Saturday 21 July 2018

தோன்றாமை நன்று...

வள்ளுவரின் சில சொல்விளையாட்டுகள் சிறு வயதிலிருந்தே நம்மை ஈர்த்துவிடும் வல்லமை கொண்டவை. சில சொற்கூட்டுகள் மேடைகளிலும், எழுத்திலும் வலிமைகூட்டும் தன்மை கொண்டவை. அப்படி வகுப்பறை காலந்தொட்டு நம்மோடு பயணம் செய்யும் குறள் இது.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
   


பட்டென்று புரிந்துவிடும் தன்மை கொண்டதே இக்குறள். இருந்தாலும் இக்குறளுக்கான உரைகளைப் பார்ப்போம்.

பரிமேலழகர்- தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.

(புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)

மணக்குடவர்-  பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று.
இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

இப்படி தொல்லுரைகாரர்கள் "தோன்றின்" என்பதற்கு பிறப்பு என்பதாய்ப் பொருள்கொண்டு உரை செய்திருக்கிறார்கள்.

வ.உ.சி அவர்கள் பிறத்தலும் பிறவாதிருப்பதும் ஒருவன் விருப்பப் படி நிகழ்வன அல்ல, அவன் முன்வினைப் படியே நிகழ்வன, ஆகலான் அவ்வுரைகள் பொருந்தா என்கிறார்.

மொழிஞாயிறு தேவனேயப் பாவணர் , பிறத்தலும், பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப் படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியவனவுமல்ல. ஆதலால், இங்கு "தோன்றுக", "தோன்றற்க" என்று கூறியதெல்லாம் புகழுக்கேற்ற நல்வினை செய்தவனைப் பாராட்டியதும் அது செய்யாதானைப் பழித்ததுமேயன்றி வேறல்ல என அறிக என்கிறார்.

நாம் வள்ளுவர் வழியில் நடைபோடுவோம். "பிறப்பொக்கும்" என்று அறுதியிட்டுச் சொன்ன வள்ளுவர்தான் "தோன்றிற் புகழொடு" என்று சொல்லியிருக்கிறார். இங்கே நாம் "தோன்றின்" என்பதைப் பிறப்பாகக் கொண்டோமானால், பிறப்பொக்கும் என்ற அவர் சொல் தவறாகிவிடுமே. புகழோடு பிறப்பது, புகழ் இல்லாமல் பிறப்பது என்று பிறப்பில் வேறுபாடுகாட்டும் சொல்லாட்சியை "பிறப்பொக்கும்" என்றுரைத்தப் பேராசான் எப்படிச் சொல்லுவார்.

தோன்றின் புகழொடு தோன்றுக என்று சொல்லப்படுகிறபோது "தோன்றுதல்" என்பது கேட்பவரின் முழு ஆளுகைக்கு உட்பட்டதாகவே தெரிகிறது. தோன்றலின் தோன்றாமை என்று முடிக்கப்படும் போதும் அது தெள்ளத் தெளிவாய் புரிகிறது. இங்கே "தோன்றுதல்" "தோன்றாமை" இரண்டும் கேட்பவரால் முழுதாகக் கட்டுப்படுத்த இயல்கிற ஒன்றைப் பற்றியே பொருள் கொள்ளப்படவேண்டும். அன்றி, அவர் கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பிறப்பு அல்லது பிறக்காமல் இருப்பது என்று பொருள்கொள்வது எந்த வகையிலும் பொருந்தாது. எனவே நாம் இந்தக் குறளைப் பொறுத்தமட்டில் பரிமேலழகர், மணக்குடவர் போன்றோரது உரைகளை  விடுத்துக் கடந்து செல்லவேண்டியுள்ளது. 

