Wednesday, 1 October 2025

தோழர் தி.மா.ச. நினைவேந்தல்


காலை நேர மேற்குவானில் வெள்ளை யானை ஒன்று தும்பிக்கையைத் தூக்கி நீர் பீய்ச்சுவது போன்ற மிகச் சரியான தோற்றம் கண்டு, குழந்தைக்குக் காட்டிவிடவேண்டுமென்று வீட்டுக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கி வந்து காட்ட முனைகையில் காற்றில் கலைந்து போன மேகத்தைப்போல காற்றோடு போய்விட்டது தி.மா.சரவணன் அவர்களின் பெருவாழ்வு. எதற்கு என்னைத் தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக ஓடிவந்தாய் என்ற கேள்வி நிறைந்த குழந்தையின் பார்வைக்கு விடைசொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் தந்தையின் நிலையில் என் போன்றோர் உள்ளம்.

சிற்றிதழ் சேகரிப்பு. பரவலாக அறியப்பட்ட செயலா என்றால்; சிலர் ஆம் என்று சொல்லலாம். பலர் இல்லையென்றும் சொல்லலாம். எதற்காக இந்த சேகரிப்பு அல்லது இந்த சேகரிப்பால் சமூகத்திற்கு என்ன நன்மை விளையும் என்று கேட்டால் பெரும் பான்மையோர் உதட்டைப் பிதுக்குகிறார்கள். அல்லது “யோசிக்க வேண்டும்’” என்று விடையிறுக்கிறார்கள். அவரோ இருபைத்தைந்து ஆண்டு காலம் இதழ் சேகரிப்பையே தன் வாழ்நாளின் முகாமையான பணியாகக் கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறாயிரம் இதழ்கள், சில அரிய நூல்கள், நாளேடுகள் என அவரது “கலைநிலா நூலகம்” இதழ்களால் நிறைந்து கிடக்கிறது. என்னதான் செய்து கொண்டிருந்தார் அவர்.
சிறந்த எழுத்தாளுமை கொண்ட சரவணன் “வரலாறு காட்டும் தமிழ்ச் சீரிதழ்கள்” (2003), “தமிழ் சீரிதழ்கள் நோக்கும் போக்கும்” (2006), “குறள் நெறியில் தமிழ் இதழ்கள்” ( 2007) போன்ற நூல்களைத் தன் பேருழைப்பால் இந்த சேகரிப்புகளிலிருந்து எழுதியவர். இவை இதழியல் துறை சார்ந்தவர்களுக்கும், இதழியல் ஆய்வில் இருப்பவர்களுக்கும் பயனளிக்கும். இதைத் தாண்டி சமுதாயத்திற்கு அவை என்ன பங்களிப்பைச் செய்ய வல்லன என்பது அறியப்படவேண்டும்.
அவரோடு நெடிய பழக்கம் உள்ளவர்கள் கூட “இனி இந்த சேகரிப்புகளை என்ன செய்வது, எப்படிக் கையாள்வது” என்பது குறித்தான ஐயப்பாடுகளோடு இருக்கிறார்கள் என்றே அறிகிறேன். உண்மை. அவரது பணி; உலகில் அரிதான செயல்களில் ஒன்றென்பதில் ஐயமில்லை. இது, அவருக்குப் பின்னே தான் உணரப்படுகிறது என்பதுதான் வேதனையானது.
சரவணன் தனது இறுதிக் காலத்தில் திரு முத்துக்குமாரசாமி, திரு ராஜேஷ் குமார் அவர்களுடைய பொருளியல் பங்களிப்போடு இந்த சேகரிப்பு முழுவதையும் குறிப்புகளோடு பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அத்தப் பணியின் முதல் கட்ட வேலை கூட முடிந்திராத நிலையில் காலமானார். “ஈடு செய்ய முடியாத இழப்பு” என்ற சொற்கூட்டு முழுமையடைவது இது போன்ற மரணங்களில் தான்.
பொருண்மைக் கணக்குக்குள் அடங்கிவிட அவரது நூலக அறையில் இருப்பவை வெறும் புத்தகங்களல்ல. ஒரு மாமனிதனின் இருபத்தைந்து ஆண்டுகால பேருழைப்பும், அவருக்குக் கிடைத்த கொஞ்சம் பணமும் சேர்ந்த பெரும் இதழ் கருவூலம். தன் வறுமையிடமிருந்து பிடுங்கிய பொருளில் நிமிர்ந்து நிற்கிற அலமாரிகள் சுமந்து நிற்கும் புத்தகங்களை அவர் என்றுமே வெறும் புத்தகங்களாய்ப் பார்த்ததில்லை. அங்கே இரண்டு நூலகங்கள். கலைநிலா என்றொரு அசையா நூலகம். தி.மா.ச. என்றொரு உயிருள்ள நூலகம். அவை வெறும் நூல்களல்ல. ஒரு மாமனிதனின் பேருழைப்பும் அவர் உயிரின் சாரமும்.
