Tuesday, 17 March 2026

சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல் - நூல் மதிப்புரை

 



=======================================================
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன் அவர்களின் "சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல்" எனும் நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை 2026 மார்ச்சு மாத வையம் இதழில் வெளியாகியிருக்கின்றது.
நன்றி வையம் இலக்கிய மாத இதழ்.
=======================================================

சங்க இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்
நூல் மதிப்புரை - சிராப்பள்ளி ப.மாதேவன்

நூற்களுக்கு மதிப்புரை எழுதுவதென்பது நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ளும் ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். வாசிப்பை, தேடலை விரிவுசெய்யும், புத்தாக்கம் செய்யும் வல்லமை பல நூற்களுக்கு உண்டு என்பதைப் பலவேளைகளில் உணர்ந்திருக்கிறேன். குமரிமாவட்டம், தோவாளையைச் சேர்ந்த பேராசிரியர் இராமசுப்பிரமணியன் அவர்களின் ‘சங்க இலக்கியத்தில் பண்டைத்தமிழர் வாழ்வியல்’ எனும் கட்டுரைத்தொகுதியும் அப்படியான ஒன்றே. இதுவே, தமிழில் பேரளவு எடுத்தாளப்பெற்ற தலைப்பாகவும் இருக்கக்கூடும். ஆனால், அதையும் தாண்டி படிப்போருக்கு என்ன தர இயலும் என்ற பொறுப்புணர்வோடு எழுதப் பெற்ற ஐம்பது முத்தான கட்டுரைகள். எதை எடுப்பது? எதை விடுவது? என்று தெரியாமல், திருவிழாக் கடைகளில் இனிப்பும், பொம்மையும் வாங்கத் திரியும் குழந்தை போலத் தடுமாறினேன். எல்லாவற்றையும் எழுதிவிட ஆசைதான். ஆனாலும் சில பருக்கைகளை மட்டுமே விளம்புகிறேன். ‘ஒரு சோறு பதம்’ என்ற வழக்கைச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் எல்லாப் பருக்கைகளுமே அவ்வவற்றிற்குரிய தனித் தன்மையோடு இருக்கின்றன. இது சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.
முதல் கட்டுரை அவரை ஒரு இயற்பியல் பேராசிரியராகவே அறிமுகம் செய்கின்றது. அதனூடே, தாமிரபரணிக்கரைச் சிற்றூரொன்றின் நினைவுகளை மனதில் தேக்கிக்கொண்டு செவ்விலக்கியப் பரப்பில் வேட்கையோடு சுற்றித் திரியும்; யாப்பும், சொற்பொருள் தேடலும் குறைந்து போன காலத்தில் பெரும்பாலும் அவற்றை அறிந்திராத ஒரு தலைமுறைக்குத் தமிழர் வாழ்வியல் நோக்கி ஆற்றுப்படுத்தும் ஒரு பாணனையும் அறிமுகப்படுத்துகின்றது.
