Tuesday, 5 November 2019

முரண்களின் ஓசை (வள்ளுவர் அவமதிப்பு)


 
மழித்தலும் நீட்டலும் வேண்டா
என்றவனை
மதத்திற்குள் சேர்த்துவிட;
வண்ணங்கள் கைநிறைத்து
வரிசையில் நிற்போரே!!!
உழுதுண்டு வாழ்வாரே உயர்ந்தோர்
என்றவன் கால் வருமோ
பழுதுள்ள பாட்டின் வழி?

எழுத்தாணி இல்லாமல்
சிலை செய்து வைத்தவரை
வாழ்த்தி நின்றவர்காள்!!!
சாணி அடித்ததனால்
எல்லாம் போனதென்று
நீங்கள் புலம்புவதேன்?
உங்கள் நாவினாற் சுட்ட
“வாழும் வள்ளுவரே” என்ற வடு
யாரும் மறப்பாரோ?

இன்றல்ல நேற்றல்ல
பரிமேலழகன் தொடங்கி
பலபேரை பார்த்துவிட்டோம்.

வண்ணங்கள் மாறிவிட – இது
புனைவு மொழியல்ல
புரட்டுக் கதையல்ல.
 
செம்மாந்த தமிழரினம்
வாழ்ந்த பெருவாழ்க்கை
சேர்த்துக்கொடுத்த விழுச்செல்வம்.
 
நீரில் கரையாது
நெருப்பில் வேகாது
பாரில் எவராலும்
பறித்துவிட முடியாது.
ஒருபால் கோடாது
உலகிருக்கும் 
நாள்வரைக்கும் வீழாது.

சிலையேதும் செய்யாதீர். (வள்ளுவர் அவமதிப்பு)


வரலாறு அறியுங்கள்
வள்ளுவம் படியுங்கள் - அதன்படி
வாழ நினையுங்கள்.
நல்ல தமிழ்க் கல்வி
பிள்ளைகட்குத் தாருங்கள்.
அதைவிடுத்து சிலையெதற்கு?
இமயத்தை சிலையாய் வடிக்க
எங்குசென்று கல்லெடுப்பீர்?

Monday, 4 November 2019

வள்ளுவர் சிலை அவமதிப்பு 04-11-2019


செம்மறியாடுகள் முட்டி
வானமலை சாய்வதில்லை.
ஈசல்களின் இறகுகள் மூடி
தென்கடல் மறைவதில்லை
காளான்கள் வளர்வதனால் உயர்
மலைவேம்பு வீழ்வதில்லை
உலகு திரும்புவதால் இரவேயன்றி
ஒருநாளும் கதிரவன் கறுப்பதில்லை.
காவியும் கறுப்பும் கலந்து மறைத்தாலும்
ஆவியில் கலந்த ஆசான் திருமறையோ
பாவிகள் தமக்கும் பகுத்தறிவூட்டி
வான்தொட வளர்வதைக் காணும் உலகு.



Thursday, 31 October 2019

தமிழ்நாடு நாள் - 2019

முந்நீர் மூழ்கிய புகார்ப் பட்டினமும்
முன்னைச் சிந்துவும் மூதாதைக் கீழடியும்
தண்ஆன் பொருனை ஆதிச்ச நல்லூரும்
தென்கரைக் குமரித் தண்கடல் விழுங்கிய
முன்னவர் வாழ்ந்த தண்டமிழ் நிலமும்;
வீரமும் நேர்மையும் விளைந்த நாள்வரை
வரலாறு நெடுகிலும் அயலார் கைகொளாது,
துரோகமும் சூழ்ச்சியும் தொடங்கிய நாள்முதல்
வேங்கடம் ஒழிய குடகடல் மறக்க
பாழான காலங்கள் ஊழாகி முடிய
கூறுசெய்த காலமொன்று குலமறுத்துப் போட
பரங்கியர் கடலேக, ஒன்றியத்தின் உறுப்பாகி;
மொழிவழி என்றுரைத்து கருநாடும் ஆந்திரமும்
பகுதியைப் பற்றிக் கொள்ள - சூழ்ச்சிநிறை
நிலவழி என்றுசொல்லி கேரளமும் மிகுதிகொள்ள;
வடக்கிலும் தெற்கிலும் வலிமை கொண்டு
நிலவெல்லை சரிசெய்ய நின்றவர் திறத்தாலும்
உயிர்நீத்த ஈகியர் உள்ளத்தின் உரத்தாலும்
தானாகக் கிடந்தநிலம் தனிநாடு ஆனதுவே.
கீழடிக்கும் முன்பிறந்த பிட்டங் கொற்றன்
குதிரைமலை எதிரொலித்தக் குரல்சொன்ன பெயராலே
தமிழ்நாடு எனவழகாய் தாய்மண் அழைத்ததுவே.
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பாடுவோம் அந்நாள் இந்நாள் என்றே!!!


தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்