Wednesday, 7 May 2025

இயலுமா?



மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?


பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?


ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?


தேங்கிய ஏரிகள்

ஓடிட எண்ணுமா?


நூறு கூறாய் நொடியைத் துணித்த,

இம்மியளவு இடைவெளியில்;

உள்ளில் கிளர்ந்த 

மகிழ்வின் நிகழ்வை,


மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?


=========
07-05-2024
=========

Saturday, 3 May 2025

கூட்டுப்புழு

 



இலைகளின் மீது

கவிதைகளாய்ப் படரும்

தூவானக் கண்ணாடிகளில்

முகம் பார்க்கக்

காத்துக் கிடக்கின்றன,

 

இலைகளின் முதுகில்

கூட்டுப் புழுக்களாய்…

பட்டாம் பூச்சிகள்.

 

03-05-2025