மாமனிதன் என்ற சொல்லை அவரோடு எப்படிப் பொருத்துகிறீர்கள் என்று யாரேனும் கேட்க முற்பட்டால் என்ன சொல்வது என்ற தயக்கம் ஏதும் என்னிடம் இல்லை.
கண்டிப்பாக என்னால் இப்படியொரு வாழ்க்கையை வாழவே முடியாது. என்னோடு பழகிய நிறைய நண்பர்களைக் கேட்டுவிட்டேன். இந்த வாழ்க்கையை வாழும் துணிச்சல் ஒரு விழுக்காடு கூட யாரிடமும் இல்லை. கிடைக்கும் பணத்தை இதழ்களைச் சேகரிக்கச் செலவிட்டுவிட்டு, எளிமையாய் வாழ்ந்துவிடுகிற வலு எனக்கு இல்லை. நாளையோ அல்லது அடுத்த மாதமோ அல்லது அடுத்த ஆண்டோ இறந்து போவார் என்று எல்லா மருத்துவர்களாலும் சொல்லப்படுகிற பெண்ணை, பொருளாதார வசதியற்ற பெண்ணை சாதி மறுத்து திருமணம் செய்துகொள்ளுகிற துணிச்சலேனும் இருக்கிறதா? என்று பார்த்தால்... இல்லை தான். ஆனால், தி.மா.ச. வுக்கு எல்லாமே இருந்தது. அதுவே எல்லோராலும் அத்தனை எளிதில் அணுக முடியாத, எண்ணிப்பார்க்க இயலாத ஒரு வாழ்க்கையை வாழும் வலுவைத் தந்தது. என்னளவில் அவர் மாமனிதன் தான்.
வணிகச் சார்பற்ற சிற்றிதழ்களே தமிழ் இலக்கியத்தின் உண்மை முகம். மனச்சான்றோடு அன்றைய காலச் செய்திகளை கவிதையாய் கதைகளாய் செய்திகளாய்த் தாங்கி நிற்கும் இவைதான் வருங்காலப் படைப்பளிகளுக்கான கருத்துக் கருவூலம். சிற்றிதழ்களின் வழியே ஒரு படைப்பாளி அன்றைய கால நிலையை அறிந்து கொள்வது எளிது. அதை வணிகம் சார்ந்து இயங்கும் இதழ்களில் பெறுவதென்பது எளிதானதல்ல. சமூகத்தின் மாறிவந்த மனநிலை, பண்பாட்டுக்கூறு இவைகளில் ஒரு படைப்பாளிக்குத் தேவையான ஒன்று இந்த இதழ்களுக்கு நடுவில் எங்கேனும் இருக்கக் கூடும். தொலைபேசியில் அழைத்து அதுபற்றிக் கேட்டால் உடனே சொல்லிவிடுகிற தி.மா.ச. இப்போது இல்லை. நூல்கள் மட்டுமே இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளையில் பரவலாக்கப் படவும் வேண்டும். அந்த நூல்களின் சாரங்களிலிருந்து வேறு வேறு படைப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், நூற்கள் பிறக்க வேண்டும். அதுவே தி.மா.சரவணனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய அங்கீகாரம். வெகுமக்கள் படைப்புகள் இந்த கருவூலத்தின் நடுவே இருந்து பிறக்க வேண்டும். திரைக்கதைகளுக்குத் தேவையான காலப்பதிவுகள் சரவணனின் நூலகத்தில் செய்திகளாய்க் கொட்டிக்கிடக்கின்றன. மொழி அரசியல் குறித்தான தரவுகளும் ஏறாளமாக இருக்கின்றன. இன்னும் ஒவ்வொரு பார்வையிலும் தரவுகள் ஏராளமாகக் காணக்கிடைக்கலாம்.
தி.மா.ச பேருழைப்பைக் கொட்டி, பெரும் தேடலில் திரட்டி வைத்த பேரறிவுக் கருவூலம் இன்று பாதுகாப்பாக ம.செந்தமிழனின் செம்மை வனத்தில் இருக்கின்றது. செம்மை வனத்திலிருந்து இன்றும் தி.மா.ச'வின் மனைவிக்கு வாழ்வூதியம் கொடுத்துக் கொண்டு இருப்பது ஒன்றுதான் திமாசாவின் பேருழைப்பைக் கண்டு கொண்ட செம்மை வனத்தின் மிகப்பெரிய ஆறுதல்.
காலத்தின் படிமங்களைத் தாங்கிய புத்தகப் பறவைகள் வந்து தங்கிய வேடந்தாங்கல் தி.மா.சரவணன். இப்பொழுது வேடந்தாங்கலின்றி பறவைகள் யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன. அவற்றின் சிறகுகள் நம் எல்லோரிடமும் இருக்கின்றன.
========================
சிராப்பள்ளி ப.மாதேவன்
11/10/2019.
========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்