி இருக்கிறீர்கள். எதன் பொருட்டோ வெளியேற்றப் பட்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஆழ்மனம் சொல்கிறது.

"எந்த நகரத்தில் இருப்பவரானாலும் அவரது வேர் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கலாம். ஏன் சென்னையே ஒரு காலத்தில் சிற்றூர் தானே" என்ற இயக்குநர் மாரிசெல்வராசுவின் சொற்களைக் கணக்கில் கொண்டால், அடுக்ககங்கள் என்பவை ஐந்திணைக் கலவை. தன் அடையாளம் மறந்து யாரோ தொடுத்த மாலை சூடி யாருடைய ஆயுதங்களையோ யார் மேலோ எறிந்து, மனிதர்கள் புடை சூழ தனியே நடப்பவர்களின் நிலத்தின் மீதான தேடல் எப்படி இருக்கும்? / வெறுமை நிரம்பிய / மவுனத்தின் குளக்கரையில் / புல்லாங்குழலாய் / ஆழப் புதைந்திருக்கும் வேர்களை / ஈர மண்போல இறுகப் பற்றிக்கொள்ளுமோ?

இன்னும் மூடிவிடாத பலருடைய மனக் கதவுகளின் முன்னே ஒரு யாமத்துக் குறிகாரனின் குடுகுடுப்பை ஒலியாய், விடியலில் / வாசல் தெளிக்கும் சாணித் தண்ணீராய் / வாசலெங்கும் ஈரம் கோதிச் / செல்கின்றன பல கவிதைகள்.

பண்பாட்டு மரபுகளில் தோய்ந்து எழும் மகராசனின் மனதில் கசியும் கவிதைகள், செவ்விலக்கிய மரபின் நீட்சியை இயல்பாகப் பெறுகின்றன போலும். திணிக்கப்படாத சொற்கள் அதனதன் இடங்களில் / கால மழையின் ஈரத்தில் நனைந்து / ஒலியும் வரியுமாய் முளை விட்டிருக்கின்றன/. களவும் கற்பும் காமமும் கூட கவிதையாகின்றன.

கண்ணகியும் இருக்கிறாள். அவளது / நீர்முட்டக் கசிந்த / காத்திருந்த வாழ்வின் தனிப் பொழுதுகள் / மலைமேட்டில் அலைகின்றன / என்ற சொல்லடுக்குகளின் ஊடே மெய்ம்மலி காமம் பாடிய ஔவையின் சொற்கள் காலங்கள் தாண்டி முட்டி முளைத்தெழுகின்றன. / கொழுமுனை பதியாத கரடுகளும் / உழவுச் சால் ஏங்கித் தவிக்கின்றன / என்ற சொற்கட்டுகளோ எம் மரபுக்கே மணியாரம் சூட்டுகின்றன.

மனதில் வந்து போகும் பருவத்தின் இன்றைய கோலமாய் / வாடாமலும் கசங்காமலும் / நம்மிருவருக்கு மட்டுமே / மணத்துக் காட்டுகிறது / மறைகாலத்தின் களவுப் பூ . 

/ பறவையின் வரவுக்காய்  கிளைக்காம்பில் காத்திருக்கும் / பெருந்திணைக் கனிகள் / அயலவர் சூடியெறிந்த மலரை அறியாது நாம் சூடிக்கொண்டதன் அடையாளமாக, தவிர்க்க இயலாது வெறுமை மண்டியிருக்கும் நிலத்தில் துருத்திக் கொண்டு நிற்கின்றன.

/ கீ காட்டுப் பூக்களும் / மேகாட்டுப் பூக்களும் / அணைத்து மணத்துக்/ கூடிக்கிடந்தன/ மகரந்தச் சேர்க்கை அறியாத மனிதர்கள் மட்டும் கீழும் மேலுமாய்ப் பிரிந்து கிடப்பதைச் சொற்களால் பாவி முளைக்கக் காத்துக்கிடக்கின்ற ஒரு கவிதை சாதிய ஆணவத்தை எருவாக்குமோ?

/அந்தியில் பூத்திட்ட ஈசல்/ என ஈசலைப் பூக்களாய்க் கண்டுருகும் நெஞ்சாங்குழிக்குள் அன்பைச் சுரக்குமொரு காலச் சுனை.

அரவமற்ற அந்த ஒற்றையடிப் பாதை, வளர்பிறையென வளைந்து கிடக்கும் பள்ளங்குளம், தப்பிய புலிகளின் கால்த்தடம் பதியக் காத்திருக்கும் நிலம், ஒற்றைச் செம்போத்தின் நெடுங் கூவல், வெறுமை ததும்பிய வானம், சுற்றுக்கல் புடைப்புகளில் ஒட்டிக் கிடக்கும் கெண்டை மீன்,  ஈரம் பருகிய செவல்மண் காடு என, பூப்பெய்திக் கிடக்கும் இந்த நிலத்தின் அனைத்தையும் எழுதி விட ஆசைதான். கோபுர நிழல் மறைப்பில்  நின்று வேவு பார்த்துக் கொண்டிருக்கும் இச்சிச் செடி போதுமென எச்சரிக்கிறது.

ஆனாலும், 

//கண்ணீர் கசிய வட்டமிடும்

மனப் பறவையொன்று

தன்னைத் தொலைத்துக்கொண்டே

ஒவ்வொரு இறகாய்

உதிர்த்துக்கொண்டிருக்கிறது//

என்ற தாளமுடியா வலி சுமக்கும் சொற்களைக் கொண்டே முடிக்கிறேன்.

===================

நிலத்தில் முளைத்த சொற்கள் - மகாராசன்
வெளியீடு - யாப்பு
பக்கங்கள் - 114, விலை : 100
அஞ்சல் செலவுடன் ரூ.100, புத்தகம் தேவைக்கு - 90805 14506

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்