“ஆழி முதல்வனும் பெருவெடிப்பும்” என்ற அந்தக் கட்டுரை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசி வந்த அவருடைய இயற்பியல் பட்டறிவின் வெளிப்பாடாக தொடங்குகின்றது. மெல்லப் புறநானூற்றிலும், பிறகு பரிபாடலிலும் மையம் கொள்கின்றது. இது போன்ற பல கட்டுரைகளைக் கடந்து வந்திருக்கிறோம். அவற்றில் பெரும்பான்மையும் பெருமை பேசுவதாகவே நின்றுவிடும். ஆனால், இங்கே பண்டைய மரபறிவும், வாழ்வியலும் இன்றைய இயற்பியலோடு ஒரு இயற்பியல் பேராசிரியரால் ஒப்புமைப்படுத்தப்பட்டுத் தெளிவுற விளக்கப்படுவது சிறப்பு. மேலும், சித்த மருத்துவத்தின் மீதான பேராசிரியரின் அறிவும், ஆர்வமும் இணைய, “பண்டைய தமிழர்கள் மண்ணிலிருந்து விண்ணை அளந்தார்கள் என்றும் கொள்ளலாம். இன்றும்கூட, ஐன்ஸ்டின், ஸ்டிஃபன் ஹாக்கின்ஸ் உள்ளிட்ட கருத்தியல் இயற்பியலாளர்களும் (Theoretical Physicists) அப்படித்தானே தங்களது அறிவியல் கருதுகோள்களை வெளியிட்டு வருகிறார்கள். 'கரிசலாங்கண்ணிக் கீரையைத் தினமும் ஒரு கைப்பிடி அளவுத் தின்றுவந்தால் பகலில் விண்மீன் (நட்சத்திரம்) தெரியும்' என்று ஒரு சித்த மருத்துவக்குறிப்பு உள்ளது. அப்படி, அன்றைய தமிழர்களின் உணவுமுறை காரணமாகச் சூரியனையும், பிற விண்மீன்களையும் கூர்ந்து நோக்கும் திறன் அவர்களுக்கு இருந்திருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இப்பாடலில் வரும் 'செஞ்ஞாயிற்றுச் செலவும்' என்பது நம்மை வேறு ஓர் அறிவியல் தளத்திற்கு இட்டுச்செல்கிறது. ''செஞ்ஞாயிறு' என்னும் சொல்லானது சூரியன், பூமியைப் போலத் திடப்பொருளாக இல்லாமல் நெருப்புக்கோளமாக இருக்கிறது என்னும் பொருளில் சொல்லப்படுவதாகக் கொள்ளலாம். அது, இன்றைய அறிவியல் கருத்தான சூரியன், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அயனிகளைக் கொண்ட பிளாஸ்மாவாலான (Plasma) ஒரு 'வாயுக் கோளம்' என்னும் கருத்தியலை ஒத்திருக்கிறது.” என்று எழுதும் உறுதித் தன்மை பழம் பெருமையைத் தாண்டி அறிவுத்தளத்துள் பயணம் செய்கின்றது. இதுவே இன்றைய காலகட்டத்தின் தேவையும் கூட.
செவிக்குணவில்லாத போது என்ற அறிவு மரபின் நீட்சியாக (தற்செயலாகவும் இருக்கலாம்) வெளிப்படுகின்றது பண்டைய தமிழரின் உணவுமுறை குறித்த அடுத்த கட்டுரை. “இந்தக் கட்டுரையில் பெரும்பாணாற்றுப்படை வரிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன” என்ற ஆசிரியரின் அறிவிப்போடு நீளும் கட்டுரை, சங்க இலக்கியத்தில் விருப்பம் கொண்டு ஆனால் படிக்க இயலாமல் இருப்போர்க்குப் பெரு வியப்பாகவே இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி நம் முன்னோரின் வாழ்வியலையும், உணவுப் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் கண்முன்னே விளம்பும் ஒரு பாணனின் நெடும் பயணக் குறிப்பின் அந்த வரிகளைப் பிழிந்து நம் கோப்பைகளில் பரிமாறுகிறார் ஆசிரியர்.
இயற்பியல் பேராசிரியராக, சிறந்த இயக்கச் செயற்பாட்டாளராக வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டதில் கிடைத்த பட்டறிவின் வெளிப்பாடாக “அன்றைய தமிழ் மக்களின் வாழ்வு என்பது கூட்டு வாழ்க்கையாக இருந்திருக்கிறது. மார்க்சியம் போன்ற சித்தாந்தங்கள் எல்லாம் உருவாகாத அன்றைய காலத்தில், தமிழர்களின் கூட்டு வாழ்க்கை, கூட்டு உழைப்பு, கூட்டாகவே உணவு தயாரித்தல், உணவு உண்ணல் போன்று, மறைவுகளின்றி, ஏற்றத்தாழ்வுகளின்றி, தொழில் சார்ந்து குடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது, பழங்காலத் தமிழர்களின் உன்னதமான வாழ்வும், பண்பாடும் நம்மை வியக்கவைக்கிறது…” என்று எழுதும் ஆழ்ந்த வாசிப்பின் அனுபவ வரிகள் சிறப்பானவை.