சில உரையாசிரியர்கள் எழுதிய  "ஒரு துறையில் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்", "எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்"  என்பன போன்ற உரைகளை நோக்குங்கால் புகழடைய முடியாதோர் எந்தத் துறையிலும் ஈடுபட முடியாதோ என்ற ஐயம் ஏற்படும். காட்டாக பொறியியல் துறையில் இருக்கிற எல்லோரும் கண்டிப்பாக  புகழுடன் இருத்தலென்பது நடவாத ஒன்றே.  "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றப் பெருஞ்சொல்லும் ஐயத்திற்கு இடமின்றி இதையே உரைக்கிறது.  [பிறப்பொக்கும் என்ற உரையில் விரிவாகக்  (https://www.chirappallimathevan.com/2018/07/blog-post_5.html) காண்க]

தோன்றுதல் என்பதற்கு கண்காண வெளிப்படல், அறியப்படுதல், பிறத்தல், விளங்குதல், வருதல், முளைத்தல், நிலைகொள்ளுதல் என பேரகரமுதலி பொருள் தருகிறது. இந்தக் குறளில் "தோன்றின்" என்று தோன்றுபவரின் ஆளுகைக்கு உட்பட்டு நிகழும் ஒரு செயலையே அறிவுறுத்துவதால் "கண்காண வெளிப்படல்" அல்லது "வருதல்" என்ற பொருளில் ஒன்றைக் கொள்ளலாம். தானே முன்வந்து வெளிப்படுவது எந்தச் சூழ்நிலைகளில் ஏற்படும் என்று பார்ப்போம். 

காட்டாக, ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  எல்லோராலும் அவரைக் காப்பாற்றிவிட முடியாது. நன்கு நீந்தும் திறனும், உடல் திறனும், நீரின் போக்கை ஊகித்தறியும் கூர்த்தமதியும் ஓரிரு நொடிகளுக்குள் ஒத்திசைந்து வேலை செய்யும் ஒருவரால் மட்டுமே அவரைக் காக்க இயலும். அப்படி ஒருவர் சட்டென்று ஆற்றில் குதித்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரைக் கரை சேர்த்துவிடுகிறார். இவ்வளவு நேரமும் அவர் நம் கண்காண நம்மோடுதான்  இருந்திருப்பார். ஆனாலும் நாம் அவரை அறிந்திருக்கவில்லை. அவராக முன்வந்து தோன்றி செயலாற்றிய பின்னர்தான் நாம் அவரை அறிகிறோம். 

இங்கே "தோன்றின்" என்பதை "தானாக முன் வருதல்" என்று கொள்வதே சாலச் சிறந்தது. 


"உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்; 
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;

மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்  
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே." :- (புறம் 315) 

என்று ஔவையாரும் அதியமான் நெடுமானஞ்சியின் தோன்றல் திறத்தை வெளிப்படுத்துகிறார்.

சரி. தோன்றுவது தெளிந்தாயிற்று. அது எப்படி புகழொடு தோன்றுவது. மேடைப் புகழா?, திரைத்துறைப் புகழா? மருத்துவத்துறைப் புகழா? 

இதுபோன்றதொரு புகழாயிருக்குமெனின் நாம் தான் அவரை முன்னமே அறிந்திருக்கும் வாய்ப்புகள் இருக்கிறதே. அப்படியெனில் "தோன்றின்" என்பதில் சிக்கல் எழுமே. புகழ் என்பதற்கு சென்னை தமிழ்ப் பேரகராதி "அருஞ்செயல்" என்றொரு பொருளைத் தருகிறது. வேறு பொருள்கள் அதிகமாகக் காணக்கிடைக்கவில்லை. சில பாடல்களைப் பார்ப்போம்.

"..... ....... மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;   
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, " :-(அகம் 86)