ஆனாலும், “தங்களை நாடிவரும் வழிப்போக்கர்களுக்கும், இல்லையென்று சொல்லாமல், தாங்கள் உண்ணும் அதே உணவைக் கொடுத்து, அவர்களை உண்ணச்செய்து சிறப்பு செய்திருக்கிறார்கள். இப்படி ஒரு சிறப்பான உணவுப் பண்பாடும், விருந்தோம்பும் பண்பும் அன்றைய தமிழ் மக்களிடம் இருந்திருக்கிறது என்பதை எண்ணி நாமெல்லாம் தமிழர்கள் என்னும் வகையில் பெருமைகொள்ளலாம். மற்றொன்று, எங்குமே உணவு விலைபேசப்படவில்லை என்னும் பண்பாட்டையும் பெருமையுடன் பதிவு செய்யவேண்டியுள்ளது.” எனும் பத்தியில் வரும் ‘எங்குமே உணவு விலைபேசப்படவில்லை’ என்றவிடத்தில் நான் மாறுபாடு கொள்கிறேன்,
“நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை,
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்,
தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,” எனும் மதுரைக்காஞ்சியின் வரிகளே அதற்குக் காரணம். இங்கே, தேனிறால் என அழைக்கப்படும் தேனடைகளை ஒத்த மெல்லிய இனிப்பு அடைகளும், சருக்கரை சூடாக்கிப் அதில் மணப்பொருள் இட்டுக் கெட்டியான பாகை உள்ளே வைத்துப்பிடித்த பலவகை மோதகம் விற்கும் ‘தீம் சேற்றுக் கூவியர்’ என வருகின்றது. மோதகத்தை வெறும் இனிப்புப் பலகாரம் என்ற வகைக்குள் தள்ளிவிடமுடியாது. நாஞ்சில் நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை எங்கள் வீடு உட்படப் பல வீடுகளில் மோதகம் காலை நேர முழு உணவாக இருந்தது. ‘நாஞ்சில் நாட்டு உணவு’ எனும் பெரும் தொகுப்பு நூலில் மோதகத்தைச் சிற்றுண்டி வகைகளிலேயே தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
நூலில் பேராசிரியரின் நெல்லைக் குசும்பிற்கும் குறைவில்லை. ஓரிடத்தில் “தலைகவிழ்தலுக்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருந்து கண்டுபிடித்த ஒரே இனம் தமிழினமாகத்தான் இருக்கும்” என்ற நக்கலான இடம் சிறப்பு. ஆனால் அதற்குள் இருக்கும் ஆழங்காற்பட்ட அறிவைச் சுவைக்க வேண்டுமானால் நீங்கள் நூலை வாசிக்கவேண்டும்.
பத்துப்பாட்டை ‘தமிழரின் சொத்துப்பாட்டு’ என்பார் மா.இராசமாணிக்கனார். அது இந்நூலைப் படிக்கும் போது உணரக்கிடைக்கும். எடுத்துக்கொண்ட தலைப்பின் கீழ் சங்க இலக்கியங்கள் (குறிப்பாக பத்துப்பாட்டு) காட்டும் தமிழரின் வாழ்வியல் கூறுகளை ஒன்றுவிடாமல் பதிவுசெய்கின்றன இவரது கட்டுரைகள். காட்டாக, காடு மலைகளில் வலியறிதலுக்காகப் பயன்படுத்திய பழந்தமிழர் வழிமுறைகள் விளக்கப்படுவதுடன் அவற்றின் தற்கால நீட்சியும் குறிப்பிடப்படுவதைக் கொள்ளலாம்.
“சல்லிக்கட்டிற்கு எதிரான தடை என்பது அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அந்நியர்கள் தமிழ்ப்பண்பாட்டின் மீது வலிந்து நிகழ்த்திய பண்பாட்டுப் படையெடுப்பாகும். தமிழ்ப்பண்பாட்டின் மீது ஏவப்பட்ட தடையை உடைப்பதுதான் மெரினாவில் கூடிய இளைஞர்களின் உண்மையான நோக்கமாகும்” என்ற இயல்பின் பின்னணியில் எழுதப்பட்ட ஏறுதழுவுதல் குறித்தான கட்டுரை கலித்தொகை பொதிந்து வைத்திருக்கின்றப் படிமங்கள் குறித்துப் பேசுகின்றது.
காட்டு விலங்குகளைக் கைக்கொள்ளல் என்பது மாந்த இனத்தின், குறிப்பாகத் தமிழினத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் முகன்மையானது. இது நடந்திராவிட்டால் வேளாண்மையும் அதன் பின்னான வளர்ச்சியும் நாகரிகமும் அற்றுப்போயிருக்கும். தொல்காப்பியம் சொல்லும் முதல் நிலமாம் முல்லையில் இது ஏறுதழுவுதல் எனும் பண்பாடாய் வளர்ந்து செழித்திருந்ததை மிகச் சிறப்பாக விவரிக்கும் இந்தக் கட்டுரை கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று. சல்லிக்கட்டின் மீதான உரையாடல்கள் தீர்ந்துவிடாத இக்காலச்சூழலுக்கு ஏற்றவாறு ஏராளமான செய்திகளைக் கோத்து எழுதிய விதம் பாராட்டுக்குரியது.
‘புலிக்கு இடம் வலம் தெரியுமா?’ என்றொரு கட்டுரை, பலரது சங்கஇலக்கியக் கட்டுரைகளில் பெரிதும் பேசப்படாத பொருள்குறித்துப் பேசுகிறது. மட்டுமல்ல நாம் சிறுவயதில் கேட்ட கதைகள், வளர்ந்த பின்னும் தவறாக உள்வாங்கிக் கொண்ட சில செய்திகள் ஆகியவற்றை உடைத்துப் போடுகிறது. ஒரு குறிப்பிட்ட இரையைக் குறிவைத்துப் பறக்கும் பருந்தின் பார்வைகொண்டு செவ்விலக்கியப் பரப்பெங்கும் பறக்கிறது. இறுதியாகச் சிறப்பான முடிவையும் கண்டடைகிறது. நீங்கள் படிக்கும் போது அதற்கு இன்னும் வலு சேர்க்க வேண்டுமென்றால் “இடம் - இடு > இள் > இடம். வைத்தல் - ஒன்றை வைத்துக் கொள்வதற்குரிய இருப்பிடம். வீழ் - தானே வீழ்தல், நோயால் வீழ்தல்” எனும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் விளக்கத்தையும்,
‘விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி’ எனும் புறநானூறு (190) ஆம் பாட்டின் வரிகளையும் சேர்த்துக்கொள்க.
முதுமை குறித்த மற்றொரு கட்டுரை இன்றைய நாளையும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏதோவொரு நாளையும் முடிந்துவைத்திருக்கிறது. அகப்பொருள் குறித்தச் சிந்தனைகளை, தன்னுணர்வைத் தயக்கமின்றிப் பெண்கள் பாடிய பல செவ்விலக்கியப் பாடல்கள் கிடைக்கின்றன. காட்டாக வெள்ளிவீதியார் பாடிய,
"யாமம் உய்யாமை நின்றன்று
காமமோ பெரிதே களைஞரோ இலரே." (நற்.335)
"கனைஇருங் கங்குலும் கண்படை இலனே
அதனால் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என்அவலம்உறு நெஞ்சே." (நற்.348). ஆனால் முதுமை குறித்துப் பெண்கள் பாடிய பாடலேதும் இல்லை என்று நினைவுறுத்துகின்றது கட்டுரை. சங்கப்பாடல்களின் காலம் என்பது பல நூற்றாண்டுப் பரப்பைக் கொண்டது. எழுதப்பெற்று நெடுநாட்களுக்குப் பின் தொகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்தவை இவ்வளவுதான், பல பாடல்கள் தொகுக்கப் படாமல் போயிருக்கலாம் என்று ஆறுதல் பட்டாலும்,
“எத்திணை மருங்கினும், மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” (தொல்;அக;38) எனுந் தொல்காப்பிய சூத்திரம் அந்த ஆறுதலை ஒப்புக்கொள்வதற்கு மனதிற்கு இடமளிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அந்தச் சூத்திரமும் இந்தக் கட்டுரையும் சேர்ந்து இன்னும் ஆழமான செவ்விலக்கியத் தேடல் வேண்டும் என்ற கருத்தை அறிவுறுத்துகின்றன.