ஒரு நாளுக்குப் புகழ் என்னவாக இருக்க முடியும். மேற்சொன்ன நாள் பிறைநாள். தமிழர் நிழற்கணிதத்தின் படி அது திங்களின் முதல் நாளாகவும் இருக்கக் கூடும். திங்களின் முதல்நாள் தொடங்கி நோன்பிருந்து, வெளிப்பயணங்களைத் திட்டமிட்டு, தொழூஉப் புகுத்து, மன்னன் பறையறைந்து ஆட்டை அறிவித்து, உழுது விளைத்து என வாழ்வாங்கு வாழ்ந்தது தமிழினம். அப்படி ஒரு நாளாக அது அமைந்ததால் "கேடு இல் விழுப் புகழ் நாள்" என அந்நாள் அறியப்பட்டிருக்கும். குறித்துவைத்துக் கொண்டு அடுத்த ஆண்டும் பயன்படுத்தும் பஞ்சாங்கம் போன்றதல்ல அது. ஒவ்வொரு ஆண்டும் நிழல் கண்டு தெளிந்து அறிவிக்கப்படும் அறிவிப்பு அது. கோத்தொழிலின் முதன்மையான பகுதி. அந்தப் புகழ் இருப்போரே இந்தப் புகழ் நாளை அறிவித்திருப்பர். (இது பற்றி, அறிஞர். தென்னன் மெய்மன், மாநாகன் இனமணி சிற்றேடு மற்றும் தக்கார் அவையத்தின் நூற்கள், பதிவுகளைக் கண்டு தெளிக). 

 "..... ...... ...... 
 எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்
....... ....... ......" (அகம் 375)

இங்கே விளங்குபுகழ் குடிக்கடனாகிறது. அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மன்னனுக்கு வருகிறது. மன்னனும் அரசும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் புகழோடு பிணைக்கப்பட்டுள்ளன. அந்தப் பணியைச் சிறப்பாக முடிக்கவேண்டிய ஆற்றலும் பயிற்சியும் மன்னனுக்குத் தேவையாகிறது. இங்கு "புகழ்" திறனாகிறது.

" தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி" (அகம் 256)

ஒரு வயலுக்கு என்ன புகழ். அது வெகுகாலமாய் நன்றாக விளைகிறது. செழிப்பான மண்ணாய் இருக்கிறது. இங்கு மண்ணின் திறனும், தன்மையும் புகழாகின்றன. வேறு என்ன இருக்கமுடியும். 

"புகழ்",  தமிழில் நிறைய பொருள்களோடு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.(அகராதிகள் அத்தனைப் பொருள்களையும் சுட்டிக்காட்டாதது குறையே). சான்றோர்களால் பாராட்டப்படுவது, புலவர்களால் பாடப்படுவது, ஒரு துறையில் சிறந்து விளங்குவது, ஒரு செயலைச் செம்மையாகச் செய்து முடிப்பது, கசடறப் பட்டறிவோடு இருப்பது, தலைமுறைப் பொறுப்பை போற்றித் தொடர்வது என ஏராளமான பொருட்களில் "புகழ்" எடுத்தாளப்பட்டிருக்கிறது.

வள்ளுவரே "வித்தகற்கு அல்லால் அரிது" என்று சொல்கிறார். ஒரு வேலையில், தன்மையில் திறனோடு அதாவது சிறப்போடு அல்லது புகழோடு இருக்கவேண்டும். 

மருத்துவத் துறையில் நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் எல்லா பண்டுவமும் பார்ப்பதில்லை. "இந்த நோயாளியை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்களுக்கு நோய் பற்றித் தெரியாதென்பதல்ல. ஒரு குறிப்பிட்டத் திறன் அல்லது புகழ் இல்லாமல் அந்த நோயாளியைக் குணப்படுத்த முடியாதபோது அவர் வேறு மருத்துவரைப் பார்க்கச் சொல்கிறார். அன்றி அவரே முயன்று நோயாளிக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் என்ன செய்வது. அதனால் தான் "புகழ்" இல்லாத அந்த மருத்துவர் தோன்ற மறுக்கிறார். 

"தோன்றலின் தோன்றாமை நன்று". தோன்றாமல் இருப்பது இருவருக்குமே நன்மையைத் தரக்கூடும். தோன்றவே கூடாது என்று வள்ளுவர் சொல்லவில்லை. நன்று என்றுதான் சொல்கிறார். ஏனென்றால் இன்னொரு இடத்தில் "மெய்வருத்தக் கூலி தரும்" என்று சொன்னவர்தானே பேராசான்.

"தாமாக முன்வந்து எதைச் செய்வதானாலும், அதற்குரிய திறனோடு முன் வருக. திறனில்லாதவர்கள் முன்வராமலிருப்பது அவருக்கும் அடுத்தவருக்கும் நன்மையே தரும்."
-------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்