இதே கருத்தின் இன்னொரு கோணம் ‘ஆண்கள் ஏன் மடலூர்ந்தார்கள்’ என்ற கட்டுரையில் வெளிப்படுகின்றது. தாய்வழிச் சமூக நிலையிலிருந்து தந்தைவழிச் சமூகமாக, சொத்துடைமைச் சமூகமாக மனிதன் மாறத்தொடங்கிய போது; ஆண் பெண்ணின் மீது நிகழ்த்திய உளவியல் வன்முறை அது என்ற நோக்கில் நகரும் கட்டுரை, விருப்பு வெறுப்பின்றி இயல்பைப் பதிவுசெய்கின்றது. தொல்காப்பியக் காலம் தொடங்கி நேற்று வெளியான திரைப்படம் வரை தொடரும் இந்த வன்முறையை, குழந்தைகளிடமிருந்த கள்ளம் கபடமற்ற ‘குழந்தைமையைக்’ கொன்றுவிட்டக் காட்சி ஊடகங்கள் நிகழ்த்தும் வன்முறையை, அதனால் நிகழும் சமூகச் சீர்கேட்டைச் சினத்துடன் விவரிக்கும் இந்தக் கட்டுரை தவறவிடக் கூடாதது.
அகப்பாடல்கள் என்ற தனிப்பிரிவைத் தன்னகத்தே கொண்டது தமிழ்ச் செவ்விலக்கியம். அதன் அடிக்கல்லான காதலை மறுக்கும் சாதியக் கட்டமைப்பு, வர்க்க வேறுபாடு, மத அடிப்படைவாதம் ஆகியவற்றால் தற்போதையச் சமூகம் நாகரிகமற்று இருப்பதைச் சுட்டி அது ஏற்புடையதல்ல என விரியும் கட்டுரை எடுத்தியம்பும் பண்டைய தமிழ்ச்சமூகத்தின் நாகரிகச் செயற்பாடுகள் வியப்பளிக்கின்றன.
பண்டைத் தமிழரின் மீன் உணவைப் பற்றிப் பேசும் ‘உப்புக்கருவாடும் உப்புக் கண்டமும்’ குறித்த கட்டுரை பரதவர் வாழ்வியலின் வீழ்ச்சி குறித்த முகன்மையான, நெய்தல் நிலப் படைப்பாளிகளின் கருத்தை மீள் பதிவு செய்கின்றது. ஊன் உணவைச் சேகரித்து வைத்துப் பயமுறுத்திய தரவுகளை விளக்கும் தன்மை சிறப்பு. ஆனாலும், ஆசிரியர் ‘மீன்சோறு’ குறித்து எடுத்தாண்ட மலைபடுகடாம் பாடல் வரிகளின் பொருள் விளக்கத்தில் மாறுபாடு கொள்கிறேன். “முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு” எனும் வரியின் சொற்களே ஐயப்பாட்டிற்குக் காரணம்.
“முள் அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு - முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளியநிறத்தையுடைய தடிகளையிட்ட வெள்ளிய சோற்றை, வெள்ளிய நிறத்தையுடைய தடிகளை வெள்ளரியென்றார்; ஆகுபெயராக்கி.” என நவிலும் நச்சினார்க்கினியர் உரை மீன் எனக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.
மலைபடுகடாம் நூலுக்கு ஆங்கிலத்தில் விளக்கமளித்திருக்கும் இரா,முத்துசாமியின் விளக்கம், “Hospitality in the Agricultural Land:In the Agricultural land, during morning hours, in every field the bards will receive cooked white rice removed of chaff, which deserves to be served to Nannan owning sturdy chariots, along with liquor made with paddy sprouts.” - முள்ளரித்து இயற்றிய வெள்ளரி என்பதற்கு ‘உமி நீக்கப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற பொருளைக் கொண்டிருக்கின்றது.
ஆனால், பொ. வே. சோமசுந்தரனார் உரை - முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய நிறத்தையுடைய தடிகளையிட்ட வெள்ளிய சோறு, மீன் துண்டு, அரியப்படுதலால் அரி என்றார். அரி - ஆகுபெயர், எனக் குறிக்கின்றது.
நேரடியாகப் பேரகரமுதலியின் துணை நாடினால், அரி-தல் = நெல், சாமை, வரகு முதலியவற்றின் தாளையறுத்தல்; "நெல்லரி தொழுவர்" (புறநா. 379:3); எனவும், வெள்ளரிசி பச்சரிசி; [வெள் + அரிசி] என்பனவுமான பொருள்கள் கிடைக்கின்றன. வெள்ளரி = முள் வெள்ளரி, புள்ளி முலாம்பழம், அணில்வரிக் கொடுங்காய் - (புறநா. 246). பச்சரிசிச் சோற்றுடன் பேயன் வாழைப்பழம் கலந்து உண்ணும் வழக்கம் நாஞ்சிநாட்டில் பலருக்கும் முன்பிருந்தது. இன்னும் சங்ககால உணவுச் சுவடுகள் நீடித்திருக்கின்ற பேரளவு மீன் உண்ணும் நெய்தல் நிலத்திலும், அவற்றை ஒட்டிய மருதநில மற்றும் நகரப் பகுதிகளிலும் மீன்சோறு வழக்கம் இல்லை. அன்றியும், அரிசியுடன் இறைச்சி சேர்த்துச் சமைப்பதுபோல, மீன் சேர்த்து வேகவைத்தல் இயலாது. இவற்றையும் கருத்தில் கொண்டால், மீன்சோறு என்பது ஐயத்திற்கிடமான ஒன்றே. பெருங்குற்றம் இல்லையென்றாலும், உணவுப் பண்பாடு சமூகத்தின் முகன்மையான ஒன்றென்பதால் இதை எழுத வேண்டியதாகின்றது.
கோடியர், உமணர், வதுவை மணம், ஐம்பால், ஓசைகள், தொண்டு, கொண்டி மகளிர், கொடுங்கோல் மன்னன், ஆடைகள், அணிகள், விளையாட்டு என நீள்கிறது நூல்.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து சிறந்த தமிழரின் காதலுக்குச் ‘சங்க இலக்கியத்தில் நாம் காண்பது காதலா? காமமா?’ என்ற வினாவெழுப்பி விடைதேடுகின்றன சில பக்கங்கள். பல ஆண்டுகள் விரிவுரைகள் நடாத்திய அனுபவத்தோடு எழுத்தாளர் செயமோகனுக்கு விடையிறுக்கும் இடங்கள் நேர்மையாகவும், மறுத்துரைக்கும் இடங்கள் உறுதியாகவும் காணப்படுகின்றன. திட்டமிட்டே அவர் அப்படிப்பேசுகிறார் என முடிவு கொள்ளும் இடங்கள் சிறப்பானவை. மிக்கத் தேவையானதும் கூட. கண்டிப்பாகப் படிக்கவேண்டிய கட்டுரை.
‘தீம்கள் பெண்ணை’ என்றொரு பெரிய கட்டுரை நூலின் இறுதியில் இடம்பெற்றிருக்கின்றது. ஆசிரியரின் பரந்துபட்ட சங்க இலக்கிய வாசிப்பிற்குச் சான்று பகரும் இது, அவருக்குப் பிடித்தமான கட்டுரையாகவும் இருக்கக்கூடும். பண்டைத்தமிழர் வாழ்வியலில் பனையின் இடம் குறித்து அறியும்போது பெருமிதமும், தற்காலத்தைய நிலைகுறித்து எண்ணும் போது கவலையும் படருவதை மறுப்பதற்கில்லை.
பேராசிரியர், தமிழ்ப் பெருங்கடலிலிருந்து இன்னும் பல குவளை நீரள்ளிப் பகுத்து நூல்களாக்குமாறு வேண்டுகிறேன். சிறப்பான கட்டுமானத்துடன் அழகாக நூலை வெளியிட்ட பொன்னிப் பதிப்பகத்திற்கு வாழ்த்து.
நூலாசிரியர் தொடர்புக்கு : srsthovalai@gmail.com
நூல் விவரம் :
பக்கங்கள் - 484
விலை - 480/-
பொன்னிப்பதிப்பகம், தொடர்பு எண் : 8248338118
========================
சிராப்பள்ளி ப.மாதேவன்
16-03-2026
========================